அறநிலையத்துறையின் ‘அறம்’
திராவிடர் கழகத்தின்
சார்பில் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதிப்
பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய, மாற்றுத் திறனாளிகள் அமைப்பின்
பொறுப்பாளர்களில் ஒருவரான தீபக் அதிர்ச்சி தரக் கூடிய சில செய்திகளை வெளியிட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நம் கோயில்களில் அனுமதி மறுக்கப்படுகிறதாம். மருத்துவக்
கல்லூரிகளிலும் இடம் இல்லாத நிலை உள்ளதாம்.
ஏன்.... எதனால்? அவர்களும் தீண்டப்படாதவர்களா? இல்லை
அவர்கள் கால்களில் அணிந்திருக்கும் காலணிகள் தீண்டப்படா தனவாம். அவை
மாட்டுத்தோலில் செய்யப்பட்டுள்ளனவாம். காலணிகளின் வார்களும் மாட்டுத் தோலால்
ஆனவையாம். ஆகவே அவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாதாம் - இந்து அறநிலையத்
துறை சொல்கிறது. அதனை உயர் நீதி மன்றமும் ஏற்கிறது.
குறிப்பாக, ஸ்ரீரங்கம் கோவிலில் இந்த விதி மிகக் கடுமையாகக்
கடைப்பிடிக்கப் படுகிறது அங்குதான் தாழ்த்தப் பட்டவரான திருப்பாணாழ்வாரை ஒரு
பார்ப்பனர் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று பெருமாளே
ஆணையிட்டார் என்று பெருமை பேசுகின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட தோழர்கள் நடந்து
செல்லக் கூட அங்கு அனுமதி இல்லை. இப்போது மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த நிலை.
இது தொடர்பாக, மீனாட்சி, ராஜீவ் ராஜன் ஆகிய இருவரும் தொடர்ந்த
வழக்கில், இந்து அறநிலையத் துறை ஒரு வழிகாட்டுதலை நீதி மன்றத்தில் முன்வைத்தது.
கோவில் வாசலில் ஒரு சக்கர நாற்காலி இருக்கும். அதில் அமர்ந்து அவர்கள்
கொடிக்கம்பம் வரை செல்லலாம். பிறகு அந்த இடத்தில் தங்கள் காலணிகளைக் கழற்றி
வைத்துவிட்டு, இன்னொரு தீட்டுப்படாத சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்லலாம்.
இந்த வழிகாட்டுதலை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது என்பதுதான்
வேதனையிலும் வேதனை.
கடவுளுக்கும், மாட்டுத்தோலுக்கும் பகை என்றால், அந்த மாட்டுத் தோலை
யார் படைத்ததாக அவர்கள் கருதுகின்றனர் என்பது புரியவில்லை. மாற்றுத்
திறனாளிகள் சிலரின் காலணி வார்கள் இடுப்பிலிருந்தே தொடங்கும். அதனை
எப்படி அவர்கள், குறிப்பாகப் பெண்கள், பலர் முன்னிலையில், கொடிக்கம்பம்
அருகில் கழற்றுவார்கள்? அந்தக் காலணிகளை அவர்கள் ஒயிலுக்காகவோ அழகுக்காகவோ
அணியவில்லை. வேறு வழியின்றியே, வலியைப் பொறுத்துக்கொண்டு அவற்றை அணிந்துள்ளனர்.
அந்த இடத்தில்தான் கோயில் ஆகம விதிகள் கெட்டுப்போகின்றனவா? அவ்வளவு இரக்கம்
இல்லாதவரா உங்கள் கடவுள்?
போகட்டும், சிவபெருமானே புலித்தோலை அரைக்கசைத்து நிற்பதாகத்தானே
புராணங்கள் கூறுகின்றன! புலியோடு எந்தச் சிக்கலும் இல்லை, மாடுதான் ஆகாது என்று
சொல்வார்களோ என்னவோ! அப்படியே பார்த்தாலும், காளை மாடுதானே அவருடைய வாகனம்.
அதையும் தாண்டி, அவர் கையில் உடுக்கை வைத்திருப்பதாகச்
சொல்லப்படுகிறதே, அது எந்தத் தோலால் ஆனது அப்படியானால், மாட்டுத்
தோலால் ஆன உடுக்கையைக் கையில் வைத்திருக்கும் சிவபெருமானை, இந்து அறநிலையத் துறை
என்ன செய்வதாய் உத்தேசம்?
ஆகம விதிகளை மீறி நம் கோயில்களில் எதுவுமே நடப்பதில்லையா? ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி முதல் தேதி இந்துக் கோயில்களை எல்லாம் இரவு 12 மணிக்குத் திறந்து
வைக்கின்றனரே, அது எந்த ஆகமத்தின்படி? 'சூரிய உதயத்திற்கு முன்பு 'நடை' திறக்கலாம்
என்று எந்த ஆகமம் சொல்கிறது? அர்ச்சனைத் தட்டில் அதிகம் காசு விழும்
என்றால், ஆகமங்களைக் கொஞ்சம் அப்படி இப்படித் தள்ளி வைத்துவிடலாமா?
கோயில்கள் மட்டுமின்றி, மருத்துவக் கல்லூரிகளும் ஏன் அவர்களிடம் இரக்கமின்றி
நடந்து கொள்கின்றன? அங்கேயும் ஏதாவது ஆகம விதிகள் உள்ளனவா? இல்லை, சாதாரண
விதிகளே அவர்களுக்கு எதிராக உள்ளன. கண் பார்வை அற்றவர்கள், காது கேளாதோர், கைகள்
இல்லாதோர், குட்டைக் கைகளைக் கொண்டவர்கள், முதுகுக் கூன் உடையவர்கள் யாருக்கும்
மருத்துவக் கல்லூரிகளில் இடமில்லை என்று விதி சொல்கிறதாம். காலில் குறை
உள்ளவர்களுக்கு மட்டுமே விதிவிலக்குத் தரப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது?
அமெரிக்காவில், இரண்டு கைகள், இரண்டு கால்கள் எதுவுமே இல்லாத ஒருவர்
மருத்துவ மேற் பட்டப் படிப்பு படித்துள்ளார். அங்கே சிறுநீரக மருத்துவத் துறையில்
பணியாற்றியும் வருகின்றார். மாற்றுத் திறனாளிகள் பலர் அங்கு மருத்துவர்களாக
உள்ளனர். அதற்கு ஆதாரங்களும் உள்ளன. மற்றவற்றில் எல்லாம் அமெரிக்காவோடு போட்டி
போடும் நாம், 2020இல், வல்லரசாகிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் நாம்,
மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உரிமைகளைக் கொடுப்பதில் மட்டும் பின்தங்கி
விடுகின்றோமே,
நியாந்தானா?
■ ■ ■ ■
' தருமவான்கள்' பேசுகிறார்கள்!
அண்மையில் இரண்டு 'தருமவான்கள்' கீழ்க்காணும் பொன்மொழிகளை
உதிர்த்துள்ளனர்.
இளவரசன் மரணம் குறித்து, பா.ம.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
மருத்துவர் செந்தில், "அது தற்கொலைன்னு பேச்சு அடிபடும்போது கூட, பா.ம.க.
மேலேயே குற்றச்சாட்டை வைக்கிறாங்க. இதைத் தமிழ்நாட்டு மக்கள்
பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க" (நக்கீரன், 10-12 ஜூலை 2013) என்று
கூறியிருக்கிறார்.
வேலூரில் சிறையில் இருக்கும் தங்கள் கட்சியினரைப் பார்த்துவிட்டு
வெளியில் வந்த பா.ம.க. தலைவர்(?) ஜி.கே. மணி, "ஜெயலலிதா ஒன்று சொன்னால்,
அதிகாரிகள் நூறு மடங்கு அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர். இந்த அதிகாரிகளை எல்லாம்
தருமம்தான் தண்டிக்க வேண்டும்" என்று நெஞ்சுருகிப் பேசியுள்ளார்.
அநீதியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதும், தருமம்
தண்டிக்க வேண்டும் என்பதும் கேட்பதற்கு எவ்வளவு நன்றாக இருக்கின்றன!
என்ன செய்வது.....தருமபுரியையும், மரக்காணத்தையும் மக்கள் பார்த்துக்
கொண்டுதான் இருந்தார்கள். இளவரசன் மரணத்தையும் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள். வன்முறையாளர்களை மக்களும் தண்டிக்கவில்லை. தருமமும்
தண்டிக்கவில்லை. மருத்துவர் செந்திலும், தலைவர் மணியும் நியாயமாகத்தான் கவலைப்
படுகின்றனர். இப்படிப்பட்ட தருமவான்கள் நாட்டில் இருந்தும், கலவரங்களும்,
கொலைகளும் நடக்கின்றனவே என்பதுதான் நமது கவலை!
பா.ம.க.வினர் விரும்புவது போல அது தற்கொலைதான் என்று வைத்துக்
கொண்டாலும்,இரண்டு வினாக்களுக்கு அவர்கள் விடை சொல்ல வேண்டியுள்ளது. ஒன்று, அத்
தற்கொலையைத் தூண்டியவர்கள் யார், இளவரசனின் மன உளைச்சலுக்குக் காரணமானவர்கள்
யார் யார்? இரண்டாவது கேள்வி, நாடகக் காதலில் ஈடுபட்ட எவன் ஒருவனாவது தற்கொலை
செய்து கொள்வானா? தற்கொலையா, நாடகக் காதலா எது பொய் என்பதை அவர்கள்தான் சொல்ல
வேண்டும்.
பா.ம.க.வினர் எப்போதும் சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள்! மரக்காணம்
மாநாட்டை இரவு பத்து மணிக்குள் முடித்துவிடுவதாக ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால்
அன்று இரவு, மருத்துவர் ராமதாஸ் என்ன பேசினார் என்பதை அனைவரும் அறிவோம். "இப்போது
மணி இரவு 11.30. இதோ நான் பேசிக் கொண்டிருக்கிறேன். போடு வழக்கை. அதற்கெல்லாம்
நான் பயப்பட மாட்டேன்" என்றார். அவ்வளவு தூரம் சட்டத்தை மதிப்பவர் அவர்.
சட்டத்தை மதித்து மதித்துச் சலித்துப் போய் விட்டதால், இப்போது மக்கள்
மன்றத்தையும், தருமத்தையும் துணைக்கு அழைக்கின்றனர்.
இளவரசன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் காணப்படும் இரண்டு
வரிகள் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. "அடுத்த ஜென்மத்தில் இருவரும்
ஒரே ஜாதியில் பிறந்து, பெற்றோர் சம்மதத்திற்குப் பிறகு நாம் இருவரும் திருமணம்
செய்து கொள்வோம்" என்று இளவரசன் எழுதியுள்ளதாக ஏடுகள் சொல்கின்றன. மனம்
ஒத்த இருவராக இருப்பினும், திருமணம் செய்து கொள்ள இரண்டு நிபந்தனைகள் கண்டிப்பானவை
என்று அந்த வரிகள் சொல்கின்றன! ஒரே ஜாதியாய் இருக்க வேண்டும், பெற்றோர்
சம்மதிக்க வேண்டும் என்பனவே அவை. இளவரசன் எவற்றை எதிர்த்துப் போராடினானோ, அவற்றை
அவனே தன் கடிதத்தில் ஆதரித்துள்ள விந்தையையும் நாம் நம்பத்தான் வேண்டும்
போலிருக்கிறது!
(சனிக்கிழமைதோறும்
சந்திப்போம்)
//பா.ம.க.வினர் எப்போதும் சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள்! மரக்காணம் மாநாட்டை இரவு பத்து மணிக்குள் முடித்துவிடுவதாக ஒப்புதல் அளித்திருந்தனர்.// இதில் மரக்காணம் மாநாடு என தவறுதலாக பிரசுரமாகி உள்ளது.அது மாமல்லபுரம் மாநாடு என மாற்றவும்.நன்றி.
ReplyDeleteமாற்றுத் திறனாளிகளின் நிலை நீக்கப்பட வேண்டுமய்யா.
ReplyDeleteSOCIAL INJUSTICE IN ANY FORM NEED BE ERADICATED. PHYSICALLY CHALLENGED PEOPLE HAVE NO ENTRY IN TEMPLES ESPECIALLY IN SRI RANGAM TEMPLE AND THEY ARE REFUSED ADMISSION IN MEDICAL COLLEGES........ THIS IS SOMETHING RIDICULOUS AND INSINUATING. ARE THERE NO ADVOCATES TO FIGHT FOR THIS CAUSE. COMMON RIGHT FOR ALL, SOCIAL SECURITY AND SOCIAL JUSTICE FOR ALL, EQUALITY OF RIGHTS FOR ALL...... ARE ALL THESE ONLY IN LAW BOOKS........
ReplyDelete//வேறு வழியின்றியே, வலியைப் பொறுத்துக்கொண்டு அவற்றை அணிந்துள்ளனர். அந்த இடத்தில்தான் கோயில் ஆகம விதிகள் கெட்டுப்போகின்றனவா? அவ்வளவு இரக்கம் இல்லாதவரா உங்கள் கடவுள்?//
ReplyDeleteஇப்படிப்பட்ட கடவுளை செருப்பால் அடித்ததற்காக பெரியாரை திட்டுபவர்கள் தானே நம் அறிவாளி மக்கள். அவர்கள் இதெற்கெல்லாம் எந்தக் காலத்திலும் பதில் சொல்லப் போவதில்லை...
மதிப்பிற்குரிய சுபவீ அய்யா , பல இடங்களில் / அலுவலகங்களில் http://subavee-blog.blogspot.in/ என்ற இணையத்தை தடை செய்யப்படுவதால் பலரால் பார்க்க இயலாது . http://www.subavee.com/ என்ற முகவரி http://subavee-blog.blogspot.in/ க்கு redirect செய்யபடுகிறது. எனவே ஒரு தனி இணையத்தில் உங்கள் வலைப்பூ மாற்ற வேண்டுகிறேன் . அன்புடன் - விருபாக்சன்
ReplyDeleteகையில் கட்டியுள்ள கடிகார வார் ,செல்போன் கவர் மாட்டு தோலால் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளபடுமா
ReplyDelete