துள்ளித் திரிந்த காலம்
50 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பயின்ற பள்ளியைக்
காண்பதும், அதனுள் செல்வதும் எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்பதை அனைவரும்
அறிவோம். அதே பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக
அழைக்கப்படுவது, வாழ்வில் வாய்க்கும் மிக அரிய தருணங்களில் ஒன்றில்லையா?
அத்தருணம் என் வாழ்வில் எனக்குச் சென்ற மாதம் கிட்டியது.
காரைக்குடி, மீ.சு. உயர்நிலைப் பள்ளியில்
(S.M.S. Vidhyalaya) 1961-65ஆம் ஆண்டுகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு
வரை படித்தேன். மீண்டும் ஒருமுறை வாழ்வில் வராதா என எல்லோரையும் ஏங்க வைக்கும்,
துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம் அது. 10, 11 ஆம் வகுப்புகளை நான் காரைக்குடி
மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.
23.06.2013 அன்று காலையில் தொடங்கிய நூற்றாண்டு
விழாவில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு விழாவிற்குச் செல்லும்
வழக்கமான மனநிலையோடுதான் பள்ளிக்குள் சென்றேன். ஆனால் சில நொடிகளில் என்
மனநிலையில் அப்படியொரு ரசாயன மாற்றம் ஏற்பட்டது. அடாடா.....நான்
படித்த பள்ளி, நான் படித்த வகுப்பறை, நான் ஓடியாடி விளையாண்ட திடல்
என்று ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க, நான் ஒரு சிறுவனாய் மாறிப்போனேன். என்
ஆசிரியர்கள் பலரை எண்ணிப் பார்த்தேன். என்னோடு பயின்ற நண்பர்களின் முகங்களைத்
தேடினேன். ஓரிரு முகங்கள் மட்டுமே நினைவிற்கு வந்தன. நான் ஆறாம் வகுப்பில், முதல்
நாள் வந்து அமர்ந்த வகுப்பறையின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
விழா ஏற்பாடுகளைப் பள்ளியின் தாளாளர், விழாக் குழுவினர் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாக் குழுச்
செயலாளர் முத்துப் பழனியப்பன் என்னை அன்புடன் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்
படுத்தினார். பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான நீதிபதி சொக்கலிங்கம்
தலைமையில், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விழாவைத் தொடக்கி வைத்தார். தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், நானும் உரையாற்றினோம்.
நீதிபதி பேசும்போது எங்களின் ஆசிரியர்களை நினைவு
கூர்ந்தார். நீதிபதி என்பதை விட, இப்பள்ளியின் மாணவர் என்பதில் தனக்குக்
கூடுதல் பெருமை என்றார். என் உரையில் நானும் பழைய நினைவுகளைக் கூறிவிட்டு
வேடிக்கையாகக் குறிப்பிட்டேன்: "எல்லோருக்குமே தங்களின் பழைய
பள்ளிகளையும், ஆசிரியர்களையும் மிகவும் பிடிக்கிறது - பள்ளியை விட்டுப் போன பின்பு'
என்று.
காரைக்குடியில் அப்பள்ளி 1913 ஆம் ஆண்டு சிறிய
அளவில் தொடக்கப்பட்டு, 1918இல் இப்போதுள்ள இடத்திற்கு வந்துள்ளது. ஒரு
நூற்றாண்டுக்கு முன்னர் கல்வி நிலையம் தொடங்குவது என்பது வெறும் கல்விப்பணி
மட்டுமன்று, அது ஒரு கல்விப் புரட்சி. அந்தப் புரட்சியைச் செய்த
பெருந்தகைகள் அனைவருக்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் நாங்கள் என்றும்
நன்றிக் கடன் பட்டுள்ளோம்.வள்ளல் அழகப்பர், திரைப்பட உலகில் சாதனை செய்த திரு ஏவி.
மெய்யப்பன் ஆகியோரும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே!
1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப்
புரட்டும்போது ஒரு தகவல் கிடைத்தது. அன்றைய தினம், இந்தியா முழுவதற்குமாக 5 பல்கலைக் கழகங்களும், 106 கலலூரிகளும்தாம்
இருந்துள்ளன. பள்ளிகள் 500 இருந்திருக்கலாம். இந்தியா என்றால் இன்றைய இந்தியாவை
நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. பாகிஸ்தான், பங்களாதேஸ், பர்மா, நேபாளம், சிக்கிம்,
பூட்டான் எல்லாம் சேர்ந்துதான் அன்றைக்கு இந்தியா என்று பெயர். அத்தனை
நாடுகளுக்கும் சேர்த்து 500 பள்ளிகள் என்றால், மிகவும் பின்தங்கி இருந்த
அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்தாறு பள்ளிகள் இருந்திருக்கக் கூடும்.
அவற்றுள் ஒன்றாக இருந்துள்ள பள்ளியில் படித்த பெருமிதத்தோடும், நன்றி
உணர்ச்சியோடும் அன்று நான் மேடையில் நின்றேன்.
வாழ்வில் எப்போதாவது வரும் பெருமைகளில் ஒன்றாக,
அன்றைய நிகழ்வில் பங்கேற்றதை எண்ணி மகிழ்கின்றேன்.
■ ■ ■ ■
சாதியே....இன்னும் எத்தனை உயிர் வேண்டும்?
தருமபுரி இன்னும் ஓயவில்லை. தண்டவாளத்தின்
அருகில் பிணமாய்க் கிடந்தான் இளவரசன். கொலையா, தற்கொலையா என்று ஊடகங்களில்
விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன.
கொலைதான். அந்த இளைஞன் தற்கொலை செய்து
கொண்டிருந்தாலும் அது கொலைதான். சாதியச் சமூகம் தொடர்ந்து செய்து வரும் கொலைகளில்
இதுவும் ஒன்று. இந்தச் சாதி வெறி இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கேட்குமோ
தெரியவில்லை.
வன்னியர் சாதியைச் சேர்ந்த திவ்யாவும்,
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரசனும் காதலித்துத் திருமணம் செய்து
கொண்டார்கள். திவ்யாவின் அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் 'இதோ பறையன் சம்மந்தி
வருகிறார்' என்று சொல்லிச் சொல்லி அவரைக் கேலி செய்து, அவருடைய தற்கொலைக்கு
வழிவகுத்தது சாதி வெறி. பிறகு அதனையே காரணம் காட்டி, நூற்றுக்கணக்கான
தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை, உடைமைகளை அடித்து நொறுக்கியது.
அதன்பின் திவ்யாவைப் பிரித்தது. நான் இளவரசனுடன் வாழ விரும்பவில்லை
என்று அந்தப் பெண்ணையே சொல்ல வைத்தது. இப்போது இளவரசன் பிணமாய்க் கிடக்கிறான்.
அது உண்மைக் காதல் அன்று, நாடகக் காதல் என்று
சில 'மருத்துவர்கள்' கண்டறிந்து கூறினர். நாடகக் காதல் என்றால், பிரித்ததுடன்
நின்றிருக்கலாமே, ஏன் கொலை செய்ய வேண்டும்? இல்லையில்லை, திவ்யாவைப் பிரிந்த
சோகத்தால் அவன்தான் தற்கொலை செய்து கொண்டான் என்றால், நாடகக் காதலுக்காக
யாரேனும் தற்கொலை செய்து கொள்வார்களா? எல்லாம் முன்னுக்குப் பின் முரணாக
இருக்கிறது. சாதி வெறி மட்டுமே நிலையாக இருக்கிறது.
தொலைக்காட்சியில் வழக்கறிஞர் அருள்மொழி
சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தை எடுத்து வைத்தார். தமிழ்த் தேசியம் என்னும் பெயரில்
திராவிடச் சிந்தனைகளுக்கு எதிரான ஒரு பரப்புரை இன்று கட்டவிழ்த்து விடப்
பட்டுள்ளது. எப்போதும் சாதிக்கு எதிரான கோட்பாட்டைக் கொண்டது திராவிடம். அதனைத்
தமிழ் கொண்டு சிலர் வீழ்த்த நினைப்பது, தமிழைக் காப்பாற்ற அன்று. சாதியத்தை
வளர்த்தெடுக்கவே என்றார்.
உண்மைதான். தூய தமிழ் பேசும் ஒரு
தொலைக்காட்சிதான், இன்று தூய சாதிய வாதமும் பேசுகின்றது. தமிழ் இன, மொழி
உணர்ச்சியைக் கூடப் பிறகு வளர்த்துக்கொள்ளலாம். இன்றைய உடனடித் தேவையாக
இருப்பது சாதி எதிர்ப்பே!
சாதி உணர்ச்சி, நம் சமூகத்தில் மிக நுட்பமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகின்றது. பல வீடுகளில் இன்று
மாட்டப்பட்டிருக்கும் தினசரி நாட்காட்டி, அவ்வீட்டினர் எந்தச் சாதியைச்
சேர்ந்தவர்கள் என்பதை நமக்கு மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. அவர்கள்
சார்ந்திருக்கும் சாதியச் சங்கம் வெளியிட்டிருக்கும் நாட்காட்டியாக அது உள்ளது.
அண்மையில் உத்தரகாண்ட் பெருவெள்ளத்தில்
ஆயிரக்கணக்கானோர் மாண்டு போனார்கள். அவர்களை மீட்கப் போன பிரவீன் என்னும்
மதுரையைச் சேர்ந்த இளைஞனும் விபத்தில் மாண்டான். அவன் தியாகத்தை நாடே
போற்றியது. மதுரையில் நடைபெற்ற வீர வணக்க ஊர்வலத்தில், பல்லாயிரம் மக்கள் கலந்து
கொண்டனர். ஆனால் தினமலரில் அன்று ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
எங்கள் சாதியைச் சேர்ந்த ப்ரவீனுக்கு இரங்கல் என்று ஒரு சாதி மகா ஜன சங்கம்
அதில் குறிப்பிட்டுள்ளது. அவன் காப்பாற்ற நினைத்த மக்களோ, அவன் இரங்கல்
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களோ, ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் சேர்ந்தவர்கள்
இல்லை. ஆனால் சாவினால் அவன் பெற்ற புகழைக் கூடசாதி பறித்துக் கொள்ளப்
பார்க்கிறது.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு ஒரு சாதிச்
சங்கம் உரிமை கொண்டாடுகின்றது. புரட்சிக் கவி பாரதிதாசன், செங்குந்த முதலியார்
என்கிறது ஒரு சங்கம். சௌந்தரபாண்டியனாரை வெறுமனே நாடார் என்று மட்டுமே
பார்க்கின்றனர் சிலர். மிகப் பெரிய சான்றோர்களை மிகச் சிறிய கூண்டுக்குள்
அடைக்கும் வேலை இது.
இயக்குனர் பாரதிராஜாவின்
இயக்கத்தில் அன்னக்கொடி என்று ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. அவர் ஒன்றும்
ஆதிக்க சாதி எதிர்ப்பாளர் அல்லர். அவருடைய பசும்பொன் திரைப்படம் சாதிப் பெருமை
பேசும் படம்தான். ஆனால் அன்னக்கொடியில் சாதி எதிர்ப்பு இலைமறை காயாக
வெளிப்படுகின்றது. செருப்புத் தைக்கும் ஏழைத் தொழிலாளியும், அவருடைய மகனும்
பெண் கேட்கப் போன இடத்தில் எவ்வளவு அவமானப் படுத்தப் படுகின்றனர் என்பதை
அப்படம் ஒரு காட்சியில் விளக்குகின்றது. ஒரு வீட்டிற்குப் போய்ப் பெண்
கேட்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஆனால் அடிமைப்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு
அந்த உரிமை ஏது? அதைத்தான் அந்தக் காட்சி விளக்குகின்றது.
அதற்கே பெரிய எதிர்ப்பு. இயக்குனர் வீட்டை
முற்றுகை இடப் போவதாகச் சில சாதிச் சங்கங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் சாதி
எவ்வளவு இறுகிக் கொண்டே போகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுகள்.,
உலகில் சாதியை விடக் கொடூரமானது வேறு எதுவும்
இருக்க முடியாது. பெற்ற பிள்ளைகளையே கொல்லத் துணியும் ஈவு இரக்கமற்ற நச்சுக் கோடரி சாதி. நம் வீட்டில் ஒரு பிள்ளை மது அருந்திக்
கொண்டிருக்கிறான், இன்னொருவன் ஆபாசப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான்,
மூன்றாமவன் சாதி உணர்ச்சிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறான் என்று கற்பனையாக
வைத்துக் கொண்டால், முதல் இரு பிள்ளைகளை கூடப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,
மூன்றாமவனை முதலில் திருத்த வேண்டும் என்பதே இன்று நம் நெஞ்சில் தோன்றும்
எண்ணம்.
ஆம்......சாதி கொடியது, மதுவைக் காட்டிலும்,
பாலியல் வெறியைக் காட்டிலும்!
சாதிக்கு எதிரானவர் அனைவரும் ஒன்று கூட வேண்டிய
நேரம் வந்துவிட்டது. உதவாதினி ஒரு தாமதம்!
(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
ReplyDeleteஎன்றனர் நம் முன்னோர்
சாதியைத் தவிர வேறில்லை
என்பது இன்றைய நடப்பு
என்று மாறுமோ இந்நிலை.
நூற்றாண்டு கண்ட பள்ளியை
வாழ்த்துவோம் அய்யா. நன்றி
திராவிடர் இயக்கமும் அதன் கொள்கைகளும்,(ஜா)சாதி ஒழிப்பிற்கே! என்பதை புரிந்து கொள்ள இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
ReplyDeleteதந்தைப்பெரியார் கடவுள் இல்லை என ஆணித்தனமாய் சொன்னது பின்னிப்பிணைந்து கிடக்கும் சாதியையும்,மதத்தையும்,கடவுளையும் பிரிக்க இயலாது என்பதால் தான் என்பதை புரிந்துகொள்ள இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் வேண்டுமோ? தெரியவில்லை.
இன்றைய உடனடித் தேவை
ReplyDeleteசாதியை சாகடிப்பதே...
நானும் ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரவித்யாலயா பள்ளியில் பயின்ற மாணவன் அந்த பெருமிதம் என்றும் இருக்கும் ஐயா.
ReplyDeleteசதிகாரர்களின் கையில் கிட்டிய ஒரே ஆயுதம் சாதி. அந்த ஆயும் அவ்வப்போது பல கொலைகளின்மீது தன்னைத் தேய்த்துக் கூர் தீட்டிக்கொள்கிறது ஒரு சிலரால்.
ReplyDeleteபெற்ற பிள்ளைகளையே கொல்லத் துணியும் ஈவு இரக்கமற்ற நச்சுக் கோடரி சாதி.//
ReplyDeleteஉண்மை அய்யா...சாதிக்கு பாடை கட்டுவதே சாதிவெறியர்களுக்கான பாடமாக அமையும்..