தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 15 October 2012

வேறு தோட்டத்துப் பூக்கள் (2)


முதியோர் இல்லங்கள்............?
                                                                                                        
நாளைய தமிழகம் எதிர்நோக்கும் தலையாய சிக்கல்களில் ஒன்று 'முதியோர் இல்லம்'. இது குறித்து இன்று பல்வகையான  சிந்தனைகள் வெளிவந்து கொண்டுள்ளன. 'ஜனசக்தி' நாளேட்டில், இரா. உமா எழுதியுள்ள 'மூத்தோரும், முது நெல்லிக்கனியும்' என்னும் கட்டுரையின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. அதன் அடியில், என் பார்வையையும் பதிவு செய்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.



மூத்தோரும் முதுநெல்லிக்கனிகளும் 
- இரா. உமா
மூத்த மகன் - மேலத்தெருவில்
இளைய மகன் - கீழத்தெருவில்
பெற்றோர் – நடுத்தெருவில்
- கவிஞர் ஆங்கரை பைரவி
 

  • அக்டோபர் 1 - ‘உலக மூத்த குடிமக்கள் நாள்’. ஐக்கிய நாடுகள் பொது அவை 1990ஆம் ஆண்டு, இதனை அறிவித்தது. மூத்த குடிமக்களின் உரிமைகள், உடல்நலம், தேவைகள், சிக்கல்கள் ஆகியனவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவது அந்நாளின் நோக்கமாக முன்வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மூத்த குடிமக்கள் நாள், 1991ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • இதற்கும் முன்பாகவே அமெரிக்காவில் மூத்த குடிமக்கள் நாள் அறிவிக்கப்பட்டுவிட்டது. 1988ஆம் ஆண்டு அன்று அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் தேசிய மூத்த குடிமக்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ‘வயதில் மூத்தவர்களின் வாழ்க்கை அனுபவமும், அறிவுரைகளும், வழிகாட்டல்களும், இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு வாழ்வையும், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு சிறப்பானதொரு பங்களிப்பையும் அளிக்கக்கூடியது. நாட்டின் மூத்த குடிமக்கள் நம்மை வரலாற்றோடு பிணைக்கக்கூடிய வலிமையான பாலங்களாக இருப்பவர்கள். அவர்களை மதித்துப் போற்றவேண்டியது நம்முடைய கடமை’ என்பதாக அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறார். 
  • ஆனால் நம் நாட்டின் சமூக அமைப்பே குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது எனும்போது இதுபோன்ற நினைவூட்டல்கள் எதற்காகத் தேவைப்படுகின்றன என்றொரு வினா இயல்பாகப் பலருக்கும் எழக்கூடும்.
  • பெற்றவர்களைப் பேணிக்காப்பதுதான் அறம் என்பதைப் பிள்ளைகள் உணரவேண்டும். பெற்றோர் மற்றும் முதியோர் பொருளுதவி நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009 என்றொரு சட்டத்தின் மூலம் தங்களின் உரிமைகளைப் பெறவேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றவர்களை ஆளாக்குவது மனிதத் தன்மையற்ற செயல் இல்லையா?  
  • நம் ‘மரபுவழி வாழ்க்கை முறை’ தந்த பாரம்பரிய உணவுகள், மருத்துவம், விவசாய உற்பத்தி முறைகள், இயற்கை சார்ந்த வாழ்வியல் சூழல் - இவையெல்லாம் நம்முடைய மூத்தோர்களின் விலைமதிப்பில்லா சொத்துகள் அல்லவா? வீட்டைச்சுற்றிக் கிடைக்கின்ற மூலிகைக் கீரைகளையும், வேம்பு, மஞ்சள் போன்ற கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி ‘உணவே மருந்தாக’ வாழ்ந்த வாழ்க்கைமுறை நம்முடையது. அதை நாம் தொலைத்தது எப்படி? அவற்றைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியது எப்படி? அவையெல்லாம் என்னவாகின? 
  • கைக்குழந்தை விடாமல் அழுதுகொண்டிருக்கும். உடனே அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய், திண்ணையில் கால்நீட்டி உட்கார்ந்து உரலில் வெற்றிலை இடித்துக் கொண்டிருக்கும் மூதாட்டியிடம் கொடுப்பார்கள். அவர் குழந்தையின் உடல் முழுவதும் கையால் தடவிப் பார்ப்பார். வயிற்றைத் தட்டிப் பார்ப்பார். பின்னால் திருப்பி முதுகைத் தடவிப் பார்ப்பார். கடைசியில் காது மடலைப் பிடித்து மெதுவாக இழுத்துப் பார்ப்பார். குழந்தையின் அழுகை அதிகமாகும். ‘ஒண்ணுமில்ல, புள்ளைக்கி ஒரம் விழுந்திருக்கு. அதான் விடாம அழுகுது. தொட்டித் துணியில போட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நாலு உருட்டு பதமா உருட்டி எடுத்து, கைப்பதத்துல சுடுதண்ணி வச்சி குளிப்பாட்டி, பாலக்குடு, நல்லா தூங்கி எந்திரிச்சா சரியாப்போகும்’ என்று சொல்வார். கழுத்து சரியாக நிற்காத 3 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளை சரியாகப் பிடித்துத் தூக்கத் தெரியாமல் தூக்கினாலோ, தொட்டிலில் எப்படிப் போடுவது என்று தெரியாமல் ஏடாகூடமாகப் போட்டுவிட்டாலோ கழுத்துப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுவிடும். அதைத்தான் கிராமங்களில் ஒரம் விழுவது என்பார்கள். குழந்தையின் உடல் தசைகளும், எலும்புகளும் உறுதிப்படாமல் இருக்கும் அந்தநிலையில், எண்ணெய் தடவி அழுத்தி நீவி விட முடியாது. அதனால்தான் கை படாமல் இப்படி ஒரு முறையைக் கைக்கொண்டார்கள்.
  • இன்று நம் வீடுகளில், கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் பாட்டியும் இல்லை, நாட்டு மருந்துப் பொருள்களை வாங்கிக் கொண்டுவரும் தாத்தாவும் இல்லை. சுளுக்குக்கு வலி நிவாரணி மருந்துகளையும், வயிற்றுத் தொந்திரவுகளுக்கு சொட்டு மருந்துகளையும் கொடுத்து ஆரோக்கியமற்ற ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 

  • பத்துப் பிள்ளை பெற்று வளர்த்தவர்களைத் தனியே விட்டுவிட்டு, ‘குழந்தை வளர்ப்பது எப்படி’ என்ற புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் நம் மேதைமையை என்னவென்று சொல்வது? கடைத் தெருவில் சுண்டைக்காய் விற்றுக்கொண்டிருக்கும் ‘வங்கிழடு’ என்று சொல்வார்களே, அந்த வயதுடைய மூதாட்டியைப் பார்த்து, ‘ம்ம்ம்...இந்த வயசுலயும் உழைச்சு சாப்பிடுது பாரு. நம்மல்லாம் இந்த வயசுல உசுரோட இருப்பமோ இல்லையோ’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். இவ்வளவு உடல் வலிமையையும், உடல் நலத்தையும் பெறுவது எப்படி என்கின்ற விலைமதிப்பில்லாத ‘சூத்திரத்தை’ அறிந்து வைத்திருக்கும் அந்த மூதாட்டியைத் தெருவில் நிறுத்தி விட்டு, யோகா ‘குரு’வைத் தேடிச்சென்று பணத்தைக் கொட்டி அழும் நாம் படித்த அறிவிலிகளா இல்லையா? 
  • வேம்புக்கும், மஞ்சளுக்கும் வெளிநாட்டவன் காப்புரிமை கோருகின்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டதைப்போல, நம்முடைய மூத்த குடிமக்களுக்கும் காப்புரிமை கோருகின்ற அவல நிலையை நாம் உருவாக்கிவிடக் கூடாது. நாம் புறக்கணிப்பவை விலைமதிக்க முடியாத புதையல்கள் என்பதை, உலக மூத்த குடிமக்கள் நாளில்  எண்ணிப்பார்த்துச் செயல்படுவோம்.
என் பார்வையில் ...

நல்ல கட்டுரை மட்டுமன்று, தேவையான கட்டுரையும்கூட.  இன்றைய இயந்திர உலகில், இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரையாகவும் உள்ளது. வழக்கமான அறிவுரையாக இல்லாமல் புதிய கோணத்தில் எழுதப் பட்டுள்ளது.  

எனினும் இரண்டு செய்திகளைப்  பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. 'முதியோர் இல்லங்களின் வேர், முதலாளியச் சமூகம் தோன்றும்போதே உருக் கொண்டு விட்டது. உலக மயமாக்கலில் அது கிளை விரித்து,இன்று வெட்ட முடியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இனி நாம் பழைய இடத்திற்குத் திரும்புவது இயலாத ஒன்று என்றே நினைக்கிறேன்.எதிர்காலத்தில், முதியோர் இல்லங்கள் பெருகும் என்பதே எதார்த்தம். அப்படியானால் என்ன செய்யலாம்? 'ஒழிக்க முடியாதவைகளை ஒழுங்கு படுத்துவோம்' என்று மேடைகளில் நானே பேசியுள்ளேன். முதியோர் இல்லங்களை முறைப்படுத்தி, மேலும் வசதி உள்ளனவாக மாற்ற முற்சிப்பதே இனி செய்ய வேண்டியது என்பது என் கருத்து. எனக்கு இது விருப்பமான ஒன்றில்லை. ஆனால் விருப்பமும், நடைமுறையும் வேறுபடும்போது இப்படிச் சில முடிவுகளை எடுத்தே ஆக வேண்டி வரும். முதியோர்கள் போற்றப்பட்ட நிலவுடமைச் சமூகத்திலும் பல சிக்கல்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். 

இரண்டாவதாக, இன்றைய முதியோர் பலர் முது நெல்லிக் கனிகள் இல்லை என்பதும் உண்மை. எங்கள் தலைமுறையே அந்தப் பாரம்பரிய அறிவை இழந்துவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகளில் மரபுச் சங்கிலி அறுந்து தொங்கும் நிலையில்தான் உள்ளது. இவை அனைத்தும் வருத்தத்திற்குரியவைகளே.  புதிய அறிவியல் வரவுகளில் பழைய அறிவு சிலவற்றை இழக்க நேர்கிறது. எந்த ஒன்றையும் இழக்காமல் எல்லாவற்றையும் பெற முடியாது. எதை இழக்கலாம், எதைக் காப்பாற்றலாம் என்பதைக் கால ஓட்டம்தான் முடிவு செய்யும்.


                          (மேலும் மணக்கும் பூக்கள்)

2 comments:

  1. உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம்
    உள்ளம் சுருங்கினால் உறவும் பகையே
    என்று கூறுவார்கள். உள்ளம் சுருங்கியதால் உறவுகள் பகையாய் தோன்றுகின்றன. படித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. படித்தவர்கள் சதவீதம் கூடக் கூட, தனிக் குடும்பங்களின் சதவீதமும் கூடுகின்றன. இன்றைய கல்வி முறை, தேர்வு சார்ந்த முறையாக மாறியதன் விளைவு என்றே எண்ணுகின்றேன். பாங்களைப் போதிக்கின்றோமே தவிர, வாழ்க்கையைப் போதிககவில்லை, வாழும் முறையை கற்பிப்பதில்லை.விவாகரத்து வழக்குகளுக்காக நீதிமன்றத்தை நாடுபவர்கள், படித்தவர்கள்தானே தவிர பாமரர்கள் அல்லவே.

    ReplyDelete
  2. முதியோர்கள் புறக்கணிக்கப்படுகிற போக்கு பெருகி வருவது உண்மைதான்; வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு பிள்ளைகள் மட்டுமே காரணம் இல்லை.
    ஒருகாலத்தில் ஏழெட்டு பிள்ளைகளை (சில குடும்பங்களில் அதற்கு மேலும்) பெற்றுக் கொண்டார்கள், பிறகு ஐந்தாறாக குறைந்து,
    இரண்டு மூன்றென்று ஆகி, இப்போது ஆணோ பெண்ணோ ஒன்று போதுமே என்ற நிலை.
    பிள்ளைகள் அதிகம் இருந்தபோது யாரெனும் ஒருவராவது பெற்றோரை கவனித்துக் கொள்ள முடிந்தது.
    இப்போது ஒரே பிள்ளையைத்தான் எல்லாவற்றிற்கும் நம்பி இருக்க வேண்டும். அந்த பிள்ளையால்
    முடிய வில்லை என்றால் முதியோர் இல்லம்தான். ஒரே பிள்ளையாக பிறந்து, பெற்றோரை பேணும்
    பிள்ளைகள் அரிதாகவே இருக்கிறார்கள். ஒரு கவிஞர் சொன்னான் ,
    'அவள்' வரும் முன்
    'அவன்' இருந்தது
    அன்னை இல்லம்;
    'அவள்' வந்த பின்பு
    அன்னை இருப்பது
    முதியோர் இல்லம்.

    பெண்கள் தங்கள் தாய் தந்தையரை பேணும் அளவுக்கு, தன் கணவனின் தாய் தந்தையரையும் பேணும் நிலை வளர்ந்தால்
    முதியோர் புறக்கணிப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆணாதிக்க சமூகம் இது என்றாலும்,பெரும்பான்மை குடும்பங்களில் மாமனார் மாமியார் விவகாரத்தில், எல்லாம் 'அவள்' செயல் தான்.

    எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் பண்பாட்டு மரபுகளை போற்றுகின்ற கல்வி, கலை,இலக்கியங்கள் வெகுவாக குறைந்து விட்டன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete