எந்த ஒரு தலைவருக்கும்
இரண்டு பக்கங்கள் உண்டு என்று கூறுவார்கள். மராத்திய வீரன் சிவாஜிக்கோ மூன்று பக்கங்கள்
உண்டு. ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொரு பிரிவினர், தங்கள் பார்வையில் எடுத்து நிறுத்தினர்.
மராத்தியத்தின் மகாத்மா ஜோதிராவ் பூலே, சிவாஜியை மண்ணின் மைந்தனாய்ப் பார்த்தார். இந்துத்துவ
மதவாதிகள் அவரை இசுலாமிய எதிர்ப்பாளராய்க் காட்டினர். நம் அறிஞர் அண்ணாவோ அவர் பார்ப்பனீயத்தின்
பலியாடு என்னும் கோணத்தை எடுத்து விளக்கினார்.
அடிமைப்பட்டுக்
கிடந்த மராத்திய தேசத்தில் தோன்றிய மாவீரன்தான் சிவாஜி. தான் பிறந்த மண்ணின் அடிமைத்தனத்தை
நீக்கி, அதற்கு விடுதலை பெற்று அந்நாட்டின் அரசனாக வேண்டும் என்பதுதான் சிவாஜியின்
கனவு. அந்தக் கனவு நனவாக வேண்டும் என்னும் விருப்பத்தில், ஒரு சிறு படையைக் கட்டி,
வாளெடுத்துப் போர் தொடுத்தவன் சிவாஜி. அதனால்தான் அந்த மண்ணின் மைந்தனை ஜோதிராவ் பூலே
பாராட்டினார். சிவாஜியை அந்தக் கோணத்தில் பார்ப்பதுதான்
சரியானது என்பதையும் அவர் விளக்கினார்.
ஆனால் அதனையே,
தங்களுக்கு ஏற்ற விதத்தில் வேறு விதமாக மாற்றிக் காட்டினர் சங்பரி வாரங்கள். 1664 முதல்
1670ஆம் ஆண்டுவரை ஆட்சிக்கட்டிலில் இருந்தவர் சிவாஜி. அப்போது முகலாய சாம்ராஜ்ஜியத்தின்
பேரரசராய் வீற்றிருந்தவர் ஒளரங்கசீப். அதனால் அவர்கள் இருவருக் குள்ளேயும், பூசல்களும்,
போர்களும் எழுந்தன என்பது வரலாற்றுச் செய்திதான்.
ஒப்பீட்டளவில்
ஒளரங்கசீப்பின் ஆட்சிப்பரப்பு மிகப்பெரியது. ஏறத்தாழ, தமிழ்நாடு நீங்கலான அன்றை இந்தியா
முழுவதும் அவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால் அடங்கமறுத்த சிவாஜியின் மீது
ஒளரங்கசீப் போர் தொடுத்ததும், சிவாஜியைச் சிறையில் அடைத்ததும் வரலாற்று நிகழ்வுகள்.
ஒளரங்கசீப்பிற்குப் பதிலாக வேறு எந்த ஒரு பேரரசர் ஆட்சியில் இருந்தாலும், அவர் இந்துவாகவே
இருந்தாலும், போர் நடந்தே இருக்கும். அதே போல சிவாஜிக்குப் பதிலாக ஓர் இசுலாமியச் சிற்றரசன்
அடங்க மறுத்தாலும் ஒளரங்கசீப் போர் தொடுத்தே இருப்பார். எனவே அது அரசர்களுக்கு இடைப்பட்ட
முரண்பா டேயல்லாமல், மதங்களுக்கு இடையிலான மோதல் என்று அதனைக் கூற முடியாது. ஆனால்
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., போன்ற மதவாத அமைப்புகள் அதனை இன்றும் மதங்களுக்கு இடையிலான
யுத்தம் என்றே காட்டுகின்றன. அதன் அடிப்படையிலேதான் சிவாஜியை ஒரு வரலாற்று நாயகனாக
உயர்த்திப் பிடிக்கின்றனர். இன்றும் மும்பையில் காணப்படும் மாவீரன் சிவாஜியின் சிலை,
பி.ஜே.பி., அரசால், முற்கூறப்பட்ட அடிப்படையில் எழுப்பப்பட்டதேயாகும்.
மண்ணின் மைந்தனாக
சிவாஜி எழுந்து போராடினார் என்பதும் உண்மை. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை எதிர்த்துக்
களம் கண்டார் என்பதும் உண்மை. ஆனால் இரண்டு உண்மைகளுக்கும் இடையில் புதைந்து கிடந்த
இன்னொரு உண்மையை, அறிஞர் அண்ணா அவர்கள்தான் திராவிட இயக்கப் பார்வையோடு வெளிக் கொண்டுவந்தார்.
எதிரியோடு போராடி
வெற்றி பெற்று தன் சொந்த மண்ணை அவர் மீட்டெடுத்தார் என்றாலும், அம்மண்ணிற்கு அரசனாக
அவர் முடிசூடிக்கொள்வதற்கு ஆயிரம் தடைகள் இருந்தன. அவர் பிறந்த குலம் ஆளப்பிறந்த குலம்
அன்று என்று சொல்லி, ஒருநாளும் அவர் மன்னராக முடியாது என்று வைதீகப் பார்ப்பனர்கள்
வாதிட்டனர். ஒரு சூத்திரன் எப்படி நாடாளலாம்
என்று கேள்வி எழுப்பினர். போரிலே புலியாக இருந்தாலும், வைதீக புரியிலே சிவாஜி எலியாகச்
சிக்கிக் கொண்டார். மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த வீரன், களத்திலே சூரன் சிவாஜி,
காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பின்பே அரியாசனம் ஏற முடிந்தது என்னும் உண்மையைத்
தன் நாடாகத்தின் மூலம் அனைவரும் அறிய வைத்தார் அண்ணா. சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட
இந்து சாம்ராஜ்யம் என்னும் நாடகத்தில், வெளிவராத பல வரலாற்று உண்மைகளை விளக்கிக் காட்டினார்.
அதற்குப் பிறகே சிவாஜியின் மூன்றாவது பக்கத்தை ஊரும் உலகமும் அறிந்து கொண்டது.
மராத்திய மண்டலத்தைக்
கமண்டல நீர் தெளித்து அவர்கள் உருவாக்கவில்லை. மராத்தியர்கள் ரத்தம் சிந்திய பிறகே
அந்த மண்டலம் உருவாயிற்று. ஆனால் அதுவரை காத்திருந்த பார்ப்பனர்கள், ஆட்சி பீடம் ஏறும்தருவாயில்
தங்கள் சூழ்ச்சி வலைகளை விரித்தனர். வேறு வழியின்றி சிவாஜியும் அதற்கு ஆட்பட்டார்,
அடிமைப்பட்டார். இதுதான் அண்ணா வடித்துத் தந்த சித்திரம். இந்தச் சித்திரத்திற்குள்தான்
இந்தியா முழுவதும் விரிந்து கிடந்த வருணாசிர தர்மத்தின் வலைப்பின்னல்கள் மக்களுக்கு
விளக்கப்பட்டன.
ஜோதிராவ் பூலேக்குப்
பார்ப்பனிய ஆதிக்கம் புரியாத புதிர் இல்லை. அய்யா பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும்
அரைநூற்றாண்டிற்கும் முன்பாகவே அதனை உலகிற்கு எடுத்துக்காட்டிய உன்னத மனிதர் ஜோதிராவ்
பூலே. எனினும் சிவாஜியின் வீரத்தை எடுத்துக்காட்டி, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட
வேண்டிய ஆவேசத்தின் குறியீடாய் சிவாஜியை அவர் பார்த்தார். அதே பார்வையை அவர் மக்களுக்கும்
ஊட்டினார். அந்த ஊக்கமும் உணர்வும் வரப்பெற்றால்தான், அடிமைத்தளையை அறுத்தெறிந்து,
விடுதலைக்காக மக்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்று பூலே கருதினார்.
ஒரு கோணத்தில்
பூலேயின் பார்வை சரிதான் என்றாலும், வருணசாதி அமைப்பையே சமூக அமைப்பாகக் கொண்டிருக்கிற
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று
விரும்பினார் அண்ணா. அதற்குக் கலை இலக்கியத் தளமே மிக உகந்தது என்பது அவர் கருத்தாக
இருந்தது. அதனால் அண்ணாவும் அவரோடு இணைந்து பணியாற்றிய திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும்
தங்கள் பார்வையைக் கலை இலக்கியங்கள் மூலம் நிலைநாட்டினர்.
திராவிட இயக்கம்,
1940 தொடங்கி கலை இலக்கியத் தளங்களை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. முதன் முதலாகப்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணாவும் திரைத்துறைக்குள்
நுழைந்தனர். பிறகு கலைஞர், ஜலகண்ட புரம் கண்ணன்,
கண்ணதாசன் என ஒரு எழுத்துப்பட்டாளமே கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தது. நடிப்பிசைப்
புலவர் கே.ஆர். இராமசாமி, நடிகவேள் எம்.ஆர். இராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.
மதுரம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகமணி
டி.வி. நாராயணசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் எனத் திரைப்பட நடிகர்களின்
வரிசையயான்றும் நீண்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், தொடக்கத்தில், இப்பட்டியலில்
இடம் பெற்றிருந்தார். இவ்வாறு கலை, இலக்கிய அரங்குகளில் கால் பதித்த திராவிட இயக்கம்,
கொள்கை பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டது.
அந்த வகையில்,
அண்ணாவின் நாடகமான சந்திரமோகன், ஆரம்ப காலத்திலேயே அரங்கேற்றப்பட்ட ஒன்று. வேலைக்காரி,
சொர்க்கவாசல், பராசக்தி, ரத்தக் கண்ணீர், மனோகரா போன்ற பல திரைப்படங்கள் பிற்காலத்தில்
வெளியாகி, திராவிட இயக்கக் கோட்பாடுகளைத் தமிழக மக்களிடம் எளிதாகக் கொண்டுசென்றன. அவற்றுக்கெல்லாம்
முன்பாக, 1945ஆம் ஆண்டே மேடையேற்றப்பட்ட நாடகம்தான் சிவாஜி பற்றிய அண்ணாவின் நாடகம்.
சாதாரண மனிதனைத்தான்
சதுர்வருணம் பிடித்தாட்டுகிறது என்று எண்ண வேண்டாம். சாம்ராஜ்யத்தையே ஆளவந்தாலும்,
காகப்பட்டர்களினன் காலடிகளில்தான், சூத்திரர்கள் என அழைக்கப்பட்டவர்கள் சுயமரியாதையற்றுச்
சுருண்டு போனார்கள் என்பதை நாடகம், எல்லோர்க்கும் புரியும் வகையில் புலப்படுத்தியது.
தப்பித்தவறி ராஜாக்களாகச்
சில சூத்திரர்கள் வந்துவிட்டாலும், ராஜகுருக்கள்களாகப் பார்ப்பனர்கள்தாம் இருப்பார்கள்
என்பதுதான் இன்றுவரை நம் அரசியலாக உள்ளது. இதைத்தான், 67 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவின்
நாடகம் அழுத்தமாய்ச் சொல்லியது.
எந்த ஒன்றையும்,
எந்தக் கோணத்தில் பார்த்து, எப்படி அதன் உட்பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கி,
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இயக்கமாய்த் திராவிட இயக்கம் விளங்கியது.
மருத்துவர் நடேசனார்,
சர்.பிட்டி. தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் என மூன்று தலைவர்களால் உருவாக்கப்பெற்று,
அதன்பின், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் என முப்பெரும் தலைவர்களால்
இன்றுவரை பேணிக்காக்கப்பட்டுப் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.
சிவாஜி குறித்து
மட்டுமின்றி, ஒவ்வொரு வரலாற்று, அரசியல் நிகழ்வையும் எந்த அடிப்படையில் விளங்கிக் கொள்ள
வேண்டும் என்பதை அறிய ஈரோட்டுக் கண்ணாடி ஒவ்வொருவருக்கும் தேவை.
No comments:
Post a Comment