தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 18 November 2016

சுயமரியாதை - 41

இருபெரும் தலைவர்களை ஈன்ற போராட்டம்


                                                    
அந்த வழக்கில் பெரியாருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத்  தண்டனையும், மூன்றாம் வகுப்பும் வழங்கப்பட்டன. முதலில் சென்னைச் சிறை, பிறகு பெல்லாரிச் சிறை, அதன் பிறகு சேலம் சிறை என மூன்று சிறைகளில் அவர் அவர் ஆறு மாதங்களைக் கழித்தார். அவருடைய உடல் நலிவு காரணமாக 1939 மே மாதம் 22 ஆம் தேதி, எந்த நிபந்தனையும் இன்றி, அரசு அவரை விடுதலை செய்தது. 


அப்போது அவர் சிறையில் இருந்தது ஆறு மாதங்கள்தான் என்றாலும், அந்த ஆறு மாதங்களில் சிறைக்கு வெளியே பல மாற்றங்கள் நடந்தன.  புதிய தலைவர்கள் பலரை அக்காலகட்டம்தான் நாட்டிற்குத் தந்தது. அறிஞர் அண்ணாவும் அப்போராட்டத்தில் சிறை சென்றார். தமிழகம் அவரை அறியத் தொடங்கிய நேரம் அதுதான். பொது வாழ்வில் அவர் சிறை சென்ற முதல் நிகழ்வும் அதுதான்.  அவர் வெறும் பேச்சாளர் அல்லர், கொள்கைப் பற்றாளர். கொள்கைக்காகச் சிறை செல்லவும் தயங்காதவர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள அந்நிகழ்வு உதவியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணாவுக்கு 4 மாதம் சிறைத் தண்டனை.  தீர்ப்பு வழங்கப்பட்டபோது,  "நீதிபதி நான்கு மாதம் என்றவுடன், கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்த்து மருத்துவர் நான்கு மாதம் என்று சொன்னவுடன் ஏற்படும் பூரிப்பு எனக்குள்ளும் ஏற்பட்டது" என்றார் அண்ணா. அப்போது தொடங்கிய அவர் புகழ் இறுதிவரையில் - ஆம், அவர் இறக்கும் வரையில் -  ஏறுமுகமாகவே இருந்தது.  அஞ்சாநெஞ்சன் அழகிரியின் மறைவுக்குப் பின், 1950 முதல் அண்ணாவே இயக்கத்தின் 'தளபதி' ஆனார்.  

அந்தப் போராட்டம் தந்த இன்னொரு தலைவர் கலைஞர்.  14 வயதுச் சிறுவனாய்த் திருவாரூர்த் தெருக்களில் கொடிபிடித்து அன்று தொடங்கிய அவரது பயணம், 80 ஆண்டுகளாய் இன்றும் தொடர்கிறது. அப்போது அவர் பள்ளி மாணவர்.  இந்தி எதிர்ப்புப் போரில், தன் நண்பர் தென்னன் உள்ளிட்ட சிலரைச் சேர்த்துக்கொண்டு ஒரு மாணவர் எழுச்சியை அந்தப் பகுதியில் ஏற்படுத்தினார். ஒரு கையெழுத்து ஏடும்  நடத்தினார்.  கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றார். கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுவாழ்வில், தமிழகத்தில், தவிர்க்க இயலாத சக்தியானார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்னும் நிலை வரையில் உயர்ந்தார்.

கலைஞர் பிறந்தது திருக்குவளை என்னும் சிற்றூரில். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவு பிரிந்து சென்றால் அந்தச் சிறு கிராமத்தைப் பார்க்க முடியும். அந்த ஊரில் பிறந்து திருவாரூர் அரசியலில் வெல்வதே கடினம். அவர் திருவாரூரைத் தாண்டி தஞ்சாவூர் அரசியலையும் வென்றார். இறுதியில் தமிழ்நாட்டு அரசியலிலேயே முடிசூடினார். பிறந்தது எளிய கிராமத்தில்.பள்ளியில் படித்தது பெரிதாக ஒன்றுமில்லை. அவர் பிறந்த சமூகமோ மிக மிக மிகப் பிற்பட்ட ஒன்று. இவை அனைத்தையும் கடந்து அவர் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே அறிந்த தலைவரானார்.  இப்படி அண்ணா, கலைஞர் என்னும் இருபெரும் தலைவர்களைத் தந்த போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

அந்தக் காலத்தில்தான்தமிழுக்காக இருவர் தங்கள் உயிர்களைச் சிறையில் பலி கொடுத்தார்கள். 1939 ஜனவரி 15 ஆம் நாள் தோழர் நடராசனும், அதே ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையில் இறந்து போனார்கள். வயிற்றுவலியால் துடித்த நடராசன் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம் என்றது அரசு. மண்டியிடவில்லை அந்த மாவீரன். பெரியாரின் உண்மைத் தொண்டனாய்ச் சிறையிலேயே மாண்டு போனான்.

பெரியார் சிறையில் இருந்த  அந்த வேளையில்தான் அவருக்குப் பெரியார் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அந்தப் பட்டம் ஒரு பெண்கள் மாநாட்டில், பெண்களால் அவருக்குக் கொடுக்கப் பட்டதாகும்.. பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர், சாதி எதிர்ப்பாளர், பகுத்தறிவுச் சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டிஅவர் ஒரு மாபெரும் பெண்விடுதலைப் போராளி என்பது மிக முதன்மையானது. அது அவரின் தனித்தன்மை. அது அவரின் உயிர்க் கொள்கை. ஆகவே அவருக்குப் பெண்கள் கூடிப் பெரியார் என்று பட்டம் சூட்டியது பொருளும், பொருத்தமும் உடையது. அதனால்தான் அப்பட்டம்  இன்றுவரை நின்று நிலைத்துள்ளது.
                                                                                    
 (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment