தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 20 August 2016

சுயமரியாதை - 11

பற்றி எரியும் நெருப்பு!
                                           
இருவேறு மதங்களுக்குள்தான் மோதல் நடைபெறும் என்றில்லை. ஒரே மதத்திற்குள்ளேயே கடும் போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன., நடைபெற்றுக் கொண்டும் உள்ளன. சிலுவைப் போர், சன்னி-ஷியா மோதல்கள்,  சைவ-வைணவச் சண்டைகள் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு.  இன்றும் கூட குஜராத்தில் நாம் காணும் தலித் எழுச்சி, ஒரே இந்து மதத்துக்குள்ளேயே நடக்கும் பெரும் யுத்தம்தானே!
குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், உனா என்னும் இடத்தில்தான் சென்ற மாதம் 11 ஆம் தேதி,இறந்த  மாட்டுத் தோலை உரித்தார்கள் என்ற குற்றம் சாற்றி, நான்கு இளைஞரகளைச் சங்கிலியால் கட்டி வைத்து, இரும்புக் கம்பிகளால் "கோ ரக்ஷன் சமிதி" (பசுப் பாதுகாப்புக்கு குழு)  அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்தார்கள். அடித்தவர்கள், அடிபட்டவர்கள் இருவருமே இந்து மதத்தினர்தாமே!

இந்து மதத்தில், மதத்தை விட, சாதியின் செல்வாக்கே  மேலோங்கி நிற்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே பெரும் எடுத்துக்காட்டாக உள்ளது. அவர்கள் இறந்த மாட்டுத் தோலை உரித்தார்கள் என்றால், அவர்களின் தொழிலே அதுதானே. அந்தத் தொழிலைத்தானே சமூகம் அவர்களுக்கென்று ஒதுக்கியுள்ளது. " ஓதல் , ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்" - அதாவது, கற்றல், கற்பித்தல், வேள்வி நடத்தல், வேள்வி நடத்தக் கற்றுக் கொடுத்தல் முதலான அறுவகைத் தொழில்கள் செய்யவா அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்? அவர்களை ஐ.ஏ.எஸ். படிக்கத்  தூண்டி, அதனை ஏற்காமல் அவர்கள் இந்தத் தொழிலுக்கு வந்தார்களா? இறந்த மாட்டுத் தோலை உரிப்பதும், இறந்த மாட்டை எரிப்பதும் அவர்களின் வேலை என்று தீர்மானித்தவர்கள் யார்?

உண்ணும் உணவிலும், செய்யும் தொழிலிலும் சாதி முத்திரையைக் குத்தியது இந்தச்  சமுதாய அமைப்புதானே !  அதன்பின் அந்தத் தொழில் அல்லது பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர்களை இழிவு படுத்தியதும் இந்தச் சமூக அமைப்பு முறைதானே!  இவ்வளவு பாகுபாடுகளைச்  செய்துவிட்டுப் பின் அவர்களையே இரும்புக் கம்பிகளால் தாக்குவது என்றால் என்ன நியாயம்? இம்முறை அவர்கள் விழித்துக் கொண்டார்கள். 'சுயமரியாதையைக்' கையில் எடுத்தார்கள். பசு உனக்குப் புனிதம் என்றால், பசு உனக்குத் தாய் என்றால், இனி நீயே உன்  தாயைப் பார்த்துக் கொள், நீயே புல்லறுத்துப் போடு, நீயே அதனைக் குளிப்பாட்டு, நீயே அதன் சாணத்தை எடுத்துச் சுத்தப்படுத்து, இறுதியில் நீயே அது இறந்தவுடன் அதனை எரித்துக் கொள்  என்று சொல்லி, அவர்கள் வெளியில் வந்தார்கள். தெருக்களில் திரண்டார்கள். செத்த மாடுகளைத் தெருவில் கொண்டுவந்து கொட்டினார்கள். சுரேந்தர் நகர் மாவட்ட அலுவலகத்தில் இப்போது மாட்டு எலும்புகள் நிரம்பி வழிகின்றன. மாட்டுத் தலைகளுடன் அவர்கள் தெருக்களில் இறங்கி ஊர்வலம் நடத்துவதை குஜராத்திலிருந்து வரும் 'திவ்ய பாஸ்கர்' என்னும் ஏடு படத்துடன் வெளியிட்டுள்ளது. "ஆஸாதி கூன்" (விடுதலைக்கான ஊர்வலம்) என்னும் பெயரில் ஆயிரக் கணக்கான மக்கள் இன்று அதே உனா என்னும் ஊரை நோக்கி அணி வகுத்த காட்சியை நாடே கண்டது.

மொத்தத்தில் குஜராத் நாறிப் போனது. உழைக்கும் மக்களை சீண்டிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதைக் குஜராத் தலித் மக்கள் நாட்டிற்கும், வருணாசிரம சமூக முறைக்கும் எடுத்துக் காட்டியுள்ளனர். குஜராத் முதல்வரே, 75 வயதாகி விட்டது என்னும் போலிக் காரணத்தைக் காட்டித் தன் பதவியை விட்டு விலக நேர்ந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன், பீகாரில் லாலு பிரசாத்தும், நித்திஷ் குமாரும் சேர்ந்து நடத்திய ஊர்வலத்திற்கு "சுய அபிமான் மோர்ச்சா" என்றுதான் பெயர் சூட்டினார்கள். சுயமரியாதைப்  பேரணி என்பதுதானே அதன் பொருள்! தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு, இன்று இந்தியா முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கிறோம். 

இவை அனைத்துக்குமான தொடக்கம் 19ஆம் நூற்றாண்டில்தான் உள்ளது. சாதி மதங்களைத் தாண்டி அனைவரும் சமம் என்று வள்ளலார் எழுப்பிய குரலே, திராவிட இயக்கத்தின் உயிர்க் கொள்கையாய் 20ஆம் நூற்றாண்டில் பின்னர் எழுந்தது. சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்னும் ஆறுமுக நாவலரின் குரல் அமுங்கிப் போயிற்று. 

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் வெளிவந்த கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலும்,  அதே கால கட்டத்தில் அச்சில் ஏறிய பழந்தமிழ் நூல்களும், சைவத்தின் எழுச்சியும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஓங்கி ஒலித்த அயோத்திதாசப் பண்டிதரின் திராவிடக் குரலும் என்று, 20ஆம் நூற்றாண்டில் எழப்போகும் சுயமரியாதைக்கு வழிவகுத்தன அன்றையப்  பல்வேறு நிகழ்வுகள். அவற்றை நாம் புரிந்து கொள்வதன் மூலமே, இன்றைய சமூக அரசியல் நிகழ்வுகளையும், நாளைய எதிர்காலத் தேவைகளையும்     நம்மால் வரையறுத்துக் கொள்ள முடியும்!!

 (தொடரும்)
                                                                                  


நன்றி: நக்கீரன்

4 comments:

 1. Rajendran Chidambaram20 August 2016 at 12:11

  சுயமரியாதை என்பது சமஸ்கிருத சொல் என்பது உங்களுக்கு தெரியும். அதை நீங்கள் தலைப்பாக பயன்படுத்தலாமா?
  சமஸ்கிருதம் கூடாது என்று சொல்லிவிட்டு சமஸ்கிருத சொல்லை தலைப்பாக பயன்படுத்துவது சரியல்ல. தமிழ்ச்சொல்லை பயன்படுத்துங்கள். நன்றி.

  ReplyDelete
 2. குஜராத்தில் மற்றும் அதனால் நாட்டில் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள தலித் எழுச்சி வரவேற்று பாராட்டத்தக்கது. ஆனால் "சுய அபிமான் மோர்ச்சா" நடத்திய பீகாரின் லாலு பிரசாத் யாதவ்,உபியின் முலையாம் சிங் யாதவ் போன்றோர்கள் மற்றும் அவர்களுடைய யாதவ சமூகத்தினர்கள் தலித்துகளை எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள் இன்றும் நடத்துகிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அவர்களையெல்லாம் சம உரிமை தறுபவர்களாக சுயமரியாதையை பேணுபவர்களாக தலித்துகள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.சுயமரியாதை தோன்றியதாக நீங்கள் சொல்லும் இங்கு தான் அதுவும் அதை வலியுறுத்தும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் குஜராத்தில் கூட இன்றுவரை நடக்காத கொடுரங்களான கீழ வெண்மணியில் 3 வயது குழந்தை,பல பெண்கள் உட்பட மொத்தமாக 40 தலித்துகள் மரக்கட்டைகள் போல உயிருடன் எரிக்கப்பட்டார்கள்!,இங்கு தான் இன்றும் ஆணவக்கொலைகளும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணமேயுள்ளது!,குஜராத்தில் கூட இன்றுவரை நடக்காத நிகழ்வான திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மனித மலத்தை திணித்த இழி கொடுஞ்செயல்கள் நடந்துள்ளது!.

  ReplyDelete
 3. இந்தியா முழுவதும் மிகப் பெரிய எழுச்சி தேவை !

  ReplyDelete