தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 15 February 2014

நதியோடும் பாதையில்...(33)

அழியாத கோலம் நீ!

திரைப்படங்களை நாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். பாலுமகேந்திரா தான் படங்களைப் பார்க்க வைத்தார். ஆம், உரையாடல் உலகத்திலிருந்து, கட்புல உலகத்திற்குத் திரைப்படத் துறையை நகர்த்தியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அவர்.

ஈழத்தில், மட்டக்களப்பில் பிறந்தவர் அவர். சிறுவயதிலேயே இந்தியாவுக்கு வந்துவிட்டவர். புனே திரைப்பட நிறுவனத்தில், ஒளிப்பதிவுத் துறையில் பயின்று, தங்கப் பதக்கம் பெற்ற சாதனையாளர். 1971ஆம் ஆண்டு, தெலுங்குப் படமான நெல்லுஅவரைத் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. பிறகு தமிழுக்கு வந்தார். 1975இல் தமிழ்த்திரைப்பட இயக்குனரானார். அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள்’. அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்கள். மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று, மூன்றாம் பிறை. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கண்ணே கலைமானேஎன்னும் அவருடைய கடைசிப் பாடல் இடம்பெற்ற படமும் அதுதான். எனினும், மூன்றாம் பிறை பெற்ற வெற்றியை அவருடைய வீடு, சந்தியாராகம் ஆகிய படங்களும் பெற்றிருக்க வேண்டும். அவை அந்த அளவுக்கு வெகுமக்களைச் சென்றடையாமல் போய்விட்டன.

வீடு படம் பார்த்த மறுநாள் காலை பாலுமகேந்திராவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்படத்தை வியந்து பாராட்டினேன். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், ‘அதனால்தானோ என்னவோ, அடுத்த படம் இல்லாமல், இப்போது வீட்டில் இருக்கிறேன்என்றார். வீடு போன்ற படங்களில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய, ரெட்டைவால் குருவி போன்ற படங்களை அவர் எடுக்க வேண்டியதாயிற்று.

1990களின் இறுதியில், நந்தன் இதழின் சிறப்பாசிரியராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அவருடன் நெடுநேரம் உரையாடும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அருகில் இருந்த மாணவர் நகலகத்தில் தன் எழுத்துகளைத் தட்டச்சு செய்யக் கொடுத்துவிட்டு, அந்த இடைப்பட்ட நேரத்தில், நந்தன் அலுவலகத்திற்கு வந்து, மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். ஒருநாள், ‘ஓர் ஊரில் ஒரு பாட்டி வடைசுட்டுக் கொண்டிருந்தாள்என்று எளிதாக எழுதிவிடலாம். ஆனால் அதனைப் படமாக்கும்போது ஆயிரம் கேள்விகள் நம் முன்னால் வந்து நிற்கும் என்றார். ஒரு ஊரென்றால், எப்படிப்பட்ட ஊர். நகரமா, சிற்றூரா? வடை சுடுகிற இடம் கடை வீதியா, மரத்தடியா? பாட்டி கால் நீட்டிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டுமா, குத்துக்கால் வைத்துக் கொள்ளலாமா? என்னமாதிரிப் புடவை கட்டியிருக்க வேண்டும்?’ என்று இத்தனை கேள்விகளுக்கும் விடையைச் சிந்தித்த பிறகுதான், படப்பிடிப்பைப் பற்றி எண்ணிப் பார்க்கவே முடியும்என்பார். ஈழம், இலக்கியம் என்று எவ்வளவோ செய்திகளை அவரோடு பேசக் கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பார்க்கிறேன். இளையராஜாவின் மீது அவருக்கு இருந்த மதிப்பு மிகப்பெரியது.

பொதுவாகப் புகைப்படக் கருவிகள் படம் பிடிக்கும். அவர் கையில் இருந்த கருவியோ கதை எழுதும், கவிதை சொல்லும். திரை உலகம் ஒரு மாமேதையை இழந்திருக்கிறது. அவரை எண்ணிக் கலங்கும் அனைவரோடும், அந்தத் துயரை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

- சுபவீ

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)


6 comments:

 1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 2. பாலுமகேந்திரா அழியாத கோலம்தான்
  என்றென்றும் நிலைத்து நிற்பார்

  ReplyDelete
 3. காசி அண்ணன் மிதிவண்டி மிதிக்க பாலு மகேந்திரன் கையெறி குண்டு வீசிய கதை பற்றி என்ன நினைகிறீர்கள் ? நான் என் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து
  ---///1976 தமிழ் ஈழத்தில் ஆயுத போராட்டம். தொடங்கியது.அப்போது கேரளாவில் பாலு மகேந்திரா மலையாள படம் எடுத்து கொண்டிருந்தார் . அப்போ காசி அண்ணா. சைக்கிள் மிதிக்க. பாலு மகேந்திரன். கையெறி குண்டு வீசியது 1970முன் தான் நடந்திருக்கும் இப்போது நம்ம சீமான். என்ன சொல்ல வரார்னா பிரபாகரனுக்கு முன் ஆயுத போராட்டம் நடத்தியது நம்ம பாலுமகேந்திரன் தான்

  #தம்பி பாலு மகேந்திரன். படம். போட்ட டி-சர்ட் ஆர்டர் கொடுப்பா!

  ReplyDelete
 4. My sincere condolence to the great visionary ---- Er. Senthil kumar, Chennai, Tambaram

  ReplyDelete
 5. A great loss for Tamil cinema and us. I had seen 'veedu' movie several times. One of my favorites. We will miss a great legend.
  Valga manida neyam.
  Valga balls manidargal .
  Valga Tamil.

  ReplyDelete
 6. பாலு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்

  ReplyDelete