"திடீர்ப்" பிள்ளையார்
தலைவர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் அதிகாலை 3.30 மணியளவில், சென்னை, மாம்பலம் பகுதியில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. வானில் ஒரு பெரிய ஒளியும் தெரிந்ததாகப் பிறகு சிலர் கூறினார். நிலத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருக்க, அங்கு திடீரென ஒரு பிள்ளையார் சிலை வந்திருந்தது.
பொழுது விடிவதற்குள், மக்கள் கூட்டம் கூடிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் பலரும் வந்து சேர்ந்தனர். மக்களோடு சேர்ந்து, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் விஸ்வநாதனும், "அது ஒரு சுயம்பு பிள்ளையார்தான்" என்றார். யாரும் கொண்டுவந்து வைக்காமல், தானே ஒரு "கடவுள் சிலை" தோன்றினால், அதற்குச் சுயம்பு என்று பெயராம். எனவே இது சுயம்பு விநாயகர்.
அன்று உதவி ஆணையராக இருந்த வைகுந்த் இதற்கான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடவுளையே நாத்திகர் கருணாநிதி விசாரிக்கச் சொல்கிறாரா என்று புறப்பட்டது ஒரு கூட்டம்.
இந்துமத நம்பிக்கைகளின்படியே கூட, கடவுள் (விக்கிரகம் அல்லது மூர்த்தி) வேறு, சிலை வேறு. பல இடங்களிலும் காணப்படும் கற்சிலைகள், புடைப்புச் சிற்பங்கள், குகைச் சிற்பங்கள் போன்றவை எல்லாம் கடவுள்களோ, விக்கிரகங்களோ இல்லை. அவையெல்லாம் வெறும் சிலைகள், அவ்வளவுதான். பார்ப்பனர்களால், 'ஆவாஹனம்' செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே, மூர்த்திகள் ஆகி, வழிபாட்டுக்கு உரியனவாகும். இதுதான் 'ஐதீகம்'. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, திடீரெனத் தோன்றிய பிள்ளையார், ஆவாஹனம் செய்யப்பட்டவர் இல்லையெனினும் கடவுள்தான். ஏனெனில் அவர் 'சூத்திர'ச் சிற்பியால் வடிக்கப்படாத சுயம்பு!
இங்கே இன்னொரு வேடிக்கையான சிக்கலும் இருக்கிறது. எல்லா மந்திரங்களும் சொல்லி, எல்லாச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டபின், மூர்த்தியாகிக் கோயிலில் அமர்ந்திருக்கும் வழிபாட்டிற்குரிய கடவுளர்கள் காணாமல் போனால் (அதாவது திருடப்பட்டால்), எல்லோரும் கோயில் சிலையைக் காணவில்லை என்கின்றனர். அது எப்படிச் சரியாகும்? அந்தச் சிலைதான், ஆவாஹனத்திற்குப் பிறகு கடவுள் ஆகிவிட்டதே. கடவுளைக் காணவில்லை என்றுதானே சொல்லவேண்டும்? இந்த நியாயமான வினாவிற்கு இன்றுவரையில் விடையில்லை.
இது ஒருபுறமிருக்க, சுயம்புப் பிள்ளையாரைப் பார்க்கத் திருவிழா போலக் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. பூ, பழம், வெற்றிலை, பாக்குக் கடைகள் எல்லாம் வந்துவிட்டன. கோயில் என்றால், உண்டியல் இல்லாமலா? அதுவும் வந்துவிட்டது. அந்த உண்டியலுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளித்தது. தமிழகம் முழுவதும் அன்று இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.
இது உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்றும், முறைப்படி விசாரணை நடந்தபின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் துணிச்சலாக அறிக்கை விடுத்தார். அவர் அறிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. திராவிடர் கழகமும், முஸ்லீம் லீகும் முதல்வர் அறிக்கையை ஆதரித்தன. ஜனசங்கம் (அன்றைய பாஜக) மட்டுமின்றி, காஞ்சி சங்கர மடமும் முதல்வர் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
"பெரியாரைப் பின்பற்றுபவர் என்று முதல்வர் தன்னைக் கூறிக்கொள்ளலாம். ஆனாலும் அவர் எல்லோருக்கும் முதல்வர். அவர் நடுநிலையோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். இப்படி அவர் அறிக்கை விட்டிருப்பது, அவருடைய அனுபவம் இன்மை மற்றும் பக்குவம் இன்மையைக் காட்டுகிறது" என்று ராஜாஜி அப்போது தன்னிடம் கூறியதாகக் காவல்துறை அதிகாரி வைகுந்த் ஓய்வு பெற்றபின், துக்ளக் இதழில் தான் எழுதிய தொடரில் குறித்திருந்தார். அந்தச் சிக்கல்கள் 1970 நவம்பரில், ஏறத்தாழ முடியும் தருவாயில் இருந்தபோது, இந்து ஆங்கில நாளேட்டில் இது குறித்துப் பட்டும் படாமலும் ராஜாஜியின் கடிதம் ஒன்றும் வெளியாகியிருந்தது.
எப்படியோ, பிள்ளையாரை வைத்துத் தமிழ்நாட்டில் ஓர் ஆன்மிக அரசியல் அன்று தொடங்கியது.
எது கண்டும் கலைஞர் பின்வாங்கவில்லை. முறைப்படியான விசாரணை நடைபெற்று, இறுதியில் உண்மை கண்டறியப்பட்டது. பிள்ளையார் சிலையின் மீதிருந்த மண்ணும், அந்தப் பகுதி மண்ணும் வேறு வேறு என்று நிலவியல் ஆய்வாளர்கள் அறிக்கை அளித்தனர். எனவே அந்த மண்ணிலிருந்து வெடித்துக் கிளம்பியவர் அல்லர் அந்தப் பிள்ளையார் என்பது உறுதியானது. புலன் விசாரணை முடுக்கி விடப்பட்டது.
எந்த நிலத்த்தில் திடீரென்று சுயம்பு பிள்ளையார் வந்தாரோ, அந்தப் புறம்போக்கு நிலத்தில் மசூதி கட்டிக் கொள்ள முஸ்லீம் லீக் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. முதல்வர் கலைஞரும் அதற்கு இசைவாக இருப்பதாகச் செய்திகள் அன்று இருந்தன. அதைத் தடுப்பதற்கான முயற்சியாகவே இது இருக்கக்கூடும் என்பது விசாரணையில் வெளிவந்தது.
இறுதியில், மாம்பலம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 'ஓம் நமசிவாய ஏட்டு 'தான் அந்தச் சிலையை அங்கு கொண்டுவந்து வைத்தவர் என்பது உறுதியானது. எப்போதும் ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டிருப்பார் என்பதால் அந்தத் தலைமைக் காவலரின் பெயரே, ஓம் நமசிவாய ஏட்டு என்று ஆகிவிட்டதாம். உண்மை தெரிந்தும் அதனை ஆய்வாளர் விஸ்வநாதன் மறைத்து விட்டார் என்பதும் தெரியவந்தது.
தலைமைக் காவலருக்குத் துறை விசாரணை நடந்து தண்டனை வழங்கப்பட்டது. ஆய்வாளர் விஸ்வநாதன், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். 'இரண்டு தியாகிகளை'க் கலைஞர் தண்டித்துவிட்டார் என்பது போல் கூக்குரல்கள் எழுந்தன. விஸ்வநாதன் சென்னையை விட்டுப் புறப்பட்ட நாளில், கவிஞர் கண்ணதாசன் தலைமையில் ஒரு சிறிய கூட்டம் எழும்பூர் சென்று அவரை வழியனுப்பி வைத்தது.
என்ன ஒரு வேடிக்கை என்றால், திடீர்ப் பிள்ளையார் தோன்றியதும், அதனைக் காணவும், வழிபடவும் பெருந்திரளாய்க் கூடிய மக்கள், அதன் பொய்மைகள் வெளிப்படுத்தப்பட்ட பின், அதற்காகப் பரிந்து பேசவில்லை. அதற்காகக் கலைஞரையோ, திமுக வையோ எதிர்க்கவில்லை. பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர். நாடு அமைதி காத்தது.
அதற்குப் பின் ஒரு கால் நூற்றாண்டு கடந்து, 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற செய்தி (வதந்தி) பரப்பப்பட்டது.
(தொடரும்)
நன்றி: ஒன் இந்தியா
அண்ணா செய்தி இனிப்பாக இருந்தது.
ReplyDeleteசுபவீ ஐயா,
ReplyDeleteசெய்தி சுவைபட இருந்தது.
Talaivvaa, intha thodar yeavallvu important inu yennku yenga vettu persu ketta pesum pothu puriuthu.
ReplyDeleteNanga than anda pambarambari penda pambarabari inu solli kettu therenjaa persu ketta neenga sonna munuswamy pillai matter raa sonnean yeallam switch off audichuee-ngal.
Dravidian movement is a non -brahmins movement, it is for the growth and self respect of Hindu non brahmins like me - this needs to be highlighted as we are being continiusly projected as anti-hindu, we are anti-brahmins not anti-hindus.