தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 1 September 2017

அரியணையிலும் அதே கொல்லன்!


 சிலப்பதிகாரத்தின் வழக்குரை கதையை நாம் அனைவரும் அறிவோம். அரியணையில் பாண்டிய மன்னன் வீற்றிருக்க, தன் சிலம்பை உடைப்பாள் கண்ணகி. மாணிக்கப் பரல்கள் சிதறி ஓடும். தன் மனைவியின் சிலம்பில் இருந்தவை முத்துப் பரல்கள் என்பதால், தான் தவறு செய்துவிட்டோம், நீதி தவறிவிட்டோம் என்பதை உணர்ந்த மன்னன், "யானோ அரசன், யானே கள்வன்"  என்று கூறி அங்கேயே உயிர் துறப்பான். 


அரியணையில் வீற்றிருந்தது நீதி தவறாத அரசன் என்பதால் அந்தக் காட்சி அங்கு அரங்கேறியது. ஒருவேளை, குற்றம் இழைத்த பொற்கொல்லனே  மன்னனாக வீற்றிருந்தால் யாரிடம் நீதி கேட்க முடியும்? 

                  "சிலம்பை உடைத்து என்ன பயன் 
                   அரியணையிலும் 
                   அதே கொல்லன்" 
என்று ஒருகவிதையில் எழுதியிருப்பார், கவிஞர் ஈரோடு தமிழன்பன். 

இன்றைய அரசியல் சூழல்,  அந்த வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.  எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. யாரும் கோராமலே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் பலவும் அந்தக் கோரிக்கையை முன்வைத்த பின்னும், எதுவுமே நடக்காதது போலப் பேசுகின்றார் ஆளுநர். இப்போது குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் என்ன பயன் என்ற  எண்ணமே மக்களிடம் மேலோங்கியுள்ளது. குடியரசுத் தலைவர், ஆளுநர் அனைவரும், மோடியின் மறுமுகங்கள்தாம் என்றால் யாரிடம் நீதி கோருவது?

அரசியல் கட்சிகளைத் தாண்டி, பொதுமக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இந்த அரசு நீடிப்பது சரியில்லையென்று வெளிப்படையாகவே கூறுகின்றனர். 


இந்து நாளேடு, "சட்ட ரீதியிலான வியாக்கியானங்களைத் தாண்டி, முதலில் தார்மீக ரீதியாக இந்த அரசு பதவியில்  நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டது என்பதற்கு முதல்வர் பழனிச்சாமி முகம் கொடுக்க வேண்டும்..........கண்ணியமாக ஆட்சியிலிருந்து விலகுங்கள், மக்களைச் சந்தியுங்கள்" என்று தலையங்கம் (2017 செப்.1) எழுதியுள்ளது. 

சரி, அவையெல்லாம் கண்ணியவான்களின் காதுகளில்தானே  ஏறும்!5 comments:

 1. ஐயா, தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆளுநர் தவறு செய்தால் குடியரசுததலைவர் அவரும் கண்டுகொள்ளவில்லை என்றால் நீதிமன்றம். ஆனால் நீதிமன்றம் சொல்கிறது, “தி.மு.க. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்கிறது.” ஆமாம் நீதிமன்றங்களை அரசியல் மேடைகளாக்குவது தவறுதான். ஆனால் நீதிமன்றங்கள் பஜனைமடங்களாக ஜால்றாமன்றங்களாக மாறி நாற்றமெடுக்காமல் பார்த்துக்கொள்வது யார் பொறுப்பு ?

  ReplyDelete
 2. இந்த ஆட்சியே ஆ.தி.மு.கவின் கடைசீ ஆட்சியென்றே எனக்கு தோன்றுகிறது. தாமாகவே பதவி விலகுவார்களென்று யாரும் பகல் கனவு காண்பதில் ஒரு பயனும் இல்லை. ஆட்சி நீடிக்கும் வரையில் இருந்து பதவியை அனுபவித்து விட்டு, பணத்தை கொள்ளையடித்து விட்டு பிறகு மக்களை சந்திக்கலாமென்றே அவர்கள் எண்ணுகிறார்களென்று எனக்கு தோன்றுகிறது. இப்போது மக்களை சந்தித்தால் பலத்த அவமானத்துடன் தோல்வியடைவார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். மக்களின் முழு ஆதரவு பெற்ற வலிமையான ஒரு தலைவர் உருவாகும் வரையில் ஆ.தி.மு.கவிற்கு எதிர்காலம் இல்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் அப்படி ஒரு தலைவர் உருவாக வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை.இது தமிழகத்திற்கு கெட்ட காலம்.

  சென்ற வருடமே ஸ்டாலின் முதல்வராகி இருக்க வேண்டும்.

  இந்த இடத்தில் இன்னொன்று குறிப்பிட விரும்புகிறேன். ஆ.தி.மு.கவிற்குள் பிளவு உண்டாக்கவோ ஆட்சியை கவிழ்க்கவோ தி.மு.க எந்த தந்திரத்திலும் ஈடுபடாதது பாராட்டத்தக்கது. அது அரசியல் முதிர்ச்சியையும் உயர்ந்த கோட்பாடையும் காட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் கூறுவது உண்மை. ஸ்டாலின் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் இன்று தி.மு.க. ஆட்சி நிச்சயம் இருந்திருக்கும். ஸ்டாலின் அவர்கள் மீண்டும் கூறத்தொடங்கிவிட்டார், அடுத்து கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி என்று. இது சரியாக தோன்றவில்லை. தற்போதுள்ள ஸ்டாலினின் செல்வாக்கை தி.மு.க. பயன்படுத்த தவறக்கூடாது. கலைஞர் மீண்டும் முதல்வர் என்பதைவிட ஸ்டாலின் முதல்வராகி ஆட்சி செய்வதையே கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களும் விரும்புகிறார்கள்.

   Delete
 3. பழைய கதைகளிலே வருவதுபோல், கொடியவன் உயிர், ஏழு கடல் தாண்டி கூண்டிலே உள்ள பறவையிடம் இருக்கும். கதையின் உச்சகட்டத்தில் பறவையின் கதி அனைவரும் அறிந்ததே.

  ReplyDelete
 4. தற்போது பறவை நம் நாட்டில் இல்லை.

  ReplyDelete