தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 1 January 2014

நதியோடும் பாதையில்...(27)


தமிழகத்தில்  
ஈழப்போராட்டத்தின் தாக்கம்!



 கடந்த 28, 29 ஆகிய இரு நாள்களில், திண்டுக்கல் அருகே 'புதிய குரல்' அமைப்பின் சார்பில், "சாதி இன்று..." என்னும் தலைப்பில் மிகச் சிறந்த, காலத்தின் தேவையான கருத்தரங்கம் ஒன்றினைத் தோழர் ஓவியாவும், அவ்வமைப்பினரும் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு, என்னையும், தோழர் ஜவஹர் அவர்களையும், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களையும் விருந்தினர்களாக அழைத்திருந்தனர். என்னால் ஒருநாள் (28.12.2013) மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.

காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு  9 மணி வரை நடைபெற்ற அன்றையக் கருத்தரங்கம், மனித நேயத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான, கொடூரத் தன்மை வாய்ந்த சாதி குறித்த பல செய்திகளை ஆய்வுக்கு முன் வைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தத்தை ஊசிக் குழாய்களில் உறிஞ்சி வெளியேற்றிய சுன்டூர்க் கொடுமையை ஆதவன் விளக்கிச் சொன்னபோது, நம் ரத்தமே உறைந்து விடுவது போல் இருந்தது. எனினும் சாதிக்கு எதரான உணர்வுகள் இன்று இளைய தலைமுறையினரிடம், குறிப்பாக மாணவர்களிடம் குறைந்து வருவதைக் கருத்தரங்கம் கவலையோடு நோக்கியது. அது  குறித்த  என் பார்வை ஒன்றினை நிறைவுரையில் நான் முன்வைத்தேன்.

சாதி மற்றும் சமூக நீதிப் போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு இன்று குறைந்துள்ளதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஈழப் போராட்டம் இங்கு ஏற்படுத்திய தாக்கமும் ஒரு காரணம் என்பது என் கருத்து. இது குறித்து நானும், எங்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் தமிழினியனும் ஒருமுறை நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஆனாலும் அந்த உண்மையை வெளிப்படையாகக் கூறுவதில் ஒரு தயக்கம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

அந்தத் தயக்கத்தை உடைத்து, புதிய குரல் கருத்தரங்கில் அன்று பேசிய செய்திகளே இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

ஈழப் போராட்டம் இங்கு இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒன்று மிக மிகத் தேவையானதாக இருந்தது. தமிழ் இன உணர்வைக் கூட்டியதோடு, போர்க்குணத்தையும் அது மிகுவித்தது. திராவிட இயக்கங்களின் செல்வாக்குக் காரணமாகவும், தனித் தமிழ் இயக்க எடுப்பின் காரணமாகவும், 20ஆம் நூற்றாண்டு, தமிழ் உணர்வு மிக்க நூற்றாண்டாக அமைந்தது.  அதிலும் சற்று தளர்ச்சி ஏற்பட்ட வேளையில், 1983 ஜூலையில், ஈழத்தில் நடந்த கலவரங்கள் இங்கு பெரும் எழுச்சியை உருவாக்கின. எத்தனை தடைகள் கண்டும், எத்தனை இடிகள் கண் டும் தளராத ஈழ விடுதலைப் போராட்டம், தமிழகத் தமிழர்டையிலும் ஒரு போர்க் குணத்தை வளர்த்தது. 

1991  மே  மாதம் நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் அந்த உணர்ச்சி அடக்கி ஒடுக்கப் பட்டது என்றாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. அதனால் தான், மீண்டும் அந்த உணர்வைத் தட்டி எழுப்பி, இன்றைக்கும் மாணவர்களை ஈழம் தொடர்பான போராட்டங்களுக்குக் கொண்டுவர முடிகிறது. 

ஆனால் அதே  ஈழப் போராட்டம், இன்னொரு விதத்தில்  ஒரு பாதிப்பையும்  இங்கு ஏற்படுத்திவிட்டது. சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை முதலான சமூக நீதிப் போராட்டங்களில் நம் கவனத்தைச் சற்றுக் குறைத்துவிட்டது. ஈழம் பற்றி மட்டுமே கவலைப்பட்ட தலைவர்கள் சிலர், தமிழகச் சிக்கல்களில் இளைஞர்களின் எண்ணத்தை ஈர்த்திடத் தவறினர். அதனால், ஈழம் என்றால் மட்டும் உணர்ச்சி கொப்புளிக்க எழும் தமிழக இளைஞர் பலர், சாதி போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்ப்பதில் போதுமான கவனம் கொள்ளாமல் போய்  விட்டனர். 

 20ஆம் நூற்றாண்டில், தமிழகம் மொழிஉனர்ச்சி, பகுத்தறிவு என இரு முனைகளில் ஊக்கம் பெற்றது. தமிழ் ஈழமோ, மொழி உணர்ச்சி, சமய உணர்ச்சி என வேறுபட்ட இரு முனைகளில் நின்றது. தமிழகத்தின் வளர்ச்சிப் போக்கிற்குத் தந்தை பெரியார் காரணம் என்றால், ஈழத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு ஆறுமுக நாவலர் காரணம். 




ஆறுமுக நாவலர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழுக்குப் பல்வேறு தொண்டுகளை ஆற்றியவர். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்ததில் உ.வே.சா. போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடி. 
 "நல்லைநகர் ஆறுமுக நாவலர் வந்திலரேல் 
சொல்லுதமிழ் எங்கே? சுருதிஎங்கே?"
என்று பாராட்டப் பெற்றவர் அவர்.அவருடைய தமழ்ப் பற்றை மட்டுமின்றி, அவருடைய தமிழ்ப் புலமை, தமிழ்த் தொண்டு ஆகியனவற்றையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதே அளவு அவர் சைவப் பற்றுடையவராகவும் இருந்தார்.

வெறும் மத உணர்வாக மட்டுமின்றி, வெள்ளாளச் சாதி உணர்வாகவும் அது இருந்தது. சைவ வெள்ளாளத் தலைமை என்பதே அவர் கோட்பாடாக இருந்தது. சைவப் பள்ளிகளை அவர் நிறுவினார். கிருத்துவ மதத்தைக் கடுமையாகச் சாடினார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். 

இந்தப் போக்கு ஈழத்தில்  ஆழமாக வேருன்றியது. இன்றைக்கும் அங்கு ஆண் -பெண்களின் பெயர்கள் மிகப் பெரும்பான்மையாக சிவா என்றே தொடங்கும்.  விடுதலைப் புலிகள் அமைப்பு சாதி, ஆணாதிக்கம் ஆகியனவற்றிற்கு எதிராக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இன்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலரிடையே ஆழ்ந்த சைவப் பற்றும்,  வெள்ளாளச் சாதிப் பற்றும் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் அவர்கள் வீட்டுத் திருமணங்களில் புரோகிதர்களின் ஆதிக்கம் நிறைந்து இருப்பதைக் காண முடிகிறது. அவை போன்ற இந்து மதச் சடங்குகளை அவர்கள் தமிழ்ப் பண்பாடு என்றும் கருதுகின்றனர். அவற்றை உலகெங்கும் பரப்பவும் செய்கின்றனர். 

ஈழத் தமிழர்கள் பலர், எண் சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர். வேறு சோதிடங்களையும் நம்பவே செய்கின்றனர். தமிழ்நாட்டில் அனைவரும் பகுத்தறிவு பெற்றுத் திகழ்கின்றனர் என்று கூறிவிட முடியாது. இங்கும், இன்றும் மூட நம்பிக்கைகள் மண்டியே     கிடக்கின்றன. ஆனால் அதற்கு இங்கு கடும் எதிர்ப்பும் உண்டு. சாதி, மத எதிர்ப்பும், மூட நம்பிக்கை எதிர்ப்பும் இங்கு ஓர் இயக்கமாக எழுந்ததைப் போல அங்கு எழவில்லை.

இந்த உண்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது,  ஈழப் போராட்டம் இங்கே இன உணர்வை மேலும் வலிவூட்டியது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்குச் சமூக நீதிப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளியது என்பதும் உண்மையே. இதனைக் கருத்தில் கொண்டு, சாதி  ஒழிப்பு, பெண் விடுதலை முதலானகோட்பாடுகளில், திராவிட இயக்கப் பாதையில் இளைஞர்களைக்  கொண்டு  வர வேண்டிய மிகப் பெரும் கடமை நம் முன் உள்ளது.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் )

4 comments:

  1. சாதி ஒழிப்பு, பெண் விடுதலை முதலானகோட்பாடுகளில், திராவிட இயக்கப் பாதையில் இளைஞர்களைக் கொண்டு வர வேண்டிய மிகப் பெரும் கடமை நம் முன் உள்ளது.
    ஆம் ஐயா

    ReplyDelete
  2. //ஈழப் போராட்டம், இன்னொரு விதத்தில் ஒரு பாதிப்பையும் இங்கு ஏற்படுத்திவிட்டது. ..... ஈழம் என்றால் மட்டும் உணர்ச்சி கொப்புளிக்க எழும் தமிழக இளைஞர் பலர், சாதி போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்ப்பதில் போதுமான கவனம் கொள்ளாமல் போய் விட்டனர். //

    // தமிழகத்தின் வளர்ச்சிப் போக்கிற்குத் தந்தை பெரியார் காரணம் என்றால், ஈழத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு ஆறுமுக நாவலர் காரணம். ....வெறும் மத உணர்வாக மட்டுமின்றி, வெள்ளாளச் சாதி உணர்வாகவும் அது இருந்தது. சைவ வெள்ளாளத் தலைமை என்பதே அவர் கோட்பாடாக இருந்தது. சைவப் பள்ளிகளை அவர் நிறுவினார். //

    சுப.வீ அவர்களே,

    ஆறுமுகநாவலர் சமயப் பற்றுடன் இருந்திருந்தாலும்,
    ஈழத்தில் சாதி வேறுபாடு இருந்திருந்தாலும், அவற்றை வெறும் 5,10 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமை போன்ற விதயங்களில் இருந்து மக்களை வெளிக்கொணர்ந்து சாதி, சமயம் கடந்த பெரிய போராட்டக் கட்டமைப்பு ஈழத்தில் உருவாகியது. ஆனால், 75 ஆண்டுகளுக்கும் மேலாக பகுத்தறிவால் பல் குத்திக் கொண்டிருந்தும், பகுத்தறிவு இயக்கங்களால் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு தூசு தும்பை எடுத்துப் போடக் கூட தமிழக மக்களை ஒன்று கூட்ட முடியவில்லையே ஏன்?

    சமய உணர்வு ஊட்டப்பட்ட மண்ணில் விளைந்த தமிழ் ஒற்றுமையில் கால் வீசம் ஒற்றுமையைக் கூட தமிழகத்தில் கூட்டமுடியவில்லையே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. திரு நாயணன் அவர்களுக்கு,               5, 10 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வு இல்லாத, பெண்ணடிமை இல்லாத ஒரு போராட்ட அமைப்பை ஈழத்தில் கட்டிவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். புலிகள் அமைப்பில் அக்கட்டுப்பாடு  உள்ளதை நானே என் கட்டுரையில் குறித்துள்ளேன். ஆனால் இன்றும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் நண்பர்களிடம் சாதிய உணர்வு சற்றும் குறையாமல் இருப்பதையும், புரோகிதத் திருமணங்கள் அங்கு தொடர்ந்து நடைபெறுவதையும் உங்களால் மறுக்க முடியுமா?                75 ஆண்டுகளாக இங்கு பகுத்தறிவால் பல் குத்திக் கொண்டிருப்பதாகக் கேலி செய்கிறீர்கள். பகுத்தறிவு இயக்கங்கள் ஈழ ஆதரவுக்கு ஒரு தூசு தும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்கிறீர்கள்! மனசாட்சி உள்ள எவரும் இதனை ஏற்க மாட்டார்கள். பெரியார் திடலில் நடைபெற்ற மாநாடுகள், அங்கிருந்து தொடங்கிய பேரணிகள் எத்தனை! அங்குஇருந்து ஈழ உணர்வு பெற்றவர்கள் எவ்வளவு பேர் என்பதை உங்கள் மனசாட்சி ஒருநாள் உணரும்! 

      Delete
    2. திரு.நாராயணன் போன்றவர்கள் உண்மையிலேயே தூங்குகிறார்களா
      அல்லது தூங்குவது போல நடிக்கிறார்களா? தந்தை பெரியார் இயக்கம் எந்த அளவுக்கு ஈழ மக்களுக்கு ஆதரவாக மக்களை திரட்டி போராட்டங்களை மேற்கொண்டது , அதனால் ஒட்டு மொத்த தமிழ் நாடே ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்து நின்றது என்பதை பழைய நாளேடுகளை புரட்டிப் பார்த்தால் தெரியும் . நான், மறைந்த இதழியல் மாமேதை திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களின் தேவி வார இதழில் பணி புரிந்த போது பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் நிதி திரட்டிய போது ஐந்தும் பத்தும் ஆயிரமும் என்று தமிழ் மக்கள் நிதியை குவித்தார்கள். அந்த நிதியை போராளிகளிடம் கொடுத்து துணை நின்றார்கள் . இது ஒரு நிகழ்ச்சி. இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் மூலம் தங்களின் ஆதரவை தமிழ் மக்கள் காட்டினார்கள் . இவை எல்லாம் கல் வெட்டில் பதித்த எழுத்துக்கள் . நண்பர் நாராயணன் போன்றவர்கள் இதை எல்லாம் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டுகிறேன் .
      - க. ஜெயகிருஷ்ணன்

      Delete