தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 31 August 2013

நதியோடும் பாதையில்...(11)

 தமிழால் ஒன்றுபடுவோம்!
                               

 (உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் சார்பில், 14.08.2013 முதல் 18.08.2013 வரை, லண்டனில் நடைபெற்ற ஆய்வு மாநாட்டின் விடைபெறு விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆற்றிய நிறைவுரையின் ஒரு பகுதி) 

இம்மாநாட்டின் நிறைவுரைச் சொற்பொழிவை ஆற்றுவதற்கு எனக்கு வேறு  தகுதி உள்ளதோ, இல்லையோ, ஒரு தகுதி கண்டிப்பாக உள்ளது. கடந்த நான்கு நாள்களாக, வேறு எல்லாப் பணிகளையும் மறந்து, தொடர்புகளை எல்லாம் துறந்து, முழு நேர மாணவனாகி, இங்கு படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் கேட்டுக் குறிப்புகளையும் எடுத்து, இந்த உலகிலேயே முற்று முழுக்க வாழ்ந்தேன் என்பதுதான் அந்தத் தகுதி என்று கருதுகின்றேன். இதனை நான் மிகையாகச் சொல்லவில்லை. வேண்டுமானால், இங்கே உள்ள மூத்த பேராசிரியர் அய்யா சண்முகதாஸ், படிக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து எனக்கு ஒரு தேர்வை நடத்தினால் கூட, நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறி விடுவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.



கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று, இன்னும் சிறிது நேரத்தில் முடிவடைய உள்ள இந்த மாநாடு, என்ன செய்துள்ளது, இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கணக்குப் பார்க்கும் இடத்தில் இப்போது நாம் உள்ளோம். வேறு பெரிய செயல்களைச் செய்து முடித்திடவில்லை என்றாலும், பல்வேறு முகம் கொண்ட நம் அனைவரையும் ஒன்றாக இணைத்துள்ளது. இதுவே இம்மாநாட்டின் முதல் வெற்றி என்று கூறலாம்.

மாநாட்டின் தொடக்க நாள் அன்று என்னுள் ஓடிய ஒரு எண்ணத்தை  இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன். அன்று நான் விழா அரங்கில் அமர்ந்திருந்தபோது, என் அருகில், லண்டன் செல்வா விநாயகர் கோவில் குருக்கள்மார்கள், காவி உடையுடன் அமர்ந்திருந்தனர். நான் வழக்கம் போல் கறுப்புச் சட்டையில் இருந்தேன். கறுப்பையும், காவியையும் தமிழன்றி வேறு எது இணைக்கும் என்று எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.

அவ்வாறே, அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் இங்கே இணைந்துள்ளோம். இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அவர்களும், நானும், முற்றிலும் வேறு வேறுபட்ட இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் என்பதை அனைவரும் அறிவர். எனினும் நாங்கள் இங்கே அரசியல் சிந்தனைகளைத் தாண்டி, ஆய்வு மாணவர்களாகவே இணைந்திருந்தோம் என்பது குறிக்கத்தக்கது.

இம்மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி அனுப்ப இசைந்துள்ளதாகக் கூறப்பட்டது. அதே போல, திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துரையை இங்கே நானும், அய்யா செங்கை சிவம் அவர்களும், வழக்கறிஞர் காசிநாதனும், ஆய்வு நடுவத்தின் நிறுவனர் திரு செல்வராசா அவர்களிடம் மேடையில் கொண்டு வந்து கொடுத்ததை நீங்கள் கண்டீர்கள். தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக விளங்கும் அவர்கள் இருவரும் இம்மாட்டை ஒரு சேர வாழ்த்தியிருப்பதும் சிறப்பான ஓர் நிகழ்வுதான்!

பல்வேறு கொடிகள், பல்வேறு தலைமைகளின் கீழ் நாம் வேறுபட்டு நின்றாலும், தமிழ் என்னும் ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, எதிர்காலத் தமிழ் இன, மொழி வளர்ச்சிக்குப் பாடுபட முடியும் என்ற நம்பிக்கையை இம்மாநாடு தந்துள்ளது.

தமிழியல் ஆய்வையும் இம்மாநாடு சிறப்புற நடத்தியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள அறிஞர்கள், 124 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். அவற்றுள் ஏறத்தாழ ஐம்பது கட்டுரைகள் படிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டுள்ளன. இது ஒரு போற்றத்தக்க நிகழ்வாகும். ஒரு மாணவனாகக் கூறுவதெனில், பல அரிய, புதிய செய்திகளை நான் இங்கு பெற்றேன். என்னைப் போல் இன்னும் பலரும் பயன் பெற்றிருப்பர்.

இவற்றை இம்மாநாட்டின் பெறுபயன் என்றும் பெரும் பயன் என்றும் கூறலாம். எனினும் இவையெல்லாம் வெறும் தொடக்கம்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இம்முயற்சிகள் தொடர வேண்டும். தமிழ் அறிவையும், தமிழ் உணர்வையும் மென்மேலும் வளர்த்தெடுத்திட வேண்டிய கடமை, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உள்ளது. அத்தோடு இன்னொரு கடமையும் நம் முன் இருக்கிறது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும்  இன்றைய தலைமுறைப் பிள்ளைகள், 'நாங்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும்?' என்று கேட்பதாகக் கூறினார்கள். இன்று நீங்கள் எல்லோரும் வானில் கிளை விரித்திருக்கலாம்; எனினும், அனைவரும் மண்ணில்தான் வேர் பிடிக்க வேண்டும். என்றேனும் ஒரு நாள் நம் தாய் மண்ணிற்குத் திரும்ப வேண்டியவர்கள்தாமே நாமெல்லாம்? இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் இந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும், ஆங்கிலேயர்களை விட அழகாக ஆங்கிலம் பேசினாலும், ஒருநாளும் ஆங்கிலேயராக முடியாது. அவர்களும் உங்களை ஆங்கிலேயர் என்று ஏற்க மாட்டார்கள். ஆங்கிலம் பேசினாலும் நீங்கள் ஆங்கிலேயர் இல்லை. தமிழே பேசத் தெரியவில்லை என்றாலும், நீங்கள் தமிழர்கள்தாம்!

ஆயிரம் மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய் மொழியை மறந்து விடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்...ஆனால் சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்!

மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!   குறைந்தது திருக்குறளையாவது பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.  திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால், திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும், புதிய உறவுகள் கிளைக்கும், வாழ்வு செழிக்கும். காரணம், திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூல். எந்த மண்ணிலும், எந்த ஒரு மொழி பேசும் மக்களோடும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதையும், எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும் திருக்குறள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

இம்மாட்டை இத்தனை சிறப்புடன், பொருள் செலவு செய்து நடத்திய செல்வராசா அவர்களை மனமாரப் பாராட்டுகின்றேன். உலகமெலாம் தமிழ் ஆய்வுகள் பரவ வேண்டுமென்று பாடுபட்ட தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டில் இம்மாநாடு நடப்பது மிகப் பொருத்தமானது. ஆய்வரங்கை ஒருங்கிணைத்து நடத்திய பேராசிரியர்கள் சண்முகதாஸ், மனோன்மணி, பற்றிமாகரன் ஆகியோர் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள். 24 மணி நேரமும் ஓய்வு ஒழிவின்றிப் பணியாற்றிய முருகானந்தம் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் நம் நன்றி பாராட்டுதலுக்கு உரியவர்கள்!

தமிழர்களாய் இணைந்தோம்......தமிழர்களாய்ப் பிரிகிறோம்...மீண்டும் மீண்டும் தமிழர்களாய் இணைவதற்காக!


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)



4 comments:

  1. //பல்வேறு கொடிகள், பல்வேறு தலைமைகளின் கீழ் நாம் வேறுபட்டு நின்றாலும், தமிழ் என்னும் ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, எதிர்காலத் தமிழ் இன, மொழி வளர்ச்சிக்குப் பாடுபட முடியும் என்ற நம்பிக்கையை இம்மாநாடு தந்துள்ளது.//
    மாநாட்டின் மிகப் பெரிய வெற்றிதானே ஐயா இது

    ReplyDelete
  2. திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால், திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும், புதிய உறவுகள் கிளைக்கும், வாழ்வு செழிக்கும். காரணம், திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூல். எந்த மண்ணிலும், எந்த ஒரு மொழி பேசும் மக்களோடும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதையும், எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும் திருக்குறள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் -"லண்டன் வாழ் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல நம் பிள்ளைகளுக்கே தேவையான அறிவுரை".

    ReplyDelete
  3. இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் இந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும், ஆங்கிலேயர்களை விட அழகாக ஆங்கிலம் பேசினாலும், ஒருநாளும் ஆங்கிலேயராக முடியாது.

    #### super

    ReplyDelete