மீனாட்சிபுரம்
மண்டைக்காட்டில் திடீரெனக் கலவரம் தொடங்கக் காரணம் என்ன? பிற மதத்தினர் மீது கரணம் இல்லாமல் ஏன் இந்துக்கள் கோபம் கொள்ளப் போகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் நியாயமானவையே!
அவர்களுக்கு ஒரு காரணம் இருந்தது. அடிப்படையில் அது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கோபம். ஆனால் கிறித்துவர்களுக்கு எதிராக மையம் கொண்டுவிட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் மீனாட்சிபுரம் என்றொரு சிற்றூர். அவ்வூர் 1981 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உற்றுக் கவனிக்கப்பட்ட ஊராக ஆகிவிட்டது. அங்கு நடந்த மதமாற்றம் அதற்குக் காரணம். அந்த ஊரில் ஏறத்தாழ 220 தலித் குடும்பங்கள் இருந்தன. அவற்றுள் 180 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே நாளில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டனர். அது இந்தியாவில் பெரிய கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.
எவ்வாறு இப்படி ஒரு ஒட்டுமொத்தமான மதமாற்றம் திடீரென நடைபெறும் என்ற கேள்வி இயல்பானதே. அந்த அறிவிப்புதான் திடீரென்று வந்ததே தவிர, அதற்கான சூழல் எப்போதோ ஏற்பட்டுவிட்டது என்கின்றனர், அங்கு மதம் மாறியவர்கள். 20 வருடங்களுக்கு முன்பே என் தகப்பனார் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அன்றிருந்த பெரியவர்கள் சிலர் அதனைத் தடுத்துவிட்டார்கள் என்கிறார் மதம் மாறிய உமர் ஷெரிப்.
எதற்காக மதம் மாறினார்கள்? பணத்தைக் காட்டியும், அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறியும் ஆசை மூட்டியதால் அப்படி மதம் மாறி விட்டார்கள் என்கின்றனர் இந்து மதக் கட்சியினர். ஆனால் மதம் மாறி 20 ஆண்டுகளுக்குப் பின், 2002 இல், ஒரு நேர்காணலில், ஷேக் மதார் சாஹிப் என்பவர், "யாரோ ஒரு சிலருக்கு வேலை கிடைத்தது என்பது உண்மைதான். ஆனால் எங்களில் மிகப் பலர் இன்னும் அதே பொருளாதார நிலையில்தான் உள்ளோம். இருந்தாலும், எங்களுக்குச் சமூக மரியாதை கிடைத்துள்ளது. அதுதான் அன்றும் எங்கள் நோக்கமாக இருந்தது" என்று கூறுகின்றார்.
இந்துமதம், வருண சாதிப் பிரிவை அடிப்படையாகக் கொண்டது என்பது ஊரறிந்த உண்மை. அதனை மறைத்துவிட்டு, வேறு காரணங்களைத் திணித்து, பிற மதத்தினர் மீது ஒரு வெறுப்பை வளர்த்து, இங்கே தங்களை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு எப்போதும் உள்ளது. இப்போதும், தலையில், தோளில், இடையில், காலில் பிறந்த வருணத்தின் கதையை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகின்றனரே தவிர, உள்மனத்தில் அவர்களில் பலர் அந்த எண்ணம் கொண்டவர்களாகவே உள்ளனர்.
தேர்ந்தெடடுக்கப்பட்ட கட்டுரைகள் என்னும் நூலில், ஜோதிராவ் புலே, அப்படியானால், பறவைகள், விலங்குகள் எல்லாம் எங்கே பிறந்தன?' என்று கேட்பார். அறிவியலுக்குப் பொருந்தாத இந்த வருணாசிரம நிலையே, இந்து மதத்தின் முதல் எதிரி என்பதை மறைத்து, பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு சென்றுவிட்டனர் என்று கொச்சைப்படுத்துகின்றனர்.
வெளியில் என்ன பேசினாலும், உள்ளே இந்துமதம் ஓர் ஆட்டம் கண்டது. தில்லியில் இருந்து புறப்பட்டு வாஜ்பாய் நேராக மீனாட்சிபுரத்திற்கே வந்துவிட்டார். அந்த ஊரில் வாழ்ந்த அனந்தராம சேஷன் என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரரே வாஜ்பாய் அவர்களை அழைத்து வந்தவர்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். சார்பில் பெரிய ஊர்வலம் நடந்தது. "மதம் மாறாதே, மதம் மாறாதே", "அரபு நாட்டு பணத்துக்கு அடிமையாகாதே" என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அந்த நேரத்தில் அங்கு தங்கியிருந்த வாஜ்பாயைப் பார்க்க மதம் மாறிய மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு என்ன நடந்தது என்பதை, உமரும், ஜெபருல்லாகானும் இப்படிச் சொல்கின்றனர். "ஏன் மதம் மாறினீர்கள்?" என்று வாஜ்பாய் கேட்டார். இந்து மதத்தில் உள்ள சாதிக் கொடுமையினால்தான் மாறினோம் என்று கூறினோம். "சரி திரும்ப வந்துடுங்க, எல்லாம் சரி செய்துடலாம்" என்றார். "ஒன்னோடொன்னு கலந்துக்குங்க" என்றார். எங்க பொண்ணைக் கொடுக்கவும், அவுங்க பொண்ணை எடுக்கவும் ஏற்பாடு செய்வீர்களா என்று கேட்டோம். பதில் எதுவும் சொல்லாம எழுந்து போய்விட்டார். ஆனா வெளிய நின்ன பிரஸ்காரங்களைப் பாத்து, "நான் பேசியிருக்கேன். சீக்கிரம் தாய் மதத்துக்குத் திரும்பிடுவாங்க" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பிறகு அனந்தராமசேஷன் முயற்சியால், சில குடும்பங்கள் தாய் மதத்திற்குத் திரும்பியும் உள்ளனர்.
இடையில் முன்னாள் அமைச்சர் யோகேந்திர மக்வானா அந்த மக்களை வந்து பார்த்துள்ளார். அவர் அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பிறகு 2008 நவம்பரில் காங்கிரசை விட்டு விலகி தேசிய பகுஜன் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர். அவர் அந்த மக்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் பேசியுள்ளார். பிறகு, 25.07.1981 அன்று, திராவிடர் கழகத் தலைவர் (அன்று பொதுச்செயலாளர்) கி. வீரமணி அவர்கள் அம்மக்களைக் கண்டு உரையாடியுள்ளார்.
எப்படி மதம் மாறினீர்கள்? என்று கி.வீரமணி கேட்க, விரிவான பதிலை அவர்கள் சொல்லியுள்ளனர். "முதல்ல பக்கத்துல இருக்கிற பண்மொழி கிராமத்துக்குப் போய் அங்குள்ள இஸ்லாமியப் பெரியவங்களை அணுகுணோம். அவுங்க உதவ மறுத்துட்டாங்க. பிறகு வடகரைக்குப் போனோம். அவுங்களும் உதவல. அப்புறம், திருநெல்வேலியில உள்ள 'தென்னிந்திய இஸ்லாம் சபை'தான், எங்கள பந்தல்ல வச்சு 'கலிமா' சொல்லிக்கொடுத்து இஸ்லாத்துக்கு மாத்துனாங்க" என்று கூறியுள்ளனர். எனவே, யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றவில்லை என்று புரிகிறது.
இதுகுறித்து, மஞ்சேரி கட்ஜு என்னும் ஆய்வாளர், Viswa Hindu Parishad and Indian Politics" என்னும் தன் நூலின் மூன்றாவது இயலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தங்கள் மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யாமல், பிற மதத்தினர் மீது வன்மம் வளர்ப்பதில் பயனில்லை என்பதே அந்நூலாசிரியரின் கருத்தாக உள்ளது.
ஆனாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதனை உரிய முறையில் நோக்கவில்லை.பிற மதத்தாரை எதிரிகளாகக் காட்டியே தங்கள் மதத்தை வளர்க்க முடியும் என்று கருதினர்.
அதன் விளைவாகத் தமிழ்நாட்டில், 1980 களில் இன்னொரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் இந்து முன்னணி. அதன் தலைவர் இராம. கோபாலன்.
(தொடரும்)
நன்றி: ஒன் இந்தியா
மதமாற்றத்தை எதிர்க்கும் எருமைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய பதிவு ..
ReplyDeleteவருண தர்மம் இருக்கும் வரை மதமாற்றம் அடிப்படை உரிமை