தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 10 March 2019

நம்பிய வீணையின் நரம்பு அறுந்தது!
பொங்கல் விழாவின் மறுநாள் (16.01.2019) நெல்லையிலிருந்து தோழர் சந்தானம் தொலைபேசியில் அழைத்து, "ஐயா, நம் வீணையின் மைந்தன்....." என்று தொடங்கியபோது கூட, இப்படி ஓர் அதிர்ச்சிச் செய்தியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை

திரைப்பட இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலம் முதலே நான் தம்பி வீணையின் மைந்தனை அறிவேன். திரையுலகில் ஆர்வமும், சமூக அக்கறையும் கொண்ட ஆற்றல் மிக்க இளைஞர் அவர். அண்மையில் சில பாடல்களையும் திரைப்படத்தில் எழுதியுள்ளார். ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார் என்பதையும் நான் அறிவேன். எனவே, அம்முயற்சி வெற்றிபெற்று, படத்தின் தொடக்க விழா குறித்து என்னிடம் சொல்லவே, சந்தானம் தொலைபேசுகின்றார் என்று நினைத்தேன்


அது தொடக்கம் பற்றிய செய்தியன்று, வீணையின் முடிவு பற்றிய செய்தி!

அதிர்ந்து போனேன். 33 அகவையில், வீணை மைந்தன் இறந்து போவார் என்று யார்தான் நினைப்பார்கள்! என்ன சந்தானம், என்ன சொல்கிறீர்கள், என்ன ஆயிற்று என்று பதறினேன். சட்டென்று மாரடைப்பு, இன்று காலை இறந்துவிட்டார் என்றார். .
எத்தனை சுறுசுறுப்பு, எத்தனை கொள்கைப் பிடிப்பு! இழந்து விட்டோமே நம் வீணையின் மைந்தனை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்தபோது, என்னோடு வீடு வீடாகத் திமுக விற்கு வாக்குகள் சேர்த்த தம்பிகளில் அவரும் ஒருவர். அது மட்டுமின்றி, நான் வாக்குகள் கேட்பதைப் படமாக எடுத்து, அவரே தொகுத்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். என்னிடம் எப்போதும் மிகுந்த அன்புடன் இருந்தவர். என் நெஞ்சம் நிறைந்த தம்பிகளில் ஒருவர்

பிணவறையில் அந்த உடல் பார்த்தேன். கட்டுக் குலையாத உடல். அடடா, அது சாகின்ற உடலும் இல்லை, சாகின்ற வயதும் இல்லை

அந்த உடலின் அருகில் என்னோடு நின்று, வீணையின் நெற்றியில் அவர் மனைவி ஆனி, பாசத்துடன் முத்தமிட்ட காட்சியை எப்படி மறப்பேன்? அது கடைசி முத்தம்! பிறகு என் தோளில் சாய்ந்து அவர் அழுத்த அழுகை, என் தோளை மட்டுமன்று, என் இதயத்தையும் நனைத்தது

என்றும் உனக்குத் துணையிருப்போம் மகளே என்றது என் மனம்

எதிர்காலத்தில் ஒரு பெரிய திரைப்படப் பாடலாசிரியனாக, இயக்குனராக வருவான் என் தம்பி என்ற கனவு சாய்ந்தது

நம்பிய வீணையின் நரம்பு அறுந்தது.....தம்பிப் படையில் ஒன்று மறைந்தது!

No comments:

Post a Comment