தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 3 November 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (10)

அவாளால் கலைக்கப்பட்டது ஆட்சி
 
1989 ஜுலை 13 அன்று, தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில், மதுரை, தமுக்கம் திடலில், அய்யா நெடுமாறன்தமிழீழ ஆதரவு எழுச்சி மாநாடுஒன்றைப் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருந்தார். அம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற, ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட, தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். ஜார்ஜ் பெர்னான்டஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அம்மாநாட்டின் தொடக்க உரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சி.குகநாதனும், நானும் அன்று காலை, மதுரை தொடர்வண்டி நிலையத்தில் வந்திறங்கிய போது, அன்றைய நாளேடுகள் ஓர் அதிர்ச்சிச் செய்தியைத் தாங்கி நின்றன.

இலங்கையில் அமிர்தலிங்கமும் வேறு சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்என்னும் செய்தி, எங்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மாநாட்டிற்குக் கூட ஏதேனும் தடைவரக்கூடும் என்று அஞ்சினோம். விடுதலைப் புலிகள்தான் அக்கொலையைச் செய்திருப்பார்கள் என்று நாளேடுகள் தங்கள் ஊகத்தை எழுதியிருந்தன. எங்களுக்கு நம்பிக்கையில்லை. நெடுமாறன் அவர்களைச் சந்தித்துக் கேட்டோம். “அவரை  ன் புலிகள் சுடப்போகின்றனர். அரசாங்கமே செய்துவிட்டுப் புலிகள் மீது பழிபோட நினைத்திருக்கலாம்என்றார்.

ஈழச்சிக்கல் குறித்து அவர் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்பும் நிலையில் அன்று நாங்கள் இருந்தோம். மாநாடு எந்தத் தடையுமின்றி நடைபெற்றது. மதியம் உரையாற்றிய நான், நெடுமாறன் அவர்கள் சொன்ன செய்தியை அழுத்தமாய் எடுத்துரைத்தேன். கூட்டத்தினர் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

அமிர்தலிங்கம் இலங்கையில் கொலை செய்யப்பட்டதால், தமிழ்நாட்டில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் 90ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, தி.மு.கழக ஆட்சிக்குப் பெரும் சிக்கலை உருவாக்கியது. 

1989ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், ராஜீவ் காந்தி தோல்வியடைந்தார். ஜனதா தளம் வெற்றி பெற்று, வி.பி.சிங் இந்தியப் பிரதமரானார். அக்கூட்டணியில் தி.மு.. அங்கம் வகித்ததால் முரசொலி மாறன் மத்திய அமைச்சர் ஆனார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதே இந்திய அமைதிப் படைக்கு எதிராக இலங்கைப் பிரதமர் பிரேமதாசா குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். உங்கள் படை எங்கள் நாட்டில் ஏன் என்று அவர் கேட்டார். வேறு வழியின்றி, 30.03.1990க்குள் அமைதிப்படை முழுவதும் திரும்பப் பெறப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, வி.பி.சிங் காலத்தில் அது நடைமுறைக்கு வந்தது. 

அப்போதுதான் இரண்டு குறிப்பிடத்தக்க செய்திகள் தமிழ்நாட்டில் நடந்தன. சென்னையில் வந்திறங்கிய இந்திய ராணுவ வீரர்களை வரவேற்கச் செல்வதற்கு, முதலமைச்சராக இருந்த கலைஞர் மறுத்துவிட்டார். "என் தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு வரும் ராணுவத்தை நான் வரவேற்கச் செல்ல மாட்டேன்" என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். அதனை அப்போதே எதிர்க்கட்சிகள் பெரிய பிரச்சினை ஆக்கின.

அடுத்ததாக இன்னொரு சிக்கல் எழுந்தது. அமைதிப்படை வெளியேறிய பின்பு எங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று கூறிய .பி.ஆர்.எல்.எப். மற்றும் .என்.டி.எல்.எப். உறுப்பினர்கள் தமிழகம் வர விரும்பினர். அதற்கு மத்திய அரசும் இசைந்தது. ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் தமிழ்நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார். அதனையும் எதிர்க்கட்சிகள் பெரிய சிக்கல் ஆக்கினர்.

தி.மு.. டெலோ அமைப்பைத்தான் ஆதரித்தது என்பதும், அவ்வமைப்பின் தலைவர் சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கூட்டம் நடத்தியது என்பதும்  அனைவரும் அறிந்த செய்தி. எனினும், ஒரு கட்டத்திற்குப் பின், புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவே தி.மு.. அரசு பேசியது. அதனால் எதிர்ப்புகளையும் பெற்றுக்கொண்டது.

முதலமைச்சர் எதிர்ப்பு காரணமாக அவ்விரு அமைப்பினரையும் ஒரிஸ்ஸாவில் தங்குமாறு மத்திய அரசு கூறிவிட்டது  இந்நிலையில்தான் இன்னொரு பெரிய சிக்கல் கலைஞர் தலைமையிலான தி.மு.. அரசுக்கு ஏற்பட்டது.

20.06.1990ஆம்  நாள் நாளேடுகள் அனைத்தும்,"ஈழப் புலிகள் திடீர்த் தாக்குதல்: பத்மநாபா உள்பட 15 பேர் சுட்டுக்  கொலை" என்னும் செய்தியை முதல் பக்கத்தில் தாங்கி வந்தன. அப்போது நான், திருச்சி மத்திய சிறையில் இருந்தேன். நெடுமாறன் தலைமையில். ஒரு மாநாட்டிற்கான தடையை மீறிக் கைது செய்யப் பட்டிருந்தோம் நெடுமாறன், பெருஞ்சித்திரனார், சாலையார், எம்.கே.டி.சுப்ரமணியம், கி. வெங்கட்ராமன் உள்ளிட்ட 87 பேர் அன்று ஒன்றாய்ச் சிறையில் இருந்தோம். எனக்குள் கலைஞர் எதிர்ப்பு வளர்க்கப்பட்ட நேரம் அது. 

19ஆம் தேதியன்றே பத்மநாபா கொலையுண்ட செய்தியை வானொலி மூலம் சிறையில் இருந்த நாங்கள் அறிந்தோம். செய்தியைக் கேட்டதும் ஒரே கைதட்டல். தமிழீழ மக்களைக் கொன்றொழித்த அமைதிப் படைக்கு ஆதரவு தெரிவித்த துரோகிகள் கொல்லப்பட  வேண்டியவர்களே என்பதுதான் அப்போது எங்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் வெளியே நிலைமை வேறு விதமாக மாறிக் கொண்டிருந்தது. அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சிக்கு எதிராகத் திரண்டன. தோழமைக் கட்சியான சி.பி.எம். கூட  அரசைக் கண்டித்தது. மேனாள்  மத்திய அமைச்சரான .சிதம்பரம், முதலமைச்சரும், காவல் துறைத் தலைவர் துரையும் உடனே பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விட்டார்.

இந்திய ஐக்கியப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன்"சட்ட-ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்ட தமிழக அரசு மீது மத்திய அரசு  இப்பொழுதாவது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒரு காரசாரமான அறிக்கையை வெளியிட்டார். பா...வின் அகில இந்தியத் துணைத் தலைவராக இருந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, "தமிழக அரசின் கன்னத்தில் கொடுக்கப்பட்ட அறை  இது" என்றார்.

.தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றார். 
                       
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஊடகங்கள் அனைத்தும் ஆட்சிக்கு எதிராகத் திரும்பின. கடமை தவறிய தமிழக அரசு என்று தினமணி தலையங்கம் தீட்டியது. அத் தலையங்கத்தில்,

"புலிகளிடம் நட்புக் காட்டிய தமிழக அரசு, பிற அமைப்புகள் சென்னையில் இறங்க விடாமல் மறுத்து, ஒரிசாவிற்கு அனுப்பியது.இந்திய ராணுவத்தையே எதிர்த்தவர்கள் என்று வேறு முதல்வர் அவர்களைப் (புலிகளை) புகழ்ந்து பேசினார்"



என்று குற்றம்  சாட்டியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, "GROSS DERELICTION' என்னும் தலைப்பில் மிகக் கடுமையாகத் தலையங்கம் எழுதியது. அந்தத் தலையங்கத்தில், 
                         
"That the Tamil Nadu Government has been ostentiatiously indulgent to the LTTE...."
                         
"The refusal of the Chief Minister to allow the EPRLF and ENDLF groups and their supporters to land in Tamil Nadu forced the Central Government to house them in Orissa"
                         
"It is no longer possible to gloss over the fact that the Tamil Nadu Government and Mr.Karunanidhi have allowed a highly motivated, armed group with fascist proclivitiies like the LTTE to feel that it is free to carry out itts vendettas against its political enemies on the soil of Tamil Nadu and India"


என்றெல்லாம் மிகக் கடுமையாக எழுதியது. ஆனால் ஒரிசாவிற்கு அனுப்பப்பட்ட பத்மநாபா ஏன் ரகசியமாகத் தமிழ்நாட்டிற்குள் வந்தார் என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை. 

அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது. புலிகளின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் தி.மு.. அரசைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், புலிகளின் வெளிப்படையான ஆதரவாளரான நெடுமாறன், தி.மு..வையோ, கலைஞரையோ ஆதரித்து எங்களிடம் சிறையில் பேசவில்லை. ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை.

பத்மநாபா கொலையை முன்வைத்து, ஆட்சியைக் கவிழ்க்கும் வேலை முனைப்பாக நடந்தது. 27.06.90 அன்று, சென்னை வந்த அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனிடம், சுதந்திரத் தியாகிகள் என்ற பெயரில் பலர் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர். இடமின்றி வெளியில் நின்றவர்களைக் கூட உள்ளே அனுமதிக்கும்படி குடியரசுத் தலைவர் கூறினார். அவர்கள் மனுவை அங்கேயே நிதானமாகப் படித்துச் சில இடங்களைக் குறித்துக் கொண்டார் என்று நாளேடுகள் தெரிவித்தன  அடடா, மக்கள் குறை தீர்ப்பதில் அவருக்குத்தான் எத்தனை ஆர்வம்!

குடியரசுத் தலைவர் சென்னை வந்த அதே நாளில், எதிர்க் கட்சிகள் ஊர்வலம் நடத்தி, ஆளுநரிடம் மனு ஒன்றைக் கொடுத்தன. அப்பேரணிக்கு நாவலர் நெடுஞசெழியனும், வாழப்பாடி ராமமூர்த்தியும் தலைமை தாங்கினார். 


தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் தி.மு..விற்கு எதிரான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. 1990 ஜூலையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி, 
                  
 "தமிழ்நாட்டில் எல்.டி.டி..க்கும் தி.மு..வுக்கும் இடையே கூட்டு இருக்கிறது.மாநில முதலமைச்சர் திரு மு. கருணாநிதியின் செயல்திட்டம் மிகத் தெளிவானது என்று எனக்குக் கூறப்பட்டது. ஸ்ரீலங்காவில் நிலைமை வெற்றிபெற்றால் தி.மு.. தனது இயக்கத்தைத் துவங்கும். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதி, குறிப்பாகக் கடலோரப் பகுதி ஏற்கனவே பறிபோய் விட்டது. அங்கே எல்.டி.டி.. தான் கோலோச்சுகின்றது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து தி.மு.. அச்ச உணர்வில் உள்ளது. முதலமைச்சரின் ஆசிர்வாதத்தோடு தி.மு.. ஏற்கனவே ஒரு இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. கடலுக்கு அப்பாலிருந்து அதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எல்.டி.டி. தனது முயற்சியில்  வெற்றி பெற்றால், இங்கே தி.மு..வினர் பிரிவினை இயக்கத்தைத் துவக்குவார்கள்  என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன"
                      (சான்று :அருணன், "காலந்தோறும் பிராமணியம்"-பாகம் 8 - பக்கம் 16)

என்று பேசியுள்ளார். இத்தனை கற்பனை வளம் கொண்ட ராஜீவ், நாவலாசிரியராக நமக்குத் தோற்றமளிக்கின்றார். ஆனால் அதனைத் தி.மு.. வின் எதிர்காலத் திட்டம் என்று நாளேடுகள் எழுதின. மக்கள் நம்பினார்கள்.

ஒரே ஆண்டில்,மத்தியில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சந்திரசேகரைப் பொம்மைப் பிரதமர் ஆக்கினார்கள். சட்ட அமைச்சர் சுப்ரமணியன் சாமி, குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். பிறகு கேட்கவா வேண்டும்? அவாளின் வேலைகள் விரைந்து நடந்தன.

1991 ஜனவரி 30 ஆம் நாள், ஆளுநர் பர்னாலாவின் ஒப்புதல் கூட இல்லாமல், தி.மு.. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தை மத்திய அரசு தெளிவாகவே குறிப்பிட்டிருந்தது. 

"இலங்கையைத் தாயகமாகக் கொண்டதும், தமிழ் ஈழம் எனும் தனி நாடு காண ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்தி வருவதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்நாட்டில் தனக்கென்று சில பகுதிகளில் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டு சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததாகவும், எதிர் காலத்தில் தமிழக அரசையே பலவீனப் படுத்தக் கூடிய அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் தி.மு.. அரசு மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இந்தக் காரணத்துக்காகவே மாநில அரசு  கலைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப் பட்டது"

அறிவிப்புக் கண்டு புலிகள் எதிர்ப்பாளர்கள் மகிழ்ந்தனர். புலிகளின் ஆதரவாளர்கள் ஒரு அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை.

ஒரு மாதத்தில் ஜெயலலிதா டில்லி சென்றார். பிரதமரைச் சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடினார். அவர் பங்குக்கு அவரும் தி.மு..வையும், புலிகளையும் டில்லியில் இழிவுபடுத்தினார்.

"உரிய நேரத்தில்,தன் 'தனியார் படை'யாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், கருணாநிதி, விடுதலைப் புலிகளை ஊக்குவித்தார்"
                       
"Ms Jayalalitha alleged that MR Karunanidhi was encouraging the LTTE to use it as a 'private army' at an appropriate time" (The Hindu, 08.02.1991 -p.4)
                       
என்று இதழாளர்களுக்குப் பேட்டி அளித்தார். கலைஞரை விடுங்கள். ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமான புலிகளை இழிவுபடுத்திப் பேசியதைக் கூட இங்கு யாரும் கண்டிக்கவில்லை.

ஜெயலலிதாவின் விருப்பபடி ஆட்சி கலைக்கப்பட்டு, ஜூன் மாதம் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மே 21 ஆம் நாள் தமிழ்நாட்டில் ராஜீவ் கொல்லப்பட்டார். அதன் எதிர்வினை என்ன தெரியுமா? புலிகளின் ஆதரவாளர்களாகிய எம் போன்றோர் மீது ஒரு சிறு மணல் கல் கூட விழவில்லை. ஆனால் தி.மு..வினரின் வீடுகள், வண்டிகள் எல்லாம் அடித்து நொறுக்கப் பட்டன. கொடிகள் வெட்டபட்டன. பொருள்கள் சூறையாடப் பட்டன.எனவே ராஜீவ் மீது அனுதாபம் அல்லது புலிகள் மீது கோபம் என்பதை விட, ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் தி.மு..வை அழித்துவிட வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்துள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. 

பத்மபாபா கொலை செய்யப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு  கெட்டுவிட்டதாய்க் கண்ணீர் வடித்தவர்கள், ராஜீவ் கொல்லப்பட்டபோது வரப்போகும் தேர்தல் குறித்து எண்ணி மகிழ்ந்தார்கள். ராஜீவ் கொலை, ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்குப் பேருதவி செய்தது.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 
      

2 comments:

  1. அவாள் ஆட்சியைக் கொண்டு வர, அவாளுக்காக அவாளால் கலைக்கப்பட்டது கலைஞர் ஆட்சி.
    நம்மவர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை அவாளுக்கு எப்போதும் வெற்றிதான்

    ReplyDelete
  2. என்னைப் போன்ற திமுக ஆதரவளார்கள் ,ஈழ உணர்வாளர்களை துரோகியாகச் சித்தரிப்பவர்களுக்காகவே வருகிற கட்டுரை இது... இதை என்னால் இயன்ற வரை இணையத்தில் எடுத்துச் செல்வேன் என உறுதிகூறுகிறேன்...

    ReplyDelete