தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 9 November 2016

சுயமரியாதை - 38

இந்தியை எதிர்த்த செந்தமிழ் நாடு!



1936ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் அரசியல் விடுதலையே முதன்மையானது என்று கருதிய காங்கிரஸ், பொதுவுடைமையினர் ஓர் அணியாகவும், சமூக விடுதலையே முதல் தேவை என்று எண்ணிய நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தினர் இன்னொரு அணியாகவும் பிரிந்ததோடல்லாமல், இரு அணிகளும் ஒன்றையொன்று கடுமையாக எதிர்த்தும் நின்றன. இந்தச் சூழலில், 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் நிலையை முற்றிலுமாக மாற்றிப் போட்டன.


ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி, தேர்தலில் தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.   ராஜாஜி தமிழ்நாட்டின் பிரதமர் (அப்போது முதலமைச்சர் பதவி என்பது பிரிமியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது) ஆனார். அவரது தலைமையில், பிரகாசம், சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், எஸ்.ராமநாதன் (பெரியாரோடு மிக நெருக்கமாக இருந்த அதே ராமநாதன்தான்), முனுசாமிப் பிள்ளை, கோபால் ரெட்டி, வி.வி.கிரி, ராமன் மேனன், யாகூப் ஹாசன் ஆகிய 10பேரைக் கொண்ட அமைச்சரவை 1937 ஜூலையில் பதவி ஏற்றது. 

இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டியுள்ளது. திராவிடம்தான் தெலுங்கர்கள் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களை இங்கு பதவிகளில் அமர்த்தியது என்று ஒரு குரல் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலே உள்ள ராஜாஜியின் அமைச்சரவையைக் கவனித்துப் பாருங்கள். அவர்களுள் எத்தனை பேர் தமிழர்கள் என்று கணக்கிடுங்கள்.  ஆனால் இது குறித்து எவரும் பேசுவதில்லை. காரணம் ராஜாஜி எது செய்தாலும் நம் தமிழ்த் தேசியர்களுக்குக் கோபம் வராது. திராவிட எதிர்ப்பாளர்களின் கோபம் எல்லாம், சாதியை எதிர்த்துப் போராடிய பெரியார் மீது மட்டும்தான்.


ராஜாஜி பதவியேற்ற 1937ஆம் ஆண்டே தமிழ்நாடு ஒரு போர்க்களமாக மாறத் தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் அவரேதான். பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், தமிழகப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் ஒரு பெரும் போராட்டத்திற்கு வித்திட்டது. அவரைத் தாண்டி, சத்தியமூர்த்தி சாஸ்திரியார், தன்னுடைய பேச்சு ஒன்றில்,

"என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரி ஆனால், இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாய பாடமாகப் படிக்கச் செய்வேன். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனை பெரும் கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையும் உடனே ஏற்படுத்தி விடுவேன்"

என்று குறிப்பிட்டார். எரிகின்ற நெருப்பில் இப்படி நெய் ஊற்றப்பட்ட பிறகு, போராட்டம் மேலும் வலுவடைந்தது.  முதல் எதிர்ப்பு தஞ்சைக்கு அருகில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்துதான் தொடங்கிற்று.  ராஜாஜியின் அறிவிப்பு வந்த 20 நாள்களுக்குள் அந்த எதிர்ப்பு மக்கள் தளத்திற்கு வந்துவிட்டது. தமிழவேள் உமா மகேசுவரானார், வேங்கடாசலம்(பிள்ளை), சிவ. குப்புசாமி (பிள்ளை) ஆகியோர்முதலில் நிற்க, மாணவர் பட்டாளம் அவர்களின் பின்னால் திரண்டது. மறைமலை அடிகளார் தலைமையில் 1937 அக்டோபர் 4 ஆம்  தேதி சென்னை, கோகலே மண்டபத்தில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அடிகளாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் ஆற்றிய உரைகள் தமிழகமெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களை ஒன்று திரட்டியது.

தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பு அணி என்பது, தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் உள்ளே வந்த பின்பு வெகு மக்கள் போராட்டமாக மாறியது. இந்தியை எதிர்த்து மாவட்டம்தோறும் சுயமரியாதை மாநாடுகள் நடத்தப்பட்டன. புலவர் இளஞ்செழியன் தன்னுடைய "இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு" என்னும் நூலில், தேதி வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

1938இல் தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டு நின்றது. இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், இப்படி இன்னொரு நோக்கில் ஒரு மக்கள் எழுச்சி வேறு எந்த மாநிலத்திலும், கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்தியாவின் 'தேசிய நீரோட்டத்திலிருந்து' தமிழ்நாடு பிரிந்துநின்ற நிகழ்வாகவும் அது இருந்தது.

அந்தப் போராட்ட காலத்தில், பொதுவுடைமைக் கட்சி ஏடான ஜனசக்தி 11.06.1938 அன்று, "ஹிந்தி அவசியமா?" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையைத் தன் கட்சி நிலைப்பாடாக வெளியிட்டது. அந்தக் கட்டுரை சுயமரியாதை இயக்கத்திற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் இடையிலான பிரிவை மேலும் பெரிதாகியது



                                                                                                              (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment