தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 14 August 2016

சுயமரியாதை - 9

நாவலரும் வள்ளலாரும் 
                               
              
வள்ளலார் குறித்து நாம் பேசும்போது, யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் குறித்தும் சேர்த்தே பேசுவதுதான் சரியானதாக இருக்கும்.

இரண்டு பேரும் ஒத்த வயதுள்ளவர்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். 1822இல் நாவலரும், 1823இல் வள்ளலாரும் பிறந்தனர். நாவலருக்கு ஓராண்டு பின்னே பிறந்து, அவருக்கு 5 ஆண்டுகள் முன்னே மறைந்தார் வள்ளலார். இருவரும் தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் மாறாத பற்றுடையவர்கள் என்பதில் எவர் ஒருவருக்கும் மாற்றுக்  கருத்து இருக்க முடியாது. இருவரும் சைவ மதத்தில் ஆழக்  கால் ஊன்றி நின்றனர் என்பது இன்னொரு ஒப்புமை.  


ஆனால், வள்ளலாரின் இறுதிக் காலத்தில் அவரிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதனை அவரே குறிப்பிட்டுள்ளார்.

"சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழுக் குறியாக குறிக்கின்றதே அன்றி, புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலம் இல்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளில் - அவ்வச் சமய, மதங்களிலும் - அற்ப பிரயோஜனம் பெற்றுக்கொள்ளக் கூடுமேயல்லாது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தை பெற்றுக் கொள்கிறதற்கு முடியாது. ஏனெனில் நமக்கு காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே இருக்கிறேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்து சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும்  இன்னும் சிலருக்கும் தெரியும்.

ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்தது  என்றால்,  அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார்."

சைவ சமயத்தில் பற்றுக் கொண்டிருந்தது, அற்ப அறிவு கொண்டவனாக இருந்த போது  என்று  வள்ளலார் எழுதியிருப்பதோடு, தன்னுடைய நெறிமுறைகளையும் மாற்றிக் கொண்டார். " ஞான சபை தன்னுடைய கோட்பாட்டிற்கு இணங்க நடத்தப்படவில்லை என்பதை உணர்ந்து அது நிறுவப்பட்ட ஆறு மாத காலத்திலேயே (18.07.1872) சில வழிபாட்டு விதிகளை வகுத்து அளித்தார். அதற்குப் பிறகும் அவ்விதிகளின்படி, சபையாளர்கள் நடக்கவில்லை. இதனால் சலிப்புற்ற ராமாலிங்கர் ஞான சபையை மூடி, அதன் திறவுகோலைத்  தம்மிடம் சித்தி வளாகத்தில் வைத்துக் கொண்டு விட்டார். அது மூடியே இருந்தது" என்று எழுதுகின்றார் பேராசிரியர் அருணன். 

சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை 1873 அக்டோபர் 22 இல் ஏற்றிவைத்து  அவர் ஆற்றிய உரை பெரிய அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. அதன்பிறகு ஆறு மாதங்களில் வள்ளலார் மறைந்து விட்டார். ஜோதியில் கலந்து விட்டார் என்று கூறுகின்றனர். வைதீகப் பார்ப்பன மரபுகளை எதிர்க்கும் எவராக இருந்தாலும்  - நந்தன் தொடங்கி வள்ளலார் வரையில் - ஜோதியில் கலந்து விடுவது ஏன் என்ற கேள்வி இருந்துகொண்டே உள்ளது.

வள்ளலார் இறுதிவரையில் கடவுள் நம்பிக்கை உடையவராகவே இருந்தார். ஆனால் அது "இயற்கையுண்மை" சார்ந்ததாக இருந்தது. 

 "பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் 
 பிடியாதிருக்க வேண்டும்" என்பதே அவர் நிலையாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் தமிழர்களிடையே சைவ மதத்தைப் பெரு நெறியாகப் பரப்பிக் கொண்டிருந்த ஆறுமுக நாவலர், வள்ளலாரின் இந்நிலை கண்டு கொதித்துப் போனார். வள்ளலார் எழுதியிருப்பது அருட்பா இல்லை, மருட்பா என்று கூறினார். வள்ளலார் மீது வழக்கும் தொடுத்தார். அப்போது இரு தரப்பாருக்கும் இடையில் நடந்த பெரும் விவாதங்கள் பல சமூக, வரலாற்றுச்  செய்திகள் பலவற்றை  நமக்குக்  கூறுகின்றன.

(தொடரும்)
                                                                                  


நன்றி: நக்கீரன்

4 comments:

 1. அறியாத செய்திகளை அறிந்து கொள்ள தொடர்கிறேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
 2. வடலூர் ராமலிங்க வள்ளலாருக்கும் நல்லூர் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்தேறிய கருத்து மோதல் பற்றிய விபரங்கள் இன்னும் சரியாக வெளிச்சம் பாய்ச்சப்படாத பக்கங்கள் ஆகவே இருக்கிறது.
  ஆறுமாக நாவலர் அன்று எந்த சக்திகளின் பின்னணி பலத்தோடு வடலூர் வல்லாரின் சமரசர கோட்பாடுகள் விரவிய அருள்பாவுக்கு எதிராக மிகப்பெரும் பிரசாரத்தையும் நீதிமன்ற நடவடிக்கையையும் மேற்கொண்டார் என்ற வரலாற்று உண்மையை உலகுக்கு எடுத்து கூறவேண்டிய வரலாற்று பொறுப்பை தாங்கள் ஏற்று கொண்டமைக்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
  அன்று நல்லூர் ஆறுமுக நாவலர் வைதீக பார்பனீயத்தின் அடியாள் போல செயல்பட்டு வல்லாளாரின் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய நெஞ்சை நோகடித்தமை சாதாரண குற்றமா?
  இதன் மூலம் ஈழத்தமிழருக்கு என்றும் மாறாத ஒரு அவப்பெயரை அல்லவா உண்டாக்கிவிட்டார்?
  வள்ளலாருக்கு எதிரான நாவலரின் பிரசாரம் தமிழகத்தில் அவ்வளவாக எடுபடவில்லை.
  ஆனால் துரதிஷ்டவசமாக ஈழத்தில் நாவலரின் சாதீய வைதீக பார்ப்பனீய கோட்பாடுகள் கொஞ்சம் ஆழமாக வேரூன்றி விட்டன என்று எண்ணத்தோன்றுகிறது,
  வடலூர் இராமலிங்க வள்ளலாரை பற்றி இன்னும் கூட ஈழத்தமிழருக்கு தெரியவில்லை. கோவில்களில் அருட்பாக்கள் பாடப்பட்டாலும் அவைகூட ஏதோவொரு நாயனார் இயற்றி இருக்க கூடும் என்ற பாமரத்தனமாகவே நினைக்கிறார்கள்.
  மக்கள் வள்ளலாரை பற்றி அறிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இன்றுவரை ஆறுமுகநாவலரின் வெள்ளாள சாதி அபிமானிகள் செயல் படுகிறார்கள்.
  யாழ் பல்கலை கழகத்தின் இந்து நாகரிக துறையாகட்டும் இதர சமயம் சார்ந்த ஏராளமான அமைப்புக்களாகட்டும் சைவ மடங்களாகட்டும் வள்ளலார் என்ற பெயர் கூட மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று மிக மிக கவனமாக நடந்து கொள்கிறார்கள்.
  இது பற்றி மிகப்பெரிய புத்தகமே கூட எழுதலாம். யாராவது தங்களை போன்ற அறிஞர்கள் முன்வரவேண்டும் .
  இவ்வளவு மோசமான போரின் அழிவுகளை கண்டபின்பும் பார்பநீயத்தின் பாதுகாவலராக ஆறுமுக நாவலரின் சிஷ்ய பரம்பரை செயல்படுகிறது. தமிழர் சக தமிழரை சாதிக்கண் கொண்டு பார்த்து மேலும் மேலும் அழிவுப்பாதைக்கு முழு சமுதாயத்தையுமே இட்டு செல்கிறார்கள்.
  இன்று வரை இந்த உயர்(?)குடி வெள்ளாள மேன்மையை நிலை நிறுத்த நாவலரின் வைதீக கோட்பாடுகளை தலையில் காவிக்கொண்டு திரிகிறார்கள்.
  அது மென்மையான மனித பண்புகளை எல்லாம் ஆழ குழிதோண்டி புதைத்து விட்டது.
  நீண்ட காலமாக மறைக்கபட்டு வந்த வள்ளலார் நாவலர் கருத்து மோதல் வரலாறு தங்களின் மூலம் உலகுக்கு தெரியவருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முழு தமிழ் உலகமும் தங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறது .
  மீண்டும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete
 3. பொய்யாமொழி16 August 2016 at 00:38

  அய்யா உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியை தரக்குறைவாக பேசியதற்கு நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது அவ்வாறு பேசியவர் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது,அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்!.ஆனால் இங்கு ஆனால் சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதியின் முன்னோடி மாநிலம், பெரியார் வாழ்ந்த மண் என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்தில் திருமா ஆதிக்க சாதியின் கொலைவெறி தக்குதலிருந்து தப்பித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆனால் உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியை தரக்குறைவாக பேசியதற்கு நாடு தழுவிய எழுந்த எதிர்வினையில் 100ல் ஒரு பங்கை கூட ஆதிக்க சாதியின் தரக்குறைவாக பேசியதற்காக அல்ல கொலைவெறி தக்குதலுக்கு காணமுடியவில்லை!.சிலரின் கண்டன அறிக்கைகளோடு சாதரண நடப்பு போல கடந்து செல்லப்பட்டது(அது கூட முக்கிய திராவிட அரசியல் கட்சிகளிமிருந்து வரவில்லை).உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியை தரக்குறைவாக பேசியதற்கே நாடு தழுவிய போராட்டங்கள் போல நடைபெறவிட்டாலும் பரவாயில்லை திருமா மீதான கொலைவெறி தக்குதலுக்கு திக,திவிக, தபெதிக மற்றும் உங்களின் திஇத பேரவையினரால் தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் கூட நடைபெறவில்லையே ஏன்?.வள்ளலார் நாவலரின் 190 வருட பழைய நிகழ்வுகளுக்கான முக்கியம் கூட இன்றைய நிகழ்வுகளுக்கு உங்களிடம் இல்லாததற்கான காரணம் யாதோ?.

  ReplyDelete
 4. திருமா அவர்களை தாக்கமுற்ப்படுவது ஏதோ இன்று மட்டுமே நடந்தது அதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று சாதி ஒழிப்பிற்கு முன்னிலை அளிக்கும் அமைப்புகளை குறிப்பாக தி.இ.த.பே யை கீழமைப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தோழர் பொய்யாமொழி அவர்கள் புகார் கடிதம் எழுதியிருக்கிறார்.பொய்யாமொழி அவர்களே திருமா மீது நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதலாக இருந்தாலும் உளவியல் ரீதியான தாக்குதலாக இருந்தாலும் சரி முதன் முதலில் ஐயா சுபவீ அவர்களின் கண்டனங்கள்தான் தமிழகத்தின் மூலைமுடுக்கெள்ளாம் எதிரொளிக்கும் என்பதை உற்று நோக்கினால் தெரியும்.இந்த இடத்தில் மாயாவதி அவர்களுக்கு அளித்த முக்கியத்துவம் திருமா அவர்களும் கூடுதலாகவே பெரியாரிய அமைப்புகளால் முன்னெடுத்து செல்லப்பட்டது.இதை மூடி மறைத்தது இந்த பத்திரிக்கையும்,ஊடகங்களும்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒருவர் மீது விமர்சனம் வைக்கும் போது அவரின் செயல்பாடுகளையும்,புறச்சூழலையும் நன்கு ஆராய்ந்து விமர்சனம் வையுங்கள்! போகிறபோக்கில் அள்ளித்தெளித்து போவது நல்லமனிதருக்கு அழகல்ல!

  ReplyDelete