தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 2 November 2013

நதியோடும் பாதையில்...(19)

போங்கடா வெட்டிப் பயல்களா
சீமானின்அறிவார்ந்தபேச்சு
                               


நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்கம் குறித்துப் பேசியுள்ள காணொளியை,உங்களில் பலர் இணையத்தளத்தில் பார்த்தும் கேட்டும் இருக்கக்கூடும். அந்த வாய்ப்பு இல்லாத நண்பர்களுக்காக, அவர் பேச்சை, ஓர் எழுத்தும் மாறாமல், அப்படியே கீழே தருகின்றேன்-
“திராவிட முன்னேற்றக் கழகம் - முன்னேற்றம் என்பதற்குப் பொருள் என்ன - திருடர் முன்னேற்றம் - அதுதான் அதுக்குப் பொருள். அதிகபட்சம், திராவிடக் கொள்கை, திராவிடக் கொள்கைங்கிறாங்களே, என்ன? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வச்சோம். நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்தி வச்சோம். போங்கடா வெட்டிப் பயல்களா...

எங்க ஊர்ல பாத்தா, அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது, தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்பிடித்தான் நடந்துகிட்டிருக்கு.
‘சீர்திருத்தத் திருமணம் நடத்தி வச்சிட்டோம்’... எங்க ஊர்ல எல்லாம், அய்யர், கிய்யர் எல்லாம் கெடையாது. சும்மா வருவாய்ங்க. மோளத்தைத் தட்டுவாய்ங்க. கல்யாணத்தை நடத்தி வச்சிட்டுப் போயிருவான்க.
இதுக்கு ஒரு இயக்கமா, இதுக்கு ஒரு... இது ஒரு தத்துவமா?
நாங்கதான் ‘ஜில்லாவ’ ‘மாவட்டம்’ ஆக்கினோம்.
திராவிட இயக்கம் இல்லேன்னா நாங்க எல்லாம் படிச்சே இருக்க முடியாது. அப்படியா? இந்தியாவிலே அதிகம் படிச்சவங்க இருக்கிற மாநிலம் கேரளாங்கிறான். அங்க திராவிட இயக்கந்தான் படிக்க வச்சுதா? இந்தியாவில மத்த மாநிலங்கள்ல எல்லாம், ஆடு மாடு மேய்ச்சுக்கிட்டுப் படிக்காமலா திரியரான்? எங்கள விட நல்லாப் படிச்சு, வேல வெட்டிக்குப் போயிட்டிருக்கான். நாங்க ஏன் இப்பிடித் திரியரோம்? இதெல்லாம் அரசின் கடமை. நான் வாக்குச் செலுத்தி, அதிகாரத்தைக் குடுத்து ஒருத்தனை ஆள வைப்பது என்பது என் தேவையை நிறைவு செய்ய”.
நண்பர்களே! மேலே காணப்படும் ‘அறிவார்ந்த’ பேச்சை, அவர் எந்த ஊரில், எப்போது பேசினார் என்ற குறிப்பு எதுவும், அந்தக் காணொளியில் இடம்பெறவில்லை. அவர் பேச்சையும், என் பேச்சையும் வெட்டி வெட்டி, ‘சீமான் vs சுப.வீரபாண்டியன்’ என்ற தலைப்பின் கீழ் யாரோ பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்தப் பேச்சிற்கு நாம் விடை சொல்ல வேண்டுமா, விதண்டாவாதம் செய்பவர்களோடு விவாதம் செய்து காலத்தை வீணாக்க வேண்டுமா என்ற வினாவை நண்பர்கள் சிலர் எழுப்பினர்.

நம் விளக்கங்களை எல்லாம் கேட்டுச் சீமான் மாறிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. திட்டமிட்ட உள்நோக்கங்களோடு, தூங்குவது போல நடிப்பவர்களை யாராலும் எழுப்ப முடியாது. ஆனாலும், அடுத்த தலைமுறை இளைஞர்கள், கேலியும் கிண்டலும் நிறைந்த அவர் பேச்சில் ஈடுபாடு கொண்டு, உண்மைக்கு எதிர்த்திசையில் பயணம் தொடங்கிவிடக்கூடாதே என்ற அச்சத்தில், சிலவற்றை நாம் விளக்கியே ஆக வேண்டியுள்ளது. மற்றபடி, சீமானை வசை பாடுவதோ, அவரோடு மல்லுக்கு நிற்பதோ நம் நோக்கமில்லை.

மேடையேறத் தொடங்கிய காலத்தில், சீமான் தன்னை, “நான் மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டுதான் பேசத் தொடங்குவார். அதனால்தான் பெரியாரின் பிள்ளைகளும் அவரை நம்பி, மதித்துக் கூட்டங்களுக்குப் பேச அழைத்தனர். இப்போது கிளை மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுகின்றார். திராவிட இயக்கம் என்ன செய்து விட்டது என்றும், இதுவெல்லாம் ஒரு கொள்கையா, இதற்கெல்லாம் ஓர் இயக்கமா என்றும் கேட்கின்றார்.

மேலே உள்ள அவருடைய பேச்சில், அவர் முன்வைக்கும் செய்திகள் மூன்று -
1. சுயமரியாதைத் திருமணம், விதவைத் திருமணம் போன்றவைகள் எல்லாம், திராவிட இயக்கத்திற்கு முன்பே இருந்தன.
2. ‘ஜில்லா’வை மாவட்டமாக்கிய, ‘தமிழ்மயமாதல்’ ஒன்றும் பெரிய செயல் இல்லை.
3. திராவிட இயக்கம்தான் கல்வியைத் தந்தது என்பது உண்மையில்லை.
ஆக மொத்தம், திராவிட இயக்கத்தின் சமூகப் பணி, மொழிப் பணி, கல்விப்பணி ஆகிய அனைத்தையும் சீமான் மறுக்கிறார். ‘துக்ளக்’ இதழைத் தவிர, மற்ற பார்ப்பனர்கள் கூட, இப்படிக் கூசாமல் பொய் சொல்வதற்குச் சற்றுத் தயங்குவார்கள். முற்றிலும் பொறுப்பற்ற தன்மையும், சமூக அக்கறையும் அற்றவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் பேசமுடியும்.

சங்ககாலம் தொட்டே, கணவனை இழந்த பெண்கள், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ள போதிலும், புறநானூற்றில் இடம்பெற்றுள்ள, ‘பல்சான்றீரே, பல்சான்றீரே!’ எனத் தொடங்கும், அரசி பெருங்கோப்பெண்டு எழுதியுள்ள ஒரு பாடலே போதுமானது. ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்றுதான் சிலம்பும் கூறுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில், அந்தக் கொடுமை அப்படியேதான் தொடர்ந்துள்ளது. அதற்கு இரு சான்றுகளைக் காணலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1887ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, டபிள்யு. ஜே. வில்கின்சின் ஆங்கில நூல் ஒன்று அண்மையில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ‘நவீன இந்துத்துவம்’ என்பது அதன் பெயர். அந் நூலிலிருந்து சில வரிகளைக் காணலாம் -
“(விதவையானவள்) ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உண்ண வேண்டும். மாதத்தில் இருமுறை, அதனையும் தவிர்த்து, உணவும், தண்ணீரும் அருந்தாமல் 48 மணிநேரம் இருக்க வேண்டும்.......வங்காளத்தில் உள்ள ‘சநாதனதர்ம ரட்சிணி சபா’, மருத்துவக் காரணங்களுக்காக, முற்றிலும் உண்ணாமல் இருப்பது உகந்தது அல்ல என்றால் தண்ணீரை மட்டும் அருந்தலாம் என்று விதித்திருக்கிறது.”
இதுபோல இன்னும் பல கொடுமையான செய்திகளை அந்நூல் விளக்குகிறது. இன்னொரு பகுதியில், கொட்டும் பனியில், ஈரப் புடவையுடன் அந்தப் பெண் நிற்க வேண்டிய சடங்கை எடுத்துக் காட்டுகிறது-. இவ்வாறு ‘கைம்மை நோன்பு’ என்னும் பெயரால், இந்நாட்டுப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

இன்னொரு சான்றாக, 20ஆம் நூற்றாண்டில், காந்தியார் கூறுவதைக் கவனிக்கலாம். “15 வயதுள்ள ஒரு பால்ய விதவை, தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வது, அவ்விதமாகச் சொல்வோரின் கொடூர சுபாவத்தையும், அறியாமையையுமே விளக்குகிறது” என்கிறார் காந்தியார்.

15 வயதிலேயே ஒரு பெண் விதவை ஆகிவிட்டாளா என்று எண்ண வேண்டாம். அப்போது குழந்தை மணம் நடைமுறையில் இருந்ததால், 1 வயதுக்கும் 5 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தை விதவைகளின் எண்ணிக்கை 11,892 என்று, 1921ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகின்றது. அதே கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும், 30 வயதுக்குட்பட்ட விதவைகள் 26,31,788 பேர் இருந்துள்ளனர்.

கைதட்டல்களுக்காக, எல்லோரையும், எல்லாவற்றையும் கேலி செய்து பேசும் சீமான்களுக்கு இந்த வலியும் வேதனையும் புரியாது. இதயமும், அதில் ஈரமும் உள்ளவர்களுக்கு மட்டுமே அவை விளங்கும்.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ இதே நிலைதான் இருந்தது. ஆங்காங்கே தோன்றிய சமூக இயக்கங்கள்தாம் இந்நிலையைச் சிறிது சிறிதாக மாற்றின. அவற்றுள் திராவிட இயக்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், சுயமரியாதைத் திருமணம், கைம்பெண் மறுமணம் ஆகியவை, தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்திய கிளர்ச்சிகளைச் சீமான் போன்றவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. படித்தும் அறிந்து கொள்ள முயலவில்லை.

அடுத்ததாக, சமற்கிருத்திற்கு எதிராகத் திராவிட இயக்கம் தொடுத்த போரையும், ஜில்லாவை மாவட்டம் ஆக்கிவிட்டால் போதுமா என்று கேட்டுக் கேலி செய்கிறார். அக்கிராசனர் தலைவர் ஆனதும், காரியதரிசி செயலாளர் ஆனதும், நமஸ்காரம் வணக்கம் ஆனதும் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே, தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழோசை கேட்கத் தொடங்கியது. தனித்தமிழ் இயக்கத்திற்கு அதில் பெரும்பங்கு உண்டு. எனினும் அந்த உணர்வை வெகுமக்களிடம் கொண்டு சென்ற இயக்கம் திராவிட இயக்கம்தான்-.

தமிழ் உணர்வைக் கூடக் கேலி செய்யும் சீமான் நடத்தும் இயக்கத்திற்கு, நாம் தமிழர் இயக்கம் என்று பெயர்.

மூன்றாவதாக, திராவிட இயக்கத்தின் கல்விப்பணியை அவர் மறுக்கின்றார். திராவிட இயக்கம்தான் படிக்க வைத்தது என்றால், கேரள மக்களை யார் படிக்க வைத்தார்கள் என்று கேட்கிறார். கேரளாவிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதனால்தான், கேரள அரசும், தமிழக அரசும் இணைந்து வைக்கத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துள்ளன. எனினும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் திராவிட இயக்கம்தான் படிக்க வைத்தது என்று நாம் கூறவில்லை. தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு பற்றிப் பேசும்போதுதான் அவ்வாறு குறிப்பிடுகிறோம்.

ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப, சமூக இயக்கங்கள் தோன்றி வளரும் என்பதுதானே இயல்பு. கேரளாவில் பொதுவுடைமை இயக்கம், நாராயண குரு இயக்கம் போன்றவை செயலாற்றின. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, மராட்டியத்தில் மகாத்மா ஜோதிராவ் பூலே தொடங்கிய இயக்கம், கல்வி மற்றும் சமூகப் பணி ஆற்றியது. வட இந்தியாவில் ராம் மனோகர் லோகியாவின் இயக்கம் சமூக நீதி விழிப்புணர்வை உருவாக்கியது.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். திராவிட இயக்கம் தோன்றியிராவிட்டால், தமிழகம் அப்படியே தேங்கிப் போயிருக்கும் என்று நாம் கூறவில்லை. அது இயங்கியல் கோட்பாட்டிற்கே எதிரானது. இன்னொரு இயக்கம் தோன்றி அப்பணியைச் செய்திருக்கும் என்பதுதான் உண்மை. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதே அறிவியல்.

ஆனால் அதற்காக, பணியாற்றிய இயக்கங்களின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மார்க்சும், பிரபாகரனும் தோன்றியிராவிட்டால், அந்த இடத்திற்கு வேறு இருவர் வந்திருப்பார்கள் என்பது சரிதான். அதற்காக மார்க்சையும், பிரபாகரனையும் கேலி செய்து பேசுவது அநாகரிகம்.

இறுதியாய் நண்பர் சீமானுக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்களின் அரசியல் நோக்கங்களுக்காகவும், அதிகாரக் கனவுகளுக்காகவும், உங்களை நம்பி உங்கள் பின்னால் வரும் இளைய தலைமுறையினரிடம் வரலாற்றைத் திரித்துச் சொல்லி, அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாதீர்கள்!


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

27 comments:

 1. இது போன்ற விளக்கங்கள் சீமான் போன்ற மேதாவிகளின் பின்னால் உள்ள பல இளைஞர்களுக்கு கண்டிப்பாக தேவை தான். நம் வாளாவிருந்தால், இது போன்ற பிதற்றல்கள் உண்மையோ என்று பதிவாகிவிட வாய்ப்புள்ளது அய்யா. தங்களின் இந்த விளக்க கட்டுரை அவசியம் தான்.

  ReplyDelete
 2. //திட்டமிட்ட உள்நோக்கங்களோடு, தூங்குவது போல நடிப்பவர்களை யாராலும் எழுப்ப முடியாது. ///
  ஆனாலும் இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கு தங்களது விளக்கம் மிகவும் அவசியமான ஒன்று ஐயா.
  பெரியார் என்ற ஒருவர் இல்லையேல் இன்று நம் கதி என்னவாகியிருக்கும்.

  ReplyDelete
 3. பெரியார் என்ற ஒருவர் இருந்திருந்தால் சுபவீ, கருணாநிதி போன்றோர்களை தனது தடியால் அடித்தே கொன்றிருப்பார்.. அந்த அளவிற்கு திராவிட கொள்கைகளை நாசமாக்கியவர்கள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஸ்டாலினின் மனைவிக்கு என்ன வேலை?.. திராவிட குடும்பத்தில் கழுத்தில் தாலிக்கு என்ன வேலை.. புடுங்குறத சரியா பண்ணுங்க

  ReplyDelete
  Replies
  1. நம் வீட்டுப் பெண்கள் கோயிலுக்குப் போவது சரியா, கழுத்தில் தாலி அணிந்து கொள்வது சரியா என்பன போன்ற வினாக்களுக்கு விடை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏற்கனவே, குடும்பமும் அரசியலும் என்னும் என் நூலில் இவற்றிற்கு விரிவாக விடையும் கூறியுள்ளேன். எனினும் உங்கள் மடலின் கடைசி வரி உங்கள் தரத்தைக் காட்டுவதாக உள்ளது. அந்தத் தரத்திற்கு இறங்கி என்னால் பேச இயலவில்லை. எனவே உங்களோடு உரையாட எனக்கு விருப்பமில்லை.

   Delete
  2. சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் ஆவணம் ஒன்று போதாது. அய்யா சீமானின் பெரியார் கொள்கைக்கு.... சைமன் சீமான் அவர்களின் கொள்கை புரட்டுக்கு.இவர் செந்தமிழராம் நாசமாய் போச்சு தமிழும்

   Delete
 4. சீமான் போன்ற சில்லறைகள் வயிற்றெரிச்சலில் பேசிய பேச்சு.தனது சினிமாக் கனவு பலிக்காமல் போனதால் அரசியல் கனவுக்கு வந்துள்ள அவரை இந்த அள‌வுக்குப் பேச வைத்ததே திராவிட இயக்கம்தான் என்பதை அவரது உள்ளம் மறுக்காது;மறுக்கவும் முடியாது.அவரது முகம் நடிக்கும்போது,மனம் சிரிக்கத்தான் செய்யும்.இவரது குடும்பம்காங்கிரஸ் குடும்பம் என்றே அவரே சொல்லிக்கொள்வார்.பெரியார் தாக்கம்,திராவிட இயக்கத் தொடர்பு இவருக்குக் கிடைக்காமல் போயிருந்தால் அவர் சார்ந்த ஜாதிச் சங்கத்தில் இருந்திருப்பார்.நாம் தமிழர்கள் என்ற உனர்ச்சியைக் கொடுத்ததே திராவிட இயக்கம்தான் என்பதே உண்மை.உண்மையை எத்தனை நாள் அவ‌ரால் மூடி மறைக்கமுடியும்?அது பெரு நெருப்பு கனன்றுகொண்டே இருப்பது.காலச்சூழலில் அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்.அப்போது சீமான் இருளில் கிடப்பார்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை என்றும் மறையாது. “அரசியல் நோக்கங்களுக்காகவும், அதிகாரக் கனவுகளுக்காகவும், உங்களை நம்பி உங்கள் பின்னால் வரும் இளைய தலைமுறையினரிடம் வரலாற்றைத் திரித்துச் சொல்லாதீ்ர்” எனத் தாங்கள் நிறைவில் குறிப்பிட்டிருக்கும் நிலையில் தான் இன்று சீமான் இருக்கிறார். இதற்குச் அன்மையச் சான்று செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தில் நிறுவனத்திற்கு எதிராக தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் கலைஞருக்கு எதிராக கோஷம் எழுப்பியும் உண்ணாவிரதம் (?) இருந்த நிறுவனத்தின் தாற்காலிக ஊழியர்களுக்கு ஆதரவாக உண்மை எதுவென்று புரிந்துகொள்ளாமல் நிறுவனத்துள் அத்துமீறி நுழைந்து இயக்குநரிடம் மூக்கடிபட்டுக்கொண்டதை வரலாறு பதிவுசெய்து வைத்துள்ளது. திருமணம் செய்துகொண்டால் ஒரு ஈழத் தமிழ்ப்பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறித் தன் சுயஇலாபத்திற்காக இளைஞர் கூட்டத்தை சீரழிக்கம் சீமானின் பேச்சு என்றும் எடுபடாது!

   Delete
 5. அருமையான விளக்கம் அய்யா. சீமானின் ’நாம் தமிழர் கட்சி’, ’நாம் ஐந்தறிவு கட்சி’ ஆகிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது!

  ReplyDelete
 6. சீமான் சில்லறை ஆகிவிட்டார்.....அக்கட்சிக்கு கல்லறையையும் தானே கட்டிவிடுவார் என்பது அவர் பேச்சில் தெறிகிறது. தங்களின் பதிலடி அருமை.

  ReplyDelete
 7. நீங்கள் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு சீமான் அவ்வளவு பெரிய அறிவாளி கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. அருமை

   Delete
  2. அருமையான விளக்கம் ஐயா
   ஆனால் என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் நீங்கள் எல்லாம் அவனுக்கு பதில் அளிக்க வேண்டிருக்கிறதே என்று தான்

   ச். சபேசன்

   Delete
 8. சீமான் பெரியார் எதிர்ப்பை பேசுவதற்க்கு அவர் தென் மாவட்டங்களில் இருக்கும் ஒரு சில ஆதிக்க சாதிகளை நம்பி கட்சி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் . (அவருக்கு அறிக்கை எழுதி கொடுப்பவருக்கு , பெரியாரை பிடிக்காது ).

  நாம் தமிழர் என்று சொல்லுகின்றார் , பிறகு தேவர் , நாடார் எல்லாம் தமிழ் சாதி பிள்ளைகள் என்று பேசி சாதிய உணர்வை நியாயப்படுத்துகிறார் . அவரை நம்பி அவருக்கு பின்னால் சென்றவர்கள் மெல்ல மெல்ல அவர் இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் .

  ReplyDelete
 9. சீமான் ஒரு கபட வேடதாரி.கலைஞர் ஆட்சியில் இருந்தால் மட்டும் வானத்திற்கும்,பூமிக்கும் குதிப்பார்.இப்போ எல்லாவற்றையும் இழுத்து மூடிக் கொண்டு இருக்கிறார்.இந்த ஆள் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருப்பது தேவையில்லாதது.

  ReplyDelete
 10. சீமான் பேசியதை நீங்கள்தான் திரித்து பதில் சொல்லியிருக்கிறீர்கள்.... நியாயமானவராக இருந்தால் சீமானின் பேச்சை அப்படியே வெளியிட்டு அதற்குப் பதில் கூறுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. சீமான் பேச்சைத் திரித்தும், அரைகுறையாகவும் வெளியிட்டுள்ளதாக என் மீது குற்றம் சாற்றியுள்ளீர்கள். அதனை நான் பதிவேற்றம் செய்யவுமில்லை, வெளியிடவுமில்லை. ஏற்கனவே you tube இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுளதையே நான் மேற்கோள் காட்டியுள்ளேன் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன். உங்களிடம் அந்த முழுப் பேச்சும் இருக்குமானால் அனுப்பி வையுங்கள். கேட்டுவிட்டு என் பக்கம் தவறு இருக்குமானால், உடனே அதனை வெளியிடவும், வருத்தம் தெரிவிக்கவும் அணியமாக உள்ளேன்.

   Delete
  2. மனிநிலை பாதித்த நாத்திகனை திருத்துவது இயலாத காரியம்
   "அடுப்புக்கரியை எத்தனை கழுவினாலும் வெளுப்பாகாது".

   Delete
 11. அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன ?
  கருணாநிதி அவர்களை முதல்வராக ஆக்குவதா ? அல்லது ஸ்டாலினா ?

  ReplyDelete
  Replies
  1. இருப்பாய் தமிழா நெருப்பாய்! ஜெயலலிதா விடம் மட்டும் செருப்பாய்!

   Delete
 12. இவர்கள் நல்லா இருந்திருந்தால் சீமான் ஏன் வரணும் சீமானோடு நேருக்கு நேர் வாதிட முடியாத சு.வீ தமிழன் ஒன்ராவதை தடுக்கிறார் ஐயா போதும் உங்கள் பணி நிங்கள் ஒய்வு எடுக்கலாமே இனி நாங்கள் போராடி பார்க்கிறோமே.கருணாநிதிக்கு பாதுகாப்பாளராக இருந்து நிங்கள் ஈழத்தில் நடந்த இன அழிப்பை தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றாரே சீமான். ஏன் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்?
   தமிழர்களின் நல் வாழ்விற்காக உழைக்கும் சீமான் ஏன் சேது சமூத்திரத்திட்டத்தை தடுத்து நிறுத்திய ஜெயலலிதாவை கண்டிக்கவில்லை?
   சமச்சீர் கல்வி தடுக்கப்பட்ட பொது அவர் நடத்திய
   போராட்டங்கள் எத்தனை? ஒரே ஒரு அறிக்கை உண்டா?
   பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்ட போது ஏன் கண்டிக்கவில்லை?
   விடுதலைப்புலிகள் மூலம் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கனவு கண்டு எல்லா ஊடகங்களிலும் தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதாவை தமிழர் சீமான் ஏன் கண்டிக்கவில்லை?

   சற்றும் நாகரீகம் இல்லாத மேடைப்பேச்சு,கையை உயர்த்தி,கமுகட்டு மயிர் தெரிவது போல பேசும் இவரெல்லாம் ஒரு இயக்கத்திற்கு தலைவன். தலைவலி.
   Delete
 13. //உங்களின் அரசியல் நோக்கங்களுக்காகவும், அதிகாரக் கனவுகளுக்காகவும், உங்களை நம்பி உங்கள் பின்னால் வரும் இளைய தலைமுறையினரிடம் வரலாற்றைத் திரித்துச் சொல்லி, அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாதீர்கள்!//

  இது உங்களுக்கும் பொருந்தும் தானே அய்யா! எங்களை போன்றவர்கள் உங்களை நம்பினோம், நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைத்தான் நாளை சீமான் செய்வார், நாங்கள் தெளிவாக இருக்கிறோம், இன்றைய இளைய தலைமுறையினரும் தெளிவாக இருக்கிறார்கள்,

  ReplyDelete
  Replies
  1. உங்களுத்தான் ஈழத்தாய் இருக்கிறார்.அவர்களை பிரதமர் ஆக்குங்கள் !. முப்படை தளபதிகளான அய்யா நெடுமாறன் ,வைகோ ,தமிழருவி ஆகியோரின் ஆலோசனையாலும் (வாய்ச்சொல்) வீரன் சைமன் தலைமையில் ஈழத்தை அடைவீர்கள்(கலைஞரை திட்டியே ).

   Delete
  2. "ஒரு பக்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிவிட்டு மறுப்பக்கம் காமன்வெல்த் இலங்கையில் நடப்பதை எதிர்க்கும் உணர்வாளர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இது நேர்முரணானது. ஈழ ஆதரவு போல அ.தி.மு.க ரெட்டை வேடம் போடுகிறது." (மதிமுக பொதுச் செயலாளர் வைகோ)

   Delete
 14. ஈழத்தமிழர் விவகாரத்தில் 2ஜி ஊழலை மனதில் வைத்து காங்கிரஸ் காரனால் blackmail செய்யப்பட்டு உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் கருணா வின் பின்னால் தாங்கள் இருப்பது எங்களை போன்றோருக்கு நெருடலகத்தான் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் குற்றச்சாற்று ஒரு புறம் இருக்கட்டும். என் கட்டுரையில் உள்ள செய்திகளுக்கும் உங்கள் மறுமொழிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை மட்டும் எண்ணிப்பாருங்கள். நான் எதை எழுதினாலும், எதைப் பேசினாலும், 2ஜி அல்லது நான் கலைஞரோடு இருக்கிறேன் என்பதுதான் அதற்கான விமர்சனமா? அன்புகூர்ந்து இந்த மன நோயிலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்!

   Delete
 15. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
  இலண்டனில் இருந்து விஜய் சூர்யா எழுதி கொள்வது.
  தங்கள் உள்ள நலன் போல, உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
  தாங்கள் சீமானுக்கு திராவிட இயக்கங்கள் பற்றி பதிலுரைத்த விளக்கங்கள் அவருக்கும் அவரது கட்சியினர்க்கும் புரியும்படி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆனால் இக்கருத்துகள் சீமானுக்கு தெரியாது என்று நம்ப நான் தயாராக இல்லை. அவர் திட்டமிட்டுதான் திராவிட எதிர்ப்பு கருத்துகளை மலிவான முறையில் பேசி வருகிறார் என்று எண்ண தோன்றுகிறது.
  தற்போது தமிழகத்தில் வலிமையாக இருக்கும் திராவிட இயக்கங்களின் எதிரியாக தன்னை முன்னிறுத்தி கொள்ளும்போது, சீமான் அவர்களை எதிர்க்கும் அளவிற்கு வலிமையானவன் என்று அவரை சுற்றி இருபவர்களை நம்பவைக்க முயலுகிறார் என்றே தோன்றுகிறது.
  காலம் காலமாக கதாநாயகன் –வில்லன் என்ற அமைப்பில் கதைகளை கேட்டு பழக்கப்பட்டுவிட்ட நம் மக்களுக்கு, ஒரு தலைவன் பின்னால் செல்லும்போது அடித்து வீழ்த்த வேண்டிய எதிரி அவர்கள் கண்முன் தெரிய வேண்டியிருக்கிறது. நம்மால் ஒருவனை வீழ்த்தி வெல்ல முடிந்ததே என்ற அல்பமான திருப்தியே நமக்கு போதுமானதாக இருக்கிறது, நல்லவனை வீழ்த்தினோமா, கெட்டவனை வீழ்த்தினோமா என்ற நியாய தர்மங்கள் யாருக்கும் தேவை இல்லை.
  நம் சமுகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே கொள்கை என்று ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கம் அன்று அனைத்து நிலைகளிலும் வலிமையாக இருந்த பிராமிணர்களை எதிரியாக முன்னிறுத்தி மக்களை ஒன்றிணைத்தது. பின்பு திராவிட முன்னேற்ற கழகமான போது அன்று பதவியில் பலத்துடன் இருந்த காங்கிரஸை எதிரியாக முன்னிறுத்தியது. இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற சரியான நிலைபாடுகளை எடுத்தாலும், நம் எதிரி காங்கிரஸ் என்று மக்கள் மனதில் ஆணி அடிக்க அப்போதைய காங்கிரஸ் தலைவர்களை பற்றி கழகத்தினர் பேசிய பொய்யுரைகள் தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
  இன்று தி.மு.க. , அ.தி.மு.க. என்றான பின்பும், இரு கட்சிகளும் எதிரி கட்சிகள் போல காட்டிகொள்வது, அக்கட்சி தொண்டர்கள் மனதில் மாற்று கட்சியினர் பற்றிய வெறுப்புணர்வு குறையாமல், அவர்களின் ஓட்டு வங்கி குலையாமல் இருக்க அக்கட்சி தலைவர்களின் சித்து விளையாட்டு என்று தங்களுக்கு புரியாமல் இருக்காது.
  இந்த கேடுகெட்ட வழிமுறையை அறிந்து கொண்ட சீமானும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பு வரை பெரியாரிசம், மார்க்சிசம் என்று பேசி கொண்டு இருந்தவர், தேர்தலுக்கான கட்சி என்று ஆரம்பித்த உடன் காலம் காலமாக கழகங்கள் கையாண்டு வெற்றிபெற்ற இந்த தரம் கெட்ட பாதையில் தானும் செல்ல விரும்புகிறார் என்றே எண்ண தோன்றுகிறது. பலமான எதிரியுடன் மோதி தானும் அந்த அளவிற்கு வலிமையானவன் என்ற மாயையை அவர் ஏற்படுத்த விரும்பினாலும், மற்றவர்களுக்கு என்னவோ ‘ நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்’ என்ற வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.

  தங்கள் அன்புள்ள
  விஜய் சூரியா
  உலக தமிழியல் ஆய்வு நடுவம்
  இலண்டன்

  ReplyDelete