தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 19 November 2017

ஆளுநர் ஆய்வு - அத்துமீறும் செயல்!

செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் போனார் முந்தைய ஆளுநர் (பொறுப்பு). செய்ய வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழகத்தின் இன்றைய ஆளுநர். இவர்களை முன்னுணர்ந்தே வள்ளுவர்

               "செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க 
                செய்யாமை யானும் கெடும்

என்று கூறியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது

அதிகாரிகளை அழைத்து ஆளுநர் பேசுவது, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊர் - இவைகளையெல்லாம் பார்க்கும்போது, இது திட்டமிட்ட நிகழ்வாகவே தோன்றுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான முன்னோட்டமோ  என்றும் ஐயம் வருகின்றது


ஆளுநர் பதவி என்பதே ஆங்கிலேயர்கள் விட்டுச்  சென்றுள்ள ஆதிக்கத்தின் மிச்சம்ஆனால், 1935 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டத்தில் இருந்ததை விட, 1950 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் அவருக்குக் கூடுதலான அதிகாரத்தை வழங்கியுள்ளது.

ஆளுநருக்கு, நிர்வாகம், நிதி, நீதி, சட்டமன்றம் ஆகிய நான்கு துறைகளில் வழங்கியுள்ள அதிகாரம் போதாது என்று, 163 ஆவது பிரிவு விருப்ப அதிகாரம் (discretion power) என்ற ஒன்றையும் கூடுதலாக வழங்கியுள்ளது. இந்த அதிகாரம், குடியரசுத் தலைவருக்கான 74 ஆம் பிரிவில் கூட இல்லை

குடியரசுத் தலைவர் பதவி அலங்காரப் பதவி என்றால், ஆளுநர் பதவி மட்டும் எப்படி அதிகாரப் பதவி ஆக முடியும்? இன்று தமிழ்நாட்டில் ஆளுநர் தெருவில் இறங்கி மக்களை சந்திப்பதும், அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போடுவதும் சரி என்றால், குடியரசுத் தலைவரும் இப்படிச் செயல்படுவதை மத்திய அரசு ஏற்குமா? அங்கொரு நீதி, இங்கொரு நீதியா

மாநில சுயாட்சி உளுத்துப் போன ஒன்றாக ஆகிவிட்டது என்று பாஜக வைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறார்.  அப்படி ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். மாநிலங்கள் வலுப்பெறுவதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லது. மத்தியில் அதிகாரம் குவிந்தால், அது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சி, மக்கள் செல்வாக்கற்ற, மக்களுக்குப் பணி செய்ய  விரும்பாத  ஆட்சியாக இருக்கின்ற போதும், மக்கள் ஆட்சிக்கு மாறாக, ஆளுநர் ஆட்சி நடத்த முயல்வது எப்படிச் சரியாகும்

ஆளுநர் எல்லா மாவட்டங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கின்றார் என்ற அறிவிப்பும், அதனை "டேக் இட் ஈஸி" என்று சொல்லும் சுரனையற்ற அமைச்சர்களும் அறிஞர் அண்ணா முன்மொழிந்த மாநில சுயாட்சிக்கு நேர்ந்துள்ள அவமானம்!


ஆதிக்கம் செலுத்த மத்திய அரசும், அவமானப்பட மாநில அரசும் அணியமாக  இருக்கலாம். ஆனால் தன்மானமுள்ள தமிழகம் அதற்கு அடிபணியாது!

9 comments:

 1. இரத்தினவேல்19 November 2017 at 14:52

  மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடும் நோய், மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அனைத்திந்திய அளவில் மாநில சுயாட்சிக் கோரிக்கை வலு பெற்றால்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

  ReplyDelete
 2. வித்யாசாகர் எதுவும் செய்யவில்லையென்றாலும் குற்றச்சாட்டு,சென்னையில் இல்லையென்றாலும் குற்றச்சாட்டு;முதலமைச்சர்,பிற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அனைத்துக்கட்சிகளும் கவர்னரிடமே குற்றம் சாட்டி விட்டு,அதனால் பன்வாரிலால் சென்னையில் மட்டும் இருந்து கொண்டு முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டும் பார்த்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழாமல் அதைவிட சிறிய ஊர்களுக்கு சென்று உண்மையான கள நிலவரங்களை ஆராய்தாலும் குற்றச்சாட்டு என்ற உங்களின் மற்றும் பிறரின் குற்றச்சாட்டுகள் ஒரு கேடுகெட்ட அரசியலாகும்(degenerated politics)!.
  மேலும் இதுவே அரசியலமைப்பிற்கு முரணானது என்றால் கழகங்களின் கிரனைட் கொள்ளை,மணல் கொள்ளை,நில அபகரிப்பு,எங்கும் லஞ்சம்,எதிலும் ஊழல் என்ற இன்றைய நிலை அரசியலமைப்பிற்கு உகந்ததா?.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஒரு சச்சரவு புதிதாய் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென்று... அவள் சொன்னால் ஏன் அப்பா பெயர் ராமன் அதனால் ராமன்னு தான் பெயர் வைக்கணும்னா... அவன் என் அப்பா பெயர் கிருஷ்ணன் அதனால கிருஷ்னன்னு தான் பெயர் வைக்கணும்னான்... சச்சரவு முத்திப்போச்சு அந்தப்பக்கம் வந்த வழிப்போக்கன் சச்சரவுக்குள்ள வந்தான் ஏன் சண்டை போடுறீங்க நான் தீர்வு சொல்றேன்னு சொல்லி ராமகோபாலகிருஷ்ணன்னு பெயர் வச்சுட்டு போய்ட்டான். பிரச்னை தற்காலிகமா முடிஞ்சது காலம் கடந்தது இப்ப அந்த பையனுக்கு ஒரே குழப்பம் யோசனை பன்னுனான் ஒரு தாத்தா பெயர் ராமன் இன்னொரு தாத்தா பெயர் கிருஷ்ணன் இந்த நடுவுல இருக்க கோபால் யாரு குழப்பம் அதிகமாயி பெத்தவங்கடையே கேட்டுட்டான் அப்ப தான் அவங்களுக்கே புரிஞ்சது அவங்க ஏமாற்றப்பட்டது...
   மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி அப்படின்றத இனி வர்ற காலத்துல காட்டாட்சியா தான் பார்க்க போறோம். ""டேக் இட் ஈஸி""கள் உங்களை உங்களை கணக்கிலேயே எடுத்துக்கொள்ள போவதில்லை உங்களின் சுயாட்சி இனி உங்கள் கைகளில் மட்டுமே...
   விழித்திரு தமிழனே...!

   Delete
  2. திரு பெரியசாமி அவர்களே கவர்னர் ஏன் கள ஆய்வு செய்யவேண்டும்?

   அப்புறம எதையெதையோ சொல்லி அவையெல்லாம் அரசியலமைப்புக்கு உகந்ததா? என்று கேட்கிறீர்களே, ஒரே வரி ஒரே மதம் ஒரே மொழி ஒரே நாடு என்று எங்கும் எதிலும் ஓர் ஒற்றை அதிகாரத்தை உருவாக்க முனைந்து பணிசெய்து வருகிறதே ஒரே கட்சி அந்த போக்கு அரசியலமைப்புக்கு உகந்ததா?

   இந்த நாட்டின் அடிப்படை (வலுகட்டாய) கட்டமைப்பை கேலி செய்யும் ஒரு கட்சி எதை நோக்கி நம்மை அழைத்து போக எண்ணுகிறது என்பதை கவனித்து பாருங்கள். அதைப்பற்றி அல்லவா அரசியலமைப்பு பேசுகிறது. அதைப்பற்றி பேசுங்கள். ஊழலைப்பற்றி அரசியலமைப்பு எங்கே பேசுகிறது? அதைப்பற்றி வேறு தனித்தனி சட்டங்கள்தான் பேசுகிறது. அதற்கு அச்சட்டத்தின்படி தண்டனை உண்டு. அது வேறு நாடே தனது அடித்தளத்தில் ஆட்டங்காண்பது என்பது வேறு.

   மறுபடியும் கேட்கிறேன் திரு பெரியசாமி அவர்களே கவர்னர் ஏன் கள ஆய்வு செய்யவேண்டும்?

   Delete
 3. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
  நாடொறும் நாடு கெடும்

  ReplyDelete
 4. Enno moo ponga, These guys are with the best of the intention are causing huge harm to this country, gandhiyum Nerhuvum, Periyarum annavum uruvakkuna Nadu.

  ReplyDelete
 5. தன்மானமுள்ள தமிழகம் ?

  ReplyDelete
 6. இவரது நடவடிக்கை தான்டி கிரன் பேடியின் நடவடிக்கைகள் உள்ளது.தமிழனை பைத்தியமாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

  ReplyDelete
 7. ரஞ்சித்24 November 2017 at 18:03

  அய்யா ஒரு குறள் உதாரணத்தோடு செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் போனார் முந்தைய ஆளுநர் (பொறுப்பு).செய்ய வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழகத்தின் இன்றைய ஆளுநர் என்ற உங்கள் வாதம் முற்றிலும் நியாயமானது.ஆனால் கருப்பு சட்டையோடு வலம் வந்து ஆட்சி,அதிகாரம், அரசியல் கட்சிகளின் செயல்படுகளிலுள்ள நுணுக்ககங்கள் போன்றவற்றில் இவ்வளவு திறனாய்வு செய்யும் நீங்கள் ஏன் இடைநிலை சாதிகளின் முரண்பாட்டைப் பற்றி,பெரியார் பூமி என்று பெருமைப்படும் இங்கு இன்றும் நிலவும் ஊர் சேரி பாகுபாடுகளைப் பற்றி அதுபோல ஆழமாக திறனாய்வு செய்ய மறுக்கிறீர்கள்?.இடைநிலை சாதிகளின் முரண்பாடென்பது இடஒதுக்கீடு,மற்றும் பிற சலுகைகளைப் பெற சூத்திரர்களாக அவர்களை உங்களைப் போன்றவர்களால் முன்நிறுத்தப்படுவதும்,பிற சமயங்களில் தன் சாதிப் பெருமைகளைப் பேசி மீசையை முறுக்கி எந்த கூச்சமுமின்றி தலித்களை ஒடுக்கும்,படுகொலை செய்யும் ஆண்டைகளாக மார்தட்டி அவர்கள் நடந்து கொள்வதை பல ஆண்டுகளாக பல இடைநிலை சாதிகளால் பல சந்தர்ப்பங்களில் கண்கூடாக காண்கிறோம்.நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது!.இன்று கூட 3 துப்புரவு தொழிலாளிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்!.கருப்பு சட்டையோடு வலம் வரும் பலர் அதற்கு எதிராக பேட்டிகள்,அறிக்கைகள், மிஞ்சிப் போனால் ஒரு நாள் கோசம் போடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்!.இடைநிலை சாதிகளின் முரணை,ஊர் சேரி பாகுபாடுகளை எதிர்த்து ஒரு நீடித்த போர் நடத்த வேண்டிய பல தருணங்களில் திராவிட இயக்கங்கள் இதயசுத்தியோடு ஒரு நீடித்த போராட்டம் கூட நடத்தாதது ஏன்?.அது பற்றிய நுணுக்ககங்களை நீங்கள் விரிவாக திறனாய்வு செய்யாதது ஏன்?.

  ReplyDelete