தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 15 August 2018

கறுப்பும் காவியும் - 16

கண்ணா கருமை நிறக் கண்ணா 



மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை. ஆனால் மகாபாரதத்தின் கண்ணனுக்கும், கீதையின் கண்ணனுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு!  

மேற்காணும் இரு நூல்களிலும் கண்ணன் எப்படிக் காட்டப்பட்டுள்ளார் என்னும் செய்திகளை பார்க்க வேண்டும். எவ்வாறு இந்துத் தத்துவம் பற்றிய செய்திகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலிலிருந்து மேற்கோள்களாகத்  தரப்பட்டதோ,  அவ்வாறே, மகாபாரதச் செய்திகள் ராஜாஜி அவர்களின் உரையிலிருந்தும், பகவத் கீதைச் செய்திகள் பக்தி வேதாந்த பிரபு பாதர் நூலிலிருந்தும் இங்கு தரப்பட்டுள்ளன


கண்ணன் அவதாரம் என்று கூடச் சொல்லக்கூடாது, அவரே முழுமுதற் கடவுள் என்கிறார், கீதைக்கு உரை எழுதியுள்ள பிரபு பாதர். "அவர் (ஸ்ரீகிருஷ்ணர்) மிகச் சிறந்த மனிதர் என்று கூட எண்ணக்கூடாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார்" என்கிறார் அவர்.  

ஆனால் மகாபாரதமோ, அவரை ஒரு சாதாரணக் கதை மாந்தராகவே  காட்டுகிறது. அந்நூலில், எந்த ஒரு இடத்திலும் அவர் நேர்மையாக வழி கட்டியதாக இல்லை. சூழ்ச்சி, சதி, தந்திரம் இவற்றின் மூலமே பாண்டவர்களுக்கு வெற்றி தேடித் தரும் பாத்திரமாக அவர் படைக்கப் பட்டுள்ளார். சில இடங்களில், மற்ற பாத்திரங்களால், மிக இழிவாக அவர் பேசப்படுகின்றார். எடுத்துக்காட்டிற்கு ஓர் இடத்தைப் பார்ப்போம்.

மகாபாரதத்தின் 18 பருவங்களில் இரண்டாம் பருவம் சபா பருவம்இதில் ஸ்ரீகிருஷ்ணர் எப்படியெல்லாம் பழிக்கப்படுகின்றார் என்பதை ராஜாஜியின் எழுத்து வழி காணலாம்

மாயன் என்னும் அசுரன் கட்டிக்கொடுத்த இந்திரப்பிரஸ்தம் என்ற மாளிகையில் (அதையும் ஓர் அசுரன்தான் காட்டிக்கொடுக்க வேண்டியுள்ளதுயுதிஷ்டிரன் (தருமர்) ராஜசூய யாகம் செய்ய நண்பர்கள் வலியுறுத்துகின்றனர். கண்ணனிடம் கலந்துரையாடுகின்றார் தருமர். மகத நாட்டு அரசன் ஜராசந்தன் ஏற்கனவே 84 அரசர்களை வென்றுள்ளார். இன்னும் 14 அரசர்களை வென்றுவிட்டால், பிறகு அவன்தான் ராஜசூய யாகம் செய்து, பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள இயலும் என்று கூறிவிட்டு, அந்த ஜராசந்தனை நாம் கொன்றுவிட்டால், பிறகு யுதிஷ்டிரன் இந்த யாகத்தைச் செய்யலாம், பேரரசனாகவும் ஆகிவிடலாம் என்று கண்ணன் விடை சொல்கின்றான்.

(கண்ணனுக்கும் ஜராசந்தனுக்கும் ஏற்கனவே பகை உள்ளது. அதனைத் தீர்த்துக்கொள்ளவும் கண்ணன் காட்டிய வழியாக இது இருக்கலாம்

தருமர் உடனடியாகப் பின்வாங்கி விடுகிறார். 'நம்மால் ஜராசந்தனைப் போரில் வெல்ல முடியாது' என்கிறார்போரில் வேண்டாம், தந்திரமாகக் கொன்றுவிடலாம் என்பது கண்ணன் கருத்து. தந்திரமாகக் கொல்வதைத் தருமர் வேண்டாம் என்று சொல்லவில்லை. (என்ன தருமமோ!) அமைதியாக இருக்கிறார். மௌனம் சம்மதம் ஆகிறது.

பீமனையும், அர்ச்சுனனையும் மாறுவேடத்தில் அழைத்துக்கொண்டு போய், ஜராசந்தனை  'ஒண்டிக்கு ஒண்டி' சண்டைக்கு அழைத்து, ஜராசந்தனும், பீமனும் 13 நாள்கள் சண்டையிட்ட பின், கண்ணன் மறைமுகமாக ஒரு புல்லைக்  கையிலெடுத்து மறைமுகமாகச் சில வழிகளை சொல்லிக் கொடுக்க, இறுதியில் அவனைக் கொன்று பீமன் வென்று விடுகிறான்

இதுதான் ஜராசந்தனை  வதம் செய்த 'வீரதீரக் கதை'. பிறகு ராஜசூய யாகம் தொடங்குகிறது

யாகம் தொடங்குவதற்கு முன் துவாரகாபுரி அரசன் கண்ணனுக்கு அக்கிர பூஜை (முதல் மரியாதை) செய்வதென்று தருமர் முடிவெடுத்ததும், சேடி நாடு அரசன் சிசுபாலன் கொதித்தெழுகிறான். கண்ணனைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசுகிறான். சிசுபாலனுடன் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், மணவறையிலிருந்து மணமகள் ருக்மணியைக் கவர்ந்து வந்தவன் அல்லவா கண்ணன்! அந்தக் கோபம் இன்னும் அடங்கவில்லை. கண்ணனை மட்டுமின்றி, பீஷ்மர், தருமர் எல்லோரையும் அவ்வளவு பெரிய அவையில் சிசுபாலன் 'வெளுத்து வாங்குகிறான்'. இதோ சிசுபாலன் பேச்சின் ஒரு பகுதியைக் கேளுங்கள்

இங்கே அக்கிர பூஜை  செய்யப் போகிறவன்(தருமன்) முறைகெட்ட  முறையில் பிறந்தவன்ஆலோசனை சொன்னவனோ (பீஷ்மர்), எப்போதும் தாழ்ந்த இடத்தையே தேடி ஓடுகின்ற தாயின் (கங்கா) வயிற்றில் பிறந்தவன். மரியாதையை அங்கீகரிக்கிறவனோ, மாடு மேய்க்கிறவர்கள் குலத்தில் வளர்ந்த  மூடன். இந்த சபையோர்கள் ஊமைகள். இங்கே யோக்கியர்களுக்கு இடமில்லை"

தொடர்ந்தும் சிசுபாலன் நிறைய பேசுகின்றான்.

" கிருஷ்ணனே, இந்தப் பாண்டவர்கள்தான் சுயநலத்தைக் கருதி முறையைப் புறக்கணித்து உனக்கு மரியாதை செய்கிறார்கள்ஆனால் நீ எப்படி ஒப்புக் கொள்ளலாம்? உனக்கும் தெரியாமல் போயிற்றா? தரையில் சிந்திய அவியுணவை (யாகத்தில் படைக்கப்படும் பொருள்) யாரும் கவனிக்காதிருந்தால் ஒரு நாய் தின்று விடுவது போல, உனக்குப் பொருத்தமில்லாத மரியாதையை நீ ஏற்றுக்கொள்வாயா? கண்ணில்லாத குருடனுக்கு சௌந்தர்யமான பொருளைக் காட்டுவது போலவும்ஆண்தன்மை இல்லாதவனுக்கு விவாகம் செய்து கொடுப்பது போலவும், ராஜ்ஜியமில்லாத உனக்கு அரசர்க்குரிய இந்த மரியாதையைச் செய்து பரிகசிக்கிறார்கள்."  

இவ்வளவு கடுமையாய் ஒரு 'முழுமுதற் கடவுளை' ஒரு சாதாரண அரசன் பேசுவதும் மகாபாரதத்தில்தான் இருக்கிறது. "நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் எண்ணில் இருக்கின்றன" (இயல் 9, பதம் 4)என்று கண்ணன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கீதையும், மகாபாரதத்தில்தான் இருக்கிறது.  (எல்லா ஜீவன்களும் எனக்குள் இருக்கின்றன என்பது கண்ணனின் வாக்கு. சிசுபாலன் மட்டும் வெளியே இருக்கிறான் போலிருக்கிறது). 

ஒரே நூலில் எப்படி இத்தனை முரண்

ஒரே நூல் என்று சொல்லப்படுகிறதே தவிர, இரண்டும் வெவ்வேறு நூல்கள். வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டவை. கி.பி. 6 ஆம் நூற்றாண்டில், இடைச் செருகலாக கீதை திணிக்கப்பட்டுள்ளது என்பதே ஆய்வாளர்களின் முடிவு

ஏன் திணிக்கப்பட வேண்டும்

காலப்போக்கில், மனுநீதி மக்களால் புறக்கணிக்கப் படுகிறதுவருண தருமம் மறையத்  தொடங்குகிறது. அந்தச் சூழலில், மீண்டும் வருண தருமத்தை நிலைநாட்ட இப்படி ஒரு நூல் எழுதப்பட்டு, மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.  

ஆம், கீதை என்பது வருணம் காக்க வந்த நூலே! கீதையின் உட்புகுந்து தேடினால் உண்மை விளங்கும்!! 

                                                                               (தொடரும்)

நன்றி: ஒன் இந்தியா

2 comments:

  1. Talaivaa,

    After losing Annadurai, and Kalainar, you are our living legend and living kalainar for us.

    Please focus more on Dravidian movement, Annadurai, Periyar and their vision.

    Also please do write more on justice party rule and the revolutionary reforms done during that era.

    ReplyDelete
  2. தமிழர் கடவுள் முருகனை இரு மனைவிகளுக்கு கணவராக்கியதும் மாம்பழக்கதைகளில் முட்டாளாக்கியதும் பார்ப்பண சதியன்றி வேறல்ல..இவ்வளவு செய்தும் இன்று சிலைகளைகளையே கடத்தினாலும் தமிழ்ச்சமூகம் அவாளை நம்புவதனை என்ன சொல்வது

    ReplyDelete