தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 8 December 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (14)

வந்தது பொடா 


1996இல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இம்முறை சில மாற்றங்கள் தென்பட்டன என்பதை மறைக்க வேண்டியதில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமே ஆதரவு, புலிகள் அமைப்புக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்பதாக அவர்கள் நிலை அமைந்தது. அதற்குச் சில காரணங்களும் இருக்கவே செய்தன.

1956 தொடங்கி ஈழப் போராட்டத்தையும், 1983 தொடங்கி போராளிகள் அமைப்பையும் தி.மு.க. ஆதரித்த போதும், ஈழ மக்களும், போராளிக் குழுவினரும் , எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இங்கே உள்ள சிறு சிறு அமைப்புகளையே பெரிதும் நம்பிர்.தி.மு.க வையோ, கலைஞரையோ  பெரிதாக நம்பவில்லை. ஆனால் இங்கே உள்ள துக்ளக் போன்ற பார்ப்பன ஊடகங்களோ, தி.மு.க.வைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தனர். அதையே காரணமாகக் காட்டித் தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ராஜீவ் கொலைக்குப் பின் தி.மு.கவினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாயினர். எனவே புலிகள் அமைப்பை விட்டுத் தள்ளியே நிற்பது என்னும் முடிவை அன்று தி.மு.க எடுத்திருக்கலாம். மேலும் அன்று த.மா.க.வுடன் கூட்டணியும் இருந்தது. அதுவும் பிரிவை மிகுதியாக்கி இருக்கலாம்.


அதனால்தான், 1996 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கான தடையைத் தி.மு.க. அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரியது. 1992இல் விதிக்கப்பட்ட தடை, இன்றுவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சடங்கு போல நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதும் குற்றமாக்கப்பட்டு, அப்படிப் பேசுபவர்கள் கைது செய்யப்பட்டனர். தி.மு.க. ஆட்சியிலும் அந்நிலை தொடர்ந்தது 1996 செப்டம்பர் மாதம் பா.ம.க. நடத்திய கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவ்வாண்டு டிசம்பர் மாதம் நானும் தோழர் மணியரசனும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். ஒரு மாத காலத்திற்குள் பிணையில் வெளி வந்தோம். பிறகு அந்த வழக்கை அரசு நடத்தக் கூட இல்லை. எனினும் தி.மு.க. ஆட்சியிலும் சிறையில் இருந்த என் அனுபவம் அது.

அதில் எனக்கு இன்னொரு அனுபவமும் ஏற்பட்டது. ஜீப்பில் வந்து இறங்கிய என்னிடம் சிறை வாசலில் ஒரு பேட்டி  எடுக்கப்பட்டதாகவும், அதில் நான் கலைஞரைத் தமிழ்த் துரோகி என்று சாடியதாகவும் ஒரு வார இதழ் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தது. வேடிக்கை என்னவென்றால் யாரும் என்னிடம் பேட்டியே எடுக்கவில்லை. நான் ஜீப்பிலும் வரவில்லை. என்னை அவர்கள் தொடர்வண்டியிலும், பேருந்திலுமாக அழைத்து வந்தனர். இப்படியெல்லாம் கூடப் பேட்டி வெளியிடுவார்கள் என்பதை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

இந்தச் சூழலிலும் ஈழ மக்களுக்கான கல்வி உரிமையைத் தி.மு.க. அரசு முழுமையாக வழங்கியதைக் கடந்த பகுதி ஒன்றில் நான் சான்றுடன் தந்திருந்தேன். அதற்குக் கூட இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் யாரும் ஒரு பாராட்டோ நன்றியோ தெரிவிக்கவில்லை.

புதுபிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களையும் கலைஞர் அரசு வழங்கியது. இவ்வாறு சில குறிப்பிட்ட உதவிகள் என்னும் நிலையில் தி.மு.க. அரசு நின்று விட்டது.

2001இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டவுடன் ஈழ ஆதரவாளர்கள் மீதான அடுக்குமுறையும் கடுமையாகியது. பொடா  என்னும் புதிய சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது. புதுக்கோட்டைப் பாவாணன், வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால், நான் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகப் பொடாவில் கைது செய்யப்பட்டோம். 16.08.2002 அன்று நான் கைது செய்யப்பட்டபோது, என் வீடு சோதனை செய்யப்பட்டு வீட்டிலிருந்த பிரபாகரன் படம் மற்றும் சில புத்தகங்களைக் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர்.


நான் கைது செய்யப்பட்டபோது, "நாட்டில் நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா தெரியவில்லை. எப்படியாகிலும் வரலாறு எங்களை விடுதலை செய்யும்" என்று கூறிச் சென்றேன். தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் வெளியான அப்பேட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகச் சிறைக்கு வந்த நண்பர்கள் கூறினர்.


ஜெயலலிதாவின் பேச்சுகள் மிகக் கடுமையாக இருந்தன. 2002 ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாவில்,

"சில தீய சக்திகள் சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதை நாட்டு மக்கள் அறிவர். அவற்றைச் சட்ட ரீதியாகத் தடை செய்துள்ளோம்.எனினும் மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில் அந்த சக்திகள் மீண்டும் தலைதூக்க முற்பட்டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட இங்கே தடந்தோள்கள் உண்டு" (தினமணி - 16.08.2002 - பக்.1)

என்று பேசினார். நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கமே அன்று ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்டிருந்தது. அதனைத்தான் அவர் தீய சக்திகள் எனக் குறிப்பிட்டார். வைகோவையும் பழி வாங்கினார். ஏறத்தாழப் பதினெட்டு மாதங்கள் அனைவரும் சிறையில் இருந்தோம்.

2003 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னரே அனைவரும் வெளியில் வந்தோம். நீதிபதிகள் ராஜேந்திர பாபு, எ.ஆர். லட்சுமணன், ஜி.பி. மாத்தூர் ஆகியோரைக் கொண்ட அந்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்கியது.அத்தீர்ப்பில்,

"அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். ஒரு ஜனநாயக நாட்டில் ஓர் அரசியல் பார்வையை அவர்கள் கொண்டிருக்கக் கூடாதா? நீங்கள் எல்லாவற்றையும் மிகப் பெரிது படுத்திக் கொண்டுள்ளீர்கள்" (தி ஹிந்து - 20.12.2003 - பக்.4)

என்று தமிழக அரசுக்கு அவர்கள் எடுத்துச் சொல்லியிருந்தனர். ஆனால் தமிழக அரசு அன்று எதனையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

நாங்கள் சிறை சென்ற நாளிலிருந்தே தமிழ் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களின் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. இடதுசாரி, ஜனநாயக இயக்கங்களை எல்லாம் இணைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பொடா எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டினர். அவ்வமைப்பிற்கு அய்யா நல்லகண்ணு அவர்களும், திருமாவளவன் அவர்களும் அமைப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இச் செய்திகள் அனைத்தையும் தாண்டி, 2003 மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற்ற பட்டினிப் போரில் கலைஞர் ஆற்றிய உரை ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கியது. பொடா  சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லையெனில், என் தம்பி வைகோவிற்காக நானே போராட்டம் நடத்திச் சிறை செல்வேன் என்றும் கலைஞர் பேசியிருந்தார். (உலக வரலாற்றை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் வைகோ இதனை மறந்து போயிருப்பார்)

கலைஞரின் பேச்சுக் கண்டு மகிழ்ந்திருந்த எங்களுக்கு மறுநாள் (30.03.2003) செய்தித்தாள்கள் பேரிடியாக ஒரு செய்தியைக் கொண்டு வந்திருந்தன.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 
  

No comments:

Post a Comment