தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 20 October 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (8)


தீக்குளித்தான் உதயசூரியன்


இந்திய அமைதிப்படையைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கட்சி எல்லைகளைக் கடந்தும் பல குரல்கள் எழுந்தன. தமிழ் அமைப்புகள் பலவும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன. என்னைப் போன்றவர்களும் அத்தகைய அமைப்புகளில் பங்கேற்றுப் பணியாற்றத் தொடங்கிய காலம் அது தான்.


இரா. ஜனார்த்தனம் அவர்களின் 'இலங்கை மீண்டும் எரிகிறது' என்னும் நூல்தான் முதன்முதலில் எனக்கு இலங்கை குறித்தும், கவிஞர் காசி ஆனந்தன் குறித்தும் பல செய்திகளை அறிமுகப் படுத்தியது. அதன்பின், 83 ஜூலை, ஈழ ஆதரவு எழுச்சியில் தனி மனிதனாக நானும் பங்கு கொண்டிருக்கின்றேன். ஆனாலும் நான்  அமைப்பு ரீதியாகச் செயல்படத் தொடங்கியது, திலீபன் மரணத்திற்குப் பின்பு தான்.  அப்படி என்னை அமைப்பு வழியில் ஈடுபடுத்தியவர்கள் திரைப்பட இயக்குனர் வி.சி. குகநாதன், கவிஞர் மு.மேத்தா ஆகிய இருவருமே. திலீபன் மரணம் எனக்குள் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த அந்த நேரத்தில் அண்ணன் மேத்தா தான், புலிகளைப் பற்றிய பல செய்திகளை எடுத்துக் கூறி, இயக்குனர் குகநாதனிடமும் அழைத்துப் போனார். அவர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது தான், அங்கு வந்த தளபதி கிட்டு அவர்களை முதலில் பார்த்தேன். 
                       
பிறகு அவர்களோடு இணைந்து நானும் பணியாற்றினேன்.  சென்னை மந்தைவெளி தொடங்கி, அடையாறு புலிகள் அலுவலகம் வரையில், புலிகளுக்கான 'வீர வணக்க ஊர்வலம் ' ஒன்றை, 1987 அக்டோபரில் நடத்தினோம். அந்த ஊர்வலத்தில் பெருஞ்சித்திரனார், சாலையார், பெருங்கவிக்கோ வா.மு.சே.,கவிஞர்  இன்குலாப்,எழுத்தாளர் எஸ்.வி.ஆர்., திரைப்பட நடிகர்கள் பாண்டியராஜன்,ஜெய்கணேஷ், சார்லி உள்ளிட்ட புகழ் பெற்ற பலரும்,ஆயிரக்கணக்கில் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.  அன்று மாலைதான், கிட்டுவின் முன்னிலையில், ஈழ ஆதரவு அமைப்பு ஒன்று தொடங்கலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றியது. அடுத்து வந்த ஓர் ஞாயிற்றுக்கிழமையில், சென்னை, கோபாலபுரம், திருவீதியான் தெருவில் இருந்த அறிஞர் சாலையார் இல்லத்தில் அனைவரும் கூடினோம். அன்று ஓர் புதிய அமைப்பு உருவானது. 'ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு'  என அதற்குப் பெயரிடப்பட்டது. அக் கூட்டமைப்பின் அமைப்பாளராக நானும், பொருளாளராக இயக்குனர் குகநாதனும் தேர்ந்தெடுக்கப் பட்டோம். அவ்வமைப்பு சில ஆண்டுகள் மட்டுமே உயிர்த்திருந்தது என்றாலும், அக் குறுகிய கால கட்டத்தில் பல குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்தது. பல்வேறு துறைகளையும், பல்வேறு கருத்தோட்டங்களையும் கொண்ட பலரும் அவ்வமைப்பில் இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. பெருஞ்சித்திரனார், சாலையார்,மு. மேத்தா, வா.மு.சே., எஸ்.வி.ஆர். இன்குலாப், அருள்மொழி, ஞாநி, நாகார்ஜுனன்  என்ற ரமேஷ், நகைமுகன் எனப் பலதரப் பட்டவர்கள் அதில் ஒன்றாய் இருந்தோம் என்பதே ஒரு பெரிய செய்தி.

அந்த அமைப்பின் சார்பில்தான் தமிழ்நாட்டில் 'மனிதச் சங்கிலி'ப் போராட்டம் என ஒன்று முதலில் அறிமுகமானது.  இந்திய அமைதிப் படையே, தமிழர்களைக் கொல்லாதே என்ற முழக்கத்தை முன்வைத்து,1987 நவம்பர் 6 ஆம் தேதி, சென்னை, பாரிமுனை தொடங்கி, கிண்டி வரையில் அச் சங்கிலி நீண்டது. அப்போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அனைத்துக் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். எம்.ஜி.ஆர். அப்போது உடல் நலமின்றி இருந்ததால்,தொடர்பு கொள்ள இயலவில்லை. கலைஞரைத் தொடர்பு கொண்டோம். தன் கட்சியின் முழு ஆதரவுமுண்டு எனக் கூறினார். அதன்படி, வைகோ உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் அச் சங்கிலியில் கை கோத்து நின்றனர். கி.வீரமணி, பழ.நெடுமாறன் உள்ளிட்ட கட்சியினரும், தமிழ் அறிஞர்களும், திரைப்படக் கலைஞர்கள் சிலரும், சட்டக் கல்லூரி மாணவர்களும், ஏராளமான தமிழ் ஆர்வலர்களும் சங்கிலியில் தங்களைப் பிணைத்துக் கொண்டு ஈழ ஆதரவு முழக்கங்களை எழுப்பினர். 
                                     
அதன் பிறகு, 07.11.87 முதல் 10 நாள்கள் தமிழகம் எங்கும் தி.மு.க. நடத்திய மனிதச் சங்கிலி, பொதுக்கூட்டங்கள் ஒரு பெரிய தாக்கத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தின. உணர்ச்சி வயப்பட்ட, திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் ஊரைச் சேர்ந்த உதயசூரியன் என்னும் தி.மு.க. இளைஞன், 'இந்திய இராணுவமே திரும்பி வா, ஈழத் தமிழர்களைக் கொல்லாதே' என்று முழக்கமிட்டபடி, 18.11.1987 அன்று காலை தீக் குளித்து இறந்து போனான். ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த முதல் தமிழன் அவன் தான். அவன் தி.மு.க.வைச் சேர்ந்தவன் என்பதால் அந்த வரலாறும் மறைக்கப்பட்டு விட்டது போலும். அதன் பின்பு, 1995 டிசம்பரில் பெரம்பலூர் அப்துல் ரவூப் தீக்குளித்து மாண்டான். பின்  முத்துக்குமார் தொடங்கி,சேலம் விஜயராஜ் வரையில். ஈழ மக்களின் விடுதலைக்காகத் தங்களை அழித்துக் கொள்ளும் தியாகிகளின் பட்டியல் தொடர்கிறது. இப்படித் தீக்குளிப்பதை நாம் ஒருநாளும் வரவேற்கக் கூடாது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணர வேண்டும். எனினும், அந்த வரலாற்றிலும் உண்மைகள் திரிக்கப் படுகின்றன என்பதை இங்கு சுட்ட வேண்டியுள்ளது.

12.12.1987 அன்று, திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், ஈழம் குறித்துக் கலைஞர் விரிவாக உரையாற்றுகின்றார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முதலில் ஆதரித்த இலங்கைத் தமிழ் அரசியல் மிதவாதிகள் கூட, இப்போது அதனை மறுத்து வருகின்றனர் என்னும் செய்தியைக் குறிப்பிட்டுவிட்டு, இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு உதவாது என்று கூறுகின்றார். அப்படியானால், ஈழத் தமிழர்களுக்கு என்ன தீர்வு என்பதையும் அவர் மிகத் தெளிவாக விளக்குகின்றார்:

"ஈழத்திலிருக்கிற தமிழர்களுக்கு உண்மை நிலை நாட்டப்பட, அவர்கள் மானத்தோடு வாழ, இலங்கையில் நிரந்தரமான, நிலையான அமைதி நிலவ வேண்டுமானால், ஒரே ஒரு தீர்வு, ஒரே ஒரு வழி தமிழ் ஈழம்தான்"(முரசொலி, 14.12.1987)இதனைக் காட்டிலும் தன் நிலைப்பாட்டை, தன் கட்சியின் நிலைப்பாட்டை ஒருவர் எப்படி விளக்க முடியும் என்பதை நெடுமாறன், வைகோ ஆகியோர்தான் விளக்க வேண்டும்.
                         
இவ்வளவு தெளிவாக ஈழக் கோரிக்கையைக் கலைஞர் வைத்த அத் தருணத்தில்தான், எம்.ஜி.ஆரின் மரணம் (1987 டிசம்பர் ) நிகழ்கிறது. தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் வருகின்றன. 

1988 - மிக நெருக்கடியான ஆண்டு. இந்திய அமைதிப் படை கடும் தாக்குதலில் ஈடுபட்ட ஆண்டு, அப்போது தி.மு.க., தி.க., தமிழ் அமைப்புகள் ஆகியன மட்டுமே ஈழ ஆதரவில் உறுதியாய் நின்றன. 'ஈழத் தாய்' என் இன்று சிலரால் வருணிக்கப்படும், ஜெயலலிதா அன்று ஈழத்திற்கு ஆதரவாக வாய் திறக்கவே இல்லை. பொதுவுடமைக் கட்சிகளின் நிலை என்ன தெரியுமா? 
                       
இரண்டு பொதுவுடமைக் கட்சிகளுமே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தன. இந்திய இராணுவம் ஈழம் சென்றதையும் எதிர்க்கவில்லை. அதற்கான இரு காரணங்களை அக்கட்சிகள் முன்வைத்தன. இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கும்,இலங்கை மூலமாக இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறைவதற்கும் இவ்வொப்பந்தம் பயன்படும் என்று கருதுவதால் அதனை ஆதரிப்பதாகக் கூறினர் .

திரிகோணமலையில் அமெரிக்கா கால் பதிக்காமல் தடுப்பதற்கும், அமெரிக்க வானொலி (Voice of America), இலங்கையில் நிலை கொள்ளாமல் மறுப்பதற்கும், இந்தியா இலங்கையுடன் நல்லுறவு கொள்வதே சாலச் சிறந்தது எனத் தாங்கள் உறுதியாக நம்புவதாக அக்கட்சிகள் கூறின. தவறினால், அமெரிக்கா இலங்கை மூலமாக இந்து மகா சமுத்திரத்தில் கால் பதித்துவிடும் என்றும்,இந்தியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்றும் பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் 'சர்வதேசப் பார்வையை' வெளிப்படுத்தின. இந்திய இலங்கையொப்பந்தத்தின் மூலம், இந்தியா தனது ஏகாதிபத்திய எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் கூறிப் பெருமிதம் கொண்டனர்.

இவ்வாறு இந்திய இலங்கை உடன்பாட்டை வரவேற்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர்  தா. பாண்டியன் அவர்களைத் தன் 'இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பில்' பக்கத்தில் வைத்துக் கொண்டுதான், கருணாநிதி உடன்பாட்டைக் கண்டிக்கவில்லை என்கிறார் நெடுமாறன். தா.பாண்டியன் அப்போது யு.சி.பி.ஐ கட்சியில் இருந்தார். அது அதைவிட மோசம். யு.சி.பி.ஐ. என்பது, காங்கிரஸின் தொங்குசதை.

இதில் கவனமாகப் பார்க்க வேண்டிய இன்னொரு செய்தி உள்ளது. உடன்பாட்டை ஆதரித்துப் பொதுவுடமைக் கட்சிகள் முன்வைத்த காரணங்கள் உண்மையானவையும் அல்ல. அமெரிக்க வானொலி, திரிகோணமலை பற்றியெல்லாம் உடன்பாட்டிலோ, பிற்சேர்க்கையிலோ எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மட்டுமே, போகிற போக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயவர்த்தனாவின் விடை மடலில் அதனை ஏற்பதாக எங்கும்  சொல்லவில்லை. மேம்போக்காக, "I confirm the understanding reached between us" என்கிறார் ஜெயவர்த்தனா. understanding என்பதற்கும் agreement என்பதற்கும் உள்ள மலையளவு வேறுபாட்டை அறியாதவர்களா நம் பொதுவுடமையாளர்கள்!  

பொதுவுடமைக் கட்சியினர் உடன்பாடு குறித்து முன்வைத்த அடிப்படைக் கருத்தே தவறானது என்பதைத் தில்லிப் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் ஆசின் வானைக் (Achin Vanaik), தன் கட்டுரை ஒன்றில் அப்போதே தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார். அக்கட்டுரை 'Illustrated Weekly (06.12.1987)' இதழில் வெளியாகியுள்ளது. "IPKF IN SRI LANKA,    FOR WHOSE SAKE?" என்பது அக்கட்டுரையின் தலைப்பு. அதில் இந்திய இலங்கை உடன்பாடு குறித்து, அமெரிக்கத் தூதரின் கருத்தைத் தந்துள்ளார்.


          எந்த அமெரிக்காவிற்கு இந்த உடன்பாடு எதிரானது என்று பொதுவுடமைக்கட்சியினர்  கூறினரோ, அந்த அமெரிக்கா உடன்பாட்டை வரவேற்கிறது என்பது தான் தூதரின் செய்தி,
"இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலம், இந்தியா தன் முதிர்ச்சியைக் காட்டியுள்ளது. ("India has come up to the age") பிராந்திய வல்லரசாகத் தன்னை உருவாக்கிக்கொள்ள இந்தியா முனைந்துள்ளதை இவ்வுடன்பாடு காட்டுகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு"
என்ற அமெரிக்காவின் குரலை ஆசின் வானைக் வெளிப்படுத்தியுள்ளார்.

          இடதுசாரிச் சிந்தனையாளரான 'மெயின் ஸ்ட்ரீம்' ஆசிரியர் நிகில் சக்கரவர்த்தியும், உடன்பாட்டை எதிர்த்து எழுதியுள்ளார்.அமெரிக்காவின் தூண்டுதலில் தான் இவ்வுடன்பாடே ஏற்பட்டுள்ளது என்பது அவர் வாதம். பொதுவுடமைக் கட்சியினரின்  கருத்துக்கு நேர் எதிராய், உடன்பாட்டிற்குப் பின்னால் உள்ளது அமெரிக்காதான் என்னும் வாதத்தை முன்வைத்து ஒரு நூலும் வெளிவந்துள்ளது. ஆய்வாளர் உதயன் எழுதியுள்ள அந்நூலின் பெயர், "இந்திய-இலங்கை உடன்பாடு: ஓர் அமெரிக்கச் சதி" என்பதாகும். அந்நூல் தரும் ஒரு முதன்மையான சான்று, அமெரிக்காவின் அன்றைய அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் அவ்வுடன்பாட்டை  வரவேற்றுக் கூறியுள்ள செய்திதான். உண்மைகள் இவ்வாறிருக்க, அமெரிக்காவைக் காரணம் காட்டி, ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை அன்று நம் பொதுவுடமைக் கட்சியினர் எதிர்க்காமல் இருந்தனர். ஆனால் இன்று வரலாறு எப்படி மாறியிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.ஈழத் தமிழர்களின் படுகொலைக்குச் சீனாவே பெரும் காரணமாய் நிற்கின்றது. இலங்கையைச் சீனா இன்று தன நாட்டின் ஓர் பகுதி போல ஆக்கிவிட்டது. நம் பொதுவுடமைக் கட்சி நண்பர்கள் அது குறித்து மிகுதியாய் வாய் திறப்பதில்லை. அமெரிக்காவின் ஆதிக்கம் எதிர்க்கப்பட வேண்டியது, சீனாவின் ஆதிக்கம் வரவேற்கப் பட வேண்டியதா?

          இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில்தான், விஜய குமாரதுங்க (முன்னாள் அதிபர் சந்திரிகாவின் கணவர்), அவருடைய வீட்டு வாசலில், ஜே.வி.பி. அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலை 1988 பெப்ரவரி 16 ஆம் நாள் நடந்தது. அப்படுகொலையைக் கண்டித்து, பொதுவுடமைக் கட்சியின் தொழிற் சங்கங்கள் ஊர்வலம்,கூட்டம் எல்லாம் நடத்தின. விஜய குமாரதுங்க முற்போக்குச் சிந்தனையாளர் என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய கொலை கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்.

        ஆனால் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது, பொதுவுடமைக் கட்சியினர் வாய் மூடி இருந்தது என்ன நியாயம்? இந்தக் கேள்வியை, மார்க்சியச் சிந்தனையாளரான தோழர் எஸ்.வி.ஆர்., அன்றே ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகக் கேட்டார். யாரும் விடை சொல்லவில்லை. எனினும், பிற்காலத்தில், சி.பி.ஐ.கட்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகத் தோழர் சி. மகேந்திரன் கூறுகின்றார். உடன்பாடு ஏற்பட்ட ஆரம்ப நாள்களில் அதனை ஆதரித்தாலும், பிறகு தமிழர்கள் அங்கு கொல்லப்படும் செய்திகள் அறிந்து, கட்சி தன் கருத்தை மாற்றிக் கொண்டது என்கிறார். அதனால்தான், வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில், "இன்னொரு நாட்டில் நம் படை நிற்க வேண்டியதில்லை, உடனே திருப்பி அழையுங்கள்" என்று இந்திரஜித் குப்தா நாடாளுமன்றத்திலேயே பேசியதையும் குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.

        சி.பி.எம். கட்சி இறுதிவரையில் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இன்றைக்கும் தனி ஈழக் கோரிக்கைக்கான பொது வாக்கெடுப்பிற்குக் கூட அவர்கள் உடன்படுவதில்லை என்பதை அனைவரும் அறிவோம். சந்திரிகா அதிபராக இருந்த நேரத்தில் ஒருமுறை, புதுவை அரியாங்குப்பத்தில், இராவணன் படிப்பகம் சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் நான் வேடிக்கையாகக் குறிப்பிட்டேன், "தனி ஈழத்தைச் சந்திரிகாவே ஏற்றுக் கொண்டாலும்,நம் சங்கரையா ஏற்க மாட்டார் போலிருக்கிறதே" என்று. இன்று வரை அந்த நிலைதான் நீடிக்கிறது.

        இவ்வாறு,பொதுவுடமைக் கட்சியினர், காங்கிரஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட 'தேசியக்' கட்சிகள் அனைத்தும், இந்திய இலங்கை உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுக்க, அ .தி,மு.க. வும், ராஜீவ் காந்தியோடு சேர்ந்து கை தூக்க, தி.மு.க., தி.க. நெடுமாறன் அவர்களின் அமைப்பு உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் மட்டுமே அன்று ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாய் நின்றன. இவ்வுண்மைகள் அனைத்தையும், என்னைக் காட்டிலும் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ள நெடுமாறன், அவர்களை எல்லாம் கண்டிக்காமல், கலைஞரைக் கண்டிப்பது, தனி மனிதப் பகை இல்லாமல் வேறு என்னவாம்? ("எனக்கு யாரிடமும் தனி மனிதப் பகை என்றும் கிடையாது" - திரு நெடுமாறன், 'புதிய தலைமுறை' நேர்காணலில்)

        இந்தக் கட்டத்தில் சரியான ஒரு பங்களிப்பைச் செய்து, ஈழப் போராட்டத்திற்குத் தான் சார்ந்திருந்த தி.மு.க. வின் ஆதரவைப் பெற்றுத் தந்திருக்க வேண்டிய திரு வைகோ, அதனைத் தனக்கு மட்டுமான ஒரு செல்வாக்காக மாற்றிக் கொள்ள முனைந்தார். அது குறித்த செய்திகளை அடுத்து விரிவாகப் பார்க்கலாம்.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

4 comments:

 1. தமிழீழ விடுதலைப் போருக்காக தமிழ்நாட்டில் முதன்முதலாய் "தற்கொடை" தந்தவர் தி.மு.க தொண்டர் உதயசூரியன் என்பது இந்த தலைமுறை தமிழீழ ஆர்வலர்கள் அறிந்திராத ஒன்று. எங்கள் வரலாற்றுப் பேராசிரியரே, தங்கள் சேவை தொடரட்டும்...

  ReplyDelete
 2. வேடசந்தூர் இரவி,
  ஈழம்-தமிழகம்-நான் எனும் இத்தொடரில் வாராவாரம் தாங்கள் தரும் ஆதாரப்பூர்வமான செய்திகளையும், அதற்கான வரவேற்பையும், போலி வேடதாரிகளின் எழுதுகோல்கள் மவுனித்து விட்டதையும், பார்க்கும் பொழுது இத்தொடரின் தலைப்பை "ஈழம்- தமிழகம்- உண்மைகள்" என மாற்றம் செய்வது கூட பொருத்தமாய் இருக்கும் என எண்ணுகிறேன்.
  இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஈழம் பற்றிய செய்திகளைத் தெளிவாக உணர்த்துவதன் மூலம் தான் அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஒரே குடையின் கீழ் இளைஞர்களை திரட்ட முடியும்.
  இந்த தொடர் நிறைவடையும் போது ஈழப்போராட்டத்தில் எவரின் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்பதும், ஈழப்பிரச்சனையை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்பவர்கள் யார் என்பதும் தெளிவாக தெரிந்துவிடும்.
  உண்மைகள் ஊர்வலம் வரத் தொடங்கிவிட்டது.
  இனி எத்துனை போலி மனிதர்களின் முகமூடியை உங்கள் எழுது கோல் கிழித்தெரிய காத்திருக்கிறதோ!
  எழுதுங்கள், எழட்டும், இளைஞர் கூட்டம்.

  ReplyDelete
 3. அய்யாவின் இக்கட்டுரைத் தொடர் அதிருது. கழகத்தின் - கலைஞரின் மீதான களங்கம் துடைக்கும் இத்தொடர் எழுதும் உங்கள் கைகளுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள். ஈழச்சிக்கலை உள்ளது உள்ளபடி உண்மையாக எடுத்துரைக்கும் உங்கள் நேர்மைக்கும் நெஞ்சுறுதிக்கும் என் பாராட்டுகள்.

  ReplyDelete
 4. முதலில் உயிர் நீத்த உதயசூரியன் மட்டுமல்ல...எண்ணற்ற பேர்கள் இன்றளவும் ஈழம் மலர தம் உள்ளார்ந்த ஆதரவு அளிப்பவர்கள் தி.மு.கழகத்தை சேர்ந்தவர்களே!!

  உதயசூரியன் என்ற ஒரு தியாகச்சுடரின் வரலாறு மறைத்து தங்களுக்கு ஆதரவான ”முத்துக்குமார்” பெயரை மட்டும் ஒளிரச் செய்வது எத்தனை துரோகம். இருவரின் தியாகமும் மதிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் இருக்கிற இந்த நெடுமாறன், சீமான் போன்றவர்கள் எத்தனை சுயநலவாதிகள் என்பது இயல்பாக விளங்குகிறது.. முத்துக்குமார் இறுதி சடங்குக்கு சென்ற நாகரீகம் பேசும் வைகோ கூட ”உதயசூரியனை” பற்றி தெரிந்திருந்தும் அவன் திமுக உறுப்பினன் என்பதால் சரளமாக மறந்துவிட்டார் போலும்.

  அருமை அய்யா நிறைய யோசிக்க வைக்கிறது உங்கள் பதிவு.

  ReplyDelete