தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 26 October 2013

நதியோடும் பாதையில்...(18)

தங்கர்பச்சானும் தமிழ்வழிக் கல்வியும்


திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சானின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரக்கோட்டை. அவருடைய ஓரிரு படங்களில்கூட அந்த ஊர் வந்துபோய் இருக்கிறது. எல்லோரையும் போல, அவருக்கும் ஊர்ப்பாசம் நிறைய உண்டு. அந்த ஊரில் உள்ள, அவர் படித்த தொடக்கப் பள்ளியில், தமிழ்வழிக் கல்வி வகுப்பில், ஒரு மாணவர்கூட சேரவில்லை என்னும் செய்தி, அவரையும் நம்மையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது.
அது குறித்து 23.10.2013ஆம் நாள், தி இந்து (தமிழ்) நாளிதழில், அவருடைய நேர்காணல் ஒன்று வெளியாகி உள்ளது-. அதில் அவருடைய மனக்குமுறலைக் காண முடிகிறது.

மொத்தம் மூவாயிரம் பேர் உள்ள அந்த ஊரில், ஒருவரும் தங்கள் குழந்தைகளைத் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கவில்லையே என்பதை அறிந்து, பதறிப்போனேன் என்கிறார் அவர். ஒரு மொழியை ஒருவனிடம் இருந்து பிடுங்குவது என்பது, அவனது சிந்தனையைப் பிடுங்குவதற்குச் சமம். ஆடையை இழந்தால்கூட, கந்தல் துணியை வைத்து மானத்தை மறைத்துக் கொள்ளலாம். மொழியை இழந்தால் எதைக் கொண்டும் சரி செய்ய முடியாது. இப்போது தமிழர்கள் மானமிழந்து நிற்கிறார்கள்”, என்று தன் குமுறலை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் உணர்வோடு அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் பாராட்டிற்குரியன. குழந்தைகளின் உதடுகளில் இருந்து கூட, தாய் மொழியைப் பிரித்து விடுவது, எத்தனை பெரிய கொடுமை என்பதை அவருடைய நேர்காணல் நமக்கு உணர்த்துகிறது. தன் தொழில் தொடர்பான செய்திகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றவராக இல்லாமல், தமிழ் இன உணர்வுடையவராக எப்போதும் தங்கர் பச்சான் இருக்கிறார் என்பதும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.


அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒரு வகுப்பை ஆங்கில வழியில் அறிமுகப்படுத்தி உள்ள இன்றைய தமிழக அரசின் கொள்கை முடிவுதான் தங்கர்பச்சான் போன்ற தமிழின உணர்வாளர்களின் கவலைக்குக் காரணம். ஆங்கில வழிக் கல்விக்கு வழிவிடும் புதிய திட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான இன்றைய அரசு கொண்டு வந்துள்ளது-. அதன் விளைவாகவே கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைக் கண்டித்தும், இது கண்டு பதறியும் தன் கருத்தை வெளியிட்டிருக்கும், தங்கர் பச்சானைத் திடீரென்று ஓர் அச்சம் பற்றிக் கொண்டு விட்டது போலும். அம்மையாரின் அரசைக் குற்றம் சொன்னால், விளைவுகள் என்னாகுமோ என்ற பயம் அவருக்க வந்திருக்கலாம்.
இந்த அரசை மட்டும் தான் குறைகூறுவதாக நினைக்க வேண்டாம்என்று அடுத்த வரியில், பச்சான் பதுங்கிக் கொள்கிறார். ஜெ.அரசைக் காப்பாற்ற அவர் கூறியுள்ள வரிகளைப் பார்ப்போம்
நான் இன்று இருக்கும் அரசை மட்டும் நோக்கிக் கேட்கவில்லை. 45 ஆண்டுகளாக நம் மண்ணை ஆண்ட கட்சிகள் இந்த நிலைமைக்குப் பொறுப்பு-. அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தாய்மொழி குறித்த அக்கறை மற்ற தலைவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
அறிஞர் அண்ணாவையும் அக்கறையற்ற தலைவர்களின்பட்டியலில் பச்சான் சேர்க்காததற்கு, அவர் மறைந்து விட்டது காரணமாக இருக்கலாம். சரி, மொழி பற்றிய அக்கறையிலும், கல்வி பற்றிய அக்கறையிலும் கலைஞர் அரசு, எம்.ஜி.ஆர். அரசு, ஜெயலலிதா அரசு அனைத்தும் ஒன்றுதானா?
கலைஞர் ஆட்சியில், ஐந்தாம் வகுப்புவரை தமிழ் மொழியை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்திருந்தனர். ஆனால் அப்போதும், மிகச்சில அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்விப் பிரிவுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் 2006 -11 கால கட்டத்தில், ஒரு பள்ளியில் கூட ஆங்கிலவழி வகுப்புகள் புதிதாகத் தொடங்கப்படவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகள் சில, அவ்வாறு தொடங்க அனுமதி கேட்டபோதும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை-.
ஆனால் இன்று என்ன நிலை? மடைதிறந்த வெள்ளம்போல், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. அப்படித் தொடங்குமாறு அரசே கூறுகின்றது. எனவே முற்றிலும் வேறுபட்ட இரு நிலைகளை ஒரே தட்டில் வைத்துப் பார்க்கின்றார் தங்கர்பச்சான். சமமற்றவர்களைச் சமமாகக் காட்டுவதன் மூலம், மோசமான செயல் செய்தவர்களைக் காப்பாற்ற முயல்கிறார். 1970 நவம்பர் 30 அன்று, தமிழகம் முழுவதும் கல்லூரிகள் வரை தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரும் சட்ட முன்வடிவைத் தமிழகச் சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் தலைவர் கலைஞர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் - குறிப்பாக, நெடுமாறன் போன்றவர்களின் - எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ஜெயலலிதாவையும், கலைஞரையும் ஒரே மாதிரி பார்க்கும் தங்கர் பச்சானின் ஆழ்ந்த வரலாற்று அறிவைஎன்னென்பது!
அடுத்ததாக, அவருடைய நேர்காணலில், இன்னொரு முரண்பாடும் காணப்படுகிறது-. ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்றுக்கொடுங்கள். உயர்கல்விக்கு நீங்கள் ஆங்கிலம் பயன்படுத்துங்கள்என்கிறார்.
மொத்தக் குழப்பமும் இங்குதான் தொடங்குகின்றது. உயர்கல்வியில் ஆங்கிலம் இருப்பதனால்தான், தொடக்கக் கல்வியிலும் அதனைப் பெற்றோர்களும், மாணவர்களும் தேர்ந்தெடுக்கின்றனர். உயர்கல்வி அனைத்தும் தமிழில் இருக்குமானால், தமிழில் படித்து வெளி வருகின்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் இருக்குமானால், தொடக்கநிலையில் தமிழில் பயிலப் பெரிய போட்டியே கூட ஏற்படக்கூடும். ஐந்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்துவிட்டு, அதற்குப் பின் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படி என்றால், நம் பிள்ளைகள் தடுமாற மாட்டார்களா? தொடக்கத்திலிருந்தே ஆங்கிலத்தில் படித்து வருகின்றவர்களோடு போட்டிபோட முடியாமல் பின்தங்கிவிட மாட்டார்களா?
நடைமுறை அப்படித்தான் உள்ளது. அதனால் தமிழ்வழியில் கற்றுப் பின்னர் உயர் கல்வியில் ஆங்கில வழிக்கு வரும்போது, தங்களை அறியாமலே ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் உள்ளாகி விடுகின்றனர். அதனைக் காணும் மற்ற பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும், முதலிலிருந்தே ஆங்கில வழிக்குப் போய்விட எண்ணுகின்றனர்.
கல்வி என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பணக்காரப் பிள்ளைகளுக்குக் கான்வென்ட்டில் ஆங்கிலவழிக் கல்வியும், ஏழைப் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியும் என்ற நிலை இருக்கலாமா? கூடாது. எல்லாப் பள்ளிகளிலும் தமிழ்வழிக்கல்வியை அரசு கட்டாயமாக்க வேண்டும். அதற்கு முந்திய கட்டமாகத்தான் கலைஞர் அரசு சமச்சீர்க்கல்வியைக் கொண்டுவந்தது.
அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்த்தது எந்த அரசு என்பதை, மனசாட்சி உள்ளவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்.
தங்கர்பச்சான் மட்டுமில்லை, தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழறிஞர்கள் அனைவருமே அம்மாவின்ஆட்சியில் அடக்கித்தான் பேசுகின்றனர். அரசின் தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும், ஆங்கில வழிக் கல்விப் பிரிவு ஒன்றைத் தொடங்கலாம் என்று கலைஞர் அரசு அறிவித்திருந்தால், இந்நேரம் தமிழ்நாடு போராட்டக் களமாகியிருக்குமே!
ஆனால் அம்மையாரின் அறிவிப்பை எதிர்த்து முழக்கங்கள் இல்லை, முனகல்களும் கூட இல்லையே, ஏன்?


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

6 comments:

  1. கலைஞர் பார்பனர் இல்லையே? சூத்திரர் ஆயிற்றே! அது தான் காரணம்.
    ஜெயலலிதா வை விமர்சித்தால் ஊடகங்கள் அவர்களை விளம்பரப்படுத்த மாட்டார்களே!
    தினமலரும்,வைத்தியநாத அய்யரின் தினமணியும்,சோ பார்பானின் துக்ளக்கும்,குமுதம் ரிப்போடரும் அவ்விமர்சனத்தை வெளியிட மாட்டார்களே! அவை மட்டும்தான் காரணம்.
    அய்யா பெரியார் சொல்வதுபோல் பொது புத்தி எல்லாம் இவர்களுக்கு கலைஞர் ஆட்சி காலத்தில் மட்டும் தான் வேலை செய்யும்.
    அம்மையாரின் ஆட்சி காலத்தில் பொது புத்தி ஊமையகிவிடும்.

    ReplyDelete
  2. AYYAVIN ATCHIYIL VAI CHOLLIL VEERARGALAGA IRUPPAVARGAL, AMMAVIN ATCHIYIL OOMAIGALAGA IRUKKIRARGAL.

    ReplyDelete
  3. தங்களை தமிழ் உணர்வாளர்களாக முன்னிருதிக்கொள்ளும் பல தங்கர்கள் தமிழகத்தில் உண்டு. முன்பு ஒரு முறை தி மு க வின் மீது கடும் கொலைப்பழி விழுந்தது. அதன் காரணமாக அன்று தி மு க வின், சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெறும் இரண்டு தான். பின்னர் இப்போது பெரும் ஊழல் பழி விழுந்திருகிறது. இவையும் களையப்படும் வரை இது போன்றவர்கள் நம்மிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். நாம் தோழர்கள், அய்யாவின் பல பதிவுகளை உலகத்திற்கு உரக்க கொண்டு சேர்க்கும் பணி என்போன்றோருக்கு உண்டு என்று உணர்கிறோம்.கலைஞர் என்ற சக்தியை துரோகங்களாலும், தூற்றலாலும் அசைக்கமுடியாது. கலைஞரின் பணி இந்த இனத்திற்கு நிறைய செய்திருக்கிறது. அதை சொல்ல, ஒத்துக்கொள்ள நா இடமளிக்க வில்லை என்றால் அது இந்த இனத்திற்குசெய்யும் துரோகமாகும். உணவாளர்கள் உணரட்டும்

    ReplyDelete
  4. அரசியல்வாதிகள் மட்டுமல்ல பல இலக்கியவாதிகளும் ஜெயலலிதாவின் ஆட்சியில் நேர்மையை அடமானம் வைத்துவிட்டு அடங்கித்தான் கிடக்கிறார்கள். கலைஞரை விமர்சனம் செய்தால் அதனை வெளியிட்டு அவர்களுக்கு இலவய விளம்பரம் தேடித்தர ஏராளமான இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால் உரிய ஆதாரத்துடன் மட்டுமே தன விவாதங்களை எப்போதும் முன் வைக்கும் அண்ணன் சுபவீ அவர்கள் கலைஞருக்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்தை வெளியிட எத்தனை இதழ்கள் முன்வரும்? குங்குமம் முன் வருமா? தினகரன் முன் வருமா? சன் தொலைக்காட்சிதான் முன் வருமா?. தமிழ் நாட்டில் ஜெயலலிதாவை ஆதரித்து எழுதுவதும் கலைஞரை எதிர்த்து எழுதுவதும் மட்டுமே நடுநிலை என்று இதழ்கள் மட்டுமல்ல பல எழுத்தாளர்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். 'நக்கீரன், என்று ஒரு இதழ் இருப்பதால் மட்டும்தான் ஜெயாவின் இருட்டு ஆட்சியில் நடைபெறும் திருட்டுகளில் சிலவற்றையாவது பார்க்க நமக்கு கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கிறது.

    ReplyDelete
  5. முன்னாள் மத்திய அமைச்சரும் திராவிட இயக்கத்தின் உறுதி மிக்கத் தோழருமான நாடாளுமன்ற உறுப்பினர் அ. இராசா அவர்களைப் பற்றி அவதூறுச் சேற்றை அள்ளி வீசிய பலரும் அவருடைய விளக்கத்தைக் கேட்க முன் வரவில்லை. ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது அவருக்கு எதிராக சூழ்ச்சிவலை பின்னப்பட்டுள்ளதையும், அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தொடக்க நிலையிலேயே உறுதியோடு வாதிட்டவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீ ரமணி அவர்கள் , அண்ணன் சுபவீ அவர்கள் உள்ளிட்ட வெகு சிலர்தான்.. அன்று அவர்கள் சொன்னவற்றைதாம் இன்று துக்ளக் உள்ளிட்ட பல ஊடங்கங்கள் சொல்கின்றன, ' அ . இராசாவை காங்கிரஸ் பலிகடா ஆக்குகிறது!" என்று. அதே போன்று, தங்கர் பச்சான் போன்றவர்களும், தமிழ் வழிக் கல்வியை ஒழித்தவர் ஜெயலலிதாதான் " என்று ஒருநாள் சொல்வார்கள். . .
    http://www.scribd.com/doc/137506637/JPC-Written-Statement-of-A-Raja-Date-22-04-2013

    ReplyDelete
  6. பதிவுகளை வழக்கமாக வெட்டி ஒட்டுகிறவனல்ல. தங்கள் கருத்துக்களை என்னால் முடிந்த உயரத்துக்கு கொண்டு செல்ல வேர்களில் மீள் பதிவு செய்திருக்கிறேன்.தங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
    பாண்டியன் ஜி

    ReplyDelete