தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 12 April 2018

ரஜினியின் கோபம் நியாயமில்லை! இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும், அரசியலுக்கு வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் சீருடையுடன் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டதற்காக மிகவும் கோபப்பட்டுள்ளார். அவர்களைத் தண்டிக்கத் தனிச் சட்டமே இயற்றப்பட வேண்டும் என்னும் அளவிற்குப் போயிருக்கிறார். ஆனால் அன்று காவல்துறை மக்களின் மீது நடத்திய தடியடி பற்றி எதும் கூறவில்லை.


ஏப்ரல் 1 முதல் தமிழகம் எங்கும் நடந்துவரும் பல்வேறு போராட்டங்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டமாகவும், மான உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் உள்ளன. திருச்சி முக்கொம்பிலிருந்தும், அரியலூரிலிருந்தும்  தொடங்கி நடைபெற்றுவரும் மக்களைத் திரட்டும் மாபெரும் பேரணிகள், முழு அடைப்புப்  போராட்டங்கள், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டம், நெய்வேலி முற்றுகைப் போராட்டம், தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் என்று தமிழகமே இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இப்போராட்டங்களை நடத்திய, நடத்திவரும் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் பாராட்டிற்குரியவர்கள்

பல்வகைப் போராட்டங்களில் ஒன்றாக, விவசாயம் செத்துக்  கொண்டிருக்கும்போது, விளையாட்டு எதற்கு என்று கேட்டு, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நிறுத்தத் சொல்லி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்தது

நாடே இத்தனை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கும்போது, ஐபிஎல் விளையாட்டுப் போட்டி வேண்டாம் என்று, கடந்த 2 ஆம் தேதி இரவு, முகநூல் நேரலையில். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நான் பேசியிருந்தேன். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். பாரதிராஜா தலைமையில் புதிதாக  உருவாகியுள்ள கலை இலக்கிய பண்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு ஏப்ரல் 10 ஆம் நாள் இரவு நேரடியாக சேப்பாக்கம் சென்று தன் எதிர்ப்பை நிலைநாட்டியது.அப்போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதம், வைரமுத்து, தோழர் மணியரசன் அனைவரையும் நாம் நெஞ்சாரப் பாராட்டுகின்றோம். கடுமையான காவல்துறைப் பாதுகாப்பையும் மீறி, அன்று அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்த்தியிருக்கவில்லை என்றால், எஞ்சிய விளையாட்டுப் போட்டிகள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டிருக்காது.

எனினும் அந்தப்  போராட்டத்தில், உணர்ச்சிமயமான போராட்டங்களில் எப்போதும் நடைபெறுவதைப்  போல, சில அத்துமீறல்கள் நடைபெற்றுவிட்டன. காவலர்கள் சிலர் தாக்கப்பட்டதை  யாரும் விரும்பவில்லை. அதனை ரஜினிகாந்த் கண்டித்துள்ளார். அதே நேரம், அறவழியில் போராடிய  போராட்டக் குழுவினரும், பொதுமக்களும், காவலர்களால் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டனரே, அது குறித்து ரஜினிகாந்த் ஏன் வாய் திறக்கவில்லை?   

ரஜினி அரசியலுக்கு வந்ததற்குப் பின்பு, திருச்சியில் ஒரு காவலர் எட்டி உதைத்து ஒரு பெண் மரணம் அடைந்தது குறித்து அப்போது ரஜினி ஏதும்  அறிக்கை விட்டாரா? சமூக வலைத்தளத்தில் எதும் பதிவுகள் இட்டாரா? அப்போது அவருடைய 'சிஸ்டம்' (கணிப்பொறி) கெட்டுப் போயிருந்ததோ என்னவோ

உணர்ச்சிவயமான, தன்னெழுச்சியான போராட்டங்களில் இப்படிச் சில நிகழ்வுகள் நடந்துவிடும் என்பதே உண்மை. அவற்றை நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு பக்கச் சார்புடன் அதனை மட்டும் கண்டிப்பதும், அதற்காகக் கோபப் படுவதும் நியாயமில்லை.

காந்தியார் நடத்திய அஹிம்ஸைப் போராட்டத்தில் கூட, அப்படிச் சில நிகழ்வுகள்; நடந்துள்ளன. 1922 ஆம் ஆண்டு, .பி. கோரக்பூர் மாவட்டம், சவுரி சவுரா என்னுமிடத்தில், ஓரிருவர் அல்ல, 21 காவல்துறையினர் காவல் நிலையத்திலேயே வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர். செய்தியறிந்து சினம் கொண்ட காந்தியடிகள் அந்தப் போராட்டத்தையே நிறுத்தி விட்டார்.  

ஆனால் நேரு போன்றவர்கள் அதனை ஏற்கவில்லை.  "இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள, ஏதோ ஒரு கிராமத்தில், மக்கள் அடக்குமுறை தாளாமல், வன்முறையை உபயோகித்து விட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப்  போரையே ஒத்தி வைப்பதா? ஆம் என்றால்பாபு (காந்தியார்) கூறும் அஹிம்சைக் கொள்கையில் எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே பொருள்" என்று நேரு, தன் நூலொன்றில் ( The first Sixty years - vol 1) குறிப்பிட்டுள்ளார்

1942 ஆகஸ்டில் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு  அத்துமீறல்கள் நடைபெறவே செய்தன. ரஜினி அன்று இருந்திருந்தால், அந்த வன்முறைகளை அடக்க, ஆங்கிலேயர்கள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ?

1965ஆம் ஆண்டு தமிழகத்தில்  கொழுந்துவிட்டு எரிந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஒரு தியாக வரலாறு. தன்னைத் தானே எரித்துக் கொண்டவர்கள், நஞ்சுண்டு மாண்டவர்கள், துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள் என்று தியாகிகளின் எண்ணிக்கை பெருகும். ஆனால் அந்தப் போராட்டத்திலும் கூட, 1965 பிப்.10 அன்று திருப்பூரில்  விரும்பத்தகாத வன்முறை ஒன்று நடந்தது

அன்றையதினம், 500 பள்ளி மாணவர்கள் அஞ்சல் நிலையத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் காவல் துறையினர்  தடை விதித்தனர்மாணவர்கள் மீறினர். உடனே தடியடி நடத்தினர். மாணவர்கள் கலையவில்லை. மாறாக, மக்கள் பெருங்கூட்டம் கூடிவிட்டது. அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். 13 வயது மாணவன் ஒருவன் அதில் இறந்துபோய்விட்டான். கோபம் கொண்ட கூட்டம், தன் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ராமசாமி (43), வெங்கடேசன்(44) என்னும் இரண்டு  காவல் உதவி ஆய்வாளர்களைப் பெட்ரோல் ஊற்றிஉயிரோடு எரித்து விட்டது. மூன்று உயிர்கள் தேவையின்றி அன்று பறிபோயின.

காவலர்கள் கொல்லப்பட்டதை யார்தான் சரி என்று சொல்வார்கள்? அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாமே! ஆனால் ஒன்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி மாணவர்களின் ஊர்வலத்திற்குத் தடை விதிக்காமல் இருந்திருந்தால், அல்லது, துப்பாக்கிச் சூடு நடத்தாமல்  இருந்திருந்தால், இந்தக் கொடுமைகள் நடந்திருக்காது

இப்போதும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஐபிஎல் போட்டியை அன்றே  ஊர் மாற்றியிருந்தால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் வந்திருக்காது. நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், நான் விளையாட்டுப் போட்டியை நடத்தியே தீருவேன் என்று ஆணவத்துடன் சொன்னவர்கள்தாம் இத்தனைக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கூறாமல், எங்கோ நடந்துவிட்ட ஒரு பிழையை மட்டும் பெரிதுபடுத்துவது அழகில்லை


ரஜினியின் கோபத்தில் நியாயமில்லை!  

9 comments:

 1. இந்த உலகம் அழகானது ரசனையானது. ஆனால் சில சுயநலக்கூட்டம் பெருவாரி மக்களை மதமோ சாதியோ எதன் பெயராலோ பிரித்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இடைவிடாது உழைக்கிறார்கள். இல்லுமினாட்டிகளின் குரலாக நடிகர் விஜய் ஆண்டனி இருக்கிறார் என்கிறார் பாரிசாலன். Demonetization வரப்போவது முன்பே அறிந்தேன் அவரது பிச்சைக்காரன் படம் மூலமாக என்கிறார் பாரிசாலன். இதனை என்னை சுற்றி உள்ளவர்களிடமும் சொன்னேன் என்கிறார். இல்லுமினாட்டிகள் இப்படித்தான் செய்வார்கள் ஒரு விஷயம் செய்ய போகும் முன்பு செய்தியை இப்படி தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக கசிய விடுவார்கள் என்கிறார். பிராமணர்கள் நம்மை ஆள்வதற்கு காரணம் அவரது கொள்கையை ஏற்றுக்கொண்ட பெரும்பாலானவர்கள் என்கிறார் திருமாவளவன். வெளிப்படையாக நமக்கு காட்டுவது நாயர் சாதி வரலாறு. இது உண்மையோ பொய்யோ அந்த பார்வை இப்போது அனைவருக்கும் வந்து விட்டது. விகடன் நாளிதழை பார்க்கும் போது ஒரு விஷயம் யூகிக்க முடிந்தது. தமிழ் தேசியம் பிரபலமாகி வரும் இந்த நேரத்தில் யார் அதன் ஒன்றுபட்ட பேரியக்கத்தின் தலைவராக வேண்டும் என்று இவர்கள் முடிவெடுத்து விட்டார்கள். சீமான் என்று பெரும்பாலோனோர் சொன்னாலும் அவரது வருகையை தன்னுடைய இழப்பாக பார்க்கிறது வலதுசாரி முதலாளிகள் உலகம். விகடன் நாளிதழ் கொஞ்ச நாளாகவே சீமானை ஏற்றவது போல ஏற்றி அவரை அவருக்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளை பதிவிடுகின்றது. இப்படித்தான் 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்பட்டது. இன்று ஐபிஎல் போட்டி போராட்ட விளைவாக சீமான் மேல் கொலை வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. ஆனால் பாம்பை விடுவேன் என்று சொன்ன வேல்முருகன் மேல் எந்த வழக்கும் இல்லை போராட்டம் அன்று அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. ஆனால் தனியாக பிரஸ்மீட் நடத்தும் வீடியோக்கள் வருகின்றன. சில நாள்கள் முன்பு எடப்பாடி பழனிசாமி சீமான் மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் விகடனில் செய்தி வெளியாகிறது. இது ஒன்றோடொன்று தொடர்பு படுத்த முடிகிறது. எப்படி அதிமுகவின் முதல்வராக பன்னீர்செல்வத்தை நிறுத்த மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்களோ அப்படி வேல்முருகனையும் நிறுத்துவார்கள் என்றே தோன்றுகிறது. இது ப்ராக்ஸி எனப்படும் தனக்கு வேண்டியவர்களை அமர்த்தி காரியம் சாதிக்க முயலும் இல்லுமினாட்டிகளின் வேலையாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. வேல்முருகனும் தமிழன்தானே என்றால் கருணாவும் தமிழன்தானே..ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள். தமிழனுக்கு எதிரி தமிழனே என்று மட்டும் சொல்ல வரவில்லை. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கூடி கும்மாளமிடும் அந்த 100 எம் எல்ஏக்களும் எடப்பாடியும் பன்னீரும் தமிழர்களே. ஆனால் ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். ரஜினியின் பேச்சை தமிழிசையும் ஜெயக்குமாரும் ரசிக்கிறார்கள். ஏன்? அவர்களுக்குள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் இல்லுமினாட்டி அதாவது ஆரிய இனக்கலப்பு. தீவிர இந்துத்துவவாதிகளை இப்படித்தான் பார்க்க வேண்டி உள்ளது. இன்று நம்முடைய போராட்டம் ஆரம்பமாக வேண்டியது நமக்குள்ளேதான். பெரும்பாலான மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் சிறிய கலப்பினக்கூட்டத்திற்கு எதிராகத்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் ஒன்றுபடவேண்டிய நேரம். போராட்டம் கவுண்டருக்கும் கவுண்டருக்கும் இடையில் தேவருக்கும் தேவருக்கும் நாடாருக்கும் நாடாருக்கும் இடையில் செட்டியாருக்கும் செட்டியாருக்கும் இடையில் வன்னியருக்கும் வன்னியருக்கும் ஐயருக்கும் ஐயருக்கும் பிள்ளைக்கும் பிள்ளைக்கும் நாயுடுவுக்கும் நாயுடுவுக்கும் மள்ளருக்கும் மள்ளருக்கும் பறையருக்கும் பறையருக்கும் இடையில்தான் நடக்க வேண்டும். இல்லையென்றால் தமிழன்தானே என்று நினைத்துக்கொண்டிருப்போம். அவனே நம் அழிவுக்கு காரணமாவான்.

  ReplyDelete
 2. நிஜமான தமிழராக இருந்தால் அவருக்கு இந்த கோபம் வந்திருக்காது. அவர்தான் தமிழராக நடிக்கிறார். அதனால் எழுதிக்கொடுத்த வசனத்தை பேசுகிறார்

  ReplyDelete
 3. இரத்தினவேல்12 April 2018 at 15:27

  தமிழ்நாட்டு அரசியலில் புகுந்து, குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்க்கும் ரஜினியிடம் நாம் நியாயத்தை எதிர்பார்ப்பது நியாயமில்லை.

  ReplyDelete
 4. So according to Rajni, Bhagat singh should not be tolerated. Puratchi edhu, othuzhaiyaamai edhu, vanmurai edhu endru theriyaamaleye - mudhal amaichar aagavendum endra pagal kanavu.

  ReplyDelete
 5. ஆன்மீக அரசியல் இப்படித்தான் இருக்கும்.படங்களில்(தளபதி)காவல்துறையை போட்டு அடிப்பது போல் நடித்து இவர்தானே ஒரு கும்பலையே ஏமாற்றி வருகிறார்.சாத்தான் வேதம் ஓதுகிறது எல்லாம் ஆன்மிகம் தொடர்பானது.

  ReplyDelete
 6. ரஜினி ஒரு வியாபாரி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் இரசிகர்களை உசுப்பேத்தி தன் படத்தை நன்றாக ஓடவிட்டு, அவருக்காக உழைக்கும் அந்த இரசிகனிடமே பல மடங்கு காசை டிக்கட் மூலமாக பிடுங்குவது ஒன்று மட்டுமே. அவரைப் போல அரசியல் கற்றுக்குட்டிகளுக்கெல்லாம் நீங்கள் பதில் எழுதி உங்கள் மதிப்பை குறைத்துக்கொள்வது சரியா சுபவீ ஐயா?

  ReplyDelete
 7. Sir, nice blog. Thanks for writing and sharing your views. I had a similar conversation about the protest against IPL and tried justifying some of my colleagues about it. But they are concerned about the negative impression that it may create about Tamil Nadu as a state. We gathered for Jallikattu and now for Cauvery and many more are happening or may happen. Their concerns are the it may affect the growth and development in the future, eg other countries may think twice before investment in tamilnadu etc. What is your point of view about the negative impression it may create for tamilnadu as a state?

  ReplyDelete
 8. ஐயா, மென்மையான மற்றும் நாகரீகமான முறையில் மறுப்பு தெரிவிப்பதற்கு ரஜினி ஒரு போதும் பாத்திரன் இல்லை ஐயா. கல்லுளிமங்கனை கடுமையான முறையில் அணுகுவதே நல்லது.

  ReplyDelete
 9. Perhaps Mr.Rajini Kanth has spoken as the future Chief Minister. Perhaps he intends to rule Tamil Nadu with the unstinted co-operation of the police like Jayalalitha. We can take it as an expression of his dictatorial tendency

  ReplyDelete