தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 4 November 2018

கறுப்பும் காவியும் - 20

'உயரச்' சிலையின் உள் அரசியல் 



(தொடர் பணிகளாலும், வெளிநாட்டுப் பயணத்தாலும் இத்தொடரின் இப்பகுதி வெளிவருவதில் நேர்ந்துவிட்ட காலத் தாழ்வைப் பொறுத்திட வேண்டுகிறேன்

பெண் அடிமைத்தனத்தைக் காவி முன்மொழிய, பெண் விடுதலையை எப்படிக் கருப்பு எடுத்துரைக்கிறது என்பதை அறிவோம் என்னும் நிலையில் சென்ற பகுதி நிறைவடைந்தது. அதனை விளக்குவதற்கு முன், இன்றைய அரசியலில்நிகழ்ந்துவரும் ஓர் இன்றியமையா நிகழ்வு குறித்துப் பேசிட வேண்டியுள்ளது

உலகிலேயே மிகக் கூடுதல் உயரம் கொண்ட சிலையாக (182 மீட்டர்) வல்லபாய் படேலின் சிலை, 31.10,2018 அன்று குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது தன் கனவுத் திட்டம் என்கிறார் பிரதமர் மோடி


 காங்கிரசை அழித்துவிட வேண்டும் என்று விரும்புகிற மோடிக்கு, காங்கிரஸ்காரரான பட்டேலுக்குச் சிலை நிறுவுவதில் என்ன அவ்வளவு ஈடுபாடு? அவர் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தினார் என்பதால், 'ஒற்றுமைச் சிலை' (statue of unity) நிறுவப்படுவதாகச் சொல்கின்றனர். குஜராத்காரர் என்பது இன்னொரு காரணம். இரண்டுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. உயரச் சிலைக்குள் ஓர் உள் அரசியல் ஒளிந்திருக்கிறது என்பதே உண்மை

வல்லபாய் படேல், நரசிம்ம ராவ் போன்றவர்கள் கதர்ச் சட்டைக்குள் ஒளிந்திருந்த  காவிச் சட்டைகள். இன்றைய அரசியல் மொழியில் சொல்வதானால், ஒருவிதமான ' ஸ்லீப்பர் செல்' கள்படேல் இஸ்லாமிய எதிர்ப்பாளராகவும், ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்குவதற்கு மிக உதவியவராகவும்  இருந்தார் என்பதே உண்மைக் காரணம். அதனால்தான் அவ்வளவு பெரிய சிலை

இந்திய விடுதலைக்கு முன் இருந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் என்பது மிகையான பாராட்டு. மவுண்ட் பேட்டன் அந்த வேலையை ஏறத்தாழ முழுமையாக முடித்துவிட்டுத்தான் போனார். அன்று இருந்த 562 சமஸ்தானங்களும், தனித்தியங்கவே விரும்பின. இந்திய அரசியல் நிர்ணய சபையில் கூட அவர்கள், முஸ்லீம் லீகைப் போலப் பங்கெடுக்கவில்லை. பிறகு அவர்களுக்குள் சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டன. அதனைச் சரிசெய்ய, 1947 மார்ச் மாதம் அவர்கள் கூடினார்கள். எனினும் ஒற்றுமை ஏற்படவில்லை. பரோடா, கொச்சி உள்ளிட்ட எட்டு சமஸ்தானங்கள் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்பதென முடிவு செய்து அதன்படி செய்தனர்

இறுதியில், மவுண்ட் பேட்டன் 1947 ஜூலையில், தில்லியில் ஒரு மாநாடு கூட்டி, அனைத்து சமஸ்தானங்களையும் கலந்து கொள்ளச் செய்தார். அந்த மாநாட்டில் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மூன்றே மூன்று சமஸ்தானங்களைத் தவிர அனைவரும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய சம்மதம் தெரிவித்தனர்

இதனை, 1947 ஆகஸ்ட் 15 அன்று, அரசியல் நிர்ணய சபையில், பெருத்த ஆரவாரத்திற்கிடையே மவுண்ட் பேட்டன் தெரிவித்தார்

மீதமிருந்த காஷ்மீர், ஹைதராபாத், ஜூனாகத் மூன்று சமஸ்தானங்களைச் சேர்ப்பதில் பெரும் சிக்கல் எழுந்தது. காஷ்மீரில் மன்னர் இந்துவாகவும், மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்களாகவும் இருந்தனர். குஜராத் அருகில் இருந்த ஜூனாகத் சமஸ்தானத்தில் நிலைமை நேர் எதிராக இருந்தது. அங்கே மன்னர் இஸ்லாமியராகவும், மக்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவும் இருந்தனர்

இரண்டு இடங்களிலும், பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ஜூனாகத்தில் வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு ஒப்புக்கொண்டு, 1948 பிப்ரவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தியது. இந்தியாவுடன் இணைய மக்கள் ஆதரவு தெரிவித்தனர்அந்நாட்டு மன்னர் தப்பியோடி, பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்தார்.

ஆனால் இஸ்லாமியர் மிகுதியாக உள்ள காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா மறுத்து விட்டதோடு, அந்தக் கோரிக்கையை முன்வைத்த 'காஷ்மீர் சிங்கம்'  ஷேக் அப்துல்லா 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மன்னர் ஹரிசிங் ஒப்புதலுடன், 1947 அக்டோபர் 26 அன்று, ஜம்மு காஸ்மீர், இந்தியாவின் இணை மாநிலமாக (Associate state) சேர்த்துக்கொள்ளப்பட்டதுஜூனாகத்தில் ஏற்றுக்கொண்ட நீதியை, படேல், காஷ்மீரில் ஏற்க மறுத்துவிட்டார். அதனால் இன்றும் அங்கு போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக 1936 முதல் 47 வரையில் பதவி வகித்த சி.பி. ராமசாமி ஐயர், தங்கள் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவதைக் கடுமையாக எதிர்த்தார். அவருக்கு ஆங்கிலேய அதிகாரிகளுடன் தொடர்பிருந்தது. அதனை நம்பி, திருவிதாங்கூர் அரசர், 1947 ஜூன் 18 அன்று, தங்கள் சமஸ்தானம் தனி நாடாகிவிட்டது என்றே அறிவித்தார்ஆனால் சி.பி.ஆர்  மீது படேல் உட்பட யாரும் கோபம் கொள்ளவில்லை. சமாதானம் செய்து அதனை இந்தியாவுடன் இணைத்துவிட்டனர். பிறகு, விடுதலை பெற்ற  இந்தியாவில் சி.பி.ஆர். பல பதவிகள் பெற்றார். அவாளின் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக்கப்பட்டார். பல்கலைக்கழக மானியாக் குழுவில் (யு.ஜி.சி) உறுப்பினராக்கப்பட்டார். இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதி, அய்யர்களுக்கு ஒரு நீதி இந்தியாவில் வழங்கப்பட்டது.  

ஹைதராபாத் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. மன்னர், மக்கள் இருவருமே இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டனர். ஒன்று தனித்தியங்குவது அல்லது, பாகிஸ்தானுடன் இணைவது என்று முடிவெடுத்தனர்.இரண்டுமே இந்தியாவிற்கு உடன்பாடாக இல்லை. எனவே 1947 நவம்பரில், 'இருந்தது இருந்தபடி இருப்பது' (standstill agreement) என ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது

ஆனால் படேல் அதனை நிரந்தரமாக ஏற்க முடியாது என்று சொல்லிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியில் முடிந்தது. இறுதியாக ஹைதராபாத் மீது போர் தொடுப்பது என்று முடிவானது. இந்தியா விடுதலை பெற்று ஓராண்டிற்குப் பிறகு, 1948 செப்டம்பர் 13 தொடங்கி 18 ஆம் தேதி வரையில் அந்தப் போர் நடைபெற்றது. அதற்குப்  போலோ நடவடிக்கை (Operation Polo) என்று பெயரிடப்பட்டது. அந்தப் போர் மிகக் கடுமையாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்

அரசினால் அமைக்கப்பட்ட சுந்தர்லால் குழு (Suntharlaal committee), அந்தப் போரில் ஏறத்தாழ 40000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. ஆனால் .ஜி. நூராணி போன்ற வரலாற்றாசிரியர்கள், இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பர் என்றனர். எவ்வாறாயினும், மக்களின் ரத்த வெள்ளத்தில்தான் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அன்று கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகப் பார்க்கப்பட்டனரே அல்லாமல், இந்தியர்களாகக் கருதப்படவில்லை. . இதனைத்தான், போகிறபோக்கில், 31.10.2018 இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான ஒரு கட்டுரையில்  அன்று 'சிறிய' பலவந்தத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என்கிறார், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களைக்  கொன்று குவித்து, படேல் இணைப்பை ஏற்படுத்தியதால்தான், அவரை 'இரும்பு மனிதர்' என்று இந்துத்துவாவினர்  கொண்டாடுகின்றனர். ஆனால் இதனால் மட்டுமே அவருக்கு அங்கு சிலை அமைக்கப்படவில்லை. இத்தனையும் தாண்டி இன்னொரு காரணம் இருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்க அவர் செய்த உதவிதான். அது குறித்துச் சற்று விரிவாகவே பார்க்கலாம்.


                                                                               (தொடரும்)
நன்றி: ஒன் இந்தியா


No comments:

Post a Comment