தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 6 October 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (6)


ஓர் இடையீடு 

பொதுவாக, முன்னுரை, முடிவுரை எழுதுவது தான் மரபு. ஆனால் இங்கே  ஓர் இடையுரையும் தேவைப்படுகின்றது. இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள அதே வேளையில், தி.மு.க.விற்கு ஆதரவாகவும், ஒரு பக்கச் சார்புடையதாகவும் தோன்றுகிறது என்றும் நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். உண்மைதான். இத்தொடர் மட்டுமன்று, உலகில் எல்லாமே ஒரு பக்கச் சார்புடையதுதான். அதனை வெளிப்படுத்துவோரும், வெளிப்படுத்த அஞ்சி, நடுநிலை என்று கூறிக் கொள்வோரும் தாம் நம்மிடையே உள்ளனர். நான் ஒன்றும் நீதிபதி இல்லை. நான் வழகுரைஞர் தான். இந்தப் பக்கத்தில் உள்ள மறைக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட உண்மைகளை எடுத்து வைக்கும் நோக்குடையதே இத்தொடர். இரண்டு பக்க வாதங்களையும் படித்துவிட்டு, மக்களும்,காலமும் தீர்ப்பு எழுதட்டும். நான் தி.மு.க. ஆதரவாளன், விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்பனவற்றில் எந்த ரகசியமும் இல்லை. நானே ஆயிரம் மேடைகளில் வெளிப்படையாகச் சொன்ன செய்தியைப் 'புதிதாகக் கண்டுபிடித்துச்சொல்ல யாரும் தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டாம்.

எனினும் ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. ஒரு பக்கச் சார்புடையது என்றாலும், சிறிய செய்திப் பிழை கூட வந்துவிடக் கூடாது என்பதிலும், கண்ணியக் குறைவாக யார் ஒருவர் மீதும்  தனிப்பட்ட விமர்சனங்கள் வந்து விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக உள்ளேன். 

எடுத்துக்காட்டிற்கு ஒன்று: குட்டிமணியைக் கலைஞர் தான் காட்டிகொடுத்தார் என்று நெடுமாறன் அவர்கள் எங்கே எழுதினார் அல்லது பேசினார் என ஒரு நண்பர், மிகக் கோபமாகத் தொலைபேசியில் கேட்டார். அவர் கேட்ட வேகத்தைப் பார்த்தபோது, தவறாக எழுதிவிட்டோமோ என்று நானே பயந்து விட்டேன். தேடியபோது பல சான்றுகள் கிடைத்தன. இதோ அவற்றுள் ஒன்று - 26.062012 தினமணியில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

"  அதேயாண்டில் தமிழ்நாட்டிலிருந்து செயல்பட்ட "டெலோ' இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிமருந்துகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைத் தமிழகக் காவல்துறை கைது செய்தது. குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை அதிகாரிகள் வந்து கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். இதன் விளைவாக, ஈழப்போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவர்களல்ல. நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான்.

குட்டிமணியே எழுத்து மூலம் மறுத்த பிறகும், இப்படி எழுதுவது முறையாகுமா? 30 ஆண்டுகளுக்கு முந்திய செய்திகளை இளைஞர்கள் எங்கே திரும்பவும் புரட்டிப் பார்க்கப் போகின்றனர் என்ற எண்ணத்தில் எழுதப்படும் இப்படிப்பட்ட வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இன்று  தமிழ்நாட்டில், ஈழ ஆதரவுக் கூட்டங்கள் என்றாலே, கலைஞர் எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்புக் கூட்டங்கள் என்றாகிவிட்ட நிலையில், இன்றைய இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் அவற்றை நம்பத் தொடங்கி விட்டனர் என்பது கசப்பான உண்மை. இச் சூழலில்தான் இத் தொடர் வந்து கொண்டுள்ளது. எனவே தி.மு.க.வும், கலைஞரும் ஈழத்திற்கு ஆதரவாகச் செய்துள்ள செயல்பாடுகளைச் சற்று விரிவாகத்தான் கூற வேண்டியுள்ளது. அப்படிக் கூறும்போது, அது ஒரு பக்கச் சார்பானதாகத் தெரியலாம். பொறுமையாகத் தொடர் முழுவதையும் படித்து முடிக்கும்போது, புதிய உண்மைகள் பலருக்குப் புலப்படும்.
குறுக்கீடிற்கு மன்னிக்கவும். மீண்டும் நாம் பயணத்தைத் தொடர்வோம்.

 திம்புப் பேச்சும், நாடு கடத்தலும்                     

எம்.ஜி.ஆர். தங்களுக்குச் செய்துள்ள உதவிகள் குறித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே ஒரு நேர் காணலில் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பேபி சுப்ரமணியம் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டு, ஒருநாள் தான், பேபி சுப்பிரமணியம், பாலா அண்ணா (அன்டன் பாலசிங்கம்), சங்கர் ஆகிய நால்வரும் எம்.ஜி.ஆருடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், சங்கர் தான் ஆயுதம் வாங்கப் பணம் தேவைப்படுகிறது என்று கூற, எவ்வளவு தேவைப்படும் என்று எம்.ஜி.ஆர். கேட்டார் என்றும், இரண்டு கோடி தேவைப்படலாம் என்று சங்கர் கூற, 'பிரச்சினை இல்லை, நாளை வாங்கிக்கொள்ளுங்கள்' என்று அவர் விடை அளித்தார் என்றும் ஒளிநாடாவில் பிரபாகரன் கூறியுள்ளார். சொன்னபடியே அடுத்த நாள் அந்தத் தொகை எங்களுக்குக் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

எனினும், 1984 மத்தியில் எம்.ஜி.ஆர். உடல் நலிவடைந்து, சென்னைக்கும், அமெரிக்காவிற்குமாகப் பறந்து கொண்டிருந்தார். அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது கூட அவர் தமிழ்நாட்டில் இல்லை. எனவே 1985 முதலாகவே அவரால் முன்னைப்போல் சுறுசுறுப்பாக அரசியலில் ஈடுபட முடியவில்லை. அக் கால கட்டத்தில்தான், நான்கு விடுதலைப் போராட்ட அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்குகின்றன. இந்திய அரசின் முயற்சியில், பூட்டான் தலைநகரம், திம்புவில் 1985 ஜூலை - ஆகஸ்டில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது. இவற்றில் எல்லாம் எம்.ஜி.ஆரின் பங்கு எதுவும் பெரிதாக இல்லை. இன்று எம்.ஜி.ஆரை ஆதரித்து எழுதும் நெடுமாறன் அன்று கலைஞரோடுதான் இருந்தார். 1985 மே மாதம் டெசோ (Tamil Eelam Supporters organisation) என்னும் புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது. கலைஞர் தலைமையிலான அவ்வமைப்பில், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி. பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் (பார்வர்ட் பிளாக்) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். அவ்வமைப்புதான் அன்று ஈழத் தமிழர்களுக்காக முன்னின்று போராடியது. 


டெசோ தொடங்கிய மூன்றாவது மாதமே, அது ஒரு பெரிய செயலைச் செய்து முடித்தது. ஆகஸ்ட் தொடக்கத்தில் முடிந்த திம்பு பேச்சுகள் எந்த முடிவையும் எட்டாமல் நின்று போயின. ஜெயவர்த்தனாவின் இலங்கை அரசு அதிகாரிகளுக்கும், போராளிகளுக்கும் இடையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்பது மட்டுமின்றி, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரமேஷ் பண்டாரிக்கும் போராளிகளுக்கும் இடையில் வேறு வார்த்தை மோதல்கள் நிகழ்ந்து விட்டன. திம்புவிலிருந்து போராளிகள் சென்னை திரும்பியதும், அவர்களிடம் இந்திய அரசு கடுமையாக நடந்து கொண்டது. 1985 ஆகஸ்ட் 22 ஆம் நாள், வேகம் வேகமாக, புலிகள் அமைப்பைச் சேர்ந்த அன்டன் பாலசிங்கம், டெலோ அமைப்பைச் சேர்ந்த நடேசன் சத்யேந்திரா. தமிழர் கூட்டணியைச் சேர்ந்த சந்திரஹாசன் ஆகிய மூவரை இந்தியா நாடு கடத்தியது. இங்கிலாந்துக் குடிமகனான பாலசிங்கத்தை லண்டனுக்கும், மற்றவர்களை அமெரிக்காவிற்கும் நாடு கடத்த ஆணையிட்டது. 

செய்தியறிந்த கலைஞர் டெசோவின் சார்பில் மறுநாள் காலையே நாடு முழுவதும் எதிர்ப்புப் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். ஒரே நாளில் கலைஞரின் செல்வாக்கை மத்திய அரசு புரிந்து கொண்டது. மக்கள் எழுச்சியை எதிர்கொள்ள இயலாத நிலையில் அவர்களைத் திருப்பி அழைத்தது. 

இத் தருணத்தில் நாம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது அ.தி.மு.க., இந்த நாடு கடத்தலை எதிர்த்து ஒரு அறிக்கை விட்டதோடு தன் பணியை நிறுத்திக் கொண்டது. அன்று, மத்திய ஆளும் கட்சியாகிய காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியாக இருந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 195 உறுப்பினர்களைக் கொண்ட மிக வலிமையான ஆளும் கட்சியாகவும் இருந்தது. நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. அந்த நேரத்தில் இன்றைய முதல்வர்  ஜெயலலிதா, அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (ராஜ்ய சபா எம்.பி.) இருந்தார். (1982 இல் கட்சியில் சேர்ந்து, 83 ஆம் ஆண்டு கொள்கை பரப்புச் செயலாளர் ஆகி, 84 ஆம் ஆண்டே  நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்). இவ்வளவு செல்வாக்கு இருந்தும், ஈழ இயக்கங்களின் முக்கியமான தலைவர்களை நாடு கடத்த விடாமல் அக் கட்சியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 'மத்திய அரசின் கூட்டணியில் உள்ள தி.மு.க. என்ன செய்து கொண்டிருக்கிறது?' என்றும், 'எதுவும் செய்ய இயலாதெனில், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே?' என்றும் இன்று எவ்வளவு பேர் பேசுகின்றனர். இவர்கள் யாரும், அன்றைய அ.தி.மு.க.வின் மௌனம் பற்றி ஒன்றுமே பேசுவதில்லை. 

நாடு கடத்தப் பட்டவர்களை மீட்டதோடு மட்டுமின்றி, தொடர்ந்தும் ஈழ ஆதரவு நிலையைத் தமிழகத்தில் உறுதிப் படுத்தியது டெசோ அமைப்பு தான். டெசோ சார்பில் மதுரையில் நடைபெற்ற ஈழ ஆதரவு மாநாடு வரலாற்றுச் சிறப்புடையது. இந்தியாவின் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட மாநாடு அது. வாஜ்பாய், என்.டி. ராமா ராவ், பகுகுணா உள்ளிட்ட பலரும் அன்று ஈழத்தை ஆதரித்துப் பேசினர். அப்போது ராமா ராவின் தெலுங்கு தேசம் கட்சிதான், நாடாளுமன்றத்தில் 30 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய கட்சி. அனைவரும் கலைஞரின் அழைப்பை ஏற்றே மாநாட்டிற்கு வந்தனர் என்பதை யாரால் மறுக்க முடியும்? மதுரையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நகரங்கள் பலவற்றிலும் ஈழ ஆதரவு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன.
               மதுரை டெசோ மாநாட்டில் தலைவர்கள்

திம்பு பேச்சுவார்த்தை முடிந்து சில மாதங்களிலேயே போராளிகளின் கூட்டமைப்பான ஈ.என்.எல்.எப் உடைந்துவிட்டது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி லிங்கம் டெலோ அமைப்பினால் கொல்லப்பட, அதனைத் தொடர்ந்து டெலோ அமைப்பின் தலைவர் சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தினர் பலரும் புலிகளால் கொல்லப்பட்டனர். அங்கு ஏற்பட்ட பிளவு, இங்கும் பிளவு ஏற்பட வழி வகுத்தது. டெசோ அமைப்பும் கலைந்து போயிற்று.

இவ்வாறு இங்கும் அங்கும் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், புலிகள் அமைப்பு மிகப் பெரும் அமைப்பாக வலிமை பெற்றது. 1987 ஜூலை 5 ஆம் நாள் கரும்புலிகளின் முதல் தாக்குதல் நடைபெற்றது. மில்லர் என்னும் மாவீரன், தன் உடம்பு முழுவதும் வெடி குண்டுகளைக் கட்டிக்கொண்டு, நெல்லியடி என்னும் ஊரில் இருந்த ராணுவ வெடி பொருள் கிடங்கு மீது, தன் ஜீப்பில் சென்று மோதினான். மொத்தக் கிடங்கும் அழிந்து போயிற்று. ஜெயவர்த்தனா அரசும் ஆடிப் போயிற்று.. வேறு வழியின்றி, ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் ராஜீவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

இச் சூழலில்தான் 1987 ஜூலை 29 ஆம் நாள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்தாயிற்று.  அடுத்த நாளே, இந்திய ராணுவம், அமைதிப் படை என்ற பெயரில் அங்கு போய் இறங்கிற்று.

ஈழத் தமிழர்கள் அமைதிப் படையை முதலில் மகிழ்ந்து வரவேற்றனர். தங்களைக் காக்க வந்த சகோதர்கள் என்றே எண்ணிர். ஆனால் இரண்டே மாதங்களில் எல்லாம் பொய்த்துப் போயிற்று. சிங்களப் படையைக் காட்டிலும் இந்தியப் படையே மிகக் கொடூரமாக நடந்து கொண்டது. செப்டம்பர் 26 இல் திலீபன் மரணமும், அக்டோபர் 3 குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட தளபதிகளின் மரணமும் வந்திருப்பது அமைதிப் படை அன்று, அமளிப் படை என்பதை உணர வைத்தது. அக்டோபர் மத்தியில், இந்திய அமைதிப்படைக்கும் , விடுதலைப் புலிகளுக்குமான போர் தொடங்கியது. ஜெயவர்த்தனாவின் ராஜதந்திரம் வென்றது. ராஜீவ் காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மை தோற்றது. இலங்கையின் யுத்தம் இந்தியாவின் யுத்தமாகக் கை மாற்றிக் கொடுக்கப்பட்டது. உலகின் நான்காவது பெரிய ராணுவமான இந்திய ராணுவம், சேற்றில் இறங்கிய யானையாகப் போர்க்களத்தில் இறங்கிச் சிக்கிக் கொண்டது.

1988 இறுதிவரை கடுமையாகப் போர் நடந்த அந்தப் பதினைந்து மாதங்களில், ஈழ ஆதரவைத் தமிழ் நாட்டில் நிலை நிறுத்தியவர்கள் யார்? மனச் சாட்சி உள்ளவர்கள் விடை சொல்லட்டும். எம்.ஜி.ஆர். 87 டிசம்பரில் இறந்து போய் விட்டார். அதன்பின் அடுத்த தலைவர் யார் என்பதிலேயே அந்தக் கட்சி ஓர் ஆண்டு சண்டையிட்டு ஒய்ந்து போனது. தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவோ, ஈழத்திற்கும் புலிகளுக்கும் நேர் எதிரானவராக இருந்தார்.  இன்று ஈழ ஆதரவை முன்வைக்கும் ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியன அன்று தோன்றவே இல்லை. 

அந்த நெருக்கடியான கால கட்டத்திலும் நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கமும், எங்களைப் போன்ற சின்னச் சின்ன தமிழ் அமைப்புகளும் ஈழத்தையும், புலிகளையும் ஆதரித்து நின்றோம். ஆனால் நெடுமாறன் அவர்களின் பின்னாலும், எங்களின் பின்னாலும் தமிழ் உணர்வாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனரே அல்லாமல், மக்கள் திரள் இல்லை. அன்றும் புலிகளுக்கு ஆதரவாக இருந்த திராவிடர் கழகத்திலும், விடுலைப் புலிகள் தோழமைக் கழகத்திலும், கொள்கை உரமுடைய,உறுதியான தோழர்கள் இருந்தனர். ஆனாலும், கோடிக் கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட தி,மு,க.வும், அதன் தலைவரும் ஈழத்தையும், புலிகளையும் அன்று ஆதரித்திருக்காவிட்டால், மத்திய அரசு எதிர்ப்புகளை எளிதில் நசுக்கியிருக்கும். 

இன்று ஆயிரம் பேர் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கலாம். ஆனால் அன்று இந்திய ராணுவத்தை எதிர்த்து, ஈழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒரே பெரிய அரசியல் கட்சி தி.மு.க. தான் என்பது மறைக்க முடியாத வரலாறு. இதோ, அதற்கான ஆதாரங்களை அடுத்து பார்க்கலாம்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

பின் குறிப்பாக ஓர் அரிய திருத்தம்:
--------------------------------------------------

தமிழ் ஈழம் கோரிய முதல் தலைவர் சுந்தரலிங்கம் என்று தொடக்கத்தில் நான் எழுதியிருந்தேன். அவருக்கும் முன்பாகவே, 1944 ஆம் ஆண்டே, ஈழத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும், விடுதலை கொடுக்கும்போது இரண்டு இனங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு நாடாக அறிவித்து விடக் கூடாது என்றும் தமிழர் ஒருவர்தான் பிரித்தானியருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்னும் செய்தி இப்போது கிடைத்துள்ளது. அக் கடிதத்தின் நகலை, ஆக்ஸ்போர்ட் நகரில் வாழும் ஆய்வாளர் பற்றிமாகரன் நமக்கு அனுப்பித் தந்துள்ளார். 






அக் கடிதத்தை வெள்ளையருக்கு எழுதியுள்ளவர், தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ். பொன்னையா. மேதகு ஸ்டான்லி என்பவருக்கு எழுதப்பட்டுள அம்மடலில், 
"அவசரமான செயல்பாடுகளால் எங்களை,  மீள முடியாத வண்ணம், யார் ஒருவர் கைகளிலும் ஒப்படைத்துவிட வேண்டாம் என்று மேன்மை தங்கிய உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்...........தமிழ்ச் சமூகம், மீதமுள்ள இலங்கையின் வரலாறு, இனம், மொழி, பண்பாடு,பழக்க வழக்கம், அரசியல், நாகரிகம் மற்றும் வாழ்வியல் கோட்பாடுகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டது................தமிழ் இலங்கைக்கும்,மீதமுள்ள இலங்கைக்கும் இடையிலான வேறுபாடு, ஸ்பெயினுக்கும்-போர்சுகல்லுக்கும், நோர்வேக்கும்-சுவீடனுக்கும்,ஹாலந்திற்கும்-பெல்ஜியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விடக் கூடுதலானது"
என்று விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

9 comments:

  1. இரா. உமா6 October 2012 at 12:32

    உண்மையின் வேர்களைத் தேடும் உங்களின் ஆய்வுப்பணி எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல கனிகளை வழங்கிக்கொண்டுள்ளது. நன்றிகள். நீங்கள் சொல்வது போல பழைய வரலாறுகளைப் புரட்டிப் படிக்கின்ற வழக்கம் இன்றைய இளைய தலைமுறைகளிடம் இல்லாத நிலையே இதுபோன்ற திரிபுவாதங்களுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. மாறிவரும் நவீன அறிவியல் உலகோடு நாமும் போட்டிபோட முன்னோக்கிய பாய்ச்சல் கண்டிப்பாக தேவைதான். அதேநேரத்தில் நம்முடைய வரலாற்றைப் புரட்டிப் பார்க்கவேண்டியதும் முக்கியம். இல்லையென்றால் வரலாற்ற்றில் நம்முடைய இடம் வெற்றிடமாக இருக்கும். //எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு // நம்முடைய பாட்டன் சொன்னதுதானே?

    ReplyDelete
  2. இன்று இந்த தமிழ் தேசியவாதிகள் பேசுகிற பேச்சும், எழுத்தும் எத்தனை பொய்யானது, எவ்வளவு அபத்தமானது என சிறு குழந்தையும் புரிந்துகொள்ளும் அளவு உண்மைகளை நெல்லிக்கனியாய் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.

    பொய் பரப்பும் கூட்டத்திற்கு தக்க பதிலடியாய் ஒவ்வொரு வரியும் உள்ளது.

    வெறும் 30 வருட வரலாற்றைகூட படித்து பார்க்க துணியாதவர்கள் எவனோ சொல்வதை நம்புகிற இன்றைய இளைஞர்கள் தயவு செய்து அய்யாவின் இந்த கட்டுரையையாவது படித்தல் நன்மை பயக்கும்.

    ReplyDelete
  3. உலகில் எல்லாமே ஒரு பக்கச் சார்புடையதுதான். அதனை வெளிப்படுத்துவோரும், வெளிப்படுத்த அஞ்சி, நடுநிலை என்று கூறிக் கொள்வோரும் தாம் நம்மிடையே உள்ளனர். //Point

    ReplyDelete
  4. தமிழக அரசியலில் வெற்றிடம், நிலயற்ற தன்மை எனப்படும் 1987,88,89,90 காலங்களில் திமுக மட்டுமே ஈழத்தின் நம்பிக்கையாக அன்று திகழ்ந்தது.

    இன்று வீரம் பேசுகிற அனைவரும் ஏதோ ஒரு வகையில் அன்றைய திமுகவின் நேரடி/மறைமுக ஆதரவு அங்கத்தினர்களே.

    இன்று வசதியாக தத்தமது பிழைப்பிற்காக அனைத்தையும் மறந்துவிட்டனர்.

    ReplyDelete
  5. ஈழத்தாய் அன்று ராஜ்யசபாவில் ஈழத்திற்காக மூச்சு கூட விடாமல் இருந்தார் எனில், கொள்கை பரப்பு செயலாளர் என்ற வகையில் அக்கட்சிக்கு ஈழத்தின்பால் எந்த ஒரு அவதானிப்பும் இல்லை என்றுதானே அர்த்தம்.

    மேலும் ஜெயலலிதாவுக்கு ஈழம் என்பது தனது அரசியல் வாழ்க்கையில் என்றைக்கும் AGENDA-வாக இருந்ததில்லை.
    ஆனாலும் இன்று அவர் ஈழத்தாய்.... கொடுமை.

    அய்யா... விளாசுங்கள் இவர்களை..

    ReplyDelete
  6. 2009 க்கு பிறகு மட்டுமே ஈழம் பற்றி பேசுகிற போலி உணர்வாளர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடந்த வரலாறை தெரிந்துகொள்ளாமல் திரிக்கப்பட்ட வரலாறை நம்புகிறார்கள்.. ஏற்றி விட்ட ஏணியை மறக்காதே என்று சொல்வது போல் தான் இருக்கிறது... திடீர் குபீர் உணர்வாளர்கள் அரசியல் லாபத்திற்காக வரலாறுகளை திரிப்பதும் அண்ணன் இதை சொன்னார் அதை சொன்னார் என்று நிறைய கட்டு கதைகளை அவிழ்த்து விட்டு நாடகமாடி வருகிறார்கள் என்றால், உண்மை வரலாறுகள் தெரிந்த நெடுமாறன் மற்றும் வைகோ இருவரும் வரலாறுகளை திரிப்பதன் பின்னணி தான் புரியவில்லை.. உணமையில் வருத்தமாய் இருக்கிறது.. உங்களின் வரலாறுகளை இணையம் முழுக்க எடுத்து சொல்கிறோம்.. இன்னும் எழுதுங்கள்.. எங்களை போன்ற இளைஞர்கள் வரலாறு தெரிஞ்சு கொள்ள வேண்டும்... அதற்கு உண்மை வரலாறுகள் வெளியே தெரிய வேண்டும்... இதற்காகவே நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் அய்யா...

    ReplyDelete
  7. அய்யா வணக்கம், உங்களைப்போன்ற நேர்மையான ,சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களை,
    சிந்தனையலர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.ஆம் இக் கட்டுரை ஒரு பக்கச் சர்புடையதுதான்
    என்று சொன்ன துணிச்சல் பாராட்டிற்குரியது.இன உணர்வு என்பது கலைஞர், மற்றும் தி.மு.க எதிர்ப்பு என்றளவில் சுருங்கி வெகு காலமாகிவிட்டது.பொய் பரப்புரைகளில்
    ஈடுபடுவோர்க்கும்,அதையே உண்மை என நம்புவோர்க்கும் நல்ல பாடம் தங்களது கட்டுரை
    என்பதில் ஐய்யமில்லை.

    ReplyDelete
  8. தமிழிலக்கியத்தில் "தற்குறிப்பேற்ற அணி" என்று சொல்வார்களே அது போல இங்கே ஈழவிடுதலை வரலாற்றை எழுதுபவர்களும் சொல்பவர்களும் அதில் அவர்களது கருத்தையே திணிக்கிறார்கள். அதிலும் சுயதம்பட்டம் வேறு (தமிழக அரசியல் இதழில் புலவர் புலமைபித்தன் எழுதுவதை படித்தால் அதில் முக்கால்வாசி அவரது சுய விளம்பரம் தான்) நீங்கள் மட்டுமே உள்ளதை உள்ளபடி உரைக்கிறீர்கள்...

    ReplyDelete
  9. சுபவீ அய்யா, நான் உங்களை ஒருமுறை உங்கள் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். நீங்கள் சனவரியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டீர்கள் என ஊடகங்களில் படித்திருக்கிறேன். அதுகுறித்தும் இக்கட்டுரையில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன். வரலாற்றை ஏன் பேசுகிறார்கள் எனப் பேசும் விசிலடிச்சான் குஞ்சுகள் நெடுமாறன் அக்னிப்பரீட்சையில் நேரு கால வரலாற்றைச் சுட்டிக் காட்டிப் பேசுவதை ஏன் எதிர்க்கவில்லை.?

    ReplyDelete