தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 16 November 2013

நதியோடும் பாதையில்...(21)


முள்ளிவாய்க்கால் முற்றமும்
ஜெயலலிதாவும் 


கடந்த 13ஆம் நாள் (13.11.2013) அதிகாலையில் நடத்தப் பெற்ற முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சில் இடியாய் விழுந்துள்ளது. மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளிய சிங்கள அரசுதான் இங்கும் ஆட்சி நடத்துகிறதோ என்ற எண்ணமே எல்லோருக்கும் எழுகின்றது.
       
முற்றத்தை இடித்ததோடு நில்லாமல், அய்யா நெடுமாறன் அவர்களையும், அவரோடு சேர்த்து 83 உணர்வாளர்களையும் அரசு கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளது. அவர்கள் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கும் தொடுத்துள்ளது.


 ஏன் இத்தனை கோபம்? அவர்கள் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள்?  இழந்த உயிர்களையும், உறவுகளையும் நெஞ்சில்  நிறுத்தி ஒரு நினைவு முற்றம் அமைக்கக் கூடாதா? தமிழர்களாய்ப் பிறந்த காரணத்தால் களம் நோக்கி எழுவதற்கும் உரிமையில்லை, அழுவதற்கும் உரிமை இல்லையா? மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச் சுவர்  கட்டப்பட்டுள்ளது என்றால்,  அதனைக் கட்டி முடிக்கும் வரை அரசு என்ன செய்தது? ஒன்று, கட்டும்போதே தடுத்திருக்க  வேண்டும் அல்லது முன் அறிவிக்கை கொடுத்து உரியவர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். எதுவுமின்றி, கட்டி முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, திறப்பு விழா முடிந்து சில நாள்களில் அவசரம் அவசரமாக அதனை இடிப்பது என்றால் அதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. 

அதற்கு முதல் நாள்தான், தமிழ்நாடு சட்டமன்றத்தை விரைந்து கூட்டி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது  என்னும் தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். அது ஒரு மனதாகவும் நிறைவேற்றப்பட்டது. அடடா, ஈழத்தின் மீது அம்மையாருக்குத்தான் எவ்வளவு ஈடுபாடு என்று பலரும் போற்றினர். அய்யா நெடுமாறன் அவர்களும், தம்பி சீமான் அவர்களும் அதனை வரவேற்றுப் பாராட்டியிருந்த செய்தியைத் தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில், ஈழத்திற்கு எதிராய் முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏன் இடிக்க வேண்டும் என்ற ஐயம் எல்லோருக்கும் எழுகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தோழர் மணியரசன்தான் அதற்கொரு சரியான எடுத்துக்காட்டைக் கூறினார். 1933 ஆம் ஆண்டு  ஜேர்மன் நாட்டு அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஹிட்லர் மே தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடினாராம். இனிமேல், 'உழைப்பை மதிப்போம், உழைப்பாளர்களை மதிப்போம் ' என்பதுதான் நம் நாட்டின் முழக்கம் என்றாராம். ஆனால் மறுநாளே, தொழிற் சங்கங்கள் அனைத்தையும் தடை செய்து ஆணையிட்டாராம். இன்னொரு ஹிட்லராக இப்போது ஜெயலலிதா வந்துள்ளார் என்றார்.

நல்ல எடுத்துக்காட்டுதான். நெடுமாறன் கைது செய்யப்பட்டபின்,  வைகோவும் தன் அளவு கடந்த கோபத்தை வெளிக்காட்டினார். பொடாவில் கைது செய்யப்பட்ட போது , விமான நிலையத்திலும், பின்பு  வேலூர் சிறைவாசலிலும் , 'சண்டாளி , சதிகாரி' என்று உரத்துக் குரல் எழுப்பிய பழைய வைகோவை மீண்டும் காண முடிந்தது. இனிமேல் மறுபடியும் மாற மாட்டார் என அவர் கட்சியனர் கூறுகின்றனர்.

முள்ளிவாய்க்கால்  முற்றத்திற்காகத் தன் சொத்து அனைத்தையும் கொடுத்துவிடுவதாகச் சொன்ன, திறப்பு விழா நாள்களில் கம்பீரமாக வலம் வந்த நடராசன் அவர்களைத்தான், இடிப்பு நிகழ்வு அன்று காண முடியவில்லை. வேறு வேலைகளுக்காக வெளியில் சென்றிருக்கலாம் அல்லது தொலைக்காட்சிகள் காட்டாமல் இருந்திருக்கலாம். 



இச்சூழலில் தோழர் தா. பாண்டியன் விடுத்துள்ள  'ஆவேச'  அறிக்கை பற்றி என்ன சொல்வது?  முதலமைச்சர் படித்தால் பயந்தே போய்  விடுவார். நீங்களும் படித்துப் பாருங்கள்:

"தமிழக அரசு முள்ளிவாய்க்காலில் பலியான மக்களின் அளப்பரிய  தியாகத்தை மதிப்பதால், அதற்காகப் பாடுபட்டு நினைவாலயம் எழுப்பிய நெடுமாறன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட  வழக்குகளை ரத்து செய்யவும் வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்." (தி இந்து)

இதனைக் காட்டிலும் கோபமாக யாரால் அறிக்கை விட இயலும்? குறைந்தபட்சம் அதிகாரிகள் அல்லது சுற்றுச் சுவரை இடித்த வண்டிகளின் ஒட்டுனர்களையாவது தா.பா கண்டித்திருக்கலாம்.அது கூட அம்மாவின் வருத்தத்திற்குத் தம்மை ஆளாக்கிவிடும் என்று கருதியிருப்பார் போலும்! 'பணிவான' வேண்டுகோளோடு நிறுத்திவிட்டார். 

தா.பா. மட்டுமன்று, நெடுமாறன் உள்ளிட்ட அக்குழுவினர் அனைவருமே அம்மாவிடம் நெருக்கமாகவே இருக்க விரும்பினர். முற்றம் திறப்புக்கே அவரைத்தான் அழைக்க எண்ணியிருந்தனர் என்று நண்பர்கள் சிலர் கூறினார். அதனை அண்ணன் வைகோ அண்மையில் தன் பேட்டி ஓன்றில்  உறுதிப் படுத்தியுள்ளார். 'ஆறு மாதங்களுக்கு முன்பே அண்ணன் நெடுமாறன் கடிதம் எழுதினார் . அதற்கு எந்தப் பதிலும் இல்லை. பிறகு தா. பாண்டியன் மூலம் முயற்சி செய்தோம். அதற்கும் பயனில்லை: என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு பல விதங்களிலும் அவமானப்பட்ட பின்பும், அம்மாவைப் பற்றி அவர்கள் யாரும் ஒருவரியும் தவறாகப் பேசவில்லை. 

அது மட்டுமின்றி, தமிழக வரலாறு சொல்லும் முற்றத்தில் அம்மாவுக்குப் பிடிக்காத பெரியார், கலைஞர் படமெல்லாம் வைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். காமராசர் படம் கூட இல்லை. கலைஞருக்கு வேண்டியவர்கள் யாருக்கும் பார்வையாளருக்கான அழைப்பிதழ் கூட அனுப்பவில்லை. இவ்வளவுக்குப் பிறகும் அம்மாவின்  கருணை  கிடைக்காமலே போய்விட்டது. தொடக்கம் முதலே முற்றத்திற்கு அவர் எதிரானவராக இருந்தார். தடைகளை விதித்தார். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வளவும் போதாதென்று, முற்றத்தின் ஒரு பகுதியை இடித்தும் விட்டார். 

இப்போதுதான் அவர் ஒரு ஹிட்லர் என்று நம் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்குப் புரிந்துள்ளது. ஒரு வகையில் ஜெயலலிதா மிகப் பெரிய ஆள்தான்! நம்மால் எல்லாம் புரிய வைக்க முடியாததை அவர்தானே புரிய வைக்கிறார்.

இனியேனும்  அனைவரும் ஒருங்கிணைந்து முற்றத்தைக் காப்போம். அது தமிழர்களின் சொத்து! 



(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

5 comments:

  1. "திறப்பு விழாவுக்குத் தான் அழைக்க வில்லை. பரவாயில்லை. சிறை நிரப்ப அழையுங்கள். கட்டாயம் வருகிறோம்" என புதிய தலைமுறை நிகழ்ச்சியில் தாங்கள் சொன்னதே அவர்களை நாணச் செய்திருக்கும். இனியாவது அவர்கள் ஒற்றுமையை விரும்புவார்களா?

    ReplyDelete
    Replies
    1. நிச்சையமாக ஒற்றுமையை விரும்பமாட்டார்கள். தாங்கள் இழுத்த இழுப்புக்கு வேண்டுமானால் வருவதை விரும்புவார்கள்.இந்த நாட்டில் அரசியல் என்பது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் என்ற நிலையினை ஒட்டியே இருக்கும் என்று பெரியார் சொன்ன பிறகு தெரிந்தே பார்ப்பனியத்திற்கு துனைபோவதேன்று அவர்கள் முடிவு செய்துவிட்ட பிறகு தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பமுடியுமா அதபோல் தான் இதுவும் மீண்டும் ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில திராவிடர்கழக மாநாட்டில் நிறைவேற்றபாட்ட தமிழ் தேசியவாதிகள் பற்றிய தீர்மானத்தை அசைபோடஇதோ : தீர்மானம் எண்: 20

      தமிழ்த்தேசியமும், அதன் பின்னணியும்

      தமிழ்த்தேசியம் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும், திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தக் கிளம்பியுள்ளவர்களைப் புறக்கணிக் குமாறு பார்ப்பனர் அல்லாத கோடானுகோடி மக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

      தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் பார்ப்பனர் களின் எல்லா வகையான ஆதிக்கங்களையும் எதிர்த்து நடத்திய இயக்கத்தால்தான் - பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி உரிமை; வேலை வாய்ப்புரிமை இவற்றைப் பெற்று வருவதோடு அல்லாமல், பார்ப்பனீயப் பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடும் எழுச்சியும் பெற்று வந்துள்ளனர்.

      குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் தங்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெறும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.

      ஜாதி உணர்வு புறந்தள்ளப்பட்டு, தமிழரின ஒற்றுமை என்னும் ஓரின கோட்பாடு உருவாக்கப்பட்டது.

      திராவிடர் என்ற வரலாற்று ரீதியான இனச்சொல் ஆரியர் - பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புக்கான குறியீடாகக் கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டு வருகிறது.

      இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத ஊடுருவல் எதிர்ப்பும் இதன் உள்ளடக்கமாக இருந்து வருகின்றன.

      இந்நிலையில், தமிழ்த்தேசியம் எனும் போர்வையில் தந்தை பெரியார் அவர்களையும், திராவிடர் இயக்கத்தை யும் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல் பார்ப்பனர் களையும் தமிழர்கள் எனும் போர்வையில் ஊடுருவச் செய்வதும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைக் கைவிட்டும், ஜாதி முறைகளைக் காப்பாற்றியும் வரும் போக்கினை அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும் என்றும் தமிழினப் பெருமக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

      ஈழத் தமிழர்களுக்காக இவர்கள் பாடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி, அந்தத் திரைமறைவில் இத்தகைய எதிர்மறைப் போக்கினைக் கடைபிடிப்பதில் உள்ள சூழ்ச்சியைத் தமிழின இளைஞர்கள் புரிந்து கொண்டு புறந்தள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

      தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் தளங்களில் அனைத்து உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வந்ததும், பாடுபட்டு வருவதும், பாடுபடப் போவதும் தந்தை பெரியார் அவர் களின் அடிப்படைக் கொள்கையும், உண்மை திராவிடர் இயக்கமுமேதான் என்பதை இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது.

      Delete
  2. இதை மிகவும் ரசித்தேன் :

    "ஒரு வகையில் ஜெயலலிதா மிகப் பெரிய ஆள்தான்! நம்மால் எல்லாம் புரிய வைக்க முடியாததை அவர் தானே புரிய வைக்கிறார்."

    மிகவும் சரிதான் !!
    --------
    வாழ்க நல்ல மனிதர்கள் !
    வாழ்க மனித நேயம் !!
    வாழ்க தமிழ் !!!

    ReplyDelete
  3. ஐயா.பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு தான் யார் என்று புரியவைக்கும் அம்மையார் என்றைக்கு தா.பாண்டியன் போன்ற புரட்சியாளர்களுக்கு (?) புரியவைக்கப்போகிறாரோ? அந்த நாளை எதிர்ப்பார்க்கிறேன். அப்போதும் தா.பா போன்றோருக்கு ஆதரவாக நாம் தான் குரல் கொடுப்போம்.

    ReplyDelete