தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 28 September 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (5)


குட்டிமணியின் கடிதம் 

நடராஜா தங்கதுரை, குட்டிமணி என அறியப்பட்ட  சிவராஜா யோகநாதன் ஆகியோரால் 1970களின் இறுதியில் தொடங்கப்பட்ட இயக்கம்தான் டெலோ(TELO - Tamil Eezham liberation organisation). இவ்வியக்கத் தலைவர்களுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்தக் கால கட்டத்தில் தொடர்பு இருந்துள்ளது. குட்டிமணி, அடிக்கடி தமிழகம் வந்து போகக் கூடியவர். தமிழ் நாட்டுடனும், தமிழக அரசியல் தலைவர்களுடனும் தொடர்பு உடையவர்.

1973ஆம் ஆண்டு குட்டிமணி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டது உண்மையே. அப்போது தமிழக முதல்வராகக் கலைஞர் இருந்ததால், குட்டிமணியைக் கலைஞர் தான் பிடித்துக் கொடுத்துவிட்டார் என்றும், குட்டிமணியின் சாவுக்குக் கலைஞரே காரணம் என்றும் அய்யா நெடுமாறன் அடிக்கடி கூறி வருகின்றார். 1983 டிசம்பரில், தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இக்குற்றச்சாட்டை முன் வைத்தார்.  அந்த நேரத்திலேயே அதற்கான சரியான விடைகள் எடுத்து வைக்கப் பட்டன. எனினும் அது குறித்து அவ்வப்போது பேசுவதும், கலைஞரைக் குற்றவாளியாக்க முயல்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இக் குற்றச்சாட்டு பற்றிப் பேசுவதற்கு முன், குட்டிமணி குறித்தும், இலங்கைச்  சிறைகள் மூன்றில் நடைபெற்ற படுகொலைகள் குறித்தும் அறிதல் தேவையானது.

டெலோ அமைப்பிற்குத் தங்கதுரை தலைவராகவும், குட்டிமணி செயலராகவும் இருந்தனர். குட்டிமணி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். நெஞ்சுரம் கொண்ட அடங்காத் தமிழர்களில் அவரும் ஒருவர். அரச எதிர்ப்பில் சலிக்காமல் பணியாற்றியவர். 1973-75, 1975-77, 1981-83 ஆகிய ஆண்டுகளில் இலங்கைச் சிறைகளில் இருந்தவர். 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்.

வெலிக்கடை(Welikkada), கொழும்பு மாவட்டத்தில் உள்ளது. அங்குள்ள சிறைதான் இலங்கையிலேயே மிகப் பெரியது. 48  ஏக்கர் நிலப்பரப்பில், 1841  ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் கட்டப்பட்ட அச் சிறையில் ஏறத்தாழ 2000  பேரை அடைக்க முடியும். அந்தச் சிறையில்தான் 1983 ஆம் ஆண்டு, டெலோ அமைப்பின் தலைவர்களான தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் சிறை வைக்கப் பட்டிருந்தனர். அவ்வாண்டு ஜூலை 25 ஆம் நாள், அரசினால் திட்டமிடப்பட்டு ஒரு பெரிய கலவரம் நடந்தது. அச் சிறையில் இருந்த சிங்களக் கைதிகள், அரசு கொடுத்த கொலைவெறி ஆயுதங்களோடு, தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். சில மணி நேரத்தில், டெலோ தலைவர்கள் உள்ளிட்ட 35 தமிழர்கள் வெட்டியும், குத்தியும் கொல்லப்பட்டனர். அவர்களுள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டவர் குட்டிமணிதான். உயிரோடு அவர் கண்கள் இரண்டும் பிடுங்கப்பட்டன.வெறி பிடித்த சிங்களன் ஒருவன் அந்தக் கண்களைத் தன் காலில் போட்டு மிதித்தான். 

குட்டிமணியின் மீது சிங்களர்கள் அந்த அளவு கோபம் கொண்டதற்கான காரணம் ஒன்று உண்டு. ஒருமுறை அவர் நீதிமன்றத்தில்,"என்னை இந்த அரசு ஒருநாள் கொன்றுவிடும். அப்படி என் மரணம் நிகழ்ந்து விடுமானால், என் கண்கள் இரண்டையும் இரு தமிழர்களுக்குப் பொருத்தி விடுங்கள். நான் பார்க்க இயலாத தமிழ் ஈழத்தை எதிர்காலத்தில் என் கண்களாவது பார்க்கட்டும்" என்று கூறினார். இந்தக் கூற்றை அந்த வெறி பிடித்த சிங்களக் காடையர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "உன் கண்கள் இருந்தால்தானே ஈழத்தைப் பார்க்கும்" என்று சொல்லியே அவர் கண்களைப் பிடுங்கி உள்ளனர். உலகின் எந்த மூலையிலும் நடைபெற்றிராத கொடுமைகள் எல்லாம் தமிழனுக்குத்தான் நடைபெற்றன. 

வெலிக்கடைச் சிறைக் கலவரம் அத்துடன் நின்றுவிடவில்லை. மீண்டும் 28 ஆம் நாள் காலையில் அதே போன்று இன்னொரு கலவரம். அதில் இன்னொரு 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆக, மூன்றே நாள்களில் 53  தமிழர்கள், அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காகக் கொல்லப்பட்டனர் இதற்குப் பின்புதான், தமிழகம் எங்கும், ஈழ ஆதரவு எழுச்சி அலை எழுந்தது.

இலங்கையில் மேலும் இரண்டு சிறைகளில் இதேபோன்று, பிற்காலத்தில் தமிழர் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வெலிக்கடை அளவிற்கு அவை மக்களைச் சென்றடையவில்லை.1997 டிசம்பர் 12 அன்று, கொழும்புக்குத் தெற்கே, மேற்குக் கரையோரம் உள்ள களுத்துறை (Kalutara) ஊர்ச் சிறையில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2௦௦௦ அக்டோபர் 25 அன்று, கொழும்புக்குக் கிழக்கே 2௦௦ கி.மீ. தொலைவில் உள்ள பிந்துனுவேவா (Bindunuwewa) சிறையில், சிங்களக் கைதிகளால், அரசின் பின்னணியில், 26 தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனவே சிறைப் படுகொலைகள் என்பது, இலங்கையில் தொடர் நிகழ்வுகளாகவே உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஈழத்தில் நடைபெற்ற கொடூரங்களுக்கு எதிரான எழுச்சி இருந்த அதே நேரத்தில், அதனை உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதனை மிகுந்த வேதனையோடுதான் குறிப்பிடுகின்றேன். அப்படி ஒரு முயற்சிதான், குட்டிமணி கொலையையும், கலைஞரையும் தொடர்பு படுத்துவது.

1973 இல் குட்டிமணி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதற்கும், 1983 இல் அவர் கொலை செய்யப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், கலைஞர் ஆட்சியில்தானே அவர் கைது செய்யப்பட்டார், அதனைக் கலைஞர் தடுத்திருக்கலாமே  என்னும் கேள்வி நியாயம் போலவே தோன்றும். ஆனால் அது பற்றிய உண்மைகளைப் பின்னால் குட்டிமணியே வெளியிட்டுள்ளார். அதனைக் குட்டிமணியின் வழக்குரைஞர் கரிகாலன் 1984  ஆம் ஆண்டே வெளிப்படுத்தித் தெளிவு செய்துள்ளார். கரிகாலன் அதனை முரசொலியிலோ, விடுதலையிலோ எழுதவில்லை. 04.01.1984 ஆம் நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதியுள்ளார்.  இது குறித்து குட்டிமணியே எழுதிய கடிதமும் முரசொலியில் வெளியிடப் பட்டுள்ளது.

முதலில், ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள குட்டிமணி பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

குட்டிமணியின் வழக்கறிஞரான கரிகாலன், 1982 டிசம்பரில் வெலிக்கடைச் சிறையில் சந்தித்துப் பேசிய செய்திகளை மேலே உள்ள ஜூனியர் விகடன் இதழில் பதிவு செய்துள்ளார்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைக் குட்டிமணியிடம் கூறியபோது, அவர், "கலைஞருக்கு இதில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவருக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது. கள்ளக்கடத்தல்காரன் என்று பொய் சொல்லி அல்லவா என்னை மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுப் பிடித்து வந்தார்கள்" என்று கூறியுள்ளார். 

கலைஞருக்குத் தகவல் சொல்லியிருக்கலாமே எனக் கரிகாலன் கேட்க, "செய்திருக்கலாம். அவரும் உதவி இருப்பார். இயக்கத்திலுள்ள ஈடுபாடுகளை அப்போது மிகவும் ரகசியமாக வைத்திருக்கும்படி தலைவரின் (தங்கதுரை) கட்டளை. அதனாலதான் நான் தகவல் ஏதும் அனுப்பவில்லை" என்றிருக்கிறார் குட்டிமணி.

அதன்பிறகு, தன் கருத்துகளைக் குட்டிமணி கடிதமாகவே எழுதிக் கரிகாலனிடம் கொடுத்திருக்கிறார். தலைவர் தங்கதுரையின் ஒப்புதல் பெற்று வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விருப்பப்படி, பனாகொடை இராணுவ முகாமில் இருந்த தங்கதுரையிடம் காட்டிவிட்டு,அக் கடிதத்தை கரிகாலன் அனுப்ப, அது 5-5-1983 ஆம் நாளிட்ட முரசொலியில் வெளியாகியுள்ளது. அக் கடிதத்தில், தன் கைதுக்கும், கலைஞருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் குட்டிமணி விளக்கியுள்ளார்.

இதோ அந்தக் கடிதத்தில் இருந்து சில பகுதிகள்  

"எமது வழக்கறிஞர் திரு ச.நவரத்னம் (கரிகாலன்) அவர்கள் சிறைக்கூடத்தில், என்னையும், என் நண்பர் ஜெகனையும் சந்தித்தார்..........1973 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் என்னைக் கைது செய்த இலங்கைப் பொலிசாரிடம் கையளித்தமைக்குக் கலைஞரின் கழக அரசு உடந்தையாக இருந்தது என்றொரு கருத்து, தமிழ்நாட்டில் ஒரு சாரார் மத்தியில் கூறப்படுவதாகச் சொன்னார்

.......................இலங்கைப் போலீசார் கள்ளக் கடத்தல்காரர் என்றே எம்மைப் பற்றிப் பொய் புனைந்து கூறி, இந்திய மத்திய அரசை ஏமாற்றி எம்மை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றனர். எமது இயக்கத் தோழர்கள் அந்த நேரத்தில் தமிழ்நாடு அரசிடமோ, கலைஞரிடமோ எமது விடுதலைப் போராட்ட ஈடுபாடுகளைப் பற்றி எடுத்துக் கூறவில்லை. எமது ஈடுபாடுகளை நாம் இரகசியமாக வைத்திருந்தமையால், இயக்கக் கட்டுப்பாடுகளை மீறி நாம் யார் என்பதை தமிழ்நாடு பொலிசாருக்கு நாம் கூட கைது  செய்யப்பட்ட வேளையில் வெளிப்படுத்தவில்லை. இவற்றை நாம் வெளிப்படுத்தியிருந்தால், கலைஞரின் கழக அரசு, இந்திய மத்திய அரசு எம்மை இலங்கைச் சிங்கள அரசிடம் கையளிக்க விடாது தலையிட்டுத் தடுத்திருக்கும் என்பது உறுதி.

               இந்தப் பின்னணியில், தலைவர் கலைஞர் எம்மைக் காட்டிக் கொடுத்தார் என்றோ, இலங்கை அரசிடம் கையளித்தார் என்றோ பழி சுமத்துவது, உண்மைக்குப் புறம்பானதும், நியாயமற்றதுமாகும். இதனால் கலைஞரும், கழகத் தோழர்களும் புண் பட்டிருந்தால் வருந்துகிறோம்."இது தொடர்பான என் அனுபவம் ஒன்றினையும் இவ்விடத்தில் குறிக்க வேண்டும். தங்கதுரை, குட்டிமணி,ஜெகன் என்னும் தலைப்பில், ஜூனியர் விகடன் இதழில் தொடர் எழுதிக்கொண்டிருந்த வழக்கறிஞர் கரிகாலனை. அக் கால கட்டத்தில் நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நானும் நண்பர்கள் புவி.உமாசந்திரன், இளையமகன், அண்ணல் (கவிஞர் காவிரி நாடனின் மகன்) ஆகியோரும் சேர்ந்து 'தமிழீழச் சிவப்பு மலர்' என்னும் ஒரு மலர் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். அம்மலரை அய்யா நெடுமாறன் அவர்கள்தான் வெளியிட வேண்டும் என்று கருதி முயற்சி செய்தோம். ஆனால் அப்போது அவருடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இல்லாத  காரணத்தால் அது இயலாமல் போயிற்று. எனவே, ஜூனியர் விகடனில் தங்கதுரை, குட்டிமணி முதலியோர் பற்றிய செய்திகளை எழுதி நன்கு அறிமுகமாகியிருந்த வழக்கறிஞர் கரிகாலனைக் கொண்டு வெளியிடலாம் என முடிவு செய்தோம்.

அதற்காக, எழும்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள கென்னத் தெருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அவரை நானும், நண்பர் புவி.உமச்சந்திரனும் சென்று சந்தித்தோம். மலர் வெளியீட்டு விழாவிற்கு முன்,இரண்டு அல்லது மூன்று முறை அவரைச் சந்தித்திருப்போம். ஒருநாள், ஈழப் போராட்டம் பற்றி உரையாடுகையில், குட்டிமணி கைது குறித்துக் கேட்டோம். 

"உண்மை என்ன என்பதை நான் ஜூனியர் விகடன் இதழில் எழுதியுள்ளேன். ஆனால் இங்கு பல்வேறு விதமான உள்ளூர் அரசியல் நடக்கிறது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எங்களுக்கு எல்லோருடைய உதவியும் தேவைப்படுகிறது. குட்டிமணி கைதுக்குக் காரணம் கலைஞர்தான் என்பது, கலைஞரைப் பிடிக்காதவர்கள் உருவாக்கும் செய்தி. நான் அவ்வளவுதான் சொல்ல முடியும்" என்றார் கரிகாலன்.

இவ்வாறு, குட்டிமணி கைதுக்கும்,கலைஞருக்கும் தொடர்பு இல்லை என்பதற்கான சான்றுகள் பல உண்டு. குட்டிமணியே எழுத்து மூலம் தெரிவித்த பின்னர் வேறு சான்றுகள் தேவை இல்லை. ஆனாலும் இந்த உண்மைக்கு மாறான குற்றச்சாட்டைத் தமிழ்நாட்டில் இன்றும் சொல்கின்றவர்கள் உள்ளனர். அதனை அப்படியே நம்பும் இளைஞர்களும் உள்ளனர் என்பது வேதனையான செய்தி.

       தான் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியாரை மேடைக்கு அழைத்து வந்து எம்.ஜி.ஆர். பாராட்டினார் என்று, சென்னை கே.கே. நகர் பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். கூடியிருந்தவர்கள் எல்லோரும் கைதட்டினர். அந்த ஒளிநாடா இணையத் தளத்தில் உலகெங்கும் உலா வந்தது. 1973 இல் இறந்து போன அய்யா பெரியாரை, 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். ப்படி  அழைத்துவந்தார் என்று  எவரும் கேட்கவில்லை .

       1944 ஆம் ஆண்டு, சத்தியமூர்த்தி ஐயர் தொலைபேசியில் சொன்ன அறிவுரையின் அடிப்படையில்தான், பெரியார் தமிழர் கழகம் என்று பெயர் வைக்காமல், 'திராவிடர் கழகம்' எனப் பெயர் வைத்தார் என்று முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு செய்தியை அரு.கோபாலன் தன் 'எழுகதிர்' இதழில் எழுதினார். பார்ப்பனர்கள் சொற்படிதான் பெரியார் நடந்துகொண்டார் என்பதற்கான சான்றாம் அது. சத்தியமூர்த்தி ஐயர் 1943 ஆம் ஆண்டே இறந்து போய்விட்டார் என்னும் உண்மையைச் சுட்டிக்காட்டிய பின்னும், அரு. கோபாலன் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.

       இப்படித்தான் இங்கு வரலாறுகள் சொல்லப்படுகின்றன. இப்படிக் கட்டமைக்கப்பட்ட திரிபுகள் இன்று இணையத் தளங்களில் ஏராளமாக உலவுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் கலைஞரும், தி.மு.க.வும் ஈழத்திற்கு எதிரானவர்கள் என்பது.  

உண்மையில், ஜூலை சிறைப் படுகொலைகளுக்குப் பிறகு, அதற்கான எதிர்வினைகளை உடனடியாகத் தொடங்கிய கட்சி தி.மு.க.தான். ஆகஸ்ட் ஏழாம் தேதியே தி.மு.க.வின் செயற்குழு கூடி, தலைவரும் (கலைஞர்), பொதுச் செயலாளரும் (பேராசிரியர்) சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தது. எனவே ஈழச் சிக்கலை முன்வைத்துத் தங்கள் பதவிகளிலிருந்து 10.08.1983 அன்று இருவரும் விலகினர். 

அப்போது நெடுமாறன் அவர்களும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.  ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் பதவி விலகவில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருந்திருக்கலாம். எனினும், கருணாநிதி நாற்காலி ஆசை காரணமாகவே 2009 இல் பதவி விலகவில்லை என்று பலமுறை நெடுமாறன் அவர்கள் கூறும்போது, அன்று அவர் ஏன் விலகவில்லை என்ற கேள்வி நமக்கு வரவே செய்கிறது.
                 
அதே மாதம் 28 ஆம் தேதி, சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் பேசிய உரை குறிப்பிடத்தக்கது. அன்று அவர் குறிப்பிட்டார், "இந்திய அரசு, பங்களா தேசத்தை உருவாக்கியது போல, ஈழத்தையும் உருவாக்கத் துணை நிற்குமானால், இன்னும் பத்து ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சியே பதவியில் இருக்கட்டும்.  நாங்கள் தேர்தலில் கூடப் போட்டியிடவில்லை."

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்) 

20 comments:

 1. குட்டிமணி அவர்களை கலைஞர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை அவரது கடிதம் மற்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்த கருத்துகள் மூலம் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறீர்கள். அதே போல் அவர் மறைந்த நேரத்தில் இதே செய்தியை சிலர் பரப்பினார்கள். அப்போது அவரது மனைவி திருமதி. இராசரூபராணி குட்டிமணி கலைஞர் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழியை மறுத்து உண்மையை ஒரு அறிக்கையின் மூலம் விளக்கியிருந்தார். அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. உண்மை இப்படி இருந்தாலும் அவ்வப்போது கலைஞர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி தங்கள் சுய அரிப்பினை சிலர் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் உண்மைமுகத்தை இந்த தொடர் வெளிப்படுத்துகிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு வைரமுத்து, நீங்கள் அனுப்பி வைத்த குட்டிமணியின் மனைவி கடிதம் கிடைத்தது. இத்தொடர் நூலாக வரும்போது அதனையும் வெளியிடுகின்றோம்.

   Delete
 2. இந்த உண்மைகளை படிக்கையில் இன்று இந்த பொய்க்கோழிகள் கூவுவதை நினைத்து பெருங்கோபம் வருகிறது.
  இத்தனை பொய்களை அவிழ்த்துவிடுகிற இவர்களிடம் ஜூனியர் விகடன் அடிக்கடி பேட்டியை வேறு வாங்கி வெளியிடுவது எவ்வளவு பொறுக்கித்தனமானது.
  அய்யா..இந்த கட்டுரையை சீக்கிரமாய் எழுதி முடியுங்கள்.புத்தகம் போட்டு ஊரெல்லாம் விநியோகிப்போம். இவர்களின் பொய் முகத்தை தோலுரிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வாண்டு இறுதியில் இத்தொடர் நூலாக வெளிவரவுள்ளது.

   Delete
 3. இல்லாத, பொல்லாத கருத்துக்களை சொல்லி கலைஞரை மட்டும் நோக்கி ஆயிரம் கனைகளை வீசுகிற நெடுமாறன் தம்மை யோகியவானாக காட்டிக்கொள்ள இன்று விரும்புகிறார்.
  தம் பதவியை கூட இழக்க அன்று விரும்பாத அவர் உச்சப்ட்ச தியாகத்தை இக்கட்டுரை மூலம் அவரை ஆதரிக்கிற இளைஞர்கள் புரிந்துகொள்ளட்டும்.
  சீமானும் கொஞ்சம் ” ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்” படித்துவிட்டு வந்து மேடையில் ஏறுவது நல்லது.

  அடுத்தடுத்த சனிக்கிழமைகள் சீக்கிரம் வரட்டும்.

  ReplyDelete
 4. இக்கட்டுரையை இணையதளம் முழுவதும், முகநூல், டிவிட்டர் முதலிய சமூக வலைதளங்களில் பதியவும் ,பகிரவும் வேண்டும்.

  என்னைப்போன்ற இளைஞர்களின் பார்வைக்கு இது பட்டால்தான் ”நாம் தமிழர்” போன்ற காளான்களுக்கு பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

  கலைஞர் எது செய்தாலும் விமர்சிக்கிறவர்கள் அவரின் கடந்த காலத்தை சுலபமாக, வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள். அப்படி மறப்பவர்களில் சில்லறைகள் முதல் நெடிமாறன், வைகோ போன்ற பெருவயதுக்காரர்களும் அடங்குவர்.

  சுபவீ அய்யா அவர்களே உங்கள் சாட்டையை விலாசுங்கள்...இன்னும் இன்னும் பலமாக..

  ReplyDelete
  Replies
  1. ஆம் அமர்நாத்,டுவிட்டர், முகநூல் போன்ற வலைத்தளங்களிலும் இந்த உண்மைகள் வெளி வர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும்.

   Delete
 5. அருமையான தொடர்.
  இதனை இன்றைய புதிய ஈழ ஆதரவாளர்கள் கண்டிப்பாக படித்தல் அவசியம்.

  உங்கள் பதிவுகள் தொடரட்டும் அய்யா..

  ReplyDelete
 6. //தான் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியாரை மேடைக்கு அழைத்து வந்து எம்.ஜி.ஆர். பாராட்டினார் என்று, சென்னை கே.கே. நகர் பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். கூடியிருந்தவர்கள் எல்லோரும் கைதட்டினர். அந்த ஒளிநாடா இணையத் தளத்தில் உலகெங்கும் உலா வந்தது. 1973 இல் இறந்து போன அய்யா பெரியாரை, 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். எப்படி அழைத்துவந்தார் என்று எவரும் கேட்கவில்லை .

  1944 ஆம் ஆண்டு, சத்தியமூர்த்தி ஐயர் தொலைபேசியில் சொன்ன அறிவுரையின் அடிப்படையில்தான், பெரியார் தமிழர் கழகம் என்று பெயர் வைக்காமல், 'திராவிடர் கழகம்' எனப் பெயர் வைத்தார் என்று முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு செய்தியை அரு.கோபாலன் தன் 'எழுகதிர்' இதழில் எழுதினார். பார்ப்பனர்கள் சொற்படிதான் பெரியார் நடந்துகொண்டார் என்பதற்கான சான்றாம் அது. சத்தியமூர்த்தி ஐயர் 1943 ஆம் ஆண்டே இறந்து போய்விட்டார் என்னும் உண்மையைச் சுட்டிக்காட்டிய பின்னும், அரு. கோபாலன் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.//
  என்ன மனிதர்கள் இவர்கள் கொஞ்சமும் வெட்கமில்லாமல்!
  இந்தத் தொடரில் சொல்லப் படும் செய்திகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இது போன்ற செய்திகளை எல்லாம் வெளியிட நம்ம ஊர் வெகுமக்கள் பத்திரிகைகளுக்கு மனம் வருவது இல்லையே!. கலைஞர், கலைஞர் குடும்பம் பற்றி புரணி பேசுவதை மட்டுமே தங்களின் தலையாய கடமையாகக் கருதி, அதை மட்டுமே செய்து வருகிறார்கள்.

  ReplyDelete
 7. வ.இரா.தமிழ் நேசன், மும்பை_72.
  அய்யா சு.ப.வீ அவர்களக்கு வணக்கம். முதலில் மிகச்சரியானதருணத்தில் இத்தொடரை எழுத
  ஆரம்பித்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.காலம், காலமாய் அடிமைப்பட்டு கிடந்ததற்க்கும்,
  வரலாற்று திரிபுகளால் தமிழினம் பெருமை இழந்து போனதற்கு காரணம்,ஒரு சில சுயநலமிக்க தனி நபர்கள் பார்ப்பினியத்தின் அடி வருடிகளாகி தங்கள் வயிற்றை வளர்த்துக் கொண்டதால்தான்.குட்டி மணி போன்று இன்னும் ஆயிரமாயிரம் வரலாற்று உண்மைகள் புதையுண்டு உள்ளன.பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்தென்றாலும் சொல்லித்தான் ஆக வேண்டும் ,குட்டி மணி அவர்களே உயிருடனோ,மறுபிறப்பெடுத்து வந்தோ....
  மீண்டும் ஒருமுறை உண்மையை சொன்னாலும் இவர்கள் பழைய பல்லவியைத்தான்
  படிகொண்டு இருப்பார்கள் . அதற்காக நாம் சும்மா இருக்கமுடியாது.கலைஞர் ஆட்ச்சியில்
  இருக்கும் போது இந்த உண்மைகளை எழதினால் எதோ லாபம் கருதி எழுதுகிறார் என்று
  சொல்லக்கூடும்.ஆனால்,இப்போது அதற்கு வழியில்லை என்பதால் வாயை மூடிக்கொண்டு
  இருக்கிறார்கள் போலும்.இப்போது உங்களக்கு வேறுவிதமான அச்சுறுத்தல்கள்
  வரலாம்,நாங்கள் உங்கள் பினனால் ஒரு படை போல நிற்கிறோம்.தொடர்ந்து எழுதுங்கள்.உங்கள் துணிவிற்கு எங்கள் நன்றி

  ReplyDelete
 8. சிறப்பான தொடர் அய்யா..நாங்கள் தான் தமிழ் ஈழத்திற்கு சொந்த காரர்கள் என்று சொல்லி திரியும் பல பேரின் முகங்கள் இங்கே கிழிந்து தொங்குவதை பார்க்க முடிகிறது.

  தமிழ் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஈழ வியாபாரிகளான வைக்கோ,நெடுமாறன்,சீமான் போன்றவர்களின் முகத்திரை இந்த தொடர் மூலம் கிழிக்கபடுவது நிச்சயம்.......

  தலைவர் கலைஞர் என்ன செய்தார் என கேட்கும் நாதாரிகளுக்கு தக்க பதிலடியாக இந்த தொடர் அமைவதில் எங்களை போன்ற உடன்பிறப்புகளுக்கு இரட்டை சந்தோசம் அய்யா.....

  ReplyDelete
 9. ஐயா, உங்கள் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன்.. ஈழம் என்பதை தாங்கள் குத்தகைக்கு எடுத்திருப்பது போல் இங்கே ஆடிக்கொண்டிருக்கும் பலருக்கு உங்கள் கட்டுரை பெரிய இடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. என் போன்ற இளைஞர்கள் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ள உங்கள் தொடர் மிகவும் உதவியாய் இருக்கிறது.. மேலும் இணையதள வாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்களில் உங்கள் கட்டுரைகள் மிகவும் உதவுகின்றன.. மிக்க நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.. எங்களுக்கு வரலாறு சொல்லி கொடுங்கள்.. இதை இணையத்தில் அதிகமாக பரப்ப விரும்புகிறோம்.. எங்களுக்கென்று கிடைத்திருக்கிற உண்மையான வரலாறு சொல்லும் கட்டுரைகள் இவை.. உங்கள் முயற்சி மேலோங்குக.. நன்றி...

  ReplyDelete
 10. ஆதாரத்தோடு அருமையான தகவலுக்கு நன்றி அய்யா. இன்று முளைத்திருக்கும் திடீர் போராளிகளுக்கும்,அவர்களின் ஆவேச பேச்சை மட்டுமே நம்பி மோசம் போகும் இளைஞர்களுக்கு இது போன்ற தகவல்கள் பெரிதும் தெளிவு பிறக்க உதவும்.இது போன்ற உண்மைத்தகவல்களை இளைஞர்களான நாங்கள் இணையம் முழுதும் பரப்பி ஈழப்போராட்டத்தின் உண்மை வரலாறை,நிலையை விளக்கி போலி போராளிகளின் முகமூடியை கிழிப்போம்.

  ReplyDelete
 11. அய்யா :சட்டமன்றத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். இக்குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வைக்கும்பொழுது பதில்சொல்லாமல் இருந்துவிட்டு பின் வைகோவின் மூலம் கரிகாலன் உதவியுடன் ஒரு மறுப்பு செய்தியை வெளியிட வைத்ததுதானே இந்த கடிதம்??

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். வைத்த ஆதாரம் என்ன என்பதை உங்களால் கூற முடியுமா? ஏதேனும் இருப்பின் அனுப்பி உதவுங்கள், அடுத்ததாக, கரிகாலன் மூலம் வைகோதான் கடிதம் வாங்கிக் கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படியே வைத்துக் கொண்டாலும், அதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? குட்டிமணியின் கடிதம் பொய் என்றா அல்லது பொய்க் கடிதம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு வைகோ தவறானவர் என்றா? விடை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

   Delete
  2. ஐயா எனது சந்தேகத்தை தான் இங்கு கேட்டேன்.இருந்தாலும் எனக்கு பதிலளித்தது மகிழ்ச்சி.நீங்கள் கேட்டதாலும் உண்மை (எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் கொடுத்த ஆதாரத்தை) எதுவென்று நான் அறியவும் அந்த ஆதாரத்தை தேடி கொண்டிருக்கிறேன்.இருந்தால் அனுப்பி வைக்கிறேன் ஐயா.

   Delete
 12. ஐயா , இப்பகுதியில் தாங்கள் குட்டிமணி அவர்களைப்பற்றியும் அவரின் தமிழ் இனப்பற்றைப்பற்றியும் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி .இணையதளத்தில் குட்டிமணி அவர்களிப்பற்றி தேடியதில் , ஒரு விடயம் கிட்டியது. அவர் இலங்கை சிறையில் அடைக்கபட்டதிற்கு அவர் இலங்கை வங்கி ஒன்றில் கொள்ளை அடித்ததாகவும் , அவர் மீது கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டதாகவும் படித்தேன் . இது உண்மை தானா ? அப்படி உண்மையாக இருக்குமாயின் , அவர் செய்தது சரி தான் என்கிறீர்களா ? போராளி இயக்கமாக இருப்பதை காரணமாக வைத்துகொண்டு , இவ்வாறு செய்வது முறை தானா ?

  [http://tamilnation.co/tamileelam/thangathurai/index.htm]

  Six members of the Tamil militant movement, Nadarajah Thangathurai, Selvarajah Yogachandran (also known as Kuttimuni), Subramaniam Devan, Nadarajah Sivapatham, Sri Sabaratnam and Nadesudasan were charged in connection with the ambush of a Sri Lanka state owned People Bank jeep at Neervely on 25 March 1981 and the robbery Rs.8 million. Sri Sabaratnam, who was later to become leader of the Tamil Eelam Liberation Organisation was tried in absentia.

  இன்னொறு விடயம் , தங்களை தொடர்பு கொள்வதற்கு வேறு ஏதாவது வலைத்தளம் உள்ளதா? மின் அஞ்சல் முகவரி இருகிறதா ?

  நன்றி
  ரகு

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாட்டின் விடுதலைப் போராளிகள், ஒடுக்கும் அரசின் வங்கிகளைக் கொள்ளையடிப்பது, புரட்சிகர இயக்கங்களின் 'நிதி நடவடிக்கை' என்றே கொள்ளப்படுகின்றது. அது சரியா, தவறா என்பது நீண்ட
   விவாதத்திற்கு உரியது. 'The end justifies means' என்பதைப் புரட்சிகரக் கோட்பாடுகள் ஏற்கின்றன. காந்தியம் போன்ற சித்தாந்தங்கள் ஏற்பதில்லை. அது குறித்துத் தனியே பேசலாம்.

   என் மின் அஞ்சல் முகவரி:
   subavee11@gmail.com

   Delete
 13. கருணாநிதி மீது பழ.நெடுமாறன் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என அறிய எம்.ஜி.ஆர்.காலத்தில் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டோம்.‘‘குட்டிமணியை பிடித்துக் கொடுத்தது கருணாநிதி தான், அவர் நினைத்திருந்தால் குட்டிமணியைக் காப்பாற்றியிருக்கலாம்.இதுபற்றி சட்டசபையில் ஆதாரத்தோடு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியதும் உண்மைதான்’’ என்றார்.

  தி.மு.க.சார்பில் விளக்கமறிய வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். அவர் ‘‘வெளிக்கடைச் சிறையில் இருந்து குட்டிமணி, ‘தனது கைதுக்கும், கலைஞருக்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என எழுதிய ஒரு கடிதத்தை அவரது வழக்கறிஞர் கரிகாலன் நெல்லையில் இருந்த வைகோவிற்கு அனுப்பினார்.அந்தக் கடிதத்தை கலைஞரிடம் நேரில் கொடுத்தார் வைகோ.


  குட்டிமணி கைதுக்கு கலைஞர் காரணமில்லை என்று பலமுறை மேடைகளில் பேசியுள்ளார் வைகோ. குட்டிமணி தொடர்பாக எம்.ஜி.ஆர்.
  சட்டசபையில் பேசியது தொடர்பாக எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

  ஆனால் குட்டிமணி, ஜெகன் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருணை மனுவில் முதல் கையெழுத்துப் போட்டவர் கலைஞர்தான்.

  அப்போது அறிவாலயம் கிடையாது. அரசினர் தோட்ட வளாகத்தில் இந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நானும்,தி.சு. கிள்ளிவளவனும் சென்ற கையெழுத்து வாங்கினோம்.’’ என்றார் விரிவாக.

  படங்கள் : ம.செந்தில்நாதன்
  - ஆ. விஜயானந்த்

  - குமுதம் ரிப்போட்டர்  ReplyDelete
 14. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  For Tamil News Visit..
  https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/

  ReplyDelete