தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 29 October 2017

கறுப்புக்கொடி வன்முறை கல்லெறிதல் நன்முறையா?பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை, அரசியலில் வன்முறைக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வரவேற்க வேண்டிய அறிவிப்பு!

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? எந்தச் சூழலில் தமிழிசை இப்படிக் கூறியுள்ளார்? 


கடந்த 26 ஆம் தேதி, நாகையில் நடைபெற்ற பாஜக பொறுப்பாளர் ஒருவர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள அவர் திருச்சியிலிருந்து, பல கார்கள் பின்தொடரச் சென்றுள்ளார். அந்த வண்டிகள் மயிலாடுதுறை வழியாகச் செல்லும்போது, அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்திலிருந்து வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஐவர் தமிழிசைக்குக் கறுப்புக்கொடி காட்டியுள்ளனர். 

காவலுக்கு நின்றிருந்த காவலர்கள் ஓடிவந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதற்குள்ளாக, தமிழிசையுடன் வந்தவர்கள் கார்களை விட்டு இறங்கி வந்து, சிறுத்தைகள் கட்சித் தோழர்களை அடிக்கத் தொடங்கியுள்ளனர். காவல்துறையினர் சிறுத்தைகளைத் தங்கள் ஊர்தியில் ஏற்றியுள்ளனர். 

அதற்குப் பிறகும், பாஜகவினர், காவல்துறை ஊர்தியைத் தாக்கி, கண்ணாடிகளையெல்லாம் உடைக்கும் காட்சியை எல்லா ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது. காவல் ஊர்திக்குள், பெரிய பெரிய கற்களை வீசி, உள்ளேயிருந்த சிறுத்தைத் தோழர்களைத் தாக்கினர். இறுதியில், ஒருவழியாக அங்கிருந்து ஊர்தி புறப்பட்டது. இதுதான் அங்கு நடந்தது. 

இந்தச் சூழலில்தான் "வன்முறை கூடாது" என்று தமிழிசை அறிவுரை சொல்லியுள்ளார். யாருக்கு? தாக்குதலுக்கு உள்ளான விடுதலைச் சிறுத்தைகளுக்கு! கறுப்புக்கொடி காட்டுவது வன்முறையாகவும், கல்லெறிதல் நன்முறையாகவும் அவருக்குப் படுகிறது போலும்!

கறுப்புக்கொடி காட்டுவதென்பது ஜனநாயக வழிமுறைகளில் ஒன்று. எல்லாக் கட்சிகளும் அதனைச் செய்துள்ளன. பாஜகவும் அதற்கு விதிவிலக்கில்லை.  அதற்கு அனுமதி கொடுப்பதும், மறுப்பதும் காவல்துறையின் வேலை. காவல்துறை மறுத்தாலும், நீதிமன்றம் சென்று வாதிட முடியும். ஆனால் காவல் ஊர்தியைத் தாக்குவதும், கல்லெறிவதும் முழுக்க முழுக்க வன்முறை. 

வன்முறையில் ஈடுபட்டவர்களே, வன்முறை கூடாது என்று அறிவுரை சொல்வது காலத்தின் கோலம்! 


1 comment:

  1. தங்கப்பதக்கம் படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சி நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete