தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 12 November 2013

நதியோடும் பாதையில்...(20)


நவம்பர் 27 மாவீரர் நாள்
தலைவர் பிரபாகரன் வருவாரா...?


                               
1982இல், தமிழக மண்ணில் தலைவரின் மடியில் இறந்துபோன விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் போராளி சங்கரின் நினைவாக, 1989 முதல் உலகெங்கும் மாவீரர் நாள் நினைவு கூரப்படுகின்றது. எனினும் 1998ஆம் ஆண்டிலிருந்துதான் அந்நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 98இல் கனடா, 99இல் லண்டன் என்று ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலெல்லாம் ஒவ்வோர் ஆண்டும் உரையாற்றிடும் வாய்ப்பைப் புலிகள் அமைப்பு எனக்குத் தந்தது. பொடா சிறையிலிருந்த 2002, 2003ஆம் ஆண்டுகளைத் தவிர, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் மாவீரர் நாளில் நான் பங்கேற்றுள்ளேன். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் ஆற்றிய உரைக்குப் பின்னர், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்றுவருகிறேன்.


மாவீரர் நாள் கூட்டங்கள், வேறு எதனோடும் ஒப்பிடமுடியாத தனித்தன்மை வாய்ந்தவை. உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கவை. ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறுகிற கூட்டங்களில், கூடுதலாக மாவீரர்களைப் பெற்றிருக்கிற குடும்பத்தின் தலைவர்களே அன்றைய நிகழ்வில் கொடியேற்றி வைக்கும் பெருமை உடையவர்கள். கொடியேற்றலுக்குப் பிறகு, “மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதிஎனத் தொடங்கும் உறுதிமொழியை அங்கு திரண்டுள்ள அனைவரும் ஏற்பர். மொழியின் மீதும் வழிகாட்டும் தலைவன் மீதும், விழி மூடித் துயில்கின்ற மாவீரர் மீதும் உறுதி ஏற்றபின்பே பிற நிகழ்வுகள் தொடங்கும். ஏறத்தாழ ஐந்து மணி நேரம் நடைபெறும் நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கானவர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய்ப் பங்கேற்கும் காட்சியின் அருமையைக் கண்டோர் மட்டுமே உணரமுடியும்.

அந்த அரங்கின் திரையில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் குரல் ஒலிக்கும். அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதை உலகமே உன்னிப்பாய்க் கேட்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அந்த மாவீரர் நாளில் மட்டுமே அவர் உரையாற்றுவார். அது திருக்குறளைப்போலச் சுருக்கமாய் இருக்கும். அதற்கு ஆண்டுமுழுவதும் என் போன்றவர்கள் விளக்க உரைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்.

2009ஆம் ஆண்டிற்குப் பிறகு, இன்றுவரையில் அவருடைய உருவத்தைக் காண முடியவில்லை, குரலையும் கேட்க முடியவில்லை. தலைமறைவாய் இருக்கும் தலைவர், மறுபடியும் வருவார், போர்ப்பரணி தருவார் என்று தமிழகத்திலே தலைவர்கள் சிலர் தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளனர். அவற்றின் உச்சமாக, அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற, முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில், ‘இப்போதும் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தேசியத் தலைவர் பிரபாகரன், நம் தலைவர் நெடுமாறனோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்என்று தேனிசை செல்லப்பா மேடையில் கூறியிருக்கிறார்.

இங்கே இரண்டு செய்திகளை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியுள்ளது. தலைவர் உயிரோடு இருக்கின்றாரா, எங்கே இருக்கின்றார் என்பன போன்ற வினாக்கள் தொடுக்கப்பட்ட போது, ‘அவர் குறித்த எந்தச் செய்தியும் நமக்கு உறுதியாகத் தெரியவில்லைஎன்றுதான் நான் விடை சொன்னேன். தெரியாத செய்தியைத் தெரியாது என்று சொல்வதுதான் நேர்மையானது என நான் கருதுகின்றேன். என்னைக் காட்டிலும் கூடுதல் தொடர்புகளைக் கொண்ட, அய்யா நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கலாம். ஆனாலும் கூட அவர்கள் வெளியிடும் இச்செய்திகள் குறித்து நமக்குச் சில ஐயங்கள் எழவே செய்கின்றன.

தலைவர் பிரபாகரன் தலைமறைவாக இருக்கவும் வாய்ப்புண்டு, போரில் மக்களோடு மக்களாக வீரமரணம் அடைந்திருக்கவும் வாய்ப்புண்டு. இப்படி நான் சொல்வதால், ‘பாருங்கள், தலைவர் மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று இவன் கூறுகிறான், இவன் ஒரு துரோகிஎன்று சிலர் உரத்துக் கூச்சலிட வாய்ப்புண்டு. அது குறித்து நான் கவலை கொள்ளவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் மீது மாறாத அன்புடையவன் நான். ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது போல் வந்த மாமணி என்றே அவர் குறித்து எண்ணுகின்றேன். என்றாலும் மனிதராய்ப் பிறந்த எவர் ஒருவருக்கும் மரணம் ஒரு நாள் வந்தே தீரும். அதிலும் களத்தில் நின்று மக்களுக்காகப் போராடும் மாவீரர்களுக்கு வெற்றியும் வரும், வீரமரணமும் வரும் என்பதுதான் இயல்பு. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டங்கள் ஒரு தலைமுறையிலேயே வெற்றி கண்டதில்லை. நீங்கள் உயர்த்திப் பிடித்த கொடிகள் ஒருநாளும் தாழ்ந்துவிடாமல், இனிவரும் நாள்களில் எங்கள் தோள்கள் தாங்கும் என்னும் தொடர்ச்சியே விடுதலைப் போராட்டங்களின் வீர வரலாறு. அந்த மனநிலையை மக்களிடம் கொண்டு செல்லும்போதுதான் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். அப்படி இல்லாமல், மறுபடியும் தலைவர் வருவார், வருவார், வருவார் என்றே சொல்லிக் கொண்டிருப்பது, எந்தப் போராட்டமும் இன்றி நாள்களை நகர்த்தும்.

தலைவர் உயிரோடு இருந்து, மறுபடியும் போருக்குத் தலைமை ஏற்க வந்தால், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களில் உவகை அடையாதவர் யார் இருப்பார்? ஆனால், அவர் தலைமறைவாக இருப்பது உண்மை எனக் கொண்டாலும், அதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் அந்த உண்மையை அவர்கள் சொல்லாமல் இருப்பார்கள். உரிய கால கட்டத்தில் உண்மையை அவர்களே வெளிப்படுத்துவார்கள், வெளியில் வருவார்கள்.
அதற்கு முன்பாக, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஒவ்வொரு நாளும் எங்களோடு பேசுகிறார் என்றும் இவர்கள் கூறுவது எதற்காக என்று நமக்குப் புரியவில்லை. இந்தக் கூற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வகையில் உதவும் என்றும் விளங்கவில்லை. அவரோடு தங்களுக்குத் தொடர்ந்து தொடர்பிருக்கிறது என்று சொல்லிக் கொள்ளுவது, அப்படிச் சொல்லிக் கொள்பவர்களுக்கான உள்நாட்டு அரசியல் நன்மைகளுக்கு மட்டுமே பயன்படும். அந்த வேலைகள்தான் இப்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டும் இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.

நெடுநாள்களுக்கு முன்பு, சுபாஷ் சந்திரபோஸைத் தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருப்பதாக முத்துராமலிங்கத் தேவர் கூட்டங்களில் தொடர்ந்து பேசுவதுண்டு. அவ்வாறே இப்போது தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இம் மாவீரர் நாளில், சொந்த மண்ணின் விடுதலைக்காக இறந்துபோன, பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் எண்ணுவோம். ஈழ மக்களின் வாழ்வில் விடியலைக் கொண்டுவர அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம். ஈழப்போராட்டத்தின் உன்னதங்களையும், தேசியத் தலைவரின் ஒப்பற்ற போர்க்குணத்தையும் நம் உள்நாட்டு அரசியலுக்குப் பயன்படுத்துவதில்லை என்று உறுதி ஏற்போம்!.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

2 comments:

  1. அற்புதமான கருத்துகள் ஐயா. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மீது உண்மையிலே இந்த தலைவர்களுக்கு மரியாதை இருக்குமானால் அவரது பெயரை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. //அதற்கு முன்பாக, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஒவ்வொரு நாளும் எங்களோடு பேசுகிறார் என்றும் இவர்கள் கூறுவது எதற்காக என்று நமக்குப் புரியவில்லை.// யாரு சார் இப்படி சொல்வது..

    ReplyDelete