தேர்தல் களத்தில்
பெரியார்
காங்கிரசை விட்டு
விலகிய பின்னர், சுயமரியாதை
இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம்
ஆகிய மூன்று இயக்கங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். ஆனால் எந்த இயக்கத்தின்
சார்பாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பதும், எந்த ஒரு
தேர்தலையும் புறக்கணிக்கவில்லை என்பதும்
குறிக்கத் தக்கன.
சுயமரியாதை
இயக்கம் தொடங்கிய நாள்களிலேயே அவர் நீதிக் கட்சியை ஆதரித்துத் தேர்தலில் பரப்புரை செய்தார். 1926 தேர்தலில்
நேரடியாக நீதிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்தார். அதற்கு இரண்டு காரணங்களைப்
பெரியார் கூறினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை ஏற்பட வேண்டும்
என்பதற்காகவே நீதிக்கட்சி தோன்றியது என்பதால் அதனை ஆதரிப்பதே சரி என்றார்.
அடுத்ததாக, ஜஸ்டிஸ் ஆட்சிக்
காலத்திலேதான் பள்ளிக்கூடங்கள் மிகுதியாகத் தோன்றின என்பதோடு, கட்டாயக் கல்விக்கும் வழிவகை செய்யப்பட்டது என்பதால்
அதனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதுதானே
முறை என்று கேட்டார்.
எப்போதுமே
சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியாரின் உயிர்க் கொள்கைகளாக இருந்தவை வகுப்புவாரி
இட ஒதுக்கீடும், பார்ப்பனர்
அல்லாத பிள்ளைகளின் கல்வி முன்னேற்றமும்தான். தன் இறுதிநாள் வரைஅக்கொள்கைகளிலும், பெண் விடுதலையில்
அவர் மிக உறுதியாக இருந்தார். அரசியல்
கட்சிகளை ஆதரிப்பதில் அவர் வேறு வேறு நிலை எடுத்தமைக்குக் கூட, அவருடைய இந்த
நிலைப்பாடுதான் காரணம்.
அதற்கு ஒரு
சிறந்த எடுத்துக்காட்டை நாம் காணலாம். 1967இல் தி.மு.கழகம் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னர், அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், அன்பில் ஆகியோர்
திருச்சி சென்று ஐயாவைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். பிறகு,
சுய மரியாதைத் திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதனால்
பெரியார் தி.மு.க.அரசை ஆதரிக்கத் தொடங்கினார். அப்போது நாகர்கோயிலின் நாடாளுமன்ற
உறுப்பினர் நேசமணி இறந்துவிட்டதால்
இடைத்தேர்தல் வந்தது. அதில் காமராஜர் போட்டியிட்டார். தி.மு.க. கூட்டணி
சார்பாக சுதந்திராக் கட்சியின் மத்தியாஸ் தேர்தலில் நின்றார். அவரை ஆதரித்து
வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும், காமராஜரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் ராஜாஜி வேண்டுகோள்
விடுத்தார்.
இடைத்தேர்தல் 1969 ஜனவரியில்
நடைபெற்றது. அது அறிஞர் அண்ணா அவர்களின் இறுதிக்காலம். அண்ணாவின் மீது பெரியார்
மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இருப்பினும் இடைத்தேர்தலில் அவர் காமராஜரை
ஆதரித்தார். அத்தேர்தலில் காமராஜர் ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.
அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம்,காமராஜர் பிள்ளைகளுக்குக்
கல்வி கொடுத்தார் என்பதுதான். "சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு நெடுந்தொலைவு நடந்து
செல்லும் காட்சி எனக்கு வேதனை அளிக்கிறது, பிஞ்சுக் கால்கள் அஞ்சு மைல்களுக்கு மேல் நடக்காத மாதிரி
பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என் வேண்டுகோளை
மக்கள் தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி
நெ.து.சுந்தர வடிவேலுவும் நிறைவேற்றித் தந்தார்கள். அவர்களுக்கு நான் என்றும்
நன்றி உடையவனாக இருப்பேன்" என்றார்.
பெரியார்
விரும்பியிருந்தால் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என யார் முதலமைச்சராக இருந்தபோதும், தனக்கான
தேவைகளைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் கேட்டுப் பெற்றதெல்லாம், பிள்ளைகளுக்கான
பள்ளிக்கூடங்களைத்தான் என்பதை நன்றி உள்ளவர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள
வேண்டும்.
அப்படித்தான், திருச்சி
பேருந்து நிலையத்த்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலையின் கண்ணாடியை யாரோ உடைத்து
விட்டார்கள் என்று, திருச்சி
பெரியார் கல்லூரி மாணவர்கள் 1971இல், கல்லூரியை விட்டு வெளியேறி ஊர்வலம் நடத்தினர். பெரியார்
அவர்களைக் கண்டித்து மீண்டும் கல்லூரிக்கு அனுப்பினார். நீங்களெல்லாம் படிக்க
வேண்டும் என்பதற்குத்தான் நான் காலமெல்லாம் பாடுபடுகிறேன். நீங்கள் என்னடாவென்றால், படிப்பை
விட்டுவிட்டு என் சிலையின் கண்ணாடி உடைந்ததற்குக் கவலைப்படுகின்றீர்களே என்று
சொல்லி வருந்தினார்.
பாப்பனர்
அல்லாதாரின் பிள்ளைகள் படித்து முன்னேறித் தங்களின் சாதி இழிவைத் துடைத்து மானமும், அறிவும்
உடையவர்களாக விளங்க வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ற
தெளிவை அவர் ஏற்படுத்தினார்.
(தொடரும்)
நீங்களெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்குத்தான் நான் காலமெல்லாம் பாடுபடுகிறேன். நீங்கள் என்னடாவென்றால், படிப்பை விட்டுவிட்டு என் சிலையின் கண்ணாடி உடைந்ததற்குக் கவலைப்படுகின்றீர்களே என்று சொல்லி வருந்தினார்.
ReplyDeleteபெரியார் பெரியார்தான்
தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின்மேல் பாசம் வைத்திருந்தார் என்றால் பெருந்தலைவர் காமராஜர்மீது அதிக மதிப்பு கொண்டிருந்தார். காரணம் சூத்திரர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக, தான் கொண்ட கொள்கைகளில் சிலவற்றை காமராஜர் என்ற சூத்திரர் மூலம் சாதித்துக்கொண்டதன் நன்றி கடனாக தேர்தலில் காமராஜர் அவர்களை ஆதரித்து இருக்கலாம்.
ReplyDeleteVAAZHKA PERIYAR
ReplyDelete