தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 10 November 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (11)

கல்வி தந்த கலைஞர்

ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி வந்தவுடன், ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதே அதன் முதல் வேலையாக இருந்தது. துக்ளக் இதழ் அதனை வெளிப்படையாகவே எழுதி மகிழ்ந்தது. 

 விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே ஜெயலலிதா எதிரானவர் என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. ஈழ மக்களுக்கே அவர் எதிராக நின்றார். ஈழத்து மக்கள், அதிலும் குறிப்பாக யாழ்ப் பகுதியினர் படிப்பையே தங்கள் இலட்சிய நோக்கமாகக் கொண்டவர்கள். சிங்கள அரசு படிப்பில் கை வைத்த போது தான் அங்கு இளைஞர்களின் எழுச்சி முதன் முதலில் ஏற்பட்டது. ஜெயலலிதாவும் அவர்கள் படிப்பில் தான் முதலில் தடை அணைகளை ஏற்படுத்தினார். தான் ஆட்சிக்கு வந்த 1991 ஆம் ஆண்டே ஈழத்துப் பிள்ளைகளுக்குக் கல்விக் கூடங்களில் இனி இடமில்லை என்று அறிவித்தார். அவர் ஆட்சி நடைபெற்ற அந்த ஐந்து ஆண்டுகளும் ஈழப் பிள்ளைகளுக்கு இங்கே கல்வி இல்லை என்ற நிலை தான் நீடித்தது. 



எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், 1984 தொடங்கி பள்ளிக் கல்வி, கலை-அறிவியல் கல்வி, தொழில்சார் கல்வி என அனைத்துத் துறைகளிலும், ஈழ மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டது. 

மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 25 இடங்களும், தொழில்நுட்பக் கல்லூரிகளில் 35 இடங்களும், வேளாண்மைக் கல்லூரியில் 10 இடங்களும் ஈழ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டன. ஈழ மக்களுக்கு  எம்.ஜி.ஆர் செய்த நன்மை அது.

கலைஞரை மட்டுமின்றி, எம்ஜிஆர் புகழையும்  ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா அவர் ஈழ மாணவர்களுக்கு  வழங்கிய அனைத்துக் கல்வி உரிமைகளையும் மறுத்து விட்டார். இதனால் அந்த ஐந்து ஆண்டுகளில், 125 மருத்துவர்களை, 125 பொறியாளர்களை,  175 தொழில்நுட்ப வல்லுனர்களை, 50 வேளாண் திறனாளர்களை ஈழச் சமூகம் இழந்தது.

ஜெயலலிதா செய்த இக் கொடுமைகளை ஈழ ஆதரவாளர்கள் பெரிதாய்ப் பேசுவதில்லை. ஈழ மாணவர்கள் இழந்த அனைத்துக் கல்வி வாய்ப்புகளையும் மீண்டும் மீட்டுக் கொடுத்தவர் கலைஞர். கூடுதலாகச் சட்டத் துறையிலும் ஆண்டுக்கு 5 இடங்களை ஒதுக்கியவர் அவர் தான். எம்.ஜி.ஆர் செய்தவைகளை  மட்டும் எடுத்துக் கூறும் தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள், கலைஞர் செய்த உதவிகளை மறந்தும் மக்களிடம் சொல்வதில்லை.

 1996 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பின்பே அனைத்து ஈழ மாணவர்களுக்கும், அனைத்துத் துறைகளிலும் கல்வி பயில மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் கோரிக்கைகளை ஏற்று அரசு ஆணைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அவற்றின் அனைத்து நகல்களையும் கொடுத்து உதவிய அவ்வமைப்பிற்கும் (ofEER), அதன் தலைவர் திரு சந்திரஹாசன் அவர்களுக்கும் நம் நன்றி என்றும் உரியது.

கலைஞர் அரசு வெளியிட்ட சில அரசு ஆணைகளைப் பார்க்கலாம். ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்பட்ட ஓர் ஆணை, மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்திலும் ஈழ மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது.

4.7.1996 ஆம் நாளிடப்பட்ட அரசு ஆணை எண் (ms)no.309 கீழ் வருமாறு கூறுகின்றது:
"..... to reserve 20 seats in 1st MBBS course in Government Medical Colleges, exclusively for Sri Lankan Tamil Refugee students and Sri Lankan Tamil students"


17.6.99 ஆம் நாளிடப்பட்ட அரசு ஆணை நிலை எண் 299, இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கும் மேலான கூடுதல் இடங்களைச் சேர்த்து ஒதுக்குமாறும், விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக் கெடுவை 30 நாள்கள் வரை நீட்டித்து வழங்குமாறும் கூறுகிறது. இவ்வாறு பல அரசு ஆணைகள் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல், வேளாண்மை என ஒவ்வொரு துறைக்கும் இவ்வாறு தனித்தனி ஆணைகள் வெளியாகி உள்ளன.


12ஆம் வகுப்பு வரை பயிலும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குச் சீருடை, பாடப் புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் வழங்குமாறு ஓர் ஆணை கூறுகின்றது. 

ஈழ ஆதரவாளர்கள் இவற்றை எல்லாம் எடுத்துக் கூறுவதில்லை. அதனை விடக் கொடுமை  என்னவென்றால், எங்களுக்குக் கல்வி தந்தார் கலைஞர் என்று ஈழ மக்களும் மகிழ்ந்து கூறுவதில்லை. நாகரிகம் கருதி, பெயர் குறிப்பிடாமல் ஒன்றை இங்கு பதிவு செய்கின்றேன். தமிழ் அறிஞர்களுக்கான ஒதுக்கீட்டில் தன் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதி பெற்ற சிலர் கூட மேடையில் கலைஞரைத் தாக்கித்தான் பேசுகின்றனர்.

ஜெயலலிதாவோ, ஈழ மக்களின் கல்வியை மறுப்பதற்குக் கூட , ராஜீவ் காந்தி, பத்மநாபா கொலைகளைக் காரணம் காட்டுகின்றார். அவருடைய நோக்கமெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதிலேயே இருந்தது. அதற்குத் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் அவர் முன்னெடுத்தார். 

"புலிகளைத் தடை செய்யத் தயங்குவதா?" எனக் கேட்டு மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை அவர் கொடுத்தார். (தினமணி - 06.05.1992 - பக்.1)  அவருடைய கோரிக்கைக்குத் தா. பாண்டியன் போன்றவர்கள் உறுதுணையாக இருந்தனர். 1992 மே 1 ஆம் நாள் இதழ்களில் புலிகளைப் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இவ்வாறு கூறுகிறது"
                       
"புலிகள் இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக நாங்கள் கருதவில்லை. அது ஒரு பயங்கரவாதக் கும்பல். முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் புலிகளின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே அந்த அமைப்பைத் தடை செய்ய இதுவே சரியான தருணம்"


விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாகக் கூட இல்லாமல், பயங்கரவாதக் கும்பல் என்று வருணித்த தா. பாண்டியன் போன்றவர்கள் இன்று ஈழ ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.

புலிகளுக்குத் தடை என்னும் கோரிக்கையை முதலில் மத்திய அரசு மறுக்கவே செய்தது.  மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்த எம்.எம்.ஜேகப் அது ஒரு வெளிநாட்டு இயக்கம் என்பதால் அதைத் தடை செய்ய இயலாது. அதன் நடவடிக்கைகளை வேண்டுமானால் தடை செய்யலாம் என்று கூறினார் (தினமணி - 11.05.1992 - பக்.1)


எனினும் இறுதியில் ஜெயலலிதாவின் கோரிக்கை வெற்றி பெற்றது.  1992 மே 14 ஆம் நாள்  புலிகள் இயக்கம் தடை செய்யப் பட்டது. 



    ஜெயலலிதா தன் மகிழ்வையும், மத்திய அரசுக்குத்  தன் நன்றியையும் வெளியிட்டார். இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும்  தடையை வரவேற்றன. சி.பி.ஐ  சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.மாணிக்கம் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சி.பி.எம் பொதுச் செயலாளர்  ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தில்லியில் அளித்த சிறப்புப் பேட்டியில்,

"ஈழப் புலிகளின் பயங்கரவாதம், ஈழத்தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைப் பாதித்து விட்டது"

என்கிறார். புலிகள் மீதான தடையைத் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஆகியனவற்றுடன், அப்போது புதிதாய் உருவாகியிருந்த பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவையும் கடுமையாக எதிர்த்தன.      


தடை குறித்துத் தி.மு.க.வின் நிலை என்ன என்பது மிக முதன்மையானது. 15.05.1992 ஆம் நாளிட்ட அனைத்து நாள் ஏடுகளும் கலைஞரின் அறிக்கையை வெளியிட்டன. அவர் தன் அறிக்கையில் மூன்று கேள்விகளை முன்வைத்திருந்தார்.

1. விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துவிட்டு யாருடன் பேச்சு வார்த்தை நடத்தப் போகின்றீர்கள் ?  

2. தடையைப் பயன்படுத்தி ஜெயலலிதா தனது காழ்ப்புணர்வுகளை  வெளிப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உறுதி?

3. ஆளுநர்  உரையில் புலிகளே இங்கு இல்லை என்று கூறிய தமிழக அரசு, இல்லாத இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை ஏன் வலியுறுத்தியது?

         இவ்வாறு தெளிவாகத் தன்  கருத்தைக் கூறிய கலைஞர் தன் ஆட்சிக் காலத்தில் தடையை நீட்டித்தது ஏன் என்னும் கேள்விக்கான விடையையும் நாம் பார்க்க வேண்டும்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 




6 comments:

  1. பன்னீர் செல்வம்12 November 2012 at 16:19

    ஈழம் தமிழகம் நான் என்ற தலைப்பில் வரும் இத்தொடரில் தங்களின் பங்களிப்பு பற்றி அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் தங்களை விட தி.மு.க. மற்றும் கலைஞர் பற்றி தான் அதிக செய்திகள் வருவது சிறிது ஏமாற்றம் அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. திரு பன்னீர்செல்வம் கூறியுள்ள செய்தி சரியானதுதான். என்னைப் பற்றிய செய்திகள் ஏற்கனவே என் வாழ்க்கை வரலாற்று நூலில் நிறைய இடம் பெற்றுவிட்டன. மீண்டும் அவற்றைத் திரும்ப எழுத வேண்டாம் என்று எண்ணியும், என்னை முன்னிறுத்துவது போல் ஆகிவிடக்கூடாது என்ற அச்சத்திலும் என்னைப் பற்றிய செய்திகளை மிகுதியாக எழுதாமல் தவிர்த்து விட்டேன். அதன் விளைவாகவே இவ்வாறு நேர்ந்து விட்டது. என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கின்றேன். இன்று தி.மு.க குறித்தே தவறான செய்திகள் தொடர்ந்து வருவதால் அதற்கு விடை சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது. அதனையும் உங்களைப் போன்ற நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

      Delete
  2. போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு வந்த ஈழச் சொந்தங்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவு சிறக்க வழி செய்தவர் கலைஞர் என்பது புரியாமல் இன்னும் சிலர் அறியாமையில் இருப்பது ஏனோ...

    ReplyDelete
  3. போரில் பாதிக்கப் பட்டு வந்த
    புலிகள் அமைப்பினர், ஈழத் தமிழர்களுக்கு
    கலைஞரும், வைகோவும், குட்டி என்ற சண்முக சிதம்பரமும், அமல்ராஜும் டி பி எம் மைதீன்கானும், கே கே பரமசிவமும், சுப்பு ரத்தினமும், டி எ கே லக்குமணனும்
    முடிந்த உதவி செய்தார்கள் என்பது எல்லாம் சிறு பிள்ளை கூட அறியும் தமிழகத்தில்

    எங்கள் கேள்வி, முள்ளி வாய்க்கால் சண்டை நடக்கும் பொழுது May 2009
    திமுக வினர் காங்கிரஸ் சர்க்காரிடம் வேண்டுகோள்/அழுத்தம் அளித்து
    போரை நிறுத்தி இருக்கலாமே, மனித இறப்பை குறைத்து இருக்கலாமே என்பதுதான்

    அதை விடுத்து 1975. 1980, 1963 கதைகளை இன்று பேசி என்ன பயன்

    ReplyDelete
    Replies
    1. 2009 ஆம் ஆண்டு நிகழ்வுக்கு விடை கூறாமல் தொடரை நான் முடித்துவிட மாட்டேன். ஆனாலும் மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் செய்திகளைக் கூறாமல் உடனே என்னால் அங்கு வர இயலவில்லை. சற்றுப் பொறுத்திருங்கள்......எல்லாவற்றையும் பற்றிப் பேசுவோம்.

      Delete
    2. முக்கியமாக நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது 2008-09 போர் நிறுத்த முயற்சி குறித்தச் செய்திக்காகவே...

      Delete