தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 21 December 2013

நதியோடும் பாதையில்...(26)

செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில், 20.12.2013 அன்று தலைவர் கலைஞரின் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், காங்கிரஸ், பா.ஜ.க., உடன் கூட்டணி சேர்வது இல்லை என்று முடிவெடுத்துள்ளீர்கள். ஆனால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். அ.தி.மு.க.,வைப் பொறுத்தளவு அக்கட்சியின் தலைவி ஜெயலலிதாவின் பெயர் அப்பதவிக்கு முன்மொழியப்படுகிறது. அதே போல, தி.மு.க.,விலும் முன்மொழிய வாய்ப்பு உண்டா?’ என்ற வினாவிற்குக் கலைஞர் மிகச் சுருக்கமாக விடையளித்திருக்கிறார். எங்கள் எல்லைகள் எங்களுக்குத் தெரியும். எங்களால் தொட முடியாத தொலைவுகளை நாங்கள் குறி வைப்பதில்லை,’ என்பதே அவர் விடை. பல ஆண்டுகளுக்கு முன்பும், நீங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘என் உயரம் எனக்குத் தெரியும்என்றுதான் அவர் விடை கூறினார்.
ஆனால் அதற்கு நேர்எதிராக, 19ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவில், ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் ஜெயலலிதா மட்டுமேஎன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தன் கட்சியினரின் விருப்பம் என்று கூறியுள்ள ஜெயலலிதா, தன் இறுதி உரையில், “அ.தி.மு.க., என்ற எக்ஸ்பிரஸ் ரயில் புனித ஜார்ஜ் கோட்டையை 6 தடவை வெற்றிகரமாகச் சென்று அடைந்திருக்கிறது. இந்த ரயில் வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி செங்கோட்டை ரயிலாக மாறும். டெல்லி செங்கோட்டை என்னும் இலக்கை அடைய இந்த ரயிலுக்குப் பச்சை கொடி காட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் தயாராகிவிட்டனர். அந்த ரயிலில் இஞ்சின் டிரைவராக நான் இருப்பேன்என்று பேசியிருக்கிறார்.

எனவே இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்னும் தன் விருப்பத்தைத்தான், கட்சியினரின் விருப்பம் என்று ஜெயலலிதா கூறுகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. அந்தக் கட்சியில் உள்ளவர்களுக்குத் தனியாக விருப்பம் எல்லாம் இருக்க முடியுமா என்ன?

யார் வேண்டுமானாலும் ஜனநாயக நாட்டில் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து கூட்டங்களில் சொல்வதைப் போல, ‘அயிரை மீன்களுக்கு விலாங்குச் சட்டையின் மீது ஆசை வரக்கூடாது என்று சொல்ல முடியுமா என்ன?’. தா.பாண்டியன் போன்றவர்களும், ஜெயலலிதா எப்படியாவது பிரதமர் ஆக வேண்டும் என்னும் தங்கள் ஆசையை ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்திகளை நாம் அறிவோம். இப்போது சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணனும், எக்காரணம் கொண்டும் தி.மு.க.வுடன் கூட்டு இல்லை என்றும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ், பா.ஜ.க., இரண்டு கட்சிகளுடனும் தி.மு.க., கூட்டணி சேரவில்லை என்றாலும், அக்கட்சியுடன் நாங்கள் சேர மாட்டோம் என்பது சி.பி.எம்.மின் நிலைப்பாடாம்! இப்போது விலகி விட்டாலும், ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த கட்சி தி.மு.க., என்பதால், அவர்களை எக்காரணம் கொண்டும் தீண்ட முடியாது என்று சி.பி.எம். அறிவித்து விட்டது. ஆனால், சி.பி.எம்.மும் பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த கட்சிதான் என்பதை அறிக்கை விடும்போது மறந்துபோய் விடுகிறார்கள்.
அ.தி.மு.க.,வும் அதன் தலைவி ஜெயலலிதாவும்தான் எப்போதும் நிலை மாறாதவர்கள் என்று நம் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் கருதுகின்றனர் போலும். அதுபோல அவரைப் பற்றி எண்ணி ஏமாந்து போனவர்கள் ஏற்கனவே நிறையப் பேர் உள்ளனர். பகை தகர்க்கும் தமிழ் தேசியம் என்னும் நூலில், ஓவியர் சந்தானம் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார்.
இதுநாள்வரை - போராளி எதிர்ப்பு நிலை கொண்டிருந்த ஜெயலலிதாவே, தற்போது ஈழம் குறித்த உண்மை நிலையை உணர்ந்து, தமிழர்களும் சிங்களவர்களும் சம உரிமை பெற்று வாழ வேண்டும், இல்லையேல் தமிழீழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று கூறியதுடன், மீண்டும் மீண்டும் தமிழகம் முழுக்க அதை உறுதிபட முழங்கிவருகிறார் என்று ஏப்ரல் 2009இல் எழுதியுள்ளார். அப்படித்தான் அண்ணன் வைகோ அவர்களும் ஜெயலலிதாவைப் பற்றி எண்ணியிருந்தார். ஆனால் 2011இல் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அதே நூலில், வேறு ஒரு பக்கத்தில் வீரசந்தானம் பின்வருமாறு எழுதுகின்றார்.
ஏழாண்டு காலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுதுணையாக (வைகோ) நின்றார். அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு என்பது அவமானம். இதைத்திட்டமிட்டுச் செய்தது அ.தி.மு.க. தலைமை. வெட்டி எறிய வேண்டிய நச்சு மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். விளைவு கூட்டணியில் இருந்து ஒதுக்கப்பட்டார். இந்தத் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஆரம்ப நிலையிலேயே அவமானப் படுத்தப்பட்டார்.
ஆளுக்கொரு சொம்பு தண்ணீர் ஊற்றி நச்சு மரத்தை வளர்க்கும் வேலை இங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்றைக்குத் தண்ணீர் ஊற்றியது வைகோ, இன்றைக்குத் தண்ணீர்ச் சொம்போடு நிற்பது பொதுவுடைமைக் கட்சிகள். கடைசியாகத் தேர்தல் நேரத்தில், ஒரு இடம் தருகிறேன், நீங்கள் இரண்டு கட்சிகளும் பிரித்துக் கொள்ளுங்கள் என்று அந்த அம்மையார் சொன்னாலும் சொல்லுவார். அப்போதும்கூட, ‘பொலிட்பீரோவைக் கூட்டி விரைவில் முடிவு சொல்லுகிறோம் என்று நம் தோழர்கள் சொல்லக்கூடும்.
இன்னொரு பக்கத்தில் பார்த்தால், அன்று அ.தி.மு.க.விடம் அவமானப்பட்ட ம.தி.மு.க., இன்று பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஈழத்திற்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. 1998 - 2003 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோது ஈழத்திற்காக எதையும் செய்யவில்லை என்பதை நாம் அறிவோம். இப்போது குஜராத்தின் முதல்வராய் இருக்கிற நரேந்திர மோடி, ஈழ மக்களுக்கு எதிராக, இலங்கை அரசுக்கு ஆதரவாக என்னென்னவெல்லாம் செய்துள்ளார் என்பதை, தோழர் எஸ்.வி.ராஜதுரை உயிர் எழுத்து’ (2013 டிசம்பர்) மாத இதழில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நம் ஈழ உறவுகள் கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக மோடி நடத்திய, ‘குஜராத் உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின்போது இலங்கை அமைச்சர் மிலிந்த மொரகொடாவிற்கு மோடி உற்சாக வரவேற்புத் தந்தார். குஜராத் கடற்கரையோரம் உல்லாச விடுதிகளைக் கட்டுவதற்கும், இலங்கைக் கடற்கரையோரம்  அதேபோல விடுதிகளைக் கட்டுவதற்கும், குஜராத் அரசும், இலங்கை அரசும் செய்து கொண்ட பரிமாற்றத் திட்ட ஒப்பந்தமே அது.
ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இங்கும் அங்கும் உல்லாச விடுதிகள் கட்டும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நரேந்திரமோடிதான் இந்தியாவின் பிரதமராகி ஈழ மக்களைக் காப்பாற்றப் போகிறார் என்று தமிழருவி மணியன் போன்றவர்கள் நம் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள்.

செங்கோட்டை எக்ஸ்பிரசில் எப்படியாவது ஏறி டில்லிக்குப் போய்விட வேண்டும் என்று இப்போது துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிற ஜெயலலிதா, அந்த நோக்கத்திற்காக இனி எதுகுறித்தும் பேசுவார். எந்த விதமான உறுதிமொழியையும் அள்ளி வழங்குவார். இராணுவத்தை அனுப்பியாவது தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தருவேன் என்று சற்றும் கூசாமல், சந்தானத்தின் பாணியில் சொல்ல வேண்டுமானால், ஊர் ஊராக முழங்கியவர்தானே அவர். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல, தமிழ்நாடு பெற்ற துன்பம், பெறுக இவ்விந்தியா என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாக அந்த அம்மையாரை அந்தச் செங்கோட்டை எக்ஸ்பிரசில் ஏற்றிவிடட்டும்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

2 comments:

  1. பொதுவுடமை கட்சிகள் கரைந்து போய் நாட்களாகின்றன. அவைகள் தி மு கவின் அருகில் வராமல் இருப்பது தான் தி மு கவிற்கு நல்லது. இன்னும் சில உதிரிகள்கூட எட்டியிருப்பது, தி மு கழகதிற்கு தான் நல்லது.
    அம்மையார் எப்போதுமே அத்தனைக்கும் ஆசைப்படுபவர்.குறிப்பாக தமிழகத்தை சீரழித்தத ஆசை அடங்காமல் மொத்த இந்தியாவையும் சீரழிக்க துடிக்கும் அவரை தண்டனிட்டு, தோளில் சுமக்கும் தா.பாக்களையும், ஜி ராக்களையும் நினைத்தால், பொதுஉடைமை இயக்கத்தின் பரிதாபத்திற்குரிய நிலையை காட்டுகிறது.

    ReplyDelete
  2. கயல்விழி23 December 2013 at 20:15

    பெண் விடுதலை பெண் விடுதலை எனக்கூவம் நீங்கள் என் 'பெண்மணி பிரதமர் ஆகலாமென்றால்' வயிரெரிகின்றது உங்களுக்கு ஏன்? .‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்பது நியாயமானது, உண்மையானதும் கூட, ஆனால் 1997ல் மூப்பனாரின் உயரத்தையும் குறைத்து அளந்துவிட்டாரே கலைஞர்! அபபோது பூணூல் அணியாத சாணக்கியணானாரே அது நியாயமா?

    ReplyDelete