இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹியூகோ கோரிஞ் (Hugo Gorringe), பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரு வையாட் (Andrew Wyatt) இருவரும் தமிழக அரசியல், தலித் அரசியல் ஆகியனவற்றில் ஈடுபாடு உடையவர்கள் என்பதோடு, அவை குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் சமூகவியல், அரசியல் துறைப் பேராசிரியர்கள்.
அவர்களின் கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருப்பதால், இங்கே (இங்கிலாந்து) தங்கியிருக்கும் நேரத்தில் அவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. லீட்ஸ் (Leeds) நகரில் உள்ள என் மகனின் நண்பர் சரவணன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறினார்.
அரசியல் குறித்து மட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும், அவற்றில் உள்ள அரசியல் குறித்தும் கூட அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். மதுரையை மையமாக வைத்து வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் குறித்து ஹியூகோ எழுதியுள்ள கட்டுரை உண்மையாகவே நமக்கு வியப்பளிக்கிறது. மதுரை வீரன் தொடங்கி கபாலி வரையில் பல்வேறு படங்கள் குறித்து அக்கட்டுரையில் அவர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார். மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நன்மாறனைப் பார்த்து ஒருமுறை, "உங்கள் மதுரைக்காரர்கள் எல்லோரும் முதுகில் சட்டைக்குப் பின்னால் அரிவாள் (sickle) வைத்திருப்பார்களா" என்று கேட்டார்களாம். அந்த அளவிற்கு நம் திரைப்படங்கள் மதுரை பற்றிய ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆண்ட்ரு வையாட் திமுக வைப் பற்றியே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றுள் எனக்குச் சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன என்றாலும், எங்கோ இருந்துகொண்டு, நம் நாட்டு அரசியல் குறித்து இந்த அளவிற்கு எழுதியுள்ள அவர்களின் உழைப்பைப் பாராட்டித்தானே ஆகவேண்டும்.
எதிர்பாராவிதமாக, சென்றவாரம், நண்பர் சரவணன் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்தார். அந்தப் பேராசிரியர்களைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இருவரும் தாங்களே என்னைப் பார்க்க லீட்ஸ் நகருக்கு வருவதாகச் சொல்லியுள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் பெருந்தன்மை மகிழ்வளித்தது.
21.05.2018 மாலை, லீட்ஸ் நகரில் உள்ள என் மகன் பாரதிதாசன் வீட்டில் அந்த சந்திப்பு நடந்தது. ஏறத்தாழ நான்கு மணி நேரம் அவர்கள் என்னுடன் உரையாடினர். நண்பர் சரவணனும், என் மருமகள் வித்யாவும் உடனிருந்து, அவ்வப்போது மொழிபெயர்ப்பில் உதவினர். சரவணன் நாங்கள் பேசியதைக் குறிப்புகளாகவே எடுத்துத்தந்து பேருதவி செய்தார். அது ஒரு நீண்ட உரையாடல். அதன் சாரத்தை மட்டும் இங்கு தருவதற்கு முயல்கிறேன்.
தமிழக அரசியலை உற்று நோக்கிவரும் அவர்கள், "புதிதாக இருவர் தமிழக அரசியலுக்குள் வந்துள்ளனரே, அவர்களின் தாக்கம் வரும் தேர்தல்களில் எப்படியிருக்கும்?" என்று, கமல், ரஜினி பற்றிய வினாவோடு உரையாடலைத் தொடங்கினர். என்னையும், என் அரசியலையும் நன்கு அறிந்து வைத்திருந்த அவர்கள், என் விடையைத் திமுக சார்ந்ததாகவே பார்ப்பார்கள் என்றாலும், நான் எனக்குத் தோன்றிய ஒரு விடையைக் கூறினேன். இருவரில் ஒருவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. இருவருமே பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இருப்பினும், இப்போது சொல்லப்படும் கருத்துகள் மிகவும் முன்கூட்டியதாக (prematured) அமைந்துவிடும்" என்றேன்.
ஹியூகோ "கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்" என்று சொன்னாலும், நன்றாகவே தமிழ் பேசினார். அவர் 4 வயது தொடங்கி 12 வயது வரையில் மதுரையில் இருந்திருக்கிறார். அங்கு பள்ளியிலும் படித்திருக்கிறார். திருமாவளவன் மீதும், வி.சி.க மீதும் பற்றுடையவராக இருக்கிறார். சிறுத்தைகள் கட்சியில் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார், வன்னி அரசு எல்லோரையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஸ்டாலின் ராஜாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்.
ஆண்ட்ரு பிறந்ததே பூனாவில்தானாம். 15 வயது வரையில் அங்குதான் இருந்திருக்கிறார். ஆனால் இந்தியோ, தமிழோ தெரியாது என்றார். திமுக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். கலைஞரின் இப்போதைய உடல்நலம் வரையில் இருவரும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
"உங்கள் கட்டுரையில், சத்தியவாணிமுத்துக்குப் பிறகு, திமுகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அறிவாளிகள் இல்லை என்பதுபோல் எழுதியுள்ளீர்களே, அது எப்படிச் சரியாகும்" என்று ஆண்ட்ருவைப் பார்த்துக் கேட்டேன். "அவருக்குப் பிறகு, திமுக வின் முன்னணித் தலைவர்களாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இல்லைதானே?"| என்று கேட்டார். "ஆ. ராசா, வி.பி. துரைசாமி போன்றவர்கள் இல்லையா? ஆ.ராசா ஒரு சிறந்த படிப்பாளி, மத்திய அமைச்சர் பொறுப்பு வரையில் வகித்திருக்கிறாரே" என்று நான் சொன்னபோது, "ஆம் உண்மைதான், அவரை நன்றாகத் தெரியும். கட்டுரையில் அதனைச் சரி செய்து கொள்கிறேன்" என்றார் பெருந்தன்மையோடு! திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு ஆகியோரைப் பற்றி எல்லாம் அவர் பேசினார்.
ஹியூகோவைப் பொறுத்தமட்டில், திராவிட இயக்கம், தலித் மக்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யவில்லை என்ற எண்ணம் ஆழப் பதிந்துள்ளது. அவருக்குத் தமிழ்நாட்டிலிருந்து தகவல் சொன்னவர்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.
"தேர்தல்களில் தலித் மக்களுக்கு இடங்களை விட்டுக் கொடுக்கலாமே?" என்றார். இப்போதும் விடுதலைச் சிறுத்தைகள் திமுக வுடன்தான் உள்ளனர். இன்று நேற்றல்ல, திமுக - தலித் உறவு சமூக அளவிலும், தேர்தல் அளவிலும் மிகப் பழையது என்றேன். அப்படியா என்றார். பழைய நிகழ்ச்சி ஒன்றை எடுத்து விளக்கினேன்.
பேராசிரியர் நீலகண்டன் (நெல்லை) ஆய்வேட்டிலிருந்து அந்தச் செய்தியை எடுத்துச் சொன்னேன். 1937 ஆம் ஆண்டு தேர்தலில், சாத்தூர் - அருப்புக்கோட்டை தொகுதியில் வி.வி.ராமசாமி அவர்களும், பழனி தொகுதியில் W.P.A.S சௌந்தரபாண்டியனாரும் போட்டியிட்டனர். அப்போது அவ்விரு தொகுதிகளிலும், தலித் தலைவர்கள் சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். இறுதி நேரத்தில், சிவராஜ் இணையருக்கு ஆதரவாக, நீதிக் கட்சி வேட்பாளர்கள் இருவரும், இரண்டு தொகுதிகளிலிருந்தும் விலகிக் கொண்டனர் என்பதை எடுத்துச் சொன்னேன். "அப்படியா, இது எங்களுக்குப் புதிய செய்தி" என்று சொல்லிக் குறித்துக் கொண்டனர். பேராசிரியர் நீலகண்டனைத் தொடர்பு கொண்டால் இன்னும் பல உண்மைச் செய்திகள் சான்றுகளுடன் உங்களுக்குக் கிடைக்கும் என்று கூறினேன்.
"தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், சிறுத்தைகள் கட்சியினரையும் ஆட்சியில் பங்கேற்க அழைப்பாளர்களா? அமைச்சரவையில் திருமாவளவனுக்கு ஒரு நல்ல பொறுப்பை அளிப்பார்களா?" என்று ஹியூகோ கேட்டார்.
"உங்களைப் போலவே சிறுத்தைகளின் மீதும், திருமாவின் மீதும் நானும் அன்பு கொண்டவன். ஆனாலும் நடைமுறைச் சாத்தியம் என ஒன்று இருக்கிறதல்லவா? சிறுத்தைகள் மட்டுமின்றி வேறு கட்சியினரும் கூட்டணியில் இருப்பார்கள். தனிப் பெரும்பான்மை பெற்ற பின்பும், எல்லோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால், தம் கட்சியினருக்கு உரிய வாய்ப்பளிக்க இயலாமல் போய்விடும் இல்லையா?" என்று கேட்டேன்.
"பிறகு எப்படிச் சமூக நீதி வரும்?" என்று கேட்டனர். "தோழமைக் கட்சிகளுக்கு இடம் அளிப்பதால் மட்டும்தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் கருதவில்லை. தங்கள் கட்சியில் உள்ள தலித் மக்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய இடம் வழங்குவதும் சமூக நீதிதானே?' என்று என் பார்வையை வெளியிட்டேன். திமுக வில் அவ்வாறு பதவிகள் வழங்கப்பட்டுள்ள தகவல்களையும் கூறினேன்.
ஆண்ட்ரு குறுக்கிட்டார். "திமுக வில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா?' என்பது அவர் கேள்வி. தன் கட்டுரையிலும் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார். "எல்லாத் தேர்தல்களிலும் உரிய பங்கு சென்று சேர்ந்துள்ளது என்று சொல்லிவிட முடியாதுதான். எனினும் 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 33% திமுக வேட்பாளர்கள் பெண்கள் என்பது போன்ற உண்மைகளையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது" என்றேன்.
தேர்தல், அமைச்சரவை ஆகியனவற்றில் பெற்றுள்ள இடம் என்பதை ஓர் அளவுகோலாகக் கொள்வதில் பிழையில்லை. அதே நேரம், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்குத் திமுக செய்துள்ள நியாயங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா!' என்றும் விளக்கம் சொன்னேன்.
பிறகு நெடுநேரம், ஈழம் பற்றிய உரையாடல் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரில் ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது, திமுக ஏன் பதவி விலகவில்லை என்று கேட்டனர். இந்தக் கேள்வி என்னிடம் பலரால், பல இடங்களில் கேட்கப்பட்டுள்ளது. நானும் சலிப்பின்றி விடை சொல்லியுள்ளேன். இங்கும் அவற்றை எடுத்துரைத்தேன். இதற்கான நீண்ட விளக்கமாக, நான் எழுதி, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள "ஈழம், தமிழகம், நான் - சில பதிவுகள்" என்னும் நூலைக் குறிப்பிட்டேன். அந்த நூல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், அது தமிழில் மட்டுமே உள்ளதால், அதனைப் படித்துத் தெரிந்துகொள்ள இயலவில்லை என்றனர். தமிழ்நாட்டிலிருந்து அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்நூல் பற்றிய செய்திகளை அவர்களிடம் எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.
திமுக வைப் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும், அடிப்படை ஜனநாயகம் உள்ள கட்சி என்பதிலும், இன்று தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட அதுவே மேலானது என்பதிலும் அவர்களுக்கு ஓர் உடன்பாடு இருக்கவே செய்தது.
"நிறையச் செய்திகளை பகிர்ந்து கொண்டோம். திராவிட இயக்கம் ஒன்றுமே செய்யவில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்" என்று உரையாடலை முடித்தனர்.
உரையாடலுக்குப் பிறகு நான் பெற்ற சில உணர்வுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
1. ஜனநாயகம், சமூக நீதி ஆகியனவற்றிற்காகவே தோற்றுவிக்கப்பட்டு, இன்றும் அந்தப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் திமுக, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு மேலும் உரிய இடங்களை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே, அதனைத் திமுக கவனத்தில் கொள்ளும் என்பது என் நம்பிக்கை.
2.திராவிட இயக்கமும், திமுக வும் ஒடுக்கப்பட்டோருக்குச் செய்துள்ள நன்மைகள் பல, வெளி உலகிற்கு இன்னும் போதுமான அளவிற்குக் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் எதிர்க்கருத்துகள் திட்டமிட்டுப் பெரிய அளவில் சொல்லப்படுகின்றன. திமுக வினால் பயன் பெற்றோர் சிலரே கூட அப்படி ஒரு எதிர்ப்பார்வையை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
3. இருளை அகற்றுவதற்கான ஒரே வழி ஒளி பாய்ச்சுவதுதான். தமிழில் மட்டும் எழுதினால் போதும் என்றில்லாமல், திராவிட இயக்கம் மற்றும் திமுக செய்துள்ள பணிகளை வேற்று மொழிகளிலும், குறிப்பாக ஆங்கிலத்தில் கொண்டு செல்லவேண்டும். எல்லா நூல்களையும் கொண்டு செல்வது இயலாதெனினும், சிலவற்றை முழுமையாகவும், சிலவற்றைச் சாரமாகவும் (குறுநூல்கள் அல்லது கட்டுரைகள் வடிவில் ) வெளியிட வேண்டும்.
4. அன்று தொட்டு இன்று வரையிலான திராவிட இயக்கச் செய்திகளை விவாதிப்பதற்கு, கனமான காலாண்டு இதழ்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய பணிகளைத் திமுக தலைமையே மேற்கொண்டு செய்வது பொருத்தமாக இருக்கும்.
5. சமூக வலைத்தளங்களை மேலும் விரிவாக நாம் பயன்படுத்த வேண்டும்.
தமிழக அரசியலில் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்துவரும் பேராசிரியர்கள் இருவருக்கும் நம் அன்பும், நன்றியும்!
Super tala,
ReplyDeleteIf you can make a video of the discussion, it would have been much more informative.
There is huge misinformation spread on periyarism by certain vested interests,
Especially by think tank group called by names
peace and conflict studies, Strategic studies, Policy Research, Council of World Affairs, Vivekananda International Foundation
These groups are filled up with people who have a huge soft corner for vedic worldview and they deliberately misread and misrepresent the Dravidian movement and its leaders
It is a need of the hour you being a non-election based political outfit start forums and thinks tank group on purely periyar/anna based worldview process we need to take the Dravidian ideology at an international level.
A lot is riding on you on this, i don't see anyone else who can take this up.
அய்யா சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா இருந்த வரை தி.மு.க அந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்கவில்லை. இது அறிஞர் அண்ணா எடுத்த முடிவு என்று கேள்விபட்டிருக்கிறேன்.
ReplyDeleteபெருமை கொள்ளவைத்த பதிவு ஐயா....!..சமீபத்தில்தான் எனக்கு தங்களுடைய "ஈழம், தமிழகம், நான் - சில பதிவுகள்" புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈழ வரலாற்றில் எனக்கிருந்த அனைத்து ஐயங்களையம் போக்கிய புத்தகமது. எத்தனை எத்தனை வீண்பழிகளை சுமக்கிறது தி. மு.கழகம்....! நினைக்கும் போது நெஞ்சத்தில் ஆதங்கம் மேலோங்குகிறது...
ReplyDelete