அண்ணாவின் பெயரால் கட்சி, அண்ணாவிற்கு எதிராக ஆட்சி
தமிழ்நாட்டில், இந்து சமய
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 38 ஆயிரத்துக்கும் கூடுதலான
கோவில்களின் செயல் அலுவலர்கள் அனைவருக்கும், அரசின் சார்பில், இந்து அறநிலையத்
துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அவ்வறிக்கையில்,
“இனிவரும் காலங்களில்
கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்கள், கோவிலைச் சுற்றியுள்ள வளாகத்தில்,
இந்துசமய வளர்ச்சி தொடர்பில்லாத கொள்கைகளை உடையவர்களுக்கும், நாத்திகவாத கொள்கை
உடையவர்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும்
இது பொருந்தும். கோவில் மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீகத் தன்மை தொடர்புடைய
வளர்ச்சிக்கு பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
வாடகைக்குக் கொடுக்க வேண்டும்”
என்று கூறப்பட்டுள்ளது.
மேலோட்டமாகப்
பார்க்கும்போது இது ஒரு சரியான சுற்றறிக்கை போலவே தோன்றும். கடவுள் மறுப்புக்
கொள்கை உடையவர்களுக்கு கோயில் மண்டபங்களில் ஏன் இடமளிக்க வேண்டும் என்ற வினாவே
இங்கு பலரால் எழுப்பப்படும்.
இது குறித்து விரிவாக
விவாதிப்பதற்கு முன் இச்சுற்றறிக்கை இப்போது ஏன் அனுப்பப்பட்டுள்ளது என்னும்
பின்புலத்தை விளக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் திருவாரூர் அருகிலுள்ள கண்கொடுத்த
வனிதம் என்னும் சிற்றூரில் சிவாலயத்திற்கு உட்பட்ட திருமண மண்டபம் ஒன்று,
திராவிடர் கழகத் தோழர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அது ஆன்மீகத்திற்கு இழுக்கைத் தேடித் தந்துவிட்டதாகக் கருதிய சிலர், முதல்வரிடம்
மனு அளித்துள்ளனர். அதன் உடனடி விளைவாகவே இச்சுற்றறிக்கை இப்போது
அனுப்பப்பட்டுள்ளது.
கண்கொடுத்த வனிதம் மற்றும்
அதன் அருகிலுள்ள விடயபுரம் ஆகிய ஊர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு ஒன்று உண்டு.
அவ்விரு ஊர்களும் சந்திக்கும் இடத்தில்தான், 1967ஆம் ஆண்டு, தந்தை பெரியார்
முதன்முதலாக, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்னும்
முழக்கத்தை எழுப்பினார். அதன் நினைவாக அங்கு ஒரு கல்வெட்டு கூட உள்ளது. இப்போது
மீண்டும் அதே இடத்தில் இருந்து இன்னொரு சிக்கல் எழுந்துள்ளது.
இந்து சமயக் கோயில்களைத் தன்
கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்து அறநிலையத் துறை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு
துறை என்பதை அனைவரும் அறிவோம். அரசின் கீழ், அதுவும் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ்
இயங்கி வரும் ஒரு துறை சார்ந்த கட்டிடத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும், ஒரு
குறிப்பிட்ட கோட்பாட்டினை ஏற்பவர்களுக்கும் மட்டும்தான் வழங்குவோம் என்பது என்ன
நியாயம்?
அனைத்து மக்களாலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, அனைத்து மக்களின் வரிப்பணத்தாலும் நடைபெற்றுக்
கொண்டுள்ள ஓர் அரசு, தன் பொறுப்பில் உள்ள திருமண மண்டபத்தையோ, கட்டிடத்தையோ ஒரு
குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே வழங்குவோம் என்று கூறுவது சட்டத்திற்கே முரணானது
இல்லையா?
இது ஒரு புறம் இருக்க, இன்னொன்றையும் நாம்
பார்க்கவேண்டியுள்ளது.
‘நாத்திக வாதக் கொள்கை உடையவர்களுக்கு’ மண்டபத்தை
வாடகைக்கு விடக்கூடாது என்று சுற்றறிக்கை கூறுகிறது.
‘நாத்திகவாதம்’ என்பது
இந்து மதத்தின் ஒரு பகுதி என்றுதானே சொல்லப்படுகின்றது. வேதங்களை ஏற்றுக்கொள்ளும்,
வைதீக மதங்களான, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சம்,
வேதாந்தம் ஆகிய ‘ஆறு தரிசனங்கள்’ மட்டும்தான் இந்து மதமா? ‘ஹிந்துத்துவா’ பேசும்
காவி உடையினர், இந்த ஆறு தரிசனங்கள் மட்டும் போதும், அவைதீக மதங்களுக்கும் இந்து
மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லி விடுவார்களா? வேதங்களை ஏற்க
மறுக்கும், சார்வாகம், ஆசிவகம், பௌத்தம், சமணம் ஆகியவற்றையும் அவை அவைதீக மதங்களாக
இருந்தபோதும், இந்து மதப்பிரிவுகள் என்றுதானே கூறுகின்றனர். இந்திய அரசமைப்புச்
சட்டமும் இன்றுவரை அப்படித்தானே கூறுகின்றது.
சௌத்ராந்திகன், வைபாஷிகன்,
யோகாசாரன், மாத்யமிகன் ஆகிய, கடவுள்களை மறுக்கும், வேதங்களை மறுக்கும் நான்கு
பௌத்த தரிசனப் பிரிவுகளையும் இந்துமதம் என்றுதானே சட்டமும், வைதீகர்களும்
சொல்கின்றனர். பிறகு எப்படி நாத்திக வாதம் இந்து மதத்திற்கு எதிரானதாக ஆகும்?
சமய வழிபாடு, தெய்வீகத்
தன்மை தொடர்புடைய நிகழ்ச்சிகளை நடத்திட மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்கிறது
அச்சுற்றறிக்கை. நல்லது. அப்படியானால், இராமாயாணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்
குறித்து நாம் பேசலாம் அல்லவா? அவற்றுள்ளும் நாத்திகக் கருத்துகள்
இடம்பெற்றுள்ளனவே!
இராமாயணத்தில் மன்னர்
தசரதனின் மதிப்பிற்குரியவராய் அவரது அவையில் வீற்றிருந்த ஜாபாலி முனிவர் ஒரு
நாத்திகர்தானே! இராமன் காட்டில் தங்கியிருந்த வேளையில், அவனை மீண்டும் நாட்டிற்கு
அழைக்கச் சென்ற பெரியோர்கள் கூட்டத்தில், ஜாபாலி முனிவரும் இருந்ததாகத்தானே
இராமாயணம் கூறுகின்றது. வான்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், 108 மற்றும்
109ஆவது படலங்களில் அவர் பேசும், ‘உலகாயுத’ வாதத்தை நம்மால் கேட்க முடிகிறதே!
‘இறப்புக்குப் பின்னால் எதுவும் இல்லை. மேலுலகம், சொர்க்கம் என்பதெல்லாம் வெறும்
புனைவுகள்’ என்று அவர் இராமனிடம் எடுத்துக் கூறுவதை அருகில் நின்ற வசிஷ்டர் உட்பட
அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனரே! அப்படியானால் கோயில் மண்டபங்களில் யாரும்
இராமாயாணம் குறித்தும் பேசக்கூடாது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு
சுற்றறிக்கை அனுப்புமா?
மகாபாரதத்திலும், ‘கடவுள்
நிந்தனை’ இருக்கத்தானே செய்கிறது. சபா பருவத்தில் தருமர் முன்னிலையில், ‘கடவுள்
கிருஷ்ணரை’ மிகக்கடுமையாக சிசுபாலன் விமர்சனம் செய்வதைக் கோயில் மண்டபத்தில் இனி
பேசவே கூடாதா? அல்லது அந்தக் காட்சியை மகாபாரதத்தில் இருந்தே நீக்கி விடலாமா?
‘மது, மாமிசம்
பயன்படுத்தும் கூட்டங்களுக்கும்’அனுமதி இல்லையாம். நம் ‘தேவர்கள், இந்திர லோகத்து
வானவர்கள்’ அருந்தாத சோமபானம், சுராபானமா? வேள்விகள் முடிந்தபின் அவர்கள் உண்ணாத
மாட்டுக்கறி, குதிரைக்கறியா?
எனவே இனிமேல் கோயில்
மண்டபங்களில் வானவர்கள், தேவர்கள், கிங்கரர்கள், கிண்ணரர்கள் யாருக்குமே இடமில்லை
என்று சுற்றறிக்கை கூறுகின்றதா? மது, மாமிசத்திற்கு இடமில்லை என்றால், இந்து மதப்
புராணங்களின்படி முப்பத்து முக்கோடி தேவர்களும் திணறித் திண்டாடிப் போய்விடுவார்களே!
இன்னொரு ஐயமும் நமக்கு
எழுகின்றது. அறிஞர் அண்ணா தன் ஆட்சிக் காலத்தில் சுயமரியாதைத் திருமணங்களைச்
சட்டமாக்கினார். அந்தத் திருமணத்தை இனிமேல் கோவில் மண்டபங்களில் நடத்தலாமா கூடாதா
என்பதற்கு, அறநிலையத் துறையும், முதலமைச்சர் ஜெயலலிதாவும்தான் விடை தர வேண்டும்.
புரோகிதரைக் கொண்டு
நடத்தும் வைதீகத் திருமணங்களை மட்டும்தான் இனி அங்கு நடத்தலாம் என்று கூறுவார்களோ?
சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்பதே இந்து திருமணச் சட்டத்தில் செய்யப்பட்ட
திருத்தம்தானே! அதற்கும் இடமில்லை என்றால், இந்து கோயில் வளாகத்திற்குள், இந்துத்
திருமணச் சட்டமே நுழைய முடியாது என்றல்லவா ஆகிவிடும்!
தன்மானப் பகுத்தறிவு
கருத்துகளை மக்களிடம் பரப்புவதைத் தன் நோக்கங்களுள் ஒன்றாகக் கொண்டு
உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். அந்த நோக்கத்திற்கு வலுச்சேர்த்தவர்கள்தாம்,
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்!
இன்று அண்ணாவின் பெயரைத் தன்
கட்சிப் பெயரிலும், அண்ணாவின் படத்தைத் தன் கட்சிக் கொடியிலும் வைத்துக்கொண்டு,
‘அண்ணா நாமம் வாழ்க!’ என்று வேறு கூறிக்கொள்ளும் ஜெயலலிதா, அண்ணாவின் கருத்துகளுக்கே தன் ஆட்சியில் தடை போடுகின்றாரே! அண்ணாவின் நாமமா இல்லை அண்ணாவிற்கே நாமமா என்ற
கேள்வி எழாதா?
நன்றாய் நடக்கின்றன...
அண்ணாவின் பெயரால் கட்சியும்
அண்ணாவிற்கு எதிராய் ஆட்சியும்!
(சனிக்கிழமைதோறும்
சந்திப்போம்)
இதென்ன பிரமாதம்!
ReplyDeleteதமிழ்நாடு பொதுப்பணித்துறை, நாகர்கோயில், சார்பில் (௦5.9.2013)அன்று அருள்மிகு நாகராஜா திருக்கோயில் ஆவணி 5-ம் ஞாயிறு திருவிழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் துண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பயன்பட வேண்டிய இத்துறையின் பராமரிப்பில் பல குளங்கள் ஏரிகள் தூர் வாரப்படாமல் மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை குமரி மாவட்டத்தில் உள்ளது.அதிகாரிகள் தங்கள் பணிகளை கவனிக்காமல்
விழாக்களையும் வழிபாடுகளையும் நடத்துவதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இவர்கள் பின்பற்றும் லட்சணமா?
அண்ணாவின் பெயரால் கட்சியும்
அண்ணாவிற்கு எதிராய் ஆட்சியும்!
SINNTHIPOM SEYALPADUVOM
ReplyDeleteTHINK & ACT
ReplyDeleteஎத்தனை பிரிவுகள் ...பயனுள்ள தகவல்... நன்றி
ReplyDelete