தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 28 October 2016

சுயமரியாதை - 34

வெளிப்பட்டது விரிசல்!


பொதுவுடைமைக் கொள்கைகளைப் பெரியார் பரப்பிட முயன்ற வேளையில்,அச்சிந்தனை கொண்ட சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் பெரியாருடன்  இணைந்து தொண்டாற்றினர். ஒரு வலிமையான அணி தமிழ்நாட்டில் உருவாகத் தொடங்கிற்று.  அதே வேளையில்,  பிரித்தானிய அரசாங்கம் விழித்துக் கொண்டது. சுயமரியாதை, பொதுவுடைமை என்னும் இருபெரும் கொள்கைகள் ஒருங்கிணைவது தமக்கு ஆபத்து என்று அரசு எண்ணியது.  அரசின் ஒடுக்குமுறைகள் தொடங்கின. 
 

"ஏன் இந்த அரசு போக வேண்டும்?" என்று குடியரசில் பெரியார் எழுதியிருந்த கட்டுரையைக் காரணாமாகக் காட்டி அவரையும், குடியரசின் பதிப்பாளரான அவருடைய தங்கை கண்ணம்மாளையும் 1933 டிசம்பரில் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.  பொதுவுடைமைக் கட்சியின் மீதும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. இந்தியா முழுவதும் பொதுவுடைமைக் கட்சி 1934 ஜூலையில்  தடை செய்யப்பட்டது.

அந்தச் சூழலில்தான் பெரியாரோடு இருந்த ஏ.டி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பன எதிர்ப்பு, அரசாங்க எதிர்ப்பு என்னும் இரண்டு எதிர்ப்புகளைக் கையில் எடுக்க வேண்டாம் என்று கருத்துரை கூறினர். அவர்கள் கூற்றில் நியாயம் இருப்பதாகப் பெரியாரும் கருதினார். பொதுவுடைமைக் கொள்கைகளை பரப்புவதை நிறுத்திக் கொண்டால், தங்களின் சமூக நீதி பயணத்தைக் தொடர்வதில் வெள்ளையர் அரசுக்குப் பெரிய ஒவ்வாமை இருக்காது என்ற எண்ணம் சுயமரியாதை இயக்கத்தில் மேலோங்கியது.  

'பகைத்திறம் தெரிதல்' என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவரும் இதேபோன்ற ஒரு கருத்தைக் கூறியிருப்பதை இங்கு நாம் நினைவு கூரலாம்.
        "தன்துணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
         இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று"
என்று கூறும் திருக்குறள்.  தனக்குப் பெரிய துணை இல்லாதபோது, இரண்டு பகைகளை ஒரே நேரத்தில் தேடிக்கொள்ளக் கூடாது. அப்பகை இரண்டனுள் ஒன்றினைத் தன் துணையாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை தருகிறார் வள்ளுவர்.

ஏறத்தாழ அதே நிலை 1934இல் சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்பட்டது. அத்துடன் இல்லாமல், நீதிக்கட்சிக்கும், சுயமரியாதை இயக்கத்திற்குமிடையே ஒரு நெருக்கமும் வளர்ந்து  கொண்டிருந்தது. பெரியார் ஒரு முடிவுக்கு வந்தார்.  'சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமைப் பிரச்சாரத்தை ஒத்தி வைக்கிறது' என்று அறிவித்தார்.  அதன் விளைவாக ,நெருங்கி நின்ற  சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிச் சென்றனர்.  பொதுவுடைமைக் கருத்துப்  பரப்பலைத் தள்ளி வைத்தது, நீதிக்கட்சியை நெருங்கியது என இரண்டு செயல்களுமே அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

எனினும் இயக்கத்தை விட்டு விலகுவதற்கு முன்பாகச் சுயமரியாதை இயக்க மாநாடுகளிலேயே தங்களின் கருத்துகளை வெளிப்படையாகப் பேசினர். மன்னார்குடியில் நடைபெற்ற சமதர்ம மாநாட்டிலேயே சில தலைவர்கள் சமதர்மத்தை எதிர்த்தனர் என்றும், அதனைப் பெரியார் கண்டிக்கவில்லை என்றும் குற்றம்சாற்றிய சிங்காரவேலர், "இது பொது ஜனங்கள் இயக்கமா, தலைவரின் ஆதிக்கத்தையும், தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் விரும்பும் இயக்கமா?" என்று வெளிப்படையாகவே கேட்டார்.

இதனைக் காட்டிலும் கடுமையாக, "நமது தலைவர் ஈ.வெ .ரா அவர்கள், ஜஸ்டிஸ் கட்சியோடு சரச சல்லாபம் காட்டுவதாய்ப் பாவித்து, அது சமதர்மிகளுக்குப் பொருந்தாது என்று ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தேன். அதை பிரசுரிப்பதற்கு முன் 'புரட்சி' நின்றுவிட்டது. அதன் பிறகு வந்த 'பகுத்தறிவில்' பிரசுரித்தார்களோ, இல்லையோ அது எனக்குத் தெரியவில்லை" என்று எழுதுகிறார் சிங்காரவேலர். (சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்-தொகுதி 3)

'சரச சல்லாபம்' உள்ளிட்ட எந்த வரியும் மாற்றப்படாமல்,  அப்படியே அது பெரியாரால் வெளியிடப்பட்டது என்பது சுயமரியாதை இயக்கத்தின் ஜனநாயகப் போக்கைக் காட்டுகின்றது. அந்த அறிக்கையின் இறுதியில், "ஈ.வெ.ரா வின் குறிப்பு" என்று போட்டுப் பெரியார் தன் நிலைப்பாட்டையும் வெளியிட்டிருந்தார். அந்தக் குறிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றே கூற வேண்டும்.   


                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment