(சிங்கப்பூர், வள்ளல்
கோவிந்தசாமிப் பிள்ளை அரங்கில், பெரியார்
சமூக சேவை மையம் நடத்திய விழாவில், 13.11.2011 அன்று மாலை பெரியார் கண்ட வாழ்வியல் என்னும் தலைப்பில் தோழர் சுப. வீரபாண்டியன்
நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி)
20ஆம் நூற்றாண்டு தொடங்கும்போது, பெரியர் 21 வயது இளைஞர். துடிப்பும், வேகமும் கொண்ட அவர் ஓர் அடிமைச்
சமுதாயத்தில் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தார்.
அன்றைக்குப் பிரிட்டிஷ் இந்தியாவின்
ஒரு பகுதியாக இருந்த தமிழகம், இரண்டு
விதமான அடிமைத்தனங்களுக்கு ஆட்பட்டிருந்தது. ஒன்று அரசியல் அடிமைத்தனம். இன்னொன்று
சமூக அடிமைத்தனம். அரசியல் அடிமைத்தன மாவது அறியப்பட்டிருந்தது. அதனை எதிர்த்துப்
போராட்டங்கள் முளைவிடத் தொடங்கியிருந்தன. ஆனால் சமூக அடிமைத்தனம் உணரப்படவே இல்லை.
வெள்ளையர்களின் ஆட்சி, இந்தியா முழுமையும் நிலைகொண்டுவிட்ட
காலம் அது. அதனை எதிர்க்கும் பேரியக்கங்கள் எதுவும் அப்போது தோன்றவில்லை. 1885இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ்
பேரியக்கம் கூட,
அன்று இந்திய விடுதலையைக்
கோரவில்லை. விக்டோரியா மகாராணி, நீண்ட
நாள்கள் வாழவேண்டுமென்றும், அவரே
இந்தியாவைத் தொடர்ந்து ஆள வேண்டும் என்றும்தான், அன்றைய பம்பாய் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. 1905ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் சிறிது
சிறிதாய்ப் போராட்டங்கள் தொடங்கின.
1310ஆம் ஆண்டுடன், தமிழ்நாட்டில், மூவேந்தரின் ஆட்சி முடிந்து போயிற்று.
ஏறத்தாழ 700
ஆண்டுகள், தமிழ் மண்ணில் அந்நியர் ஆட்சிதான். இசுலாமியர்கள்
கொஞ்ச காலம்,
விஜயநகரப் பேரரசின் வழிவந்த
நாயக்கர்கள் சில நூற்றாண்டுகள், மராத்தியர்கள்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலம் என அந்நியரே ஆண்டு கொண்டிருந்தனர். அடிமைகளா
கவே வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், வீறு
கொண்டு எழ வெகு காலம் ஆயிற்று.
சமூக அடிமைத்தனமோ அதற்கும் முன்பே
இங்கு ஆழ வேர்விட்டிருந்தது. பல்லவர் காலத்திலேயே, சமற்கிருதப் பள்ளிகளும், அதன் வழி நம்மை அந்நியப் பண்பாட்டிற்கு அடிமையாக் கும்
முயற்சிகளும் தொடங்கிவிட்டன. பல்லவரைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலேறிய பிற்காலச்
சோழர், பாண்டியர் தமிழர்களாய் இருந்தபோதும், தமிழ்ப் பண்பாட்டை அவர்கள் தாங்கிப்
பிடிக்கவில்லை. ராஜராஜ சோழன், தரணி
எல்லாம் ஆண்ட தமிழ் மன்னனாய் இருந்தான், கலை, இலக்கியங்களை
வளர்த்தான் என்பனவெல்லாம் உண்மைதான். ஆனால் அவன் ஆட்சிக்காலத்திலேதான் வருண
பேதங்கள் வளர்ந்தன. பார்ப்பனீய ஆதிக்கம் கூடிற்று. நம் பாட்டிகளுக்குப்
பாட்டிகளுக்குப் பாட்டிகளின் கால்களில் சலங்கைகள் கட்டப்பட்டு, அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். சாதி
அடிமைத்தனமும்,
பெண் அடிமைத்தனமும் கைகோத்து
வளர்ந்தன.
இப்படி, அரசியல், சமூக
அடிமைத்தனங்கள் இரண்டும் முதிர்ந்து நின்ற தருணத்தில்தான், தந்தை பெரியார் அரங்கிற்கு
வருகின்றார். 1926இல் அவர் கண்ட சுயமரியாதை இயக்கம் ஒரு
நுட்பான பார்வையைக் கொண்டிருந்தது.
இரண்டு அடிமைத்தனங்களும் நம் மக்களை
நசுக்கி அழித்துக் கொண்டிருந்தன. என்ற போதும், அவை இரண்டிற்குமிடையிலும் ஒரு மோதல் இருப்பதைப் பெரியார்
உணர்ந்தார். நோக்கரிய நோக்காகவும், நுணுக்கரிய
நுண்ணறிவாகவும் அவர் பார்வை இருந்தது. விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாகப்
பார்க்கும்போது,
ஆங்கிலேய ஆதிக்கத்தையும், ஆட்சியையும் எதிர்ப்பதாக அது இருந்தது.
நுட்பமாகப் பார்க்கும் போது, ஐரோப்பியப்
பண்பாட்டு ஆதிக்கத்தை அகற்றிவிட்டு, அங்கே பழைய இந்துத்துவ நிலவுடைமைப் பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநாட்ட
நடக்கும் போராட்டமாக இருந்தது.
எல்லோரும் மேல்தளத்தையே கவனித்துக்
கொண்டிருந்த போது, பெரியார்
கீழ்த்தளத்தில் நடைபெறும் உண்மை யுத்தத்தை உணர்ந்து கொண்டார்.
சமூக அடிமைத்தனத்தை விரட்டிச்
சமத்துவத்தை ஏற்படுத்தாமல், அரசியல்
விடுதலை பெற்று என்ன பயன் என்று கேட்டார். அதனால்தான் விடுதலை நாளைத் துக்க நாள்
என்று அவர் அறிவித்தார். ‘ஜெனரல்
டயர் போகிறார்,
வல்லபாய் படேல் வருகிறார். இரண்டிற்கும்
என்ன வேறுபாடு?’
என்று கேட்டார். ‘ சரி, இரண்டு
எதிரிகளில் ஒருவன் போய்த் தொலைவது நல்லதுதானே!’ என்று அண்ணா சமாதானம் கூறினார். பெரியார் ஏற்கவில்லை. பூட்டப்பட்ட
விலங்குகள் அப்படியே இருக்கும்போது, சாவிகள் கைமாறுவதில் என்ன மகிழ்ச்சி என்றார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக்
குரல் கொடுத்தார் பெரியார். உடனே அவரைக் கலகக்காரர் என்றும், அழிவு வேலைக்காரர் என்றும்
பிற்போக்குச் சக்திகள் குற்றம் சாட்டின.
ஆம், நான் அழிவு வேலைக்காரன்தான் என்று வெளிப்படையாகப் பெரியார்
கூறினார். நேற்றைய கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் கூறியதுபோல, பூந்தோட்டத்தை உருவாக்குவதற்காகப்
புதர்க்காடுகளை அழித்த அழிவு வேலைக்காரர் அவர்.
அதனால் சிலரின் ஆதரவையும், மிகப் பலரின் எதிர்ப்புகளையும் அவர்
எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை. எல்லோருக்கும்
நல்லவனாக இருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். எல்லோருக்கும் நல்லவர்களாக
இருப்பவர்கள்,
யாருக்கும் உண்மையாக இல்லை
என்பதே உட்பொருள்.
இன்னொன்றையும் இங்கு குறிப்பிட
வேண்டும். பொத்தாம் பொதுவில் நல்லவனாக இருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. சிலர் புகை
பிடிக்க மாட்டார்கள், மதுவருந்த
மாட்டார்கள்,
ஒழுக்கமாக இருப்பார்கள்... நல்லதுதான்.
ஆனாலும், அவர்களால் நாட்டுக்கு என்ன பயன் என்று
பார்க்க வேண்டும்.
தோரா என்று சுருக்கமாக அறியப்பட்டுள்ள, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில்
அமெரிக்காவில் வாழ்ந்த எழுத்தாளர், தத்துவாசிரியர்
யஹன்றி டேவிட் தோரா (Henry David Thoreau) சொல்வார், “Aim above morality. Be not simply good. Be good for
something” என்று. நாம்
ஒவ்வொருவரும் உட்கொள்ள வேண்டிய ஆழமான கருத்து இது.
“வெறுமனே ஒழுக்கமாய் இருந்து
கொண்டிராதே. யாருக்காவது, எதற்காவது
பயன்படுகின்ற ஒழுக்கம் உடையவனாய் இரு. வெறும் நன்னடத்தை என்பதற்கும் மேலானதாக உன்
இலக்கு இருக்கட்டும் ” என்பதுதான்
தோராவின் சிந்தனை.
ஒழுக்கத்திற்கு மட்டுமன்று, வீரம் போன்ற குணங்களுக்கும்
இச்சிந்தனை பொருந்தும். வெறும் வீரத்தால் என்ன
பயன்? அது நாட்டிற்குப் பயன்படுகின்ற வீரமாக
இருக்க வேண்டும்.
1857ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப்
போராட்டத்தில் நானாசாகிப், ஜான்சிராணி
ஆகியோரின் வீரத்தைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இருவரும் வீரர்கள். ஆனால்
அவர்களின் வீரத்திற்குப் பின்னால் சில செய்திகளும் ஒளிந்திருக்கின்றன. வரலாற்றுப்
பேராசிரியர் கருணானந்தன் அதைத் தன் நூலொன்றில் தெளிவாக எடுத்துக் காட்டுவார்.
மராத்திய மாவீரன் சிவாஜிக்குப் பிறகு
ஆட்சிக்கு வந்த மராத்தியப் பார்ப்பனர்களான பேஷ்வாக்கள், ஆங்கில அரசிடம் ஒரு கட்டத்தில்
சரணடைந்தனர். அவர்கள் கொடுத்த ஓய்வூதியத்தில் உல்லாசமாக இருந்தனர். அவர்களில்
ஒருவர் தான் நானாசாகிப். அரசின் முன் அனுமதியின்றித் தந்து எடுக்கப்படும்
வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அறிவிப்பு வெளியானபோதுதான், அவர்களுக்குள் முதல் முரண்பாடு
தோன்றியது. மனுக்களை அளித்து மன்றாடினர். அதற்கு ஆங்கிலேய அரசு இசையவில்லை. பிறகுதான், சிப்பாய்களுடன் சேர்ந்து நானாசாகிப்
ஆங்கிலேயர்களை எதிர்த்துக் களத்திற்கு வந்தார்.
ஜான்சிராணியின் கதையும் ஏறத்தாழ
அதுதான். அகவை முதிர்ந்த கிழவரை மணந்துகொண்ட ஜான்சிராணிக்குக் குழந்தை இல்லை. ஒரு
வாரிசைத் தத்தெடுத்துக்கொள்ள அரசு ஒப்பவில்லை. அனுப்பிய மனுக்கள் பயனற்றுப் போயின.
அதன் பின்பே ஜான்சிராணியின் ‘போர்க்களப்
பிரவேசம்’ நடைபெற்றது.
அவர்கள் வீரத்தை, நாம் குறை கூறவில்லை. ஆனால் வீரத்திற்கும், நாட்டுப்பற்றுக்கும் உள்ள வேறுபாட்டை
நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. தோராவின் பாணியில் சொல்வதென்றால், “Be not simply
brave. Be brave for Social Justice. Aim above bravery” என்றுதான் கூற வேண்டியுள்ளது.
இவ்வாறு, பொத்தாம் பொதுவில் நல்லவராகவும், வீரத்தைக் காட்டுகின்றவராகவும்
இல்லாமல், குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்று
வதற்காக நல்லவராகவும், வல்லவராகவும்
விளங்கிய பெரியாரின் மீது அவதூறுப் புழுதிகளை அள்ளி வீசினர்.
பெரியார் ஏற்றத்தாழ்வுகளை
எதிர்க்கிறார் என்னும் உண்மையைக் கூறாமல், அவர் வெள்ளையரை ஆதரிக்கிறார் என்று திரிபுவாதத்தை முன்வைத்தனர். ஆனால்
அந்தத் தூசிகளால், அவருடைய
பாதையை மறைக்க முடியவில்லை. அவரின் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
எல்லோரும் வீடுகளுக்கு வெளியே அரசியல்
நடத்திக் கொண்டிருந்த போது, பெரியார்
தன் அரசியலை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டுவந்தார். வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும்
சுயமரியாதை எண்ணத்தை ஏற்றினார். குழந்தைக்குப் பெயர் வைப்பது, மணநாள், நினைவேந்தலும் படத்திறப்பும் என்று பிறப்பிலிருந்து இறப்பு வரை
எல்லா நிகழ்வுகளிலும் புதிய பண்பாட்டை அவர் புகுத்தினார்.
புதிய வாழ்க்கை முறையை அவர்
முன்மொழிந்தார். அவர் வகுத்துக் கொடுத்த வாழ்வியல் பாடம் அனைவரையும் கவர்ந்தது. குடும்பங்களின்
வழி, சமூக மாற்றத்தையும், சமூக மாற்றத்தின் வழி, நாட்டுப் பண்பாட்டு விடுதலையையும்
அவர் முன்னெடுத்தார்.
பெரியார் கண்ட வாழ்வியல், ஒரு தனி மனிதனுக்கு மட்டும் உரியதன்று, ஒரு நாட்டுக்கே, ஓர் இனத்திற்கே உரியதாக உள்ளது.
No comments:
Post a Comment