தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 10 August 2013

நதியோடும் பாதையில்...(8)

மறுபடியும் மருத்துவர் 



காதலுக்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும், மருத்துவர் இராமதாஸ் அதை விடுவதில்லை. இப்போது அவருக்கும், அவர் கட்சியினருக்கும் கிடைத்துள்ள புதிய ஆயுதம், திரைப்பட இயக்குனர் சேரன் மகளின் காதல் சிக்கல். உலகிலேயே காதலுக்கு எதிராக இப்படிக் கட்சி நடத்துகின்றவர்கள் வேறு யாரும் இருப்பார்களா என்று தெரியவில்லை.



இயக்குனர் சேரன் புகழ் பெற்றவர் என்பதால், ஊடகங்கள் அனைத்தும் அவர் குடும்பச் சிக்கல் ஒன்றை இவ்வளவு பெரிதாக  ஆக்கிவிட்டன. மற்றபடி இது வெறும் குடும்பப் பிரச்சினைதானே தவிர, காதல் பிரச்சினை அன்று. தான் காதலுக்கு எதிரி இல்லை என்றும், சாதி, மதம் இங்கே குறுக்கே நிற்கவில்லை என்றும் சேரன் கூறியுள்ளதோடு, தன் திருமணமே காதல் திருமணம்தான் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.  தன் மகள் காதலிக்கும் அந்த இளைஞர் நல்லவர் இல்லை என்பது அவருடைய கருத்து. தன் கருத்தைத் தன் மகளிடம் எடுத்துரைக்கும் கடமை எந்த ஒரு தந்தைக்கும் உண்டு. அதை ஏற்கவும், மறுக்கவுமான உரிமை ஒவ்வொரு மகளுக்கும் உண்டு. அந்த அளவில்தான் நாம் அந்தக் குடும்பச் சிக்கலைப் பார்க்க வேண்டும்.

ஆனால் மருத்துவர் உள்ளே புகுந்து, தன் காதல் எதிர்ப்புக் கோட்பாட்டிற்கு இன்னொரு சாட்சி தேடுகின்றார். நீதிமன்றத்தையும் தன் துணைக்கு அழைக்கின்றார். மருத்துவர் ஐயாவின் அறிக்கையிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

"இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது."

"21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் 
செய்து கொள்ளும்போது, அத்திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் அத்தகைய திருமணங்கள் செல்லாதவை என்று சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய அரசு ஏற்க வேண்டும்"

"நாடகக் காதல்" என்னும் சொல்லை எப்படித்தான் மருத்துவர் கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. இன்றுவரை அதை விட மறுக்கின்றார். எதனை எடுத்தாலும் உடனே அதை நாடகக் காதல் என்று கண்டுபிடித்துச் சொல்லிவிடுகின்ற சமூக விஞ்ஞானி  மருத்துவர்தான்.  போகட்டும், அது உண்மைக் காதலா, நாடகக் காதலா என்று ஆராய்வது  இப்போது நம்முடைய பணியில்லை  அதனை விட்டுவிட்டு, வயதுச் சிக்கலைப் பற்றிப் பேசுவோம்.  

கர்நாடக உயர் நீதிமன்றம் வயது குறித்து அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது உண்மைதான். நீதிபதி பக்தவத்சலா மற்றும் நீதிபதி கோவிந்தராஜு ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் அத்தகைய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கும் செய்தியை நாளேடுகள் (டெக்கான் ஹெரால்ட் - 05.08.2013) வெளியிட்டிருந்தன.

இன்று நடைமுறையில் உள்ள சட்டப்படி, ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிரம்பி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்தத் திருமணம் செல்லாது. ஆனால் அதிலும் ஒரு உட்பிரிவு உள்ளது. இருவரில் ஒருவருக்கு அந்த வயது நிறைவடையவில்லை என்றாலும், மற்றவர் அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்காதவரை அந்தத் திருமணம் செல்லும் என்று அது கூறுகின்றது.("The marriage is valid, but is subjected to cancellation, if contested in court by one of the parties."). அப்படிப்பட்ட  திருமணங்களை 'voidable marriage' என்று வகைப்படுத்துகிறது சட்டம்.

இதனை அறிந்தோ, அறியாமலோ, 21 வயது நிரம்பாத இளவரசனின் திருமணம் செல்லாது என்று, சட்டம் படித்த (?), பா.ம.க.வின் வழக்குரைஞர் பாலு உட்படப் பலர் பேசுகின்றனர்.

சரி, திருமண வயது குறித்த நம் கருத்தை முன்வைப்போம். திருமணம் செய்து கொள்ளப் பெண்களுக்கும் 21 வயது நிரம்ப வேண்டும் என்னும் சட்டம் கொண்டு வரப்படுமானால், அதில் நமக்கொன்றும் பெரிய கருத்து வேறுபாடில்லை. தன் வாழ்வின் எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்ள 21 வயது நிரம்புவது நல்லதுதான். ஆனால் அதனைத் திருமணத்திற்கு மட்டும் பொருத்திப் பார்க்காமல், பிறவற்றிற்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும். சொத்துரிமை, வாக்குரிமை ஆகியனவற்றிற்கும் அது பொருந்த வேண்டும். 

வாக்களிப்பதற்கு 18 வயது போதும், திருமணத்திற்கு மட்டும் 21 வயது வேண்டும் என்பது நியாயமாக இல்லை. அது குறித்து ஏன் இதுவரை  பா.ம.க. பேசவில்லை? நாட்டின் எதிர்காலத்தையே 18 வயதில் தீர்மானித்துவிட முடியுமெனில், தன் எதிர்காலத்தை ஒரு பெண்ணால் அந்த வயதில்  தீர்மானிக்க முடியாதா? 

இந்தச் சிந்தனைகளெல்லாம் ஏன் பா.ம.க.விற்கு வரவில்லையெனில், அவர்களின் உண்மையான கவலை வயது பற்றியதன்று என்பதால்தான். சாதிதான் அவர்களின் நெஞ்சில் உறைந்து கிடக்கிறது. அதை மறைப்பதற்குத்தான் இப்படி வயதைத் துணைக்கு அழைக்கின்றனர். 

அவர்களின் தமிழ்த் தேசிய முகமூடி, சமூக நீதி முகமூடி, தமிழ் இசைக் காப்பு முகமூடி எல்லாம் கழன்று போய்  விடவே, வயது முகமூடியை அணிந்துகொள்ள முடியுமா என்று இப்போது முயற்சிக்கின்றனர். 

நண்பர் பொங்கலூர் மணிகண்டனின் குரல் சற்றுக் கரடு முரடாய்த்தான் ஒலிக்கிறது. சாதியைக் காப்பாற்றுவதுதான் எங்கள் நோக்கம் என்கிறார் அவர். சாதி மறுப்புத் திருமணங்களை ஒப்புக் கொள்ளவே முடியாது என்றும் கூறுகின்றார். இது மிகப் பிற்போக்கானதுதான். எதிர்க்கப்பட வேண்டியதுதான். எனினும், பொங்கலூர் மணிகண்டன் குரலில் ஒரு நேர்மை இருக்கிறது. 

அந்த நேர்மையை நம்மால் பா.ம.க.விடம் காண முடியவில்லை. நாம், நம் மேடைகளில் பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் படம் வைத்திருந்தால், அவர்களும் அதே படங்களை வைத்துள்ளனர். நாம் தமிழ்த் தேசியம் பேசினால், அவர்களும் அதனையே பேசுகின்றனர். நாம் ஈழத்தை ஆதரித்தால், அவர்களும் ஆதரிக்கின்றனர். ஆனால் அனைத்தும் மேற்பூச்சாகவும், சாதியே அவர்களின் அடித்தளமாகவும் உள்ளது.

இங்குதான் நாம் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டியுள்ளது. நாம் தமிழ் இன மொழிப் பற்றாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி, அடிப்படையாகச் சாதி எதிர்ப்பாளர்கள், ஆதிக்க எதிர்ப்பாளர்கள் என்பதை நிறுவ வேண்டும். அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. மனிதர்களுக்குள் சாத்திய ஏற்றத்தாழ்வை ஏற்பவர்கள், தீண்டாமையை உள்மனத்தில் ஒளித்து  வைத்திருப்பவர்கள் யாராயினும், அவர்களோடு நமக்கு எந்த உடன்பாடும் இல்லை. அவர்கள் தமிழ்த் தேசிய வாதிகளாக இருந்தாலும், தமிழ் ஈழ ஆதரவாளர்களாக இருந்தாலும், அது நமக்குப் பொருட்டில்லை.

இந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் இன்று பல இயக்கங்கள் தோன்றியுள்ளன என்பது நமக்கு மகிழ்ச்சி தருகின்றது. பெரியார் திடலில் நடைபெற்ற ஜாதி மறுப்பு இணைதேடல், வரும் 18ஆம் நாள், ஈரோட்டில் நடைபெறவுள்ள, சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம் நடத்தவிருக்கும் சாதி மறுப்பு மாநாடு ஆகியன நமக்கு ஊக்கம் தருகின்றன.


ஜனநாயகவாதிகள் ஒருபுறமும், சாதி வெறியர்கள் மறுபுறமுமாக அணிபிரிவது நல்லதுதானே!


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்) 

6 comments:

  1. இவரகளது நடுநிலைமை என்பது சாதியத்தை வளர்பதாக உள்ளது. சுயநலம் தலைநீட்டுகிறது.There is no hidden agenda for people like Dr Ramadass. It is a open declaration that these leaders are trying to rewind the earth clock to 1800 AD.Its clearly evident they do not have any theme to put forth to the masses.They are suffering from Identity Crises. மக்களை சாதீயம் எனும் சாக்கடையில் தள்ளி கற்காலத்தை நோக்கி மக்களை செலுத்த துடிக்கும் கூட்டம் இது !! திராவிட இயக்கத்தின் தேவை இருக்கிறது என்பதன் அடையாளமாக இதை என்போன்றோர் எடுத்துக்கொள்வோம்.கிருமிகள்(சாதியை வளர்க்கும்) இருக்கும் வரையில் மருத்துவம் (திராவிட இயக்கம்)தேவை. The dravidian movement is even more relavant now!!.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  3. பாதுகாவல் போர்வையிலே சாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவர்கள். ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ளநரிபோல் இருந்து ரத்தமெல்லாம் குடிப்பவர்கள். இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்போம். நாளை இவருடைய ஆட்டமெல்லாம் முடித்துவைப்போம்.
    திராவிட இய்யக்கத்தின் பணி எப்போதும் தேவை என்பதை உணர்த்தும் அருமையான பதிவு

    ReplyDelete
  4. பதினெட்டு வயதில் நாட்டை தவறாக தீர்மானித்தால் அடுத்த முறை சரியாக தீர்மானித்து கொள்ளலாம். ஏனெனில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது.ஆனால் வாழ்க்கையை அப்படி மாற்றிக்கொள்ள முடியாது. எனவே வாழ்க்கையை தீர்மானிக்க பக்குவமான வயது வேண்டும் இல்லையெனில் பெற்றோரின் ஒப்புதல் வேண்டும்!

    எனவே மருததுவர் சொல்வது சரியானதே!

    ReplyDelete
    Replies
    1. பக்குவமான வயது எது என்பதை விவாதிப்பதிலும், அதற்கேற்ப திருமண வயதை முடிவு செய்வதிலும் நமக்கு ஒன்றும் கருத்து வேறுபாடு இல்லை என்பதை என் தொடரிலேயே நான் குறிப்பிட்டுள்ளேன். நான் கூறுவதெல்லாம், சாதிய உணர்வை உள்ளே மறைத்துவைத்துக் கொண்டு,வெளியில் மருத்துவர் மற்ற எல்லாவற்றைப் பற்றியும் பேசுகின்றார் என்பதுதான்

      Delete
  5. இரத்தினவேல்14 August 2013 at 15:17

    சரியான வாதங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete