தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 1 September 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (1)


கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் ஈழத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் பலர் எழுந்து முழக்கமிடுவதைப் பார்க்க முடிகிறது. ஊடகங்கள் பலவும் கூட இன்று ஈழ ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்நிலை நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்றது. எனினும் இது ஒரு காலம் கடந்த எழுச்சி என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இருபது  ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்போ இந்த எழுச்சி ஏற்பட்டிருக்குமானால் ஈழ வரலாற்றில் நல்ல மாற்றங்கள் உருவாகி இருக்கக் கூடும். இன்று ஈழம் குறித்த நல்ல தகவல்களை எல்லாம் தரும் பல ஊடகங்கள் அன்று ஈழம், புலி ஆகிய சொற்களையே பயங்கரவாதம் என உரைத்தன. எவ்வாறாயினும் நல்ல மாற்றங்களை நாம் வரவேற்கிறோம். அதே வேளையில், புதிய எழுச்சியில் பல பழைய வரலாறுகள் திரித்தும் மாற்றியும் சொல்லப்படுகின்றன. உண்மைகள் பல திட்டமிட்டு மறைக்கப் படுகின்றன.

எனவே இத்தொடர் இரண்டு நோக்கங்களுடன் தொடங்கப்படுகின்றது.

என் அனுபவத்திலும், என் பார்வையிலும் ஈழம் தொடர்பாக இங்கே நடந்த நிகழ்வுகள் பலவற்றை அப்படியே பதிவு செய்வது முதல் நோக்கம். வெறும் பழங்கதை பேசுவதாக இல்லாமல், இனி இக்காலகட்டத்தில் நாம் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் யாவை என்பது குறித்து உரையாடுவது இரண்டாவது நோக்கம்.


இத்தொடர் பற்றிய என் எண்ணத்தை நண்பர்களிடம் வெளியிட்டபோது அவர்களிடம் மகிழ்ச்சி, தயக்கம் இரண்டுமே தெரிந்தன. நல்லது, கண்டிப்பாக எழதுங்கள் என்று சிலர் கூறினார். வேண்டாம், நீங்கள் என்ன எழுதினாலும் அதனைக் குறை கூறுவோர்தான் இன்று மிகுதியாக உள்ளனர், ஈழ மக்களில் பலரே இன்று உங்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில், ஏன் இந்தத் தொடர் என்று கேட்டவர்களும் உண்டு.

      அவர்கள் சொல்வது உண்மைதான். தமிழ் நாட்டில் சிலர் என்னைத் துரோகி என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை நம்பும் புலம் பெயர் ஈழ மக்களும் இன்று பெரிய எண்ணிக்கையில் இருக்கவே செய்கின்றனர். என் எழுத்து பெரிதாக இன்று எடுபடாது என்பதை நானும் அறிந்தே இருக்கிறேன். அறிந்தும் கூட இதனை எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது. இன்றில்லா விட்டாலும் நாளை அல்லது என்றேனும் ஒருநாள் உண்மையை உலகம் அறியும். அன்று இந்த எழுத்து அதற்கான ரத்த சாட்சியாய் அமையும்.

நான் கலைஞரை ஆதரிக்கிறேன் என்னும் ஒரே காரணத்திற்காகவே பலரும் இன்று என்னை எதிர்க்கின்றனர். ஈழத்திற்கு அவர் துரோகம் செய்து விட்டார் என்றும், அதனால் அவரை ஆதரிக்கும் ஆசிரியர் வீரமணி, நண்பர் தொல் திருமாவளவன், நான் அனைவரும் துரோகிகள் என்றும் சிலர் கூறித் திரிகின்றனர். கலைஞரை நம்பியா ஈழப் போராட்டம் தொடங்கப்பட்டது, என்ன நம்பிக்கைத் துரோகத்தை அவர் செய்து விட்டார், சர்வ தேசச் சிக்கலை ஒரு மாநில முதல் அமைச்சரால் தீர்க்க முடியுமா என்பன போன்ற வினாக்களை நாம் எழுப்பினால், அவற்றிற்கு விடை தராமல், நம் மீது வசை மாறிப் பொழிகின்றனர்.

எல்லோரும் ஒரே திசையில் நின்று, ராஜபக்சே உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவும், இன்னும் அங்கே வாடிக் கொண்டிருக்கும் ஈழ மக்களின்  வாழ்வுரிமைக்குக் குரல் கொடுக்கவும் முன்வராமல், கலைஞரைக் குறை சொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பாக மட்டுமே இதனைக் கருதுவது எவ்வளவு பெரிய மோசடி! 

இச் சூழலில்தான் உண்மைகள் பலவற்றை விளக்கி ஒரு தொடர் எழதும் எண்ணத்திற்கு நான் வந்தேன். 

ஈழ மக்களுக்காக நான் பெரிய தியாகம் எதையும் செய்துவிடவில்லை. துப்பாக்கி எடுத்து அவர்களுக்காக நான் போரிடவில்லை. உயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம் எதையும் செய்யவில்லை. பணம், நகையை அள்ளிக் கொடுத்திடவில்லை. நான் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும் கருத்துப் பரப்புரை மட்டுமே என்னால் செய்ய இயன்ற செயல். அதனை அன்று தொடங்கி இன்று வரை ஓயாமலும், தயங்காமலும் செய்து வருகின்றேன். அதற்கான விளைவுகளை எதிர் கொண்டும் வருகின்றேன். குறிப்பாக 1991-95 கால கட்டத்தில் புலிகளை ஆதரிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஈழத்தை ஆதரிப்பதே தேசத் துரோகமாகவும், பயங்கரவாதமாகவும் கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் எந்தத் தயக்கமும் இன்றி, மேடைக்கு மேடை, எழுத்துக்கு எழுத்து புலிகளை ஆதரித்தவன் என்ற உரிமையில் இத்தொடரைத் தொடங்குகின்றேன். 

     போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்.
                                                   ( சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 




29 comments:

  1. அடுத்த சனிக் கிழமைக்காகக் காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  2. புழுதியில் கிடப்போர் அதைத் தான் அள்ளித் தூற்ற முடியும். புழுதியிலிருந்து மீட்கும் பணியில் தான் நாம் இருக்கிறோம். நாம் நம் பணியைச் செய்து கொண்டேயிருப்போம். மனத்திரைகள் விலகட்டும். உண்மைகள் வெளிவரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. மாநில முதல்வருக்கு அதிகாரம் இருந்தது ஈழத்தமிழருக்கு உதவுவதற்கு. நாற்பது உறுப்பினர்களின் விலகல் கடிதம்?

      Delete
  3. அய்யா சுபவீ அவர்களுக்கு,
    நான் "இனி" இதழ் வந்த நாட்களிலிருந்து இன்றும் உங்களை படித்து வருவதால், என் அரசியல் மற்றும் சமூக பார்வை தெளிவாக இருப்பதாக நம்புகிறேன். உங்களை படித்தபிறகே இன உணர்வும், ஈழ உணர்வும் மற்றும் பகுத்தறிவும் தெளிவாக பெற்றேன். கல்லூரி நாட்களில் முரட்டுத்தனமாக நாத்திகம் மட்டுமே பேசிகொண்டிருந்த என்னை போன்ற இளைஞர்களை, ஆழமான தெளிவான அரசியல் அறிவு பெற வைத்தது உங்கள் எழுத்து மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது. கடந்த காலத்தை பற்றி எழுதும்போது தற்போதைய சூழலுக்கு ஏற்ப திரித்தும் மாற்றியும் பலர் எழுதுகிறார்கள். எளிமையும், உண்மையும் கொண்ட உங்களால் அப்படி எழுதமுடியாது, எழுதமாட்டீர்கள் என்றும் எங்களுக்கு தெரியும். எந்த சூழலுக்கும் அஞ்சாமல் ஈழ அரசியலை அருமையாக எடுத்து எங்களுக்கு நீங்கள் ஊட்டிய காலங்களை என்னால் மறக்கமுடியாது மறக்கவும் கூடாது. உங்களின் இந்த பதிவுக்காக,
    காத்திருப்பேன்,
    கணினிமுன்,
    காரிக்கிழமை,
    காலையில்.
    சீனு. வெங்கடேசுவரன்.
    அம்பத்தூர்.

    ReplyDelete
  4. தடா, பொடா இரண்டையும் சந்தித்தவரின் பதிவுகளுக்காக...எதிர்பார்ப்புடன்

    ReplyDelete
  5. அய்யா வரலாறு தெரியாதவர்களையும்,வரலாற்றை அறிந்தும் திரிப்பவர்களையும் பற்றி சிந்திக்காமல், உங்கள் பக்கம் என்றும் நம்பிக்கையோடும் துணிவோடும் நிற்கும் எங்களைப் போன்ற தோழர்களுக்காக தாங்கள் நிச்சயம் எழுத வேண்டும்.
    உள்ளபடியே வருந்துகிறோம் மாதம் தோறும் மூன்று அல்லது நான்கு சனிக்கிழமைகள் மட்டுமே வருகின்றனவே என்று!.
    சனிக்கிழமைகளின் எண்ணிக்கை எங்கள் எதிர்ப்பார்ப்புக்கு குறைவென்றாலும் கருத்துக்களும் செய்திகளும் ஏராளம் அல்லவா காத்திருக்கிறோம் சனிக்காக!.

    ReplyDelete
  6. அய்யா மிக்க மகிழ்ச்சி உஙகளை பற்றி யார் என்ன விமர்ச்சனம் செய்தாலும் கவலை இல்லை விமர்ச்சிப்பவர் ஒருநாள் வருந்தும் காலம் வரும் உஙகள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நானும் காத்திருக்கிறேன் ஐயா

    ReplyDelete
  8. Dear Sir,

    Eagerly waiting to know and understand about Eezham, through your views.

    All the best.
    Harish Kamugakudi Marimuthu



    ReplyDelete
  9. ஈழமும் அதனோடு பின்னப்பட்ட தமிழக அரசியலையும் உங்கள் மூலம் அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் அய்யா..

    அழகான உரைநடை,தெளிவான பேச்சு,கொண்ட கொள்கையில் உறுதி.....இன்னும் நிறைய.....

    அடுத்த வாரத்திற்கு காத்திருக்கிறேன்.......
    -அபுல் பசர்.

    ReplyDelete
  10. காத்திருக்கிறேன்.சனி வரும்வரையில்

    ReplyDelete
  11. உண்மை எது எனத் தெரியாமல் கலைஞர் மீது குறை கூறி தங்கள் சுய அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் காமாலைக்காரர்களின் முகமூடியை தாங்கள் தான் கிழித்தெறிய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு உடன் பிறப்பே,
      அன்று ஈழத்தில் போர் நடக்கும் போது இவர் மத்திய அமைச்சரவை இல் இருந்து தம் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைக்காமல் தமிழின தலைவர் இருந்தது ஏன்?
      தயவு செய்து உண்மை விளக்கவும்?
      ஈழத்தில் நீரோ தங்கள் குடும்பங்களோ இருந்திருந்தால் அதன் வலி தெரிந்திருக்கும்!

      Delete
  12. காத்திருக்கிறோம் உண்மைகளை அறிய தங்களின் பதிவுகள் என்னை போல் பல பேர் தெளிவடைய போகிறோம் ,அதை அப்படியே எங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கும் கொண்டு சேர்ப்போம் ,உங்களின் எழுத்துக்கள் பூகம்பம் ஒரு பூவைப்போல் எடுத்துரைப்பதை படிப்பவர்களுக்குள் ஒரு சிந்தனையை தோற்றுவிக்கும் சிலரின் பொய் பிரச்சாரம் மங்கலாகும் .

    ReplyDelete
  13. அய்யா நீங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்
    எங்களைப் போன்ற கழகத் தொண்டர்களுக்கு பயன்
    உள்ளதாக இருக்கும் ////////

    பழிபோடுபவர்கள் பழிபோட்டுக் கொண்டே தான்
    இருப்பார்கள் //// உங்களின் வாதங்களை எதிர்கொள்ள
    முடியாதவர்கள் //// உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாவர்கள் இவர்களைப் பற்றி நாம்
    எதற்கு கவலைபடவேண்டும்...............

    எழுதுங்கள் வரும் வாரம் உங்களின் எழுத்துக்களை
    காண ஆவலோடு.........ரெயின்போ சங்கர் ................

    ReplyDelete
  14. தோழர் குமரன்2 September 2012 at 09:09

    கலைஞரை எதிர்பபோர்

    சமுகநீதியை வெறுப்போ

    ஆதிக்கத்திற்கும் சனநாயகததிற்கும்

    1000 ஆண்டுகால போர்

    படிப்படியக முன்னேறுவோம்

    எதிர்போர் எதிர்தாலும்

    எதுவந்தலும் தொடறுவோம்

    சனிக்கிழமையை எதிர்பார்த்து

    இருப்பவர்களில் ஒருவன்

    ReplyDelete
  15. iyya padithen avasiam ezhuthavendiya seithy thodarattum thodar veenargalai patri kavalai vendam

    ReplyDelete
  16. ungalin padaippu eelamakkalukku puthiya paathayagavum yingirupporukku puthiya paarvaiyagavum yirukkattum.

    ReplyDelete
  17. அய்யா இந்த தொடரை நான் முன்பே எதிர்பார்த்தேன். இது வரைக்கு ஈழ சம்மந்தமாக பேசும் எழுதும் போது சரி நீங்களே ஈழ மக்களின் விடுதலைக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிட கூடாது என்று தமிழ்நாட்டில் ஈழ அரசியல் போராடுபவர்களாக காட்டிக்கொள்ளும் சில நீங்கள் பல சமயங்களில் விமர்சனம் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். ஆனால் அவர்களோ … தங்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கா உங்களை இழித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . இதை எல்லாம் தெரிந்து என்னை போன்றோர்கள் உங்களிடம் இருந்து வெளிப்படையான கட்டுரைகள் வரும் என்று பல சமயங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.. அதற்கு மிகப்பெரிய மருந்தாக இந்த தொடர் அமையும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அய்யா.

    ReplyDelete
  18. GREETINGS FROM NORWAY..PLEASE DO YOUR SERVICE..WE ARE READY TO LISTEN ALL VOICES!

    ReplyDelete
  19. Subavee:
    You are a traitor too as you are siding with the Historical tamils' Traitor Kolaigner MK! you people should be kept quiet so that Tamils in Eelam will fight for thier rights.!.

    ReplyDelete
  20. உங்கள் பயண கட்டுரைகளுக்காக காத்து கிடக்கிறோம்... கண்டிப்பாய் ஈழத்தை பற்றிய உண்மை வரலாற்று புரிதல் எங்களுக்கு கிடைக்கும் என்று ஆவலாய் இருக்கிறோம்.... தொடர்ந்து எழுதுங்கள்... போற்றுவார் போற்றட்டும்.. புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்...

    ReplyDelete
  21. உங்கள் சேவை தொடரட்டும்... ஈழத்தை பற்றிய உண்மையான வரலாற்று பின்னணி தெரியாதவர்கள் புரிந்து கொள்ள உதவும்... இப்போது முளைத்த காளான்கள் மறைக்க முயலும் அல்லது தவறாக திரிக்க முயலும் உண்மை வரலாற்றினை நாங்கள் அறிந்து கொள்ள உங்கள் எழுத்துக்களை தொடருங்கள்... மிக்க நன்றி... போற்றுவார் போற்றட்டும்.. புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்...

    ReplyDelete
  22. கருணாநிதியின் அரவணைப்புக்கு நீங்களும் பலியானது தமிழர்களின் துரதிர்ஷ்டம்....

    ReplyDelete
  23. விடுதலை புலிகள் மீதான தடையை திமுக வரவேற்றுல்லாதே...... அதை பற்றி உங்கள் மேலான(மழுப்பாமல்) கருத்தை அறிய ஆவல்...

    ReplyDelete
    Replies
    1. தி.மு.க.விற்கும், விடுதலைப் புலிகளுக்குமான உறவு அல்லது பகை குறித்தும் இத்தொடரில் செய்திகள் இடம் பெற உள்ளன. தொடர்ந்து படித்து வர வேண்டுகின்றேன்.

      Delete
  24. என்னைப் போன்ற இந்த தலைமுறை வாக்காளர்களுக்கு, கடந்த ஐந்தாண்டுகள் மட்டுமே ஈழம் பற்றிய அரசியலை காண்பவர்களுக்கு நிறைய தெரியாது.

    நம்பிக்கைக்கு உகந்த உங்களின்பால் அதை தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  25. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் ஐயா, உங்கள் செய்திகளை முகநூலில் நாங்கள் பரப்புவோம்...

    ReplyDelete
  26. அய்யா புலிகளை விமர்சிக்க கூடாது என்று ஒத்தை காலில் நின்றவர்கள்தான் ஈழத்தமிழரின் துயரத்திற்கு காரணம். வரலாற்று உண்மைகளை எல்லாம் சமன்செய்து சீர்துக்கி பார்க்கும் திறனை தமிழ் மக்கள் இன்னும் பெருமளவு பெற்று விடவில்லை. ஆனால் ஒன்றை மட்டுமாவது தெளிவாக சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன் ஈழத்தமிழருக்கு உண்மையாகவே சத்தம் போடாமல் பக்கபலமாக நின்றவர் இன்றும் நிற்பவர் கலைஞர் அய்யாதான் . ஆனால் இந்த உண்மையை வேண்டும் என்றே கேட்க மாட்டேன் பார்க்க மாட்டேன் என்று ஈழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஒரு கூட்டம் கத்துகிறது.அவர்களின் ஆற்றாமையை புரிந்து கொள்ளமுடிகிறது. அதிலும் அவர்கள் கலைஞரையும் கனிமொழியையும் தாக்குவது ஏதோ தங்கள் பிறவி நோக்கம் போல் கத்துகிறார்கள். அய்யா தங்களின் ஈழத்தமிழர் நிலைப்பாடு சரியானதே. ஒரே ஒரு வருத்தம் புலிகளின் தவறுகளை தாங்கள் கூட எந்த சந்தர்ப்பத்திலும் சுட்டி காட்டியதில்லை . அவர்களின் சுயரூபமும் மனநோயும் உங்களுக்கு தெரியாதது அல்ல !

    ReplyDelete