தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 26 September 2016

சுயமரியாதை - 22

காத்திருந்தது காலம்!



நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அந்தத் திருமணத்தின்   இணையர்கள்   சிதம்பரம்-ரங்கம்மாள் என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். அவர்கள் இருவரும்   இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாமனாரும், மாமியாரும் ஆவர். அவர்களின் மகள் மோகனா அம்மையாரைத்தான் பிற்காலத்தில் ஆசிரியர் மணந்து கொண்டார்.


அந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர் விளைவுகளும் இருந்தன. சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் வண்ணம் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலிமையாக எழுந்தன, அப்போது (1953 ஆம் ஆண்டு) ராஜாஜி தமிழ்நாட்டின் முதமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், சட்டமன்ற உறுப்பினராக இருந்த, 'திராவிடப் பார்லிமெண்டரிக் கட்சி'யைச் சேர்ந்த துறையூர் பி.ரங்கசாமி ரெட்டியார் அதற்கான தீர்மானம் ஒன்றைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். ராஜாஜியும் அதனை மறுக்காமல் விவாதத்திற்கு அனுமதித்தார். தனக்கும் அதில் மறுப்பில்லை என்றார். என்றாலும், இதுவரை நடந்துள்ள திருமணங்களைக் கணக்கில் கொள்ள முடியாது என்றும், இனி வரும் காலங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு சட்டத் திருத்தம் கொண்டுவரலாம் என்றும் தன் கருத்தை வெளியிட்டார்.

ஒருவகையில் ராஜாஜியின் நிலைப்பாடு சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்புடையதாக இருப்பினும், இதற்கு முன் நடந்த திருமணங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றார் பெரியார். விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, குலக்கல்வித் திட்டத்திற்கு நாடெங்கும் ஏற்பட்ட எதிர்ப்புக் காரணமாக ராஜாஜி பதவி விலகினார்.

1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் திருப்புமுனை மாநாட்டில், திருமணச் சட்டத் திருத்தம் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களின் போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் அனைத்திலும் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற்றது. தேர்தல் அறிக்கையோடு நின்றுவிடாமல், 1957இல் சட்டமன்றத்திற்குச் சென்ற தி.மு.க. உறுப்பினர்கள் அதற்காகக் குரல் கொடுத்தனர்.

1957-62 காலகட்டத்தில் களம்பூர் அண்ணாமலை என்னும் உறுப்பினரும், 1962-67 காலகட்டத்தில் உறுப்பினர் செ. மாதவனும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினர்.  ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் அன்று அதனை ஏற்கவில்லை.  குறிப்பாக, அன்றைய சட்ட அமைச்சர் ஆர். வெங்கடராமன் அத்தீர்மானத்தை எதிர்த்துக் கடுமையாகச் சட்டமன்றத்தில் உரையாற்றினார். இறுதியில் தீர்மானம் தோல்வி அடைந்தது.



அந்த நல்ல வாய்ப்பை  அண்ணாவிற்குத் தர வேண்டும் என்று கருதிக் காலம் காத்திருந்தது போலும்! சில வரலாற்றுப் பெருமைகள் சிலரைச் சென்றடைவதற்காகச் சில காலம் காத்திருக்கத்தானே வேண்டியுள்ளது!

1967இல், அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அந்த  ஆண்டின் இறுதியிலேயே அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டு, தமிழகச் சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சுதந்திராக் கட்சி உறுப்பினர் ஹண்டே மட்டும் சிறு எதிர்ப்பை வெளிப்படுத்தினார். என்றாலும் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை. 1968 தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கையொப்பம் இடப்பட்டது. இனிமேல் நடக்கவிருக்கும்   சுயமரியாதைத் திருமணங்கள் மட்டுமின்றி, இதற்கு முன் நடைபெற்றுள்ள அனைத்துச் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி ஏற்புடையன (with retrospective effect) என்னும் தீர்மானம் 20.01.1968 முதல் சட்டமாகியது.

பல நூற்றாண்டுகளாக இருந்த இழிவை இச்சட்டம் நீக்கியது. இது தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றிற்குச்  சுயமரியாதை இயக்கம் கொடுத்த கொடை! 

       எனினும் இந்த இடத்தில் நாம் ஒரு பதிவை மறக்காமல் குறிக்க  வேண்டியுள்ளது.  இந்துத் திருமணச் சட்டத் திருத்தமாகவே இன்றும் இத்திருமண முறை உள்ளது. வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள முடியாது. அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special marriages act) கீழ் மட்டுமே தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள முடியும். இந்நிலை மாற்றப்பட்டு, எம்மதத்தவரும்சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்னும் வகையில் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும்.  அந்த நாள் விரைவில் வரட்டும்.


 (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

2 comments:

  1. "வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள முடியாது. அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special marriages act) கீழ் மட்டுமே தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள முடியும். இந்நிலை மாற்றப்பட்டு,எம்மதத்தவரும்சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்னும் வகையில் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும். அந்த நாள் விரைவில் வரட்டும்."

    இது மற்ற மதத்தினருக்கு சம்மதம்தானா? பகுத்தறிவு மற்றும் பெரியார் இயக்கத்தின் ஆதரவாளரான எத்தனை மாற்று மதத்தினர் - குறிப்பாக இஸ்லாமியர் - இந்த சட்ட திருத்தத்தை ஏற்பர்? இதற்க்கு - நான் அறிந்தவரை - அவரிகளது மதத்தில் இடமில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. சில வரலாற்றுப் பெருமைகள் சிலரைச் சென்றடைவதற்காகச் சில காலம் காத்திருக்கத்தானே வேண்டியுள்ளது!-அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் . அருமை அய்யா!

    ReplyDelete