தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 7 September 2013

நதியோடும் பாதையில்...(12)

கூட்டணிக் கணக்குகள்


தேர்தல் வரப்போகும் வேளைகளில் எல்லாம் கூட்டணி பற்றிய பேச்சுகள் நடைபெறுவது இயற்கையானது. இது தேர்தல் காலம். எனவே கூட்டணிச் சிந்தனைகளும், முயற்சிகளும் தொடங்கிவிட்டன.

‘மூன்றாவது அணி’ என ஒன்று குறித்து அவ்வப்போது பேசப்பட்டாலும், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள் என்பதுதான் இன்றுவரை தமிழ்நாட்டின் நிலையாக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்நிலை மாறப்போவதில்லை.


எனினும், வெவ்வேறு நோக்கங்களுக்காக, வெவ்வேறு கூட்டணி முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். அப்படி ஒரு முயற்சியை இப்போது இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், காந்திய மக்கள் இயக்கத் லைவர் தமிழருவி மணியனும் தொடங்கியுள்ளதாக வார ஏடுகள் எழுதுகின்றன. மணியன் அதனைத் தன் அறிக்கையில் மறுத்திருந்தாலும், அப்படி ஒரு கூட்டணி ஏற்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்தின் தே.மு.தி.க., தலைமையிலான, பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க.,வை உள்ளடக்கிய புதிய கூட்டணி முயற்சி அது. இருபது ஆண்டுகளாய்க் கட்சி நடத்தும் தன்னை, இப்போது கட்சி தொடங்கிய விஜயகாந்த் பின்னால் போகச் சொல்வது என்ன நியாயம் என்று வைகோ கேட்டுக் கோபப்பட்டதால்தான், மணியன் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று நக்கீரன் கூறுகின்றது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், பா.ஜ.க., ஆட்சிக்கு வருவது அப்படி ஒன்றும் பாவமில்லை என்றும் மணியன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். எனினும், பா.ஜ.க., கைவிட வேண்டிய சில கொள்கைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அறிக்கையின் வரிகள், “வகுப்பு வாதத்தை வளர்த்தெடுக்காமல், மத வெறியைத்தூண்டி விடாமல், பாபர்மசூதி  பிரச்சினையைப்  பெரிதாக்காமல்,  இந்துக்களும் மற்ற சமயத்தவர்களும் சம உரிமையும்  சம வாய்ப்பும் பெற்று இணக்கமான சூழலில் இந்தியர்  என்ற உணர்வோடு  வாழ்வதற்கு  பா.ஜ.க .  துணைநின்றால் அது ஆட்சிக்கு வருவது ஒன்றும் பாவமாகாது”, என்று கூறுகின்றன.

இப்போதெல்லாம் மணியனிடம் நல்ல நகைச்சுவை உணர்வைப் பார்க்க முடிகிறது. வகுப்புவாதம், மதவெறி, பாபர் மசூதி சிக்கல் ஆகியவைகளை பா.ஜ.க., கைவிட்டுவிட்டு, எல்லா மதத்தவரும் இணைந்து இணக்கமாக வாழும் சூழலை அக்கட்சி ஏற்படுத்த வேண்டுமாம். இதைவிட பா.ஜ.க., கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று அவர் சுருக்கமாகக் கூறியிருக்கலாம். வகுப்புவாதம் மதவெறியைத் தவிர பா.ஜ.க., தன் கையில் வைத்திருக்கும் வேறு திட்டம் என்ன என்பதை மணியன்தான் விளக்க வேண்டும்.

பா.ஜ.க.,வை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் அவருக்கு அப்படி என்ன ஆர்வம்? தமிழ்நாட்டுக் கூட்டணிக்கு விஜயகாந்தை தலைமை ஏற்க வைப்பதில்தான் அவருக்கு என்ன விருப்பம்?

வைகோவின் கோபம் சரிதான். அவரைச் சிறுமைப்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்ட கூட்டணித் திட்டம்போல் இது தெரிகிறது. அவருக்கு முன்னால், கட்சி தொடங்கிய ராமதாஸ் தலைமையிலேயே கூட்டணி அமைக்க மறுத்தவர் அவர். அவரைப் பொறுத்தளவு, தனியாகப் போட்டியிடுவது அல்லது தோல்வி அடையும் கூட்டணி எது என்று கண்டுபிடித்து அதில் தன் கட்சியை இணைத்துக் கொள்வது என்னும் இருநிலைப்பாடுகள்தான் உண்டு. ஒருநாளும் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் மூவரும் ஒரே அணியாக இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. பா.ஜ.க.வைப் பொறுத்தளவு எந்தக் கூட்டணியிலும் இணைந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் அவர்களுக்கு இரண்டு மூன்று இடங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடக் கிடைத்தாலே பெரிது.

இந்த உண்மைகள் எல்லாம் மணியனுக்கும் மிக நன்றாகவே தெரியும். இருந்தாலும் இந்தக் கூட்டணிக் குழப்பங்கள் எதற்காக என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவரை அறியாமலே அவருடைய அறிக்கையில் ஒரு வரி இடம் பெற்றுள்ளது. “இந்த இரண்டு கட்சிகளோடு (தி.மு.க., காங்கிரஸ்)  விஜயகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைத்து வலிமை சேர்த்து விடக்கூடாது என்கிற கவலை எங்களுக்கு இருக்கிறது” என்கிறார் மணியன். அதற்கான காரணத்தையும் அவர், “தமிழகத்தில் காங்கிரசும் - தி.மு.க.வும்  கைகோர்த்து நின்றால் அந்த அணியை தோல்வியுறச் செய்வது எங்கள் சமூகக் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று குறிக்கின்றார்.

எனவே பா.ஜ.க.,வையோ, விஜயகாந்த், வைகோ ஆகியோரையோ உயர்த்துவது மணியனின் நோக்கமில்லை. காங்கிரசையும், தி.மு.க.,வையும், குறிப்பாகத் தி.மு.க.,வை வீழ்த்துவதுதான் அவருடைய நோக்கம். காங்கிரசோடு அவருக்கு இருப்பது பங்காளிப் பகை. கடந்த காலங்களில் காங்கிரஸ் என்னென்ன அட்டூழியங்களைச் செய்தது என்று அவர் குறிப்பிடுகின்றாரோ, அத்தனை அட்டூழியங்களுக்கும் மௌன சாட்சியாக அந்தக் கட்சியில் இருந்தவர்தான் மணியன். இப்போது திடீரென்று இனநலனில் அக்கறை கொண்டு பேசுவதுபோல அவர் காட்டும் வெளிவேடங்களை அவரை அறிந்தவர்கள் நம்பமாட்டார்கள்.

தி.மு-.க.,வின் மீது அவருக்கு என்ன கோபம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. பலகாலம் அவர் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சி அவருக்கு எந்தப் பதவியையும் எப்போதும் வழங்கிடவில்லை. தி.மு.க.,வும் தலைவர் கலைஞரும் தான் தங்கள் ஆட்சிக் காலத்தில் அவரைத் திட்டக் குழு உறுப்பினராக அமர்த்திப் பெருமைப்படுத்தினார்கள். அப்படி இருக்க தி.மு.க., மீது அவர் ஏன் கோபம் கொள்ள வேண்டும்?

இயற்கையாகவே திராவிட இயக்கங்களின் மீதான கடும் ஒவ்வாமை கொண்டவர் மணியன் (ஒருவேளை அதனால்தான் வைகோவைக் கீழே தள்ளுகிறாரோ?). ஆனால் அதையும் தாண்டி, தி.மு.க.வின் மீது ஒரு தனிப்பட்ட பகை அவருக்கு அண்மையில் ஏற்பட்டது. திட்டக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் விலகிக் கொண்டபின், அவர் குடியிருந்த அரசு வீட்டைக் காலி செய்யுமாறு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் நீதிமன்றம் சென்று அவ்வீட்டைத் தக்கவைத்துக் கொண்டார். எனினும் அந்தக் கோபம் அவரைவிட்டு அகலவில்லை. தி.மு.க.வை எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று இன்னமும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தப் புதிய கூட்டணி முயற்சி.

இவ்வாறு தனிமனிதக் கோபங்களால் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்ததால்தான் அந்தக் கூட்டணி கருவிலேயே சிதைந்து போய்விட்டது. பாவம் மணியன்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்) 


2 comments:

  1. ஆர் எஸ் எஸ் எனும் நச்சின் தன்மை தெரியாத(?) காந்திய வாதி திரு மணியன்.பிஜேபிக்கும் ஆர் எஸ் எஸ்க்கும் இருக்கும் உறவு பற்றி தெரியாத (?) அரசியல்வாதி திரு.மணியன். பாவம் எல்லாம் அரசியல் படுத்தும் பாடு.அந்தோ பரிதாபம் !!

    ReplyDelete
  2. Dear subavee ayya,

    If what you say is true, then maniyan should have become a staunch supporter of AIADMK. But he hasnt. His calcuations might indeed be wrong. But its sad to see you unilaterally attack him only because he is critizing DMK (which did not exactly give a porkaala aatchi last time).

    ReplyDelete