தெளிவு, கவனம், தொலைநோக்கு
தளபதி
ஸ்டாலின்
தி டைம்ஸ் ஆப்
இந்தியா (16.01.2014) ஆங்கில நாளேட்டிற்குத் தி.மு.கழகப் பொருளாளர், தளபதி
ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி, அவருடைய இன்னொரு பரிணாமத்தைக்
காட்டுவதாக உள்ளது.
அவருடைய செயல்திறன், படிப்படியான
வளர்ச்சி ஆகியனவற்றை எதிர்க்கட்சியினரும், எதிர்க்கருத்துடையவர்களுமே
ஏற்றுப் பாராட்டுகின்றனர். 47 ஆண்டுகளாகக் கட்சிக்கு அவர் தொடர்ந்து
ஆற்றிவரும் பணிகளின் விளைவாகவே இன்றைய உயர்நிலையை அவர் அடைந்துள்ளார் என்பதை
யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அவருடைய பக்குவமான அரசியல் அணுகுமுறை, திராவிட
இயக்கக் கோட்பாடுகளின் மீதான தெளிவு போன்றவைகளையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும்
வகையில் இப்பேட்டி அமைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கூட்டணிகள் குறித்த
செய்தி அரசியல் விமர்சகர்களிடையேயும், ஊடகங்களிலும் பெருமளவு
பேசப்படும் ஒன்றாக உள்ளது. நடைபெற்று முடிந்த தி.மு.கழகப் பொதுக்குழுக்
கூட்டத்தில் கூட்டணி பற்றிய ஒரு சிறு தெளிவு கிடைத்த போதிலும், அது பற்றிய
வேறுபட்ட கருத்துகளும், விமர்சனங்களும் அன்றாடம் நாளேடுகளில்
வந்தவண்ணமே உள்ளன. இந்த நேர்காணலில் கூட, முதல் கேள்வி, “காங்கிரஸ்
அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டு இல்லை என்பது வெறும் பாவனையா அல்லது உண்மையா?” என்பதாகவே
உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மனமாற்றம் ஏற்படக் கூடுமா என்பது
இக்கேள்வியில் எழுப்பப்பட்டுள்ள ஐயம் என்பதும் புரிகிறது. இதற்கான தளபதியின் விடை
மிகத் தெளிவாகவும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாததாகவும் உள்ளது.
‘காங்கிரசோடும், பா.ஜ.க.வோடும்
எவ்விதமான உடன்பாடும் கிடையாது என்று தலைவரும், பொதுக்குழுவும்
தீர்மானமாகத் தெரிவித்துவிட்டனர்’ என்பதைக் கூறியுள்ள அவர், “அந்த
நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை” என்று
உறுதிபடக் கூறியுள்ளார். அந்த இரண்டு தேசியக் கட்சிகளும் இல்லாத ஓர் அணியை
உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். குலாம் நபி
ஆசாத் கலைஞரைச் சந்தித்தது ‘வெறும் மரியாதை நிமித்தமானதே’ என்று
கூறியுள்ள அவர், அதற்கு மேல் அந்தச் சந்திப்புக்கு எந்த முக்கியத்துவமும்
இல்லை என்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
ஒரு கட்சியின்
நிலைப்பாட்டை, தேர்தல் நேரத்தில் தெளிவுபடுத்த வேண்டியது ஒரு தலைவனின்
கடமையாகும். கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், மக்கள்
தலைவராகவும் உலா வருகின்ற தளபதி ஸ்டாலின், இந்த நேர்காணலின்
மூலம், தன் ஆளுமையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கும், பொதுவுடைமைக்
கட்சிகளுக்கும் இடையிலான தம் கட்சிப் பார்வையை வெளிப்படுத்தியுள்ள விதம்தான், இந்நேர்காணலிலேயே
சிறப்பாகக் குறிக்கத்தக்கது என்று கூறலாம். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கக்கூடும்
என்னும் ஊகத்தைப் பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், இந்நேர்காணலின்
தொடக்கத்திலும் முடிவிலும் அதற்கான மறுப்பை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி இல்லை என்று
அவர் கூறியபிறகு, அந்நேர்காணலின் கடைசிக் கேள்வி, தேர்தலுக்குப் பிந்திய நிலைமை பற்றியதாக உள்ளது. தேர்தல்
முடிந்து, மத்திய ஆட்சியில் தி.மு.க. பங்கு பெற்றால், உங்கள் நிலை
என்ன என்னும் கேள்விக்கு அவர் சுருக்கமாகவும், அழுத்தமாகவும்
ஒரு விடையைத் தந்துள்ளார். சமத்துவம், மேம்பட்ட வாழ்நிலை, பொருளாதார
வளர்ச்சி, பெண்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைத் தரவல்ல, ‘மதச்சார்பற்ற’ அரசுக்கு
ஆதரவு தருவோம் என்று கூறியிருக்கிறார்.
இது மிகவும் நுட்பமான
ஒரு விடை. தேர்தலுக்குப் பின் ஒரு கூட்டணி ஏற்படக்கூடும் என்பதும், இம்முறை
அதற்கான வாய்ப்பே கூடுதலாக உள்ளது என்பதும் அனைவரும் அறிந்த செய்தியே ஆகும். அந்த
நிலையிலும் கூட, மதச்சார்பற்ற அரசுக்குத்தான் ஆதரவு என்று அவர்
கூறியிருப்பது, பா.ஜ.க.வுடனான கூட்டணி என்னும் சிறு ஐயத்தையும் இல்லாமல்
செய்வதாக அமைந்துள்ளது-. இந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு முன், வலிமை
மிகுந்த மாநிலக் கட்சிகளால் உருவாக்கப்படும் கூட்டணி அரசு ஒன்று மத்தியில்
பொறுப்பேற்பதற்கும் வாய்ப்பு உண்டு என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இக்கட்டத்தில், பொதுவுடைமைக்
கட்சிகளின் நிலைப்பாடு, இந்திய அளவிலும் தமிழக அளவிலும்
கவனிக்கத்தக்கதாக உள்ளது-. தமிழகத்திலுள்ள இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளும், தி.மு.க.விற்கு
எதிரான, அ.தி.மு.க.விற்கு ஆதரவான நிலையைத்தான் இன்று எடுத்துள்ளன.
எனினும் அக்கட்சிகள் குறித்து தன் கருத்துகளை வெளிப்படுத்தும்போது, மிகுந்த
விவேகத்தோடும், தொலைநோக்குப் பார்வையோடும் அவர் தக்க விடைகளைத் தந்துள்ளார்.
பொதுவுடைமைக்
கட்சிகள் குறித்துச் சட்டமன்றத்திலேயே மிக இழிவான பல குறிப்புகளையும், எள்ளல்களையும்
வெளிப்படுத்தியவர் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் அவர்கள் தங்களுக்கு எதிராக
நிற்கும் வேளையிலும், அவர்களின் சித்தாந்தத்தைப் பாராட்டியும், அவர்களின்
நடைமுறை நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பியும் ஸ்டாலின் தன் பதிலைக்
குறித்துள்ளார். “கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் கலைஞருக்கு
பெரும் மரியாதை உண்டு. பெரியாரையும், அண்ணாவையும்
பார்த்திராவிட்டால் தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்திருப்பேன் என்று அவர் பலமுறை
கூறியுள்ளார். நாங்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மிக உயர்வாகக் கருதுகிறோம். ஆனால்
நமது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் கணிப்பு தவறாக உள்ளது” என்று அவர்
எடுத்து வைத்துள்ள கருத்து, மிகுந்த அரசியல் நாகரிகம் கொண்டதாக
உள்ளது.
பொதுவுடைமைக்
கட்சியின் கோட்பாடுகளும், திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளும் மிக
நெருக்கமான உறவுடையவை. ஆனால் திராவிடத்தைத் தன் கட்சியின் பெயரில் வைத்திருக்கும்
அ.தி.மு.க.வோ, பொதுவுடைமைக் கோட்பாடுகள் பலவற்றுக்கு நேர் எதிரான
நடைமுறையைக் கொண்டது. அப்படியிருந்தும் அவர்கள் அ.தி.மு.க.வை, ஆதரிப்பதற்குக்
கூறுகின்ற ஒரே காரணம், தி.மு.க. ஊழல் கட்சி என்பதே என்கிறார்கள்.
அதற்கும் தளபதி ஸ்டாலின் தன்னுடைய நேர்காணலில் மிகச் சரியான சில கேள்விகளை
முன்வைத்திருக்கிறார். 2ஜி வழக்கு இன்னமும் நீதிமன்ற
விசாரணையில்தான் உள்ளது-. இருப்பினும், குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தி-.மு.க.சார்பில் அமைச்சராக இருந்த ஆ.
ராசா, தார்மீக அடிப்படையில் பதவி விலகினார். ஆனால் கடந்த பதினெட்டு
ஆண்டுகளாகச் சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி
நீதிமன்றத்திற்குச் சென்றுவரும் ஜெயலலிதா தொடர்ந்து பதவியில் இருக்கிறார். இதனைப்
பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் இது
குறித்து ஏன் எதுவும் பேசுவதில்லை? இப்படிச் சிந்திக்கத் தூண்டும்
கேள்விகளைத் தன் நேர்காணலில் அவர் அடுக்கியிருக்கிறார்.
17.01.2014 அன்று, நாளேடுகள்
பலவற்றிலும் வெளியாகியுள்ள, துக்ளக் ஆசிரியர் சோவின் பேட்டியில், தேர்தலுக்குப்
பிறகு, மோடி பிரதமராக இயலவில்லை என்றால், ஜெயலலிதாவைப்
பிரதமராக்க பா.ஜ.க. ஆதரவளிக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் காணப்படுகிறது.
தேர்தலுக்குப் பிறகு அ.தி.-மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே
கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆக, பா.ஜ.க.வுடன்
கைகோத்துக் கொள்ளப்போகிற அ.தி.மு.க.வின் நிழலில் ஒதுங்கியிருக்கும் பொதுவுடைமைக்
கட்சித் தோழர்கள், எந்தச் சூழலிலும் மதவாதக் கட்சியுடன் உறவு
கிடையாது என்று கூறும் தி.மு.க.வை விட்டு விலகி நிற்பது எவ்வளவு முரணானது என்பதை
அவருடைய வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜெயலலிதாவை சோ ஆதரிப்பது எல்லா வகையிலும்
பொறுத்தமானது. அது இனப்பாசம் என்பது நமக்குப் புரிகிறது. பொதுவுடைமைக் கட்சித்
தோழர்களுக்கு ஜெயலலிதாவுடன் உள்ள பாசம்தான் எவ்விதமானது என்பது நமக்குப் புரியவில்லை.
இந்த நேர்காணலின்
இன்னொரு சிறப்பு, ஜெயலலிதா உள்பட எவர் ஒருவரையும் காயப்படுத்தாத சொற்களால்
தன் கருத்தை வெளிப்படுத்தியிருப்பது. 13 மாதங்களில் வாஜ்பாய்
அரசைக் கவிழ்த்ததும், பொதுவுடைமைக் கட்சிகளுடன் கூட்டணியில்
இருந்து கொண்டே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பைரான்
சிங் ஷெகாவத்தை ஆதரித்ததும் ஜெயலலிதாவின் இரட்டை நிலை அரசியலுக்கு எடுத்துக்காட்டு
என்று மிக அழகாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே தமிழகத்தின் மின்வெட்டுக்கு
ஜெயலலிதா அரசு எப்படிப் பொறுப்பாகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் பொறுப்பாக
வெளியிட்டுள்ளார்.
அகிலேஷ் |
உமர் அப்துல்லா |
இன்று உ.பி.
முதல்வராக இருக்கும் அகிலேஷ் மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரின்
வயது, தளபதி ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தின் வயதுதான். எனவே தங்கள்
காலத்திலேயே தகுதி மிக்க ஒரு தலைவரை உருவாக்கியுள்ள பெருமை, தலைவர்
கலைஞர் அவர்களையும், இனமானப் பேராசிரியர் அவர்களையுமே சாரும்.
(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)
"கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பணி தானாக உன்னை தேடி வரும்" என்ற பொன்மொழிக்கு சரியான உதாரணம் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலின் போது தலைவர் கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது தனியொரு மனிதனாய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பெரும்பான்மையான தொகுதிகளில் (28/40) வெற்றி தேடி தந்தவர் அவரே...
ReplyDeleteதளபதியின் சுறுசுறுப்பு ஒன்றே போதும், ஜெயலலிதா மற்றும் இன்றைய அரசியல்வாதிகள் பக்கத்திலேயே வரமுடியாது. நல்லதொரு பதிவு அய்யா!
ReplyDelete