தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 28 February 2017

நெடுவாசல் போராட்டம்

                                          


அரசோ, அதிகாரமோ யாராயிருந்தாலும் இனி  எதனையும் உடனே முடிவெடுத்து விட முடியாது என்கின்ற அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு நெடுவாசல் இன்னொரு எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கின்றது

மக்கள் திரண்டு போராடுகின்றனர். அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் அங்கு கூடுகின்றனர். இரண்டு மூன்று நாள்களாய் எல்லாச் சாலைகளும் நெடுவாசல் நோக்கியே நீள்கின்றன


எனினும் உணர்ச்சி வயப்பட்டு உடனே அந்த இடத்தில் போய் நின்றுவிடுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது.  இப்போதெல்லாம் எங்கு மக்கள் திரண்டாலும் உடன் அந்தப் போராட்டத்தை ஆதரித்து விட வேண்டும், அந்த ஜோதியில் நாமும் கலந்து விட வேண்டும் என்ற ஒரு போக்கு எழுந்துள்ளது. இதுவும் நல்லதில்லை.  மாற்றுக்  குரல்களைச்  செவி மடுப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

இந்தச் சிக்கல் என்பது முதன்மையாக மக்கள் நலன், சுற்றுச் சூழல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகிய மூன்று தளங்களில் நிலை கொண்டுள்ளது. மக்கள் நலனே முதன்மையானது என்பதில் எந்தக்  கருத்து வேறுபாட்டிற்கும்  இடமில்லை.  எனினும் மற்றவைகளையும்  கவனிக்காமல் புறந்தள்ளி விட வேண்டியதில்லை

நான் அறிந்த புவியியல் பேராசிரியர்கள். சூழலியலாளர்கள், பொருளியல் வல்லுநர்கள் ஆகிய மூன்று துறையினரிடம் சில செய்திகளைக் கேட்டறிந்தேன். அவையும் இறுதியான கருத்துகளாக இருக்க முடியாது என்பதை உணர முடிகிறது. இருந்தாலும் முடிவை நெருங்குவதற்கு அவை உதவுகின்றன.  

அங்கு கிடைக்கக்கூடிய எண்ணையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். வாயுதான் (gas) மிகுதி என்கின்றனர். அதனால் பெரிய பயன் ஏதும்  இருக்காது என்பது அவர்களின் கருத்து.  15 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியப்பட்டணம் அருகில் இப்படி வாயு கிடைத்ததாகவும், அதிலிருந்து மின் உற்பத்தி நடைபெறுவதாகவும், அதனால் அங்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

நம் மண்ணையும், மண்ணின் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கருதுகின்ற நாம், எரி  பொருளைப் பயன்படுத்துவதில் எந்தச்  சிக்கனந்த்தையும் காட்டுவதில்லை என்ற அவர்களின்  குற்றச்சாற்றை மறுக்க முடியாது. அதனால், நம் அன்னியச் செலவாணியில் 70 விழுக்காடு எரிபொருள் வாங்குவதில் போய்விடுகிறது என்றும் கூறுகின்றனர்.


ஆயிரம் இருந்தாலும், இந்த முயற்சியால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. மேலும், கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அரசு கொடுக்கும் பணம் நியாயமாக இருக்காது என்பதும் அனுபவத்தில் நாம் கண்ட உண்மை. ஆகவே அந்தப் பகுதி மக்களுக்கு இத்திட்டம் நன்மையை விடத்  தீங்கையே கூடுதலாகக் கொண்டுவரும் என்பது தெளிவாகிறது.  எனவே இந்நிலையில் அத்திட்டத்தைக் கைவிடுவதே சரியானதாக இருக்கும் என்னும் கருத்தை உறுதிப்படுத்தி, அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதே ஏற்றுக்கொள்ளத் தக்கது

7 comments:

  1. இத்திட்டத்தினை நடுவண் அரசு கைவிடவேண்டும் ஐயா

    ReplyDelete
  2. பெரும்பான்மை மக்கள் வாக்களித்து சரியில்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் சட்டம் ஏற்றுக்கொள்கிறதே.பெரும்பான்மை போராடும் இடங்களில் ஏதாவது முறையில் கருத்து வாக்களிப்பு முறையை முன்னிறுத்தவேண்டும்!!

    ReplyDelete
  3. கடைசி பத்திக்கு முன்பு வரை எல்லாம் சரி தான். தகவல்களை சேகரித்து , பகுத்து ஆராய்ந்து,பின் தெளிந்த கருத்துக்களை ஒரு சார்பின்றி வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    கடைசியில் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் நிலைப்பாடும், அதனை மீறி கருத்து சொல்ல இயலாத உங்களது யதார்த்த நிலையும் வெளிப்படையாகத் தெரிகிறது.

    ReplyDelete
  4. இதே போல இளைஞர்கள் சென்று ஓஎன்ஜிசி நிறுவனத்தால் திருவாரூரின் (கமலாபுரம், அம்மையப்பன், புலிவலம் மற்றும் விளமல் பகுதிகள்)விவசாயமும் தண்ணீரும் மண் வளமும் அழிந்து ஒழிந்து கொண்டு இருப்பதை வெளிக்கொண்டு வர வேண்டும். அதனை நியூஸ்7 போன்ற மீடியா உள்ளே புகுந்து கள நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன்பு விவசாயம் செய்தவர்கள் இன்று எந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வீட்டுக்கு அடியில் கேஸ் பைப்புகள் செல்லும் கொடூரத்தை மக்களுக்கு காட்ட வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைகள் அழிவுகளை எப்படி எல்லாம் ஏற்படுத்த உள்ளது என்று அனைவருக்கும் விளக்க வேண்டும். மற்ற ஊர்க்காரர்கள் போல திருவாரூர்காரர்களும் போராட்டகளத்திற்கு வர வேண்டும். தமிழகத்திற்கு நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கும் துயரத்தை விளக்க வேண்டும்.

    ReplyDelete
  5. நீங்கள் கூறுவது மிகச்செறியான ஒன்று ஆசிரியர்,, தமிழகத்தில் இவ்வளவு போராட்டம் வெடிப்பதற்கு காரணம் மத்திய அரசு நம்மை தொடர்ந்து வஞ்சிப்பது தான், செங்கை புத்தக விழாவில் நீங்கள் Demonetization பற்றி கூறும் போது இவ்வளவு கொடுமையும் அமைதியாக ஏற்றுகொள்காறார்களே தமிழ்நாட்டில் இவ்வளவு புத்தர்கள் வாழ்கிறார்களா என்று சொன்னீர்கள் , காலம் சற்று மாறிவிட்டது நம் இளைய சமுதாயம் புரட்சியை நோக்கி பயனிக்க ஆரமித்துவிட்டார்கள்,, ஒற்றுமையை காட்டுகிறார்கள் ஆசிரியர் சுபவீ ஐயா அவர்களே,, எதிரிகள் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள் நாம் தான் பிரிந்து சிதறி கிடந்தோம் ஆகையால் தான் தலைவர் கலைஞருடைய சேது சமுத்திர திட்டம் செயல்படாமல் போனது,,, நம் மக்கள் அனைவரும் சாதி, மதம், பிரிவுகளை தாண்டி ஒன்று சேர்வது நமக்கு பெருமை.......

    ReplyDelete
  6. இந்த திட்டத்தை ஆதரிப்பவர் "சேது சமுத்திர திட்டத்தை" ஏன் எதிர்க்கிறார்கள்.மீத்தேன்,அணு உலை,கார்பன் திட்டங்களை விடவா "சேது சமுத்திர திட்டம்" ஆபத்தை விளைவிக்க கூடியது??? தமிழகத்தை வளர்ச்சி ஆக்கும் "சேது சமுத்திர திட்டத்தை" எதிர்ப்பவர்களை பிரிவினை வாதி அல்லது தேச துரோகிகள் என அழைக்கலாமா????

    ReplyDelete