தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 21 June 2014

அறிந்தும் அறியாமலும்…(8)

ஒன்று தமிழ்... இன்னொன்று வாழ்க்கை!


பாடப் புத்தகங்களில் அறிவை வளர்க்க முற்பட்ட நாம், மனிதநேய உணர்வை வளர்க்க ஏன் மறந்தோம்? அயல்மண்ணின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்ன நாம், சொந்த மண்ணின் துயரங்களையும், பெருமைகளையும் ஏன் சொல்ல மறந்தோம்?

பணம், பதவி, வெற்றி என்பவைகளை நோக்கியே நம் குழந்தைகளைத் துரத்தும் நாம் குற்றவாளிகள் இல்லையா? ஏறு, ஏறு, மேலே ஏறு என்று பிள்ளைகளை விரட்டிக் கொண்டே இருந்த நாம், அவர்கள் மேலேறிய பிறகு பெற்றோரை, உறவினர்களை மறந்துவிட்டார்களே என்று ஆதங்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது?


குழந்தைகளுக்காக ஏராளமாக எழுதிக் குவித்துவிட்டு, தன் 90ஆவது வயதில், அண்மையில் இறந்துபோன, புகழ்பெற்ற எழுத்தாளர் வாண்டுமாமா, "இந்தக் காலக் குழந்தைகள் பாவம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்களுக்கென்று எழுத யாருமே இல்லையே. நவீன சாதனங்களின் வளர்ச்சி வரவேற்கக் கூடியதுதான். எனினும், அவைதான் வாழ்க்கை என்றால், அது என்ன வாழ்க்கை? உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். படிக்கச் சொல்லுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள்" என்று தன் கடைசிச் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

அன்பை மேம்படுத்தவும், உறவுப் பாலங்களை வலுப்படுத்தவும் எந்தப் பள்ளிக் கூடத்தில் இன்று கதைகளும், பாட்டுகளும் சொல்லப்படுகின்றன? கேட்டால், அன்பு சோறு போடுமா, அன்பு வேலை வாங்கித் தருமா என்பன போன்ற கொச்சையான வினாக்கள் நம்மிடம் உள்ளன. முன்பெல்லாம், பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகள் வரையில் நன்னெறி வகுப்பு ((Moral Class) என ஒன்று இருந்தது. வகுப்புக்கும், மருந்துக்கும் கூட நீதி தேவையில்லை என்று விட்டுவிட்டோமே?

அந்த வகுப்புகளில் சின்னஞ்சிறு கதைகளும், நெஞ்சைத் தொடும் பாடல்களும் சொல்லிக் கொடுக்கப்படும். அவற்றைக் கேட்டு, அத்தனை பேரும் ‘மகாத்மாக்கள்' ஆகிவிட்டனர் என்று சொல்ல வரவில்லை. அவற்றைக் கேட்ட நூறு பேரில் ஒருவருக்கேனும அந்தக் கருத்துகள் மூளையில் படிந்திருக்காதா? அந்த நூற்றில் ஒருவனால் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாதா?

இப்போதும் கூட எல்லாம் கைவிட்டுப் போய்விடவில்லை. இந்தத் தலைமுறைக் குழந்தைகளையாவது ‘அறம்' நோக்கித் திருப்புவோம். வீடுகளிலும், தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடல்களும், கதைகளும் ஒலிக்கட்டும்.

‘Ringa ringa Roses' ‘ Rain rain go away' போன்ற நம் மண்ணுக்கும், மரபுக்கும் பொருந்தாத பிறமொழிப் பாடல்களையெல்லாம் உடனடியாக நாட்டை விட்டு விரட்டிவிட வேண்டும் என்பது நடைமுறையில் நடக்கக் கூடியதன்று. அவற்றோடு சேர்ந்தாவது ஆத்திச் சூடியும், கொன்றைவேந்தனும் ஒலிக்கக் கூடாதா என்று ஏங்கும் அவல நிலையில்தான் நாம் உள்ளோம்.

திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற நூல்களை எல்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஏழு நீதி நூல்களை மீண்டும் கண்டெடுத்துக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு நாம் வந்துவிட்டோம்.


அந்த ஏழு நூல்களில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நான்கு நூல்களை ஔவையார் எழுதியுள்ளார். உலகநாதர் எழுதியுள்ள ‘உலகநீதி', அதிவீரராம பாண்டியரின் ‘வெற்றி வேற்கை', சிவப்பிரகாச அடிகளாரின் ‘நன்னெறி' ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து மொத்தம் ஏழு நூல்கள். ‘இளந்தமிழ் நூல்கள் ஏழு' என்பார் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார்.

இவ்வேழு நூல்களும், நம் பிள்ளைகளுக்கு இரண்டினைக் கற்றுக் கொடுக்கின்றன. ஒன்று, தமிழ். இன்னொன்று, வாழ்க்கை!

தமிழறியாத் தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவிலும், மொரிஷியஸ் போன்ற தீவுகளிலும் உண்டென்று கவலைப்பட்ட காலம் போய், இன்று அத்தகைய தமிழர்களை நாம் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடிகிறது.

தமிழை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், தமிழிலேயே ஏன் பேச வேண்டும், தமிழில் ஏன் பெயர் சூட்ட வேண்டும் என்றெல்லாம் நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கின்றனர். தமிழ் என்பது நம் அடையாளம். நமக்கு ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும், மொழியே நம் முதல் அடையாளம். 50 ஆண்டுகள் அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், அந்த நாடும், மக்களும் நம்மை அந்நியனாகத்தான் பார்ப்பார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு இணையாய் ஆங்கிலம் பேசினாலும், சீனர்களுக்கு இணையாய்ச் சீனம் பேசினாலும், நாம் ஆங்கிலேயர்களாகவோ, சீனர்களாகவோ ஆகிவிட முடியாது. அவர்களும் நம்மை அப்படி ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள். தமிழர் என்பதே நம் அடையாளம்!

இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தமிழில் கையொப்பம் இடுவதில்லை, பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. நவீனத்தை நோக்கி நகர வேண்டாமா, பழைமையிலேயே ஊறிக்கிடப்பதா என்று இளைஞர்கள் கேட்கின்றனர். சமற்கிருதப் பெயர்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. அந்த மொழியும், தமிழைப் போலப் பழைமையானதுதான். அந்த மொழி யாருக்குத் தாய்மொழியோ, அவர்கள் அம்மொழியில் பெயர்சூட்டிக் கொள்ளட்டும்.

தமிழர்களே தமிழில் கையொப்பம் இடவில்லை என்றால், வேறு யார் தமிழில் கையொப்பம் இடுவார்கள்? தமிழர்களே தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டவில்லையென்றால், ஜப்பானியர்களா தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள்? நம் மொழியை நாம் மறப்பது, நம் முகத்தை நாமே சிதைத்துக் கொள்வது போலத்தான்!

இதற்கெல்லாம், ‘மொழி வெறி' என்றும், ‘குறுகிய மனப்பான்மை' என்றும், ‘பழைமை வாதம்' என்றும் இலவசப் பட்டம் வழங்கும் இளைஞர்களின் ஒரு பகுதியினரை நோக்கி நாம் உரத்துச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உள்ளன.

தன் தாயை நேசிப்பது ‘தாய்வெறி' அன்று. தன் தாயிடம் அன்பு காட்டுவதால், பிற தாய்களையெல்லாம் வெறுக்கிறோம் என்றும் பொருள் இல்லை.

இது தாய்க்கும் பொருந்தும், தாய்மொழிக்கும் பொருந்தும்.

நாம் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. மொழியில் உயர்வு, தாழ்வை நாம் கற்பிக்கவில்லை. அவரவர் தாய்மொழி, அவரவர்க்கு உயர்வான ஒன்றே! ஆதலால், தாய் மொழி பேணுதல் அனைவர்க்கும் அழகு.

பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. பிறமொழி கற்றல் இன்றைய தேவையும் கூட. நம் தேவைக்கும், திறமைக்கும் ஏற்ப, எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், தாய்மொழிக்கு மாற்றாக இல்லை என்பதில் மட்டும் உறுதி வேண்டும்.

தாய்மொழி அடித்தளம். பிறமொழிகள் அனைத்தும் மேற்கட்டுமானங்கள். அடித்தளம் சரியில்லாத கட்டிடம் ஆடிப்போகும். தாய்மொழி கண். பிறமொழிகள் அனைத்தும் கண்ணாடிகள். கண் உள்ளவர்க்கு மட்டுமே கண்ணாடிகள் பயன்படும்.

பிற மொழிகளின் மீது நமக்கு வெறுப்போ, பகையோ இல்லை. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். தாய்மொழியின் மீது பற்றுக் கொள்ளுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.

சமற்கிருதத்தையும், இந்தியையும் பகைக்கவில்லையா, இந்தி எதிர்ப்புப் போராட்டமே நடத்தவில்லையா என்று நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான், அவை எந்த ஒரு மொழியையும் எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் இல்லை. நம் மொழியின் மீது அம்மொழிகள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோது, அதனை எதிர்கொண்ட எழுச்சிப் போராட்டங்கள் அவை. இன்றைய தினம் நாம் ஆங்கில அடிமைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையும் எதிர்க்கப்பட வேண்டியதே!

சில வாரங்களுக்கு முன் இத் தொடரில், ‘தூரதர்ஷன்' என்னும் சமற்கிருதப் பெயருடன் 1976இல் தமிழ்நாட்டிற்குத் தொலைக்காட்சி வந்தது என நான் எழுதியிருந்தேன். சமற்கிருதப் பெயரை மட்டும் குறிக்கின்றீர்களே, ‘சன் டி.வி' என்னும் ஆங்கிலப் பெயர் உங்களை உறுத்தவில்லையா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். நியாயமான கேள்விதான். நான் அந்தப் பெயரையும் சேர்த்துத்தான் குறித்திருக்க வேண்டும். அது என் பிழையே. தாய்மொழியைத் தவிர்த்துவிட்டுச் சூட்டப்படும் பிறமொழிப் பெயர்கள் அனைத்தும் நம் எதிர்ப்புக்கும், கண்டனத்திற்கும் உரியவையே.

என்றாலும் சமற்கிருதம், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளையும் ஒரே தட்டில் வைத்து என்னால் பார்க்க இயலவில்லை. இரண்டிற்குமிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன.

இம் மொழிச்சிக்கல் குறித்தும், நம் நாட்டின் மொழி சார்ந்த அரசியல் குறித்தும் விரிவாகவே இத்தொடரின் பின் பகுதியில் நான் எழுதவிருக்கிறேன். இப்போது, ஆத்திசூடி முதலான ஏழு நீதி நூல்கள், தமிழையும், வாழ்க்கையையும் ஒருசேர நம் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுத் தருகின்றன என்று பார்க்கலாம்.

அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்று தொடங்கும் ஆத்திசூடி, அகர வரிசையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். பாட்டு நயத்தோடு சேர்த்து, இளம் பிஞ்சுகளுக்கு, அ, ஆ, இ... என்னும் அகரவரிசையையும் சொல்லித்தரும் பாங்கு இது.

ஆத்திசூடியில் உள்ள அனைத்து அறிவுரைகளும் இரண்டிரண்டு சொற்களால் ஆனவை. குழந்தைகள் முதலில் ஒலிகளைக் கற்றுக் கொள்கின்றன. பிறகு ஒற்றைச் சொற்களை (Mono sylable)ப் பேசக் கற்கின்றன. ஆத்திசூடி அவர்களுக்கு இரட்டைச் சொற்களை (Bi sylables)க் கற்றுக் கொடுக்கிறது.

ஆத்திசூடி, திருக்குறளை விடச் சுருக்கமானது. இரண்டே சொற்களில் வாழ்க்கை நெறிகளைச் சுருக்கி வைத்துள்ளது-.

அடுத்து, கொன்றை வேந்தனுக்குப் போனால், அங்கு நான்கு நான்கு சொற்களில் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று......

இப்படி அங்கும் அகர வரிசையில் கருத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. வெற்றி வேற்கை, அகர வரிசையில் அமைக்கப்படாத, நான்கு சொற்களைக் கொண்டுள்ள ஒரு வரிச் செய்திகள்.

மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகியன வெண்பாக்களிலும், உலகநீதி எண்சீர் விருத்தத்திலும் அமைந்துள்ளன.

படிப்படியாகத் தமிழின் எழுத்து, சொல், யாப்பு, அணிகளைச் சொல்லிக் கொடுக்கின்றன இவ்வேழு நூல்களும்!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com


நன்றி: tamil.oneindia.in

12 comments:

  1. ///எத்துனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழிக்கு மாற்றாக அல்ல//
    ஆனால் இன்றைய தமிழ் கூறு நல்லுலகம் இதனைத்தான் கொங்சம் கொஞ்சமாய் மறந்து கொண்டு வருகின்றது ஐயா

    ReplyDelete
  2. தமிழ் வளர வேண்டும்.. தாய் மொழியைப் பற்றி அழகியதொரு கட்டுரையை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.. இன்றைய குழந்தைகளிடம் தாய் மொழியின் அவசியத்தை நாம் வளர்ப்பது அவசியம்..

    //இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தமிழில் கையொப்பம் இடுவதில்லை, பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. // - ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் அல்ல...நம் நாட்டில் போராளிகளுக்கா பஞ்சம்?..

    தமிழில் அறிஞர்கள் பலர் இருப்பினும், வட மொழி பேசும் குஷ்பு தானே கழகத்தின் "ஸ்டார்" பேச்சாளராகத் திகழ்ந்தார்..

    மாற்றத்தை நம்மிடமிருந்து முதலில் ஆரம்பிப்போம் ஐயா..

    தங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால் அடியேனை மன்னிக்கவும்..

    இப்படிக்கு,
    தமிழ் உணர்வுள்ள இந்தியன்..

    ReplyDelete
    Replies
    1. விக்னேஷ் என்பது தமிழ்ப் பெயரா? தன்னை முதலில் திருத்திக் கொள்ளட்டும்.பெரியார் ரஷ்யாவுக்கு போய்விட்டு வந்த பிறகு அங்கு ஏற்பட்டிருந்த நல்ல மாற்றங்களை கண்ட பாதிப்பில் நிறைய பேர்களுக்கு ரஷ்யா பெயர் வைத்தார்.அது போல் ஸ்டாலின்.லெனின் என்று பெயர் வைத்தது அந்த தலைவர்கள் மேல் வைத்த பற்றால் தானே தவிர அந்த வேற்று மொழிகளின் மீது கொண்ட பற்றால் அல்ல.இந்த நபருக்கு உள்ள பற்று தமிழின் மீது அல்ல.வேறு நபர்களின் மீது கொண்ட பற்றால்,அல்லது கலைஞர் மீது உள்ள வெறுப்பால்.

      Delete
    2. கலைஞரின் தமிழ்ப்பற்றை நிரூபிக்க தேவை இல்லை. எண்ணற்ற நிகழ்வுகள், பதிவுகள் இருக்கின்றன. ஸ்டாலின் என்று தன் மகனுக்கு பெயர் வைத்தால் அவரின் தமிழ் பற்றை விமர்சிக்கும் மேதாவிகள் தங்களின் பங்களிப்பை ஆற்றிவிட்டு விமர்சிக்கலாம். இது தமிழின்
      மீது உள்ள பற்றைவிட, தமிழ் பற்றை குலைக்கவே இது போன்ற விமர்சனம் வைக்கபடுகிறது. எவர்கள் தமிழ் படித்தால் பிரியாணி கிடைக்குமா என்று கேட்கும் வகையறாக்கள்.

      Delete
    3. தங்களின் ஆதங்கத்தை நான் மதிக்கிறேன்.. தங்களின் கோபம் நியாமானது தான்.. ஒன்றை மறந்துவிடாதீர்கள்..கேள்வி கேட்டால் தான் பதில் பிறக்கும்.. எண்ணமும் சமூகமும் மேம்பட கேள்விகள் எழ வேண்டும், பதில் பிறக்க வேண்டும்.. அந்த அடிப்படையிலும், உரிமையிலும் தான் எனது பின்னூட்டம் அமைந்தது..ஆட்சியில் இருப்பவரையும், எதிர் கட்சி பொறுப்பில் உள்ளவரையும், ஏன்? எதிர்கட்சி அந்தஸ்த்தில் இல்லாமல் கட்சி நடத்துபவரைக் கூட, வினவும் உரிமை சராசரி குடிமக்களாகிய அனைவருக்கும் உண்டு.. பதில் சொல்ல கடைமைபட்டிருக்கும் ஒருவருக்கு தான் தனது வாக்கினை பதிவு செய்கிறான் குடிமகன்..பொதுவாழ்வில் உள்ள ஒருவரின் மேல் விமர்சனங்களை முன்வைப்பது தான் ஆரோக்கியமான சமூகத்திற்க்கு வித்திடும் என்பதை அறியாதவர்களிட்ம் என்னத்தை பேச? வாருங்கள் அன்பரே, இது ஜனநாயக நாடு.. நீங்கள் செய்ததைப்போல் தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல..

      வணக்கம்..

      Delete
    4. மதிப்பிற்க்குரிய திரு. இளஞ்செழியன் துரைராஜ் அவர்களே..
      எனக்கு இப்பெயர் வைத்தவருக்கும், திரு. ஸ்டாலின் அவர்களுக்கு அப்பெயர் வைத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.. மிக முக்கியமாக, எனக்கு பெயர் சூட்டியவர் தன்னை "தமிழினத் தலைவர்" என்று கூறிக்கொள்ளவில்லை..

      நன்றி..

      Delete
    5. நான்தான் தமிழினத் தலைவர் என்று கலைஞர் எந்த மேடையிலாவது சொன்னாரா? அல்லது எங்காவது எழுதினாரா? அல்லது உங்களிடம் வந்து சொன்னாரா? அவரே கூட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை தமிழர் தலைவர் என்று சொல்கிறார். தமிழினத் தலைவர் கலைஞர் என்று நம்பிக்கை உள்ளவர்கள் அவரை அப்படி அழைக்கிறார்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்களெல்லாம் கலைஞரை தமிழினத் தலைவர் என்று நினைக்கக் கூட வேண்டாமே!

      Delete
  3. நம் மக்களிடையே ஊறிப்போய்விட்ட அடிமைத்தனத்தின் விளைவே, நம் மரபுகளையும், நம் மொழியையும் மதிக்கத்தவறிவிட்டோம். பெரியார் சொன்னபடி தன மானமும் சுயமரியாதை எண்ணமுமே நம்மை உயர்த்தும். நம் மக்களிடையே சுயமரியாதை எண்ணங்களை வளர்ப்பது, இன்றைய களத்தின் கட்டாயமாக உள்ளது. நம்மை நாமே மதிக்க தொடங்கினோமானால், நம் அடையாளங்களை நாம் மதிப்போம். இல்லையேல் நம் அடையாளங்களை விரைவில் இழப்போம்.

    ReplyDelete
  4. தமிழினத்தின் பண்பாட்டை பற்றியும் மொழியை பற்றி கருத்துக்கள் வைக்கும்போது கூட கலைஞரை விமர்சிக்க விழையும் போக்கில் இருந்து, கலைஞர் ஒரு அரசியல் தலைவர் என்பதை தாண்டி இந்த இனத்தின் உயர்வுக்கு பாடுபட்ட தலைவர் என்றே பதிவாகிறது

    ReplyDelete
  5. சிறந்த எண்ணங்கள். நல்ல கட்டுரை.

    ReplyDelete
  6. மிக மிக சிந்திக்க வைத்த கட்டுரை.அதற்கு தங்கள் எழுத்துக்கும் தங்களுக்கும் என் நன்றி.

    சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
    செல்வங்கள் யாவும் கொணார்ந் திங்கு சேர்ப்பீர்!

    நாம் பல திசைக்கும் சென்று விட்டோம்.பலவற்றையும் படித்துவிட்டோம்.ஆனால் அதை இங்கு தமிழில் சேர்த்துவிட்டோமா என்றால் இல்லை.கணிப்பொறியை ஆங்கிலத்தில் தான் படிக்கிறோம்.செல்வம் கொழிக்கும் துறைகளெல்லாம் ஆங்கிலத்தில் தான் படிக்க பழக வேண்டியில்லது.அதனால் வேலையின் பொருட்டு அது பழக்கமாகிவிட்டது.இது தான் மாறவேண்டும்.எழுந்தது முதல் தூங்கப்போகும் வரை தாய் மொழியில் சுவாசிக்க முடியாதவரை தமிழின் சாத்தியம் குறைந்துகொண்டே போகும்.

    ReplyDelete
  7. இரத்தினவேல்26 June 2014 at 20:36

    தமிழனின் தாழ்வு மனப்பான்மைதான் அவன் தமிழைப் புறக்கணிக்கக் காரணம், தன்னையும், தன்மொழியையும், இனத்தையும் மதிக்காதவர்கள் உயர்வு பெறுவது எங்ஙனம்? தாய்மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்படும் மோசமான சூழ்நிலையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது?

    ReplyDelete