தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 27 October 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (9)


ஈழச் சிக்கல், வைகோ சிக்கல் ஆனது 


எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அ.தி,மு.க. இரண்டாக உடைந்தது. சட்டமன்றத்தில் அப்போது அக்கட்சிக்கு 130 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுள், எம்.ஜி.ஆரின்   மனைவியான ஜானகி தலைமையிலான அணிக்கு 97 பேர் ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 33 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதனால் வி.என். ஜானகி 1988 ஜனவரியில் தமிழக முதல்வரானார். எனினும் அந்த ஆட்சி நிலைக்கவில்லை. மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால், 24 நாள்களில் அது கலைக்கப்பட்டு விட்டது.  அதன் பிறகு அக்கட்சி உள்கட்சிச் சண்டையிலேயே சிக்கித் தவித்தது. ஈழம் பற்றிய சிந்தனைக்கெல்லாம் அங்கு இடமில்லாமல் போய்விட்டது.
                                 
தி.மு.க., தி.க. விற்கு அடுத்த நிலையில் தமிழ் அமைப்புகள் ஈழ ஆதரவை முன்னெடுத்தன. நான் அமைப்பாளராக இருந்த 'ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின்' சார்பில் 1988 ஆம் ஆண்டு முழுவதும் பல ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அவ்வமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 'ஈழ ஆதரவு ஊர்திப் பேரணி' தமிழ்நாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1988 ஜனவரி 26 ஆம் நாள், சென்னை, சிம்சன் பெரியார் சிலைக்கு அருகிலிருந்து தொடங்கிய அப்பேரணி, 29 ஆம் நாள் குமரியில் நிறைவடைந்தது.  அப் பேரணிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் வி.சி. குகநாதன், கவிஞர் மு.மேத்தா, நான் ஆகிய மூவரும் முன்னின்று நடத்தினோம். 

பேரணியைச் சென்னையில் கலைஞர் தொடக்கி வைக்க, குமரியில் நெடுமாறன் முடித்து வைத்தார். திருச்சி, மதுரை, நாகர்கோயில் ஆகிய ஊர்களில் பெரிய அளவில் பொதுக்கூட்டங்களும், மற்ற ஊர்களில் எல்லாம் சிறு சிறு கூட்டங்களும் நடத்தப்பட்டன. திருச்சிக் கூட்டத்தில். கி. வீரமணியும், உடல் நலமில்லாத நிலையிலும் அன்பில் தர்மலிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினர். மதுரையில் சாலையாரும், காவேரி மணியமும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில், அப்போது அ .தி.மு.க.வில் இருந்த வலம்புரி ஜான் சிறப்புரை ஆற்றினார். அந்தக் கூட்டத்தில்தான், ஜெயலலிதா குறித்துத் தனிப்பட்ட முறையில் பழ. கருப்பையா தாக்கிப் பேசியதால் ஒரு சிறு கலவரம் ஏற்பட்டது. வலம்புரி ஜான் தலையிட்டுச்   சமாதானம் செய்தார்.

பேரணியைத் தொடக்கி வைக்க மட்டுமே கலைஞரை அழைத்திருந்தோம். அதற்கு இசைந்ததோடு மட்டுமின்றி, அனைத்து ஊர்களிலும் உள்ள தி.மு.க.வினர் பேரணியை வரவேற்று ஊக்கப்படுத்துமாறு அவர் அறிக்கையும் கொடுத்தார். அதனால் எல்லா ஊர்களிலும் தி.மு.க.வினர், ஊர் எல்லையில் காத்திருந்து வரவேற்றுப் பேரணிக்குச் சிறப்பு செய்தனர். அப்பேரணி ஈழ ஆதரவுப் பேரணி என்று சொல்லப் பட்டாலும் முழுமையாகவே அது விடுதலைப் புலிகள் ஆதரவுப் பேரணிதான். போகின்ற வழியில் எல்லாம் நாங்கள் பிரபாகரன் படங்களைக் கொடுத்துக் கொண்டே சென்றோம். புலிகள் ஆதரவு முழக்கங்களே எங்கும் ஒலித்தன. அனைத்துக்கும் ஆதரவு தந்தவர்கள் தி.மு.க.வினர் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.                                  

1989 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிற்குப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. நான்கு அணிகள் களத்தில் நின்றன. தி.மு.க., ஜனதா தளம், சி.பி.எம். ஆகியன ஓர் அணியாகவும், அ.தி.மு.க.(ஜெ),சி.பி.ஐ. இணைந்து இன்னொரு அணியாகவும் நின்றன. இவை தவிர, அ .தி.மு.க.(ஜா), சிவாஜி கணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணி ஆகியவை மூன்றாவது அணியாகப் போட்டியிட, காங்கிரஸ் அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.  தேர்தல் முடிவில் மொத்தம் 169 இடங்களைப் பெற்று (தி,மு.க. மட்டும் 150) தி.மு.க. ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா அணி  30 (27+3) இடங்களிலும், காங்கிரஸ் 26 இடங்களிலும், ஜானகி அணி இரண்டே இரண்டு இடங்களிலும் வெற்றி  பெற்றன. அதன் பிறகு ஜானகி அணியும், சிவாஜியின் த..மு.மு.க.வும் காணாமல் போய்விட்டன.

எதிர்க் கட்சியில் இருக்கும்போது கலைஞர் ஈழம் பற்றிப் பேசுவார், ஆளும் கட்சி ஆகி விட்டால் அதுகுறித்து வாயே திறக்க மாட்டார் என்று  ஒரு குற்றச் சாட்டு அடிக்கடி அவர் மீது சொல்லப் படுவதுண்டு.அது உண்மையா இல்லையா என்பதை இங்கு நாம் பார்க்கலாம். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே, 15.02.1989 அன்று சட்டமன்றத்தில், அ.தி.மு.க. ஈழம் பற்றிய பிரச்சினையைக் கிளப்பியது. அன்று அக்கட்சியின் உறுப்பினராக இருந்த சாத்தூர் (KKSSR) ராமச்சந்திரன்,ஆளும் கட்சி ஆன பிறகு, ஈழம் குறித்த  தி.மு.க. வின் நிலை என்ன என்று கேட்டார். அதற்கு மிகத் தெளிவாகக் கலைஞர் கூறிய விடை,"எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை" என்பதுதான்.

              
இக்காலகட்டத்தில்தான் மிக முதன்மையான சில மாற்றங்கள் வரலாற்றில் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இலங்கையிலும் பொதுத் தேர்தல் முடிந்து, பிரேமதாசா  அதிபர் ஆனார். அவர் இந்தியாவிற்கு எதிரான நிலை எடுத்ததோடு, புலிகளோடும் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கினார். இதனை இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவால் பொறுக்க முடியவில்லை. புலிகளோடு இந்தியாவே பேசலாம் என்ற எண்ணத்திற்கு  வந்தார்.  தமிழக முதலமைச்சர் கலைஞருடன் பிரதமர் பேசினார். இது குறித்துப் பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், 'ஈழத் தமிழர் எழுச்சி' என்னும் தன்  நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"பிரபாகரனுடன் பேச யாழ்ப்பாணத்திற்கு தி.மு.க. ஒரு குழு அனுப்பினால் அதற்கு மத்திய அரசு உதவும் என்றார் (ராஜீவ்). கலைஞரை மறுநாளும் சந்திக்க விரும்பினார். அதன்படி கலைஞர் மீண்டும் தம்மைச் சந்தித்தபோது தி.மு.க குழு பற்றி நினைவூட்டினார். யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டுச் சென்னை திரும்பிய கலைஞர், முரசொலி மாறன் முதலானோருடன் ஆலோசித்தார். மாறன் தலைமையில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன் ஆகிய 3 எம்.பி.க்கள் குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப முடிவாயிற்று." (பக்.199)

இந்தப் பேச்சு வார்த்தை குறித்தே, கடந்த மே 15 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற என் நூல் வெளியீட்டு விழா மேடையில் கலைஞர் குறிப்பிட்டார். அம்முயற்சி நடைபெற்றிருக்குமானால் சில நல்ல திருப்பங்கள் நடந்திருக்கக் கூடும். 1972 தொடங்கி, தமிழ்நாட்டில் வலிமையான  கட்சிகள் தி.மு.க., அ .தி.மு.க. இரண்டு மட்டுமே. இவை இரண்டில் ஒன்றின் ஆதரவையாவது பெறுவதன் மூலமே வெகு மக்களைச் சென்றடைய முடியும். எம்.ஜி.ஆருக்குப் பிறகு இப்படி ஒரு நிலை கனிந்து வந்த நேரத்தில், புலிகளோடு நெருக்கமாக இருந்த  வைகோ, தி.மு.க.வில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, இருவருக்கும்  இடையில் ஒரு பெரிய இணைப்பை  ஏற்படுத்தியிருக்க முடியும்.  ஆனால் அவரோ, யாருக்கும் சொல்லாமல், தனித்து ஈழத்திற்குப் பயணப்பட்டார். அந்த ரகசியப் பயணத்தால், அரசு சார்பாகச் செல்லவிருந்த தி.மு.க. குழுவின் பயணம் நின்றுபோய் விட்டது.
 
சமாதான முயற்சிகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வைகோவின் ரகசியப் பயணமே அனைத்துச் செய்தி ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியாயிற்று. பல நாள்களுக்குப் பிறகே, வவுனியாவிலிருந்து கலைஞருக்கு அவர் எழுதிய கடிதம் கலைஞரிடம் கொடுக்கப்பட்டது. அதனைக் கலைஞர் வெளியிட்டபோது, செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ‘சட்டத்திற்குப் புறம்பாக இலங்கை சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான வை. கோபால்சாமி மீது என்ன நடவடிக்கை’ என்று கேட்க, “அவர் மீது உள்ள தணியாத பாசத்தின் காரணமாக, அவர் பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்று தவித்துக் கொண்டிருப்பதாக” முதல்வர் கூறினார் (தினமணி 04.03.1989 )

 
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அவர் பயணம் குறித்துக் கேள்விகள் எழுந்தன. அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குழந்தைவேலு, வைகோவின் சட்டப்புறம்பான கடல் பயணத்தை (“illicit sailing”) கருணாநிதி மறைப்பதாகக் குற்றம் சாட்டினார் (The Hindu, 08.03.1989-P.9).  
 
இந்தியக் குடியரசுக் கட்சி(கவாய்)யின் சார்பில், வைகோவை மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ஏ. சேப்பன் அறிக்கை வெளியிட்டார். ( தினமணி - 08.03.1989-பக்.3).
 
06.03.1989 அன்று சென்னையில் நடைபெற்ற, தமிழர் தேசிய இயக்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு, அவ்வியக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மட்டுமே, வைகோவின் மீது எவ்வித நடவடிக்கையும் கூடாது என்று கூறினார். மேலும், “தமிழீழம் என்ற கொள்கைக்குத் தி.மு.க. தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அந்தக் கொள்கையிலிருந்து அக்கட்சி பின்வாங்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
வைகோ, ஈழத்தில் இருந்தபோதே, அவர் மீது எந்த நடவடிக்கையும் தேவை இல்லை என்றும், அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், இந்திய அரசு உடனே தலையிட்டு அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.(The Hindu,02.03.1989)
 
இச்சூழலில், திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலைஞர் அளித்த பேட்டி முகாமையானது.

கோபால்சாமியை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “தி.மு.க. அதனை ஏற்காது. மத்திய அரசும் உடன்படாது. உடன்படுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கலைஞர் விடை கூறினார். 

இப்படியாக ஈழச்சிக்கல் என்பது, வைகோ சிக்கலாக மாறிப்போயிற்று. ஈழ ஆதரவு, புலிகள் ஆதரவு எண்ணம் கொண்ட இளைஞர் கூட்டம், தி.மு.க. என்னும் பெரிய கட்சியை நம்பாமல், வைகோ என்னும் தனி மனிதர் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியது. வைகோவின் ஈழப்பயணம், தமிழ்நாட்டில் அவருடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவியது.
 

ஆனால், சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா? தன் பயண நோக்கம் குறித்து அவர் கீழ்வருமாறு விளக்கினார். 
“காலமறிந்து, இடமறிந்து, மாற்றார் வலியறிந்து, வியூகம் அமைப்பதே சாலவும் சிறந்தது என்று உங்கள்(கலைஞர்) உணர்வுகளை அவருக்கு (பிரபாகரனுக்கு) தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலைதான் என் ஈழப்பயணத்திற்குக் காரணம்” (தினமணி-04.03.1989-பக்.5)
 
“I undertake this journey to Eelam only to let him know that you will act in time, at the right place and through the right person”
(The Hindu - 04.03.1989-P.10)
 
ஆக மொத்தம், தி.மு.க.வின் தூதுவராகவே தான் சென்றதாகவும், அதனைத் தி.மு.க. தலைவருக்கே சொல்லாமல் சென்றுவிட்டதாகவும் வைகோ கூறினார். அந்தப் பேட்டியில், இன்னொரு மிக முக்கியமான செய்தி ஒன்றும் உள்ளது. தலைவர் பிரபாகரன் கலைஞரையே நம்பிக்கைக் கீற்றாய் எண்ணுவதாகவும்  கூறுகின்றார்.
 
“He(prabhakaran) wrote to you (kalaignar) from the clutches of death that you are the only silver lining in the dark clouds all round”
(The Hindu, 04.03.1989-P.10)
 
மேலும் தொடர்ந்து கூறுகையில், “நான் கலைஞரின் அனுமதி பெற்றுத்தான் வந்திருப்பேன் என்று பிரபாகரன் நினைத்துக் கொண்டார்” (முரசொலி - 06.03.1989) என்கிறார். எவ்வாறாயினும், தலைவர் மற்றும் கட்சியின் அனுமதி பெறாமல் பயணம் மேற்கொண்டமைக்குத் தன் வருத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பிறகு தொடர்ந்தும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே கலைஞர் தன் கருத்துளை வெளியிட்டுள்ளார். புலிகளைப் புறந்தள்ளிவிட்டு, EPRLF மூலம் பிரதமர் ராஜீவ் பேச்சு வார்த்தையைத் தொடர் முயல்கிறார். அப்போது வடகிழக்கு மாநிலங்களின் (பொம்மை) முதல்வராக இருந்த வரதராஜபெருமாள் இந்தியாவிற்கு வரவழைக்கப்படுகிறார். அவர் கலைஞரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்கிறார்.
 
‘ஈழச்சிக்கல் குறித்து வரதராஜபெருமாளுடன் பேசினீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறிய முதல்வர் கலைஞர், “இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஓர் இணக்கமான நிரந்தரத் தீர்வு காணத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன் கலந்து பேச வேண்டியது அவசியமான ஒன்றாகும்” எனத் தெளிவுபட உரைக்கின்றார். (தினமணி - 14.03.1989)
 
“LTTE should be in talks - says Karunanidhi”
(The Hindu - 14.03.1989-P.1)
 
புலிகள் இல்லாமல் பேச்சுவார்த்தை பயனில்லை என்று கலைஞர் கூறியதை, ‘இந்து’ ஆங்கில நாளேடு முதல் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளது. உடனே, புலிகளைத் தன் அருகில் வைத்துக் கொண்டு, கலைஞர் ராஜீவ் காந்தியை மிரட்டுகின்றார் என்பது போலத் தினமணி, ஒரு கேலிப்படம் தீட்டியது.
(தினமணி - 19.03.1989 -பக்.5)
 
எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் மட்டுமின்றி, ஆளுங்கட்சியாக இருந்த போதும், அக்கருத்தில் மத்திய அரசு உடன்பாடு இன்றி இருந்த நேரத்திலும், கலைஞர் ஈழ ஆதரவை வெளிப்படுத்தினார் என்பதற்கு இவை மட்டுமல்ல, இன்னும் பல சான்றுகள் உள்ளன.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

9 comments:

  1. ஊடகங்களில் வெளிவந்த குறிப்புகளிலிருந்து விடுதலைப்புலிகளுக்கும் ஈழ மக்களுக்கும் கலைஞர் அவர்கள் தெரிவித்த ஆதரவை , வெளிப்படுத்தும் அய்யா அவர்கள். 2009 ஆம் ஆண்டு காங்கிரஸின் துணையோடு ஆட்சி நடத்திக்கொண்டிருந்த போது தொலைகாட்சி பேட்டி ஒன்றில் கலைஞர் கூறியதையும் பின் மறுநாள் மறுப்பு வெளியிட்டதையும் ஊடகங்கள் வெளியுடுள்ளன.அந்த நாளேட்டு குறிப்புகளையும் கலைஞரின் இந்த முன்னுக்கு பின் முரணான நிலைபாட்டை பற்றிய அய்யாவின் விளக்கத்தையும் இந்த தொடரின் பின் பகுதியில் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்

    நிருபர் : பிரபாகிரனை தீவிரவாதியாக பார்கறீர்களா ? .
    கலைஞர் : அவர் என் நல்ல நண்பர். நான் ஒன்றும் தீவிரவாதி இல்லை . விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லை .விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம் .அதற்கு அவர் காரணம் ஆகா முடியாது.விடுதைப்புலிகளின் குறிக்கோள் சரியானதே. அனால் அதை அவர்கள் அடைவதற்கான வழிமுறைகள் தவறானது. யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால் நான் வருத்தப்படுவேன்.

    மறுநாள்

    கலைஞர் : என் கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளது .நான் அவ்வாறு கூறவில்லை . பிரபாகரன் விடுதலைப்போராட்ட வீரராக தொடங்கி , பிறகு தீவிரவாதியாக மாறி விட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குறிக்கோள் சரியாக இருந்தாலும் , அதை அவர்கள் அடைய பின்பற்றிய வழிமுறை தவறானது . ராஜீவ் காந்தியின் மரணத்தை இந்த நாடு மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

    I don't see Prabhakaran as a terrorist, says Karunanidhi

    http://articles.timesofindia.indiatimes.com/2009-04-20/india/27997522_1_prabhakaran-m-karunanidhi-ltte-boss


    Never said LTTE not a terror group : Karuna

    http://zeenews.india.com/election09/story.aspx?aid=525034

    நன்றி
    தே ரகு

    ReplyDelete
  2. Dear Mr Raghu, If want to see the right version of what Mr Karunanithi communicates has to be seen only from " Murosoli" which will be his official News paper. Usually, his words are wrongly interpreted purposefully by the leading news papers. Translation is the tool they use for blaming the wrong interpretation.

    Iam sure Subvee Sir would give you the right explantion with the details.

    ReplyDelete
    Replies
    1. Thanks Nallayen for your suggestion.The problem here is most of the people in TN don't read Murasoli.Its read mainly by DMK folks.People who are not biased towards any party would definitely not opt for Murasoli or Dr.Namadhu MGR.I can understand that certain newspapers try to pull kalaignar's legs whenever they get an oppurtunity.But terming most of the newspapers barring Murasoli as exaggerators is definitely not right.On this particular prabakaran issue ,literally all newspapers criticized kalaignar's double standards.So the issue can't be taken lightly.

      Thanks,
      Ragu

      Delete
  3. The above facts are conveniently hidden for the sake of benefit of certain section of " So called Eelam supporter" and they propagate falsehood to public inorder to defame Kalaignar.
    Sir your endorsements on the Flawless History is the need of the hour. Because, those who know these facts and who are still alive are not opening their mouth and has shut their minds for selfish motive.

    ReplyDelete
  4. வைகோ அவர்களின் ஈழநலத்தில் சுயநலமும் கலந்திருப்பதையும், தன்னை எப்போதுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் குணமும் இக்கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது. பெரியார் சொன்னதைப் போல தலைவர் என்றொருவர் இருக்கையில் அவர் உத்தரவின்றி நன்மையே செய்திருந்தாலும் அந்த நபர் கண்டிப்புக்கு உரியவரே!

    ReplyDelete
  5. ஈழம் குறித்த தமிழக மக்களின்
    அறியாமைப் பிணிக்கு மருந்தாகிறது
    அய்யாவின் அறிவுப் பணி...

    ReplyDelete
  6. அருமை அய்யா ,ஈழ மக்களின் தோல்விக்கு யார் காரணம்,விடுதலை புலிகளை தவறாக வழி நடத்தியவர் யார் யார் என்று உங்கள் கட்டுரை தெளிவாக கூறுகிறது ,இதை நாங்கள் முகநூளில் பயன்படுத்தி கொள்ளலாமா அய்யா

    ReplyDelete
  7. வைகோ அவர்களின் முகத்திரையை கிழிகிறது இந்த கட்டுரை ,விடுதலை புலிகளை தவறாக வழிநடத்தியவர்கள் யார்,இன்றைய ஈழ மக்களின் நிலைக்கு யார் காரணம் என்பதும்,ஈழ மக்களின் மீது கலைஞர் அவர்கள் கொண்டு இருந்த பற்றும் இதில் இருந்து தெளிவாக தெரிகிறது

    ReplyDelete
  8. Reading this in 2018(learnt thrw don ashok n FB) had lot of anger of kalaingar by 2009 , after deep web reading, extensive search on Eelam it relented , 2009 eelam war created lot of agony this is thethe case of thousands of TN youngsters, but you have to accept by 2008 mid Sinhala govt was sure of victory and would not stop at any interference, the talk of stopping the war means surrender of tiger leaders to a 3rd world party , UN and to safeguard people, that was the only way. there was no means for LTTE to survive after mid-2008 even US, west stopped the war, but surely could have saved countless lives and prevented them from concentrated camps to a better living but all this should have been done when you have something to offer. One glaring truth is Vaiko used ltte and Eelam for his growth, is it true that vaiko stopped a peace initivative by Chindambaran and dmk by 2009 saying bjp will come to power and save tigers?? if so he is guilty,,

    ReplyDelete