தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 22 February 2014

நதியோடும் பாதையில்...(34)

காத்திருக்கிறது தமிழகம்!


காலம் கனிந்து விட்டது.  23 நெடிய ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டு, தங்களின் இளமைக்கால வசந்தம் எல்லாவற்றையும் எரித்துவிட்டு, தங்களின் குடும்ப வாழ்க்கை முழுவதையும் இழந்துவிட்டு, சிறையில் வாடிய பேரறிவாளன்சாந்தன்முருகன் உள்ளிட்ட எழுவரும்  வெளி உலகைப் பார்க்கும் காலம் இப்போது வந்திருக்கிறது.

காட்சிகள் மாறும் நாடகம் போலே, சில நாள்களில் எல்லா நிலைமைகளும் மளமளவென்று மாறியிருக்கின்றன. வீரப்பனின் நண்பர்களுக்கான மரணதண்டனை, வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்ட போதே, ராஜீவ்காந்தி கொலை வழக்கிலும் விரைவில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போகாமல், நல்லதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிற்று. அடுத்த நாளே, எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று, தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பும், சட்ட மன்ற அறிவிப்பும் உலகத் தமிழினத்தையே ஒப்பிலா மகிழ்வில் ஆழ்த்தியது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வாழ்நாள் தண்டனை பெற்றும், தூக்குமர நிழலில் நின்றும் ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருந்த எழுவரின் விடுதலைக்காக எவ்வளவோ  பேர் பாடுபட்டனர். அவ்வளவு பேரையும் நினைத்துப் போற்ற வேண்டிய நேரம் இது. 23 ஆண்டுகளாக ஓயாமல் ஒழியாமல் ஓடிக்கொண்டே இருந்த கால்களுக்குச் சொந்தக்காரர், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்.
அப்படி ஒரு நெஞ்சுறுதியை அத்தனை எளிதில் எல்லோரும் பெற்றுவிட முடியாது. எத்தனை தடைக்கற்கள், எத்தனை இடையூறுகள்...எல்லாவற்றையும் தாண்டி இறுதி வரை சலிக்காமல், களைக்காமல் போராடிக்கொண்டே இருந்தார் அவர். ஒவ்வொரு முறையும் நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் அவரும் ஒருவர். தடா நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கியது. உச்சநீதிமன்றமோ 19 பேரை விடுதலை செய்தாலும், நால்வருக்குத் தூக்கு என்றும், மூவருக்கு வாழ்நாள் தண்டனை என்றும் தீர்ப்பு வழங்கியது. அந்த நால்வருள் ஒருவராகப் பேரறிவாளன் இருந்தார். பிறகு கருணை மனு அளிக்கப்பட்டது. அதுவும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மறுக்கப்பட்டு, தூக்குத்தண்டனைக்கான நாளும் குறிக்கப்பட்டது. அந்த நாள்களில் தமிழகமே கொதித்தெழுந்தது. எங்கு நோக்கினும் போராட்டங்கள், எழுச்சிக் குரல்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள். செங்கொடி என்னும் தமிழ்மறத்திமூவர் உயிர் காக்கத் தன் உயிரையே விலையாய்க் கொடுத்தாள்.
ஒருசில அரசியல் கட்சிகளைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் இவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தன. போராட்டங்கள் பலவற்றையும் நடத்தின. எனினும், நெடுமாறன் அவர்களுக்கும், வைகோ அவர்களுக்கும் அப்போராட்டங்களில் ஒரு தனி இடம் உண்டு. பல நேரங்களில் அவர்கள் முன்னின்று பல திட்டங்களைச் செயல்படுத்தினர். அந்த விதத்தில் அவர்களுக்கு நம் பாராட்டுகள் என்றுமுண்டு.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில், என்றைக்கும் அவர் விடுதலைப் புலிகளுக்கும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கும் எதிராகவே இருந்தார். இன்றைக்கு இந்த நல்ல முடிவை அவர் எடுத்திருக்கும் வேளையில், பழையனவற்றைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்க வேண்டாம் என்று நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். நம் விருப்பமும் அதுதான். ஆனால், திரும்பிப் பார்த்து நடக்க வைக்கிறவர் ஜெயலலிதாதான். சட்டமன்றத்தில் எப்போதுஎந்த அறிவிப்பை அவர் வெளியிட்டாலும், கலைஞரைப் பற்றிப் பேசாமலும், கலைஞரைக் குறை கூறாமலும் எதையும் கூறுவதில்லை. அதனை இப்போதும் பின்பற்றி இருக்கிறார். அன்றைக்கு, நளியின் தண்டனையைக் குறைத்த போதே ஏன் மற்றவர்களின் தண்டனையையும் குறைக்கவில்லைஎன்று கேட்கிறார். இப்போது அதற்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் வரலாறு அறிந்தவர்களுக்கு வந்து சேருகிறது.
ஈழம் குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும் ஜெயலலிதாவின் நிலை என்ன என்பதை, இன்றைய தமிழ்த்தேசியத் தலைவர்கள் சிலரும், ‘ஈழத்தாயின்பக்தர்களும் வெளியில் சொல்வதில்லை. ஆனாலும் வரலாற்றை யாராலும் மறைத்துவிட முடியாது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன், சிங்கள வெறிபிடித்த ராஜபக்சே அரசினால், கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சென்னைக்கு அருகில் உள்ள மறைமலை நகரில், காலவரையற்ற பட்டினிப் போரை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, எவ்விதமான ஈர இரக்கமும் இல்லாமல், செய்தியாளர்களுக்கான நேர்காணலில் என்ன கூறினார் என்பதை உலகறியும். இதோ, அவர்களின் நமது எம்.ஜி.ஆர். நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவருடைய விடையை அப்படியே கீழே தருகிறோம்.
கேள்வி - சிங்கள ராணுவத்தினர் ஈழத்தமிழர்களைப் போரில் கொல்கிறார்களே?
ஜெயலலிதா - அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் - அரசியல் ரீதியாக - அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இன்று, இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல், விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக இராணுவத்திற்கு முன்னால், அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் மனது வைத்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதித்தால், இந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் சாகவேண்டிய அவசியமே இல்லை.
(நமது எம்.ஜி.ஆர் - 19.01.2009 - பக்.1)
ஈழத்தமிழர்கள் என்று சொல்வதைக் கூட ஏற்க முடியாது, இலங்கைத் தமிழர்கள் என்றே கூறவேண்டும் என்கிறார். விடுதலைப்புலிகள்தான் ஈழ மக்களின் சாவுக்குக் காரணம் என்கிறார். தமிழ்நாட்டின் ராஜபக்சேவாக அன்று அவர் பேசியிருக்கிறார்.
14 ஆண்டுகளுக்கு முன்பே ஏன் அனைவரையும் விடுதலை செய்யவில்லை என்று இன்று கேட்கும் ஜெயலலிதா அப்போது என்ன நிலை எடுத்திருந்தார்? 2000 ஏப்ரல் 25 அன்று நளினியின் மரணதண்டனை வாழ்நாள் தண்டனையாகக் கலைஞர் ஆட்சியில் குறைக்கப்பட்டது. அதனை எதிர்த்து, முதலில் குரல் கொடுத்தவர் இதே ஜெயலலிதாதான். அடுத்த நாள் சட்டமன்றத்தில், அ.தி-.மு.க.வின் சார்பில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உறுப்பினர் தாமரைக்கனி கடுமையாகக் குரல் கொடுத்தார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தி.மு.க.வினர் என்று புரட்சித் தலைவி கூறுவது, இப்போது உண்மையாகிவிட்டது என்றார். உலகமே தி.மு.க. அரசைப் பார்த்துச் சிரிக்கப் போகிறது என்றார். இவையனைத்தும் தாமரைக்கனி என்னும் தனிமனிதரின் குரல் இல்லை. அ.தி-.மு.க.வின் குரல், ஜெயலலிதாவின் குரல்.
2008 மார்ச் மாதம் 19ஆம் நாள் தமிழகம் வந்த ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா, வேலூர் சிறையில் நளினியைச் சந்தித்தார். அதுகுறித்தும் ஜெயலலிதா மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். யாரும் எந்த அதிகாரத்தின் அடிப்படையிலும் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிடக் கூடாது என்றார்.


இவ்வளவு வேண்டாம், கடந்த 11ஆம் தேதி (11.02.2014), உடல் நலமற்று இருக்கும் தன் தந்தையைக் காணச் செல்வதற்கு பரோலில் தன்னை அனுப்ப வேண்டும் என்று நளினி மனுச் செய்தபோது, தமிழக அரசின் சார்பில் என்ன விடை சொல்லப்பட்டது? நளினியைப் பரோலில் அனுப்பினால், நாட்டின் சட்டமும் ஒழுங்கும் கெட்டுப் போய்விடும் அதனால் அவரை அனுப்பக் கூடாது என்று கூறியது.
11ஆம் தேதி நளினியிடம் கருணை காட்டாத ஜெயலலிதா, 19ஆம் தேதி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி விடுதலையே செய்வதாக அறிவிக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு என்ன காரணம்? வரவிருக்கும் தேர்தலைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
எப்படியிருந்தாலும், சிறை விட்டு வெளிவரும் அனைவரையும் வரவேற்க இருகரம் ஏந்தித் தமிழகம் காத்து நிற்கிறது.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

11 comments:

 1. You proved once again you are open person since you prised gopalsamy and nedumaran but other so called tamil leaders did not open their mouths when jayalalitha opposed nalini's petition but now everyone is prising jayalalitha let see what is going happen.

  ReplyDelete
  Replies
  1. In a important situations like Satellite launching process it is only the performance of Rocket that counts!,சாரம் போடுவது,centering அடிப்பது,கூலிகள் பட்ட கஷ்டங்கள் மறக்கப்படும் and only Successful launch of Satellite will be spoken of, LIKEWISE here the yard stick of Success will be commutation of Death sentence to life imprisonment and it was done by Hon'ble Supreme court of India,BUT MORE IMPORTANTLY Tamilnadu Govt.,(NOW IT IS SYNONYMOUS WITH JAYALALITHA) DECIDED NOT ONLY COMMUTE BUT RELEASE THEM FROM PRISON!! it is a historic decision not seen before and might not be seen in future!.If a previous fellow occupied that seat death sentence could be commuted but NOT RELEASED from prison due to his fear of Union Govt., Sonia, Raghul, PM etc.,

   Delete
 2. சிறை விட்டு வெளிவரும் அனைவரையும் வரவேற்க இருகரம் ஏந்தித் தமிழகம் காத்து நிற்கிறது.

  ReplyDelete
 3. தேன்மொழி24 February 2014 at 20:49

  கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் தமிழகத்திற்குப் பல கொடைகளை வழங்கியுள்ளார்,அவற்றில் மிகச் சிறந்ததும் தலையானதுமாகியது அனதையாக நின்ற தமிழனுக்கு,தமிழகத்திற்கு'அம்மா'வை வழங்கியதுதான்!.அந்த'அம்மா' தாயுள்ளத்தோடு சாவு மணி அடிக்கப்பட்டவர்களுக்கு வாழும் உரிமையைக் கொடுத்து 'அம்மா'வாக மட்டுமில்லாமல் தமிழனுக்கு,தமிழகத்திற்கு ஒரு 'பெண் காவல் தெய்வமாக'/'சக்தியாக' மாறியுள்ளார்!!

  ReplyDelete
 4. சம்பத்24 February 2014 at 23:48

  ஒரு திராவிடரால் கொலைக்களத்திற்குத் தள்ளப்பட்ட 7 திராவிடர்கள் உயிரை ஒரு ஆரியப் பெண்மணி காப்பாற்றியுள்ளாரே! பாராட்ட மனமில்லையா?

  ReplyDelete
  Replies
  1. திரு சம்பத் அவர்களுக்கு,


         அவர்கள் 7 பேரையும் கலைஞரா கொலைக் களத்திற்குத் தள்ளினார்? எப்படி உங்களால் இப்படி இதயமே இல்லாமல் எழுத முடிகிறது? அது சரி, இப்போது மட்டும் அவரைத்  திராவிடர் என்று ஏற்றுக் கொள்கின்றீர்களே, எப்படி? 

   Delete
  2. சம்பத்26 February 2014 at 16:50

   நிச்சயமாக!நீங்களும் நடுநிலையோடு/மனசாட்சியோடுச் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு உணமை விளங்கும்!.கலைஞர் ஆட்சியிலிருந்த போது கருணை மனு மீது எடுத்த இறுதி முடிவில் நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து[இப்போது எடுத்த முடிவு போல் அவர்களை விடுதலை செய்ய அல்ல,ஆயுள் தண்டனையாக குறைத்துதான்]மற்ற மூவரையும் தூக்கிலிட வேண்டுமென்று முடிவெடுத்தார்.ஆனால் இன்று நால்வரல்ல,ஏழு பேருக்கு தூக்கிலிடக்கூடாதென்றல்ல,முழு விடுதலை செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவெடுத்துள்ளார் ஜெயலலிதா!

   Delete

 5. நெடுமாறன் அய்யா, வைகோ அய்யா அவர்களின் பங்களிப்பை மூடிமறைத்து ஜெயலலிதாவிற்கு மகுடம் சூட்டிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் எதிர் முகாமில் இருந்தாலும் உண்மையை பேசிய சுபவீரபாண்டியன் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோபால்27 February 2014 at 20:00

   திரு.முத்துகிருஷ்ணன் அவர்களே உங்களின் திரு.நெடுமாறன்,திரு.வைகோவைப் பற்றிய ஆதங்கம் நியாயமானதே.அதுபோல திரு.கருணாநிதியைப் பற்றி (திரு.சுப வீ, திரு.வீரமணி,etc.,ஆகியோருக்கும் அது பொருந்தும்,ஏனெனில் இவர்கள் தமிழர்களின் மறதியை முதலீடாக நினைத்து மாய்மாலம் காட்டிக்கொண்டுள்ளார்கள்!) 'ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்(போலி உண்ணாவிரதம்)' என்ற உங்களின்/வைகோவின் கருத்தும் சரியானதே.(அப்பாவித் தமிழர்களின் படுகொலை Videoவை "இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறது'' என்று எள்ளி நகையாடி, ஏளனமாகப் பரிகாசித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்) View that comment [copy+paste in address bar] @ http://tmuthukrishnan.blogspot.com/2012/11/blog-post.html

   Delete
 6. அய்யா சுபவீ அவர்களே!

  //அன்றைக்கு, நளியின் தண்டனையைக் குறைத்த போதே ஏன் மற்றவர்களின் தண்டனையையும் குறைக்கவில்லை’ என்று கேட்கிறார். இப்போது அதற்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் வரலாறு அறிந்தவர்களுக்கு வந்து சேருகிறது.//

  மற்றவர்களின் தண்டனையையும் கருணாநிதி ஏன் குறைக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே.. மாறாக ஜெயலலிதா ஈழ எதிர்ப்பாளர், விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர், அவர் அன்று இப்படி பேசினார், அப்படி பேசினார் என்றுதான் சொல்கிறீர்களே தவிர, கருணாநிதி ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை.

  இன்று நீங்கள் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக மாறிப் போயிருக்கலாம்..ஆனால், இந்த ஏழு பேருக்கான விடுதலையில் உங்களின் பங்களிப்பு உண்டு என்பதை நான் அறிவேன்..

  இந்த ஏழு பேரையும் ஜெயலலிதா அரசியலுக்காகத்தான் விடுதலை செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை ஏன் கருணாநிதி செய்யவில்லை?

  அன்று நான்கு பேருக்கும் தூக்குத்தண்டனையை குறைக்கக் கோரி ஒரு பேரணி சென்று (அதில் நானும் கலந்து கொண்டேன்) கருணாநிதியிடம் ஒரு கோரிக்கை வைத்தோமே, அந்த கோரிக்கையின் மீது கருணாநிதி என்ன முடிவெடுத்தார்?

  நளினிக்கு மட்டுமே தூக்கை ஆயுளாக மாற்றி, மற்ற மூன்று பேரையும் தூக்கில் போடலாம் என்றுதானே பரிந்துரைத்தார்.

  இதற்கான உங்கள் பதில் என்ன?

  ReplyDelete
 7. கலைஞர் ஆட்சியிலிருந்த போது கருணை மனு மீது எடுத்த இறுதி முடிவில் மூவரையும் தூக்கிலிட வேண்டுமென்று முடிவெடுத்தார். உண்மையா,இல்லையா?,உங்களின் மனசாட்சியைத்தொட்டு மழுப்பாமல் பதிலளிக்கவும்.

  ReplyDelete