தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 29 August 2012

கலையா வாணர்


திராவிட இயக்க வளர்ச்சிக்குக் கலை உலகமும் திரை உலகமும் பெரிதும் பயன்பட்டன. 1950 ஆம் ஆண்டிற்கு முன்பே தமிழ்த் திரையுலகில் நடிகர்களாக நுழைந்து திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களில் முதன்மையானவர்கள் மூவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோரே அப் பெருமைக்கு உரியவர்கள். எம்.ஆர்.ராதா, பெரியாரின் போர்வாளாகவும், கலைவாணர், பெரியாரின் பூமாலையாகவும் இருந்தனர் என்பார் நண்பர் வே. மதிமாறன்.

                 ஆகஸ்ட் 30 கலைவாணரின் நினைவு நாள். 1957 ஆம் ஆண்டு, தன் 49 ஆம் வயதில் அவர் மறைந்து போனார். வில்லுப்பாட்டுக் கலைஞராக அறிமுகமான அவர் மிகப் புகழ் பெற்ற நடிகராகத் திகழ்ந்து மறைந்தார். பின்னாளில் நடிகராக அறிமுகமாகி, திராவிட இயக்கத்தில் இணைந்து, முதல் அமைச்சர் பதவி வரைக்கும் வந்த மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் திராவிட இயக்கக் கோட்பாடுகளை அறிமுகப் படுத்தியதே கலைவாணர் தான். இதனை 'நான் ஏன் பிறந்தேன்?' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார். 


             வில்லுப்பாட்டின் மூலமும் தன் கொள்கைகளைப் பரப்பியவர் கலைவாணர். அவருடைய கிந்தனார் கதா காலட்சேபம் மிகப் புகழ் பெற்றது. அது எந்தச் சூழலில் உருவானது என்னும் சுவையான செய்தியை பேராசிரியர் அன்புக்கொடி நல்லதம்பி தன் நூலில் குறித்துள்ளார். அன்று கொடி கட்டிப் பறந்த நடிகை டி.ஆர்.ராஜகுமாரி தன் புது மனை புகு விழாவிற்கு நந்தனார் கதா காலட்சேபம் செய்யச் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரை அழைத்திருந்தார். அவரோ, ஒரு சூத்திரன் வீட்டில், அதுவும் ஒரு நடிகையின் வீட்டில் தான் பாட மாட்டேன் என்று நேரடியாகவே கூறிவிட்டார். நடிகை ராஜகுமாரி கவலையில் ஆழ்ந்து போனார். அப்போதுதான் கலைவாணர், 'இதுக்கு போய் எதுக்கும்மா கவலைப் படறே? நான் ஒரு கதா காலட்சேபம் நடத்தித் தர்றேன்' என்றார். அன்று அவர் அரங்கேற்றிய கதைப் பாட்டுதான் 'கிந்தனார்'.

            தில்லைக்குப் போக வேண்டும் என்று அழுது தொழுத நந்தனாருக்குப் பதில், கல்விக்கூடத்திற்குப் போக வேண்டும் எனப் போராடிய கிந்தனார் நமக்குக் கிடைத்தார். யாரையும் தாக்காமல், யாரையும் புண்படுத்தாமல், நயமான ஒரு நாடகத்தை அன்று கலைவாணர் தந்தார். தமிழகம் முழுவதும் பிறகு அக் கதைப் பாட்டு சென்று சேர்ந்தது. ஒரு விதத்தில் அனந்தராம தீட்சிதருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது. 

1935 தொடங்கி 22 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் நடிகராகவும், தனி வாழ்வில் பெரும் வள்ளலாகவும் வாழ்ந்து மறைந்த கலைவாணர் ஏறத்தாழ 150 படங்களில் நடித்துள்ளார். தன் நடிப்பாலும், பாட்டாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை அவர் பரப்பினார். அதே நேரம் காந்தியாரிடமும் அவர் பற்றுடையவராக இருந்தார். தான் பிறந்த நாகர்கோயிலில் காந்தியாருக்குத் தன் சொந்தச் செலவில் நினைவுத் தூண் நிறுவிய அவர், பெரியாரின் கொள்கைகளை அழியாக் கல்வெட்டாகத் தன் திரைப்படங்களில் நிறுவி விட்டுச் சென்றார்.

அக் கலை மேதையை அவர் நினைவு நாளில் நாம் அனைவரும் நினைவு கூர்வோம்.



1 comment:

  1. Kalaivaanrin Nagaicuvai mattume parthu rasitha ennaku..indru thaan avarudaiya dravida eedupaatinaium ungal moolamaai therinthu konden...itha seithiyai pathivu seytamaiku mika nadri iyya...ungal pani thodara virumbugiren...

    Ippadiku, ungalin anbu sivet maanavan
    Suresh

    ReplyDelete