தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 4 March 2014

நதியோடும் பாதையில்...(35)

1991  - 2014

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்துச் சென்ற வாரம் எழுதியிருந்தேன்-. அவர்களை இருகரம் நீட்டி வரவேற்கத் தமிழகம் ஆவலுடன் காத்திருக்கிறது என்ற மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் போக்கில் நிகழ்ந்துள்ள திடீர் மாற்றமும், அக்கட்டுரையின் சாரம்.
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்க வேண்டியதில்லை என்பது சரிதான் என்றாலும், அந்த நிலையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்பதை விளக்கியிருந்தேன். எதற்கெடுத்தாலும், கலைஞரை இழித்தும், பழித்தும் பேசும் அவரின் இயல்பு எல்லோரும் அறிந்ததே. அதற்கு உரிய விடையைச் சிலநேரங்களிலேனும் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதனைக் கூடச் சிலரால் இங்கு பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

சென்ற வாரம் வெளியான என் கட்டுரைக்கு ஆதரவாகவும், மறுப்பாகவும் வந்துள்ள பின்னூட்டங்களைப் படித்திருப்பீர்கள். மறுத்து வந்த கருத்துகள் அனைத்துமே ஓரிடத்தில் நிலைகொண்டுள்ளன. 2000ஆம் ஆண்டு, நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை என்பதை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்த கலைஞர், மற்ற மூவருக்கும் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதே, அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுள்ள வினா. அவர்களுள் சிலர் உணர்ச்சி வயப்பட்டும், வேறு சிலர் உள்நோக்கத்துடனும் அந்த வினாவை எழுப்பியிருக்கலாம். எவ்வாறாயினும் அது குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வது இன்றையத் தேவையாக உள்ளது.
1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். 1998இல் தடா நீதிமன்றம், குற்றம்சாற்றப்பெற்ற 26 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 1999இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 பேருக்கு மரண தண்டனையும், மூவருக்கு வாழ்நாள் தண்டனையும் வழங்கி, மற்றவர்களை விடுதலை செய்தது. இந்தச் சூழலில்தான், 2000 ஏப்ரலில் நளினியின் தண்டனையை மட்டும் கலைஞர் குறைத்து, ஆளுநரின் மூலம் அறிவிப்பு வெளியானது. அதற்கே கூட, ஜெயலலிதா தன் கண்டனத்தை வெளியிட்டார். அவர் கட்சி உறுப்பினர்கள், சட்டமன்றத்திலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இங்கே ஒரு நுட்பமான செய்தியை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அன்று ஏன் கலைஞர் அவர்களை விடுதலை செய்யவில்லை அல்லது தண்டனையைக் குறைக்கவில்லை என்று கேட்கும் நண்பர்கள், அன்று ஏன் தண்டனைக் குறைப்பைக்கூட ஜெயலலிதா எதிர்த்தார் என்று கேட்பதே இல்லை. நாம் கேட்டால், அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு என்கின்றனர். அதே விடை கலைஞருக்கும் பொருந்தாதா என்று அவர்கள் எண்ணிப் பார்ப்பதே இல்லை!
சரி போகட்டும், கலைஞர் ஏன் மற்றவர்களின் தண்டனையும் அன்று குறைக்கவில்லை என்பது குறித்துச் சிந்திப்போம்.
ராஜீவ்காந்தி கொலையுண்ட நேரத்தில் என்ன நடந்தது? யார் மீது பழி சுமத்தப் பெற்றது?- அந்தக் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லாத தி.மு.க.வின் மீதுதானே அத்தனை பழிகளும் சுமத்தப்பட்டன! தி.மு.க.வினரின் வீடுகள் உடைக்கப்பட்டன. கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பொருள்கள் சூறையாடப்பட்டன. அவற்றோடு மட்டுமின்றி, அதனைக் கூறியே, காங்கிரஸ் துணையோடு ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றி, முதலமைச்சர் ஆனார்.
ராஜீவ் கொலையால் அரசியல் பயன் பெற்றவர்கள் நரசிம்மராவும், ஜெயலலிதாவும்தான்! அவர்கள் இருவரும்தான் 1992இல் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்தனர். விடுதலைப் புலிகளைப் பற்றி ஜெயலலிதா வாரி இறைத்த அவதூறுகள், ஒன்றா, இரண்டா? புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய அனைவரும் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றைக்கு ஈழ ஆதரவாளர்களாகவும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் அரங்கிற்கு வந்துள்ள பலர், அன்றைய அடக்கு முறை ஆட்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? புலிகளுக்கு ஆதரவாகப் பேசி, ஜெயலலிதா ஆட்சியில் ஆறு முறை சிறை சென்றவன் நான்.
புலிகளுக்கு மட்டுமில்லை, ஈழத்திற்கும் எதிராகத்தான் அவர் இருந்தார். சிங்கள இனவெறி அரசின் குரலாகத்தான், அன்று அவருடைய குரல் இங்கு ஒலித்துக் கொண்டு இருந்தது.
மத்தியில், காங்கிரஸ் அரசும், இங்கே அ.தி.மு.க. அரசும் ஈழத்திற்கு எதிராகக் கடும் பரப்புரைகளைச் செய்து கொண்டிருந்த காரணத்தால், மக்களிடையே உண்மைச் செய்திகள் பரவவில்லை. புலிகள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னாலே, சிறைவாசம் என்னும் அடக்குமுறை ஆட்சி அன்று நடைபெற்றது. ஆதலால் மக்களும், ராஜீவின் மீது மிகுந்த பரிவும், விடுதலைப் புலிகளின் மீது சினமும் கொண்டவர்களாக இருந்தனர். அன்று வெளிவந்த நாள், வார இதழ்கள் பலவும், அந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன.
எனவே அந்தச் சூழலில், நால்வருக்கும் தண்டனைக் குறைப்பைக் கலைஞர் அறிவித்திருப்பாரெனில், அந்நிலை எந்தக் கருத்தை மக்களிடம் உருவாக்கியிருக்கும்? தி.மு.க.வின் மீது கூறப்பட்ட கொலைக்குற்றச்சாற்று உண்மைதான் போலும், அதனால்தான் நால்வரின் தண்டனையையும் குறைக்கின்றனர் என்ற எண்ணம் உறுதி பெற்றுவிடாதா? எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. மட்டுமின்றி, அன்று தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியாக இருந்த, தமிழ் மாநிலக் காங்கிரசும் ஈழச்சிக்கலில், தி.மு.க.விற்கு எதிராக இருந்தது. அந்த நிலையில் அனைவரையும் பகைத்துக் கொண்டு தி.மு.க. செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றவர்கள், அ.தி.மு.க.வின் கடந்தகாலச் செயல்பாடுகளை நோக்கிச் சுட்டுவிரலைக் கூட அசைக்க மறுக்கின்றார்களே, ஏன்?
இன்று புதிதாய் முளைத்திருக்கும் ஈழ ஆதரவாளர்கள் பலரின் உண்மையான நோக்கம், அ.தி.மு.க.வை ஆதரிப்பதுதான். அவர்களுக்கு எப்படியாவது தி.மு.க.வை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.
இப்போதும் கூட, ‘வீராதி வீரர், சூராதி சூரர், எதற்கும் அஞ்சாத புரட்சித் தலைவி அம்மா’, சட்டமன்றத்தில், ‘இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நானே என் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்துவிடுவேன்என்று ஆர்ப்பாட்டம் செய்தாரே, இன்னும் ஏன் விடுதலை செய்யவில்லை என்று எவராவது கேட்கின்றனரா? இப்போது அம்மாவின் வீரம்எங்கே போய்விட்டது?
எதையும் முறைப்படியும், இயல்பாகவும் செய்தால், எந்தச் செயலும் ஒழுங்காக நிறைவேறும். நான்தான் எல்லாம்என்னும் ஆணவமும், அவசரமும் எந்த ஒரு செயலையும் சிதைத்துவிடும்.
இறுதியாக, ஒரு விந்தையான முரண்பாட்டை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
1991ஆம் ஆண்டு, ராஜீவ் கொலைக்கே தி.மு.க.தான் காரணம் என்றும், தி.மு.க.வின் பின்னணியில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்றும் பழிசுமத்தி, தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழக்கவும், ஜெயலலிதா வெற்றி பெறவும் உதவினர்.
இன்று அப்படியே தலைகீழாய் மாற்றிச் சொல்கின்றனர். தமிழ் ஈழம், விடுதலைப் புலிகள் எல்லாவற்றிற்கும், ஏன், தமிழினத்திற்கே தி.மு.க.தான் எதிரி என்றும், எல்லோரையும் காப்பாற்ற வந்துள்ள ரட்சகர்ஜெயலலிதாதான் என்றும் பிதற்றுகின்றனர்.
இவர்கள் எவ்வளவுதான் தூக்கிப்பிடித்தாலும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த கடப்பாரையை இன்னும் அவர் இறுக்கமாகப் பற்றியபடியேதான் நிற்கிறார்!


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

3 comments:

  1. காலகாலமாக ஈழப் பிரச்சனையில் ஈழத் தமிழர்களுக்குத் தோல்வியும்,தமிழக அரசியல் கட்சிகளுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது!.ஆனால் உங்கள் வாதத்திலுள்ள குறை என்னவென்றால்,அதற்கு முன் 1990ல்[1989 டிசம்பர்] நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததே [39ல் 38 இடங்களில் படுதோல்வி அடைந்தது{திமுக- 0 தொகுதியில் வெற்றி},அதிமுக கூட்டணி 39ல் 38 இடங்களில் வெற்றி பெற்றது{சென்னையிலுள்ள 3 பாராளுமன்றத் தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது}.இருந்தபோதும் 1 மத்திய மந்திரி பதவியை கருணாநிதி தன் குடும்பத்திற்கு வாங்கிக்கொண்டார்!] அப்போது எந்த அனுதாப அலை வீசியது?(அப்போது தமிழக இளைஞர்கள் மரக்கிளைகளில் குரங்கு போல் தொங்கிக் கொண்டு ஜெயலலிதாவைப் பார்த்ததாக/ வரவேற்றதாக அப்போது பத்திரிக்கையில் வந்த செய்தியை நினைவில் கொள்ளவும்,அதிலிருந்தே ஜெயலலிதாவிற்கு அப்போது இருந்த செல்வாக்கைத் அறிந்து கொள்ளலாம்)

    ReplyDelete
    Replies
    1. அப்படிப்பட்ட செல்வாக்கு வுள்ள அதிமுக ஏன் 2004 தேர்தலில் 40 க்கும் 40ல் தொல்வியடைந்தது.காரணம் சொல்லமுடியுமா

      Delete
    2. இதிலிருந்து என்ன புலனாகிறதென்றால் நிகழ்காலத்தில் இருவருக்கும் பெரும்பான்மை மக்களுடையத் தனிச்செல்வாக்கு கிடையாது, கூட்டணியால் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்!(65-70% ஓட்டுப் போடும் மக்களில் 30-35% ஓட்டைப்பெறுபவர்கள்[மொத்த ஓட்டுப் போடத் தகுதியுடைய மக்களில் 20-25%]வெற்றி பெறுகிறார்கள்!),இது அரசியல் பேரத்திற்கு வழிவகுத்து ஜனநாயத்தைக் கேலிக்குரியதாக்குகிறது!இதற்கு அதிபர் முறை எவ்வளவோ மெலானது!. >50% ஓட்டைப் பெறுபவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.
      ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தமிழக மக்களிடம் 1989&1991ல் தனக்கிறுந்த அபரிமிதமான செல்வாக்கை தனது தலைகணத்தாலும், ஆணவத்தாலும் மற்றும் கூடா நட்பாலும்(சசிகலா குடும்பம்)இழந்து 1996ல் தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டார்.எம்ஜிஆர் கலைஞரை அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டியது போல கலைஞர் ஜெயலலிதாவை ஒழித்துக் கட்டிவிட்டார் என்று எண்ணிய வேலையில்,1998 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றதோடு மட்டுமில்லாமல்,கலைஞரை வரலாற்றுப் பிழை செய்ய நிர்பந்தித்து வெற்றியும் பெற்றார்(மதவாத பிஜேபிக்கு நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தொடர ஆதரவு,பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி,மந்திரிசபையில் பங்கேற்பு&குஜராத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் மந்திரிசபையில் தொடர்ந்தது போன்ற திராவிடக் கொள்கைகளுக்கொவ்வாத செயல்களைக் கலைஞர் செய்தார்).2004 மெகா கூட்டணியால் (DMK,Congress,PMK,CPI-M,CPI&MDMK) திமுக வெற்றி பெற்றது.இப்போதும் கிட்டத்தட்ட அதே நிலைதான்,அதிமுக கம்யூனிஸ்ட்களை உதரி விட்டுத் தனித்து நிற்கிறது,அவர்களும் திமுக பக்கம் போனால் மீண்டும் 2004 நிலைதான் அதிமுகவிற்கு.கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் வெற்றிகள் வரும், கலைஞர் &ஜெயலலிதாவின் தனிச்செல்வாக்கால் அல்ல!

      Delete