தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 28 June 2014

அறிந்தும் அறியாமலும்…(9)

வன்சொல் இனிது!


"ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உள்ளிட்ட ஏழு நூல்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கச் சொல்கின்றீர்களே, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று', ‘திருமாலுக்கு அடிமை செய்' ஆகிய வரிகள் எல்லாம் உங்களுக்கு உடன்பாடுதானா?" என்று நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வளவு தூரம் நூல்களுக்குள் செல்ல வேண்டாம். நூல்களின் பெயர்களே இந்துக் கடவுளர்களின் பெயர்களைத்தாம் குறிக்கின்றன. ‘கொன்றை வேந்தன்' என்பதே, கொன்றைப் பூ மாலையை அணிந்துள்ள சிவ பெருமானைத்தான் குறிக்கும் என்கின்றன புராணங்கள். ‘ஆத்திசூடி' என்றால் என்ன? ஆத்திப் பூ மாலையை அணிந்திருப்பவன், அதாவது விநாயகன் என்று பொருள். அதனால்தான், அந்நூலின் கடவுள் வாழ்த்து, "ஆத்திசூடி அமர்ந்த தேவனை, ஏத்தி, ஏத்தித் தொழுவோம் யாமே" என்கிறது.


பணம், பதவி, வெற்றி என்பவைகளை நோக்கியே நம் குழந்தைகளைத் துரத்தும் நாம் குற்றவாளிகள் இல்லையா? ஏறு, ஏறு, மேலே ஏறு என்று பிள்ளைகளை விரட்டிக் கொண்டே இருந்த நாம், அவர்கள் மேலேறிய பிறகு பெற்றோரை, உறவினர்களை மறந்துவிட்டார்களே என்று ஆதங்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது?

உலகநீதியைத் தொடங்குகையில், "கரிமுகன் (பிள்ளையார்) காப்பு" என்கிறார் உலகநாதர். "பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்" சரணம் என்பது, வெற்றிவேற்கையில், அதிவீரராம பாண்டியரின் நிலை. ‘நன்னெறி' கூறும், சிவப்பிரகாச அடிகளோ, "மின்னெறி சடாமுடி விநாயகன் அடி" தொழுதுதான் தொடங்குகிறார்.

கட்டுரையில் குறிப்பிடப்பெற்றுள்ள இளந்தமிழ் நூல்கள் ஏழுமே கடவுள் நம்பிக்கை உடையவர்களால் எழுதப்பட்டவைதான். கடவுள் வாழ்த்து, கடவுள் வழிபாடு ஆகியன எல்லாவற்றிலும் உள்ளன.

ஆனாலும் இந்நூல்கள் நம் பிள்ளைகளுக்குத் தமிழையும், வாழ்க்கையையும் கற்றுத் தருகின்றன என்பது உண்மை. இவை கடவுள் மறுப்பையோ, பகுத்தறிவையோ கற்றுத் தருவதாக நான் எங்கும் கூறவில்லை. அத்தகைய நூல்களைத் தமிழில் தேடுதல் அரிது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், ஐம்பெரு, ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்திலும் கடவுள் பற்றிய குறிப்புகள், கடவுள் வாழ்த்துகள் இருக்கவே செய்கின்றன.

அப்படியானால், கடவுள் நம்பிக்கையோடு ஒன்றிக் கிடந்த மரபுதான் தமிழர் மரபா என்று கேட்கலாம். அப்படியில்லை, இருக்கவும் முடியாது. கடவுள் நம்பிக்கை என்று தோன்றியதோ, அன்றே கடவுள் மறுப்பும் தோன்றியிருக்கும். வேண்டுமானால், ஏற்போரின் எண்ணிக்கை கூடுதலாகவும், மறுப்போரின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்திருக்கலாம். இன்றும் அவ்வாறுதான் உள்ளது. ஆற்றோடு போவது எளிது, எதிர்நீச்சல் போடுவது கடினம். எனவே, எல்லோரைப் போலவும், கடவுள் நம்பிக்கையோடு வாழ்தலே, அன்றும், இன்றும், பெரும்பான்மைப் போக்கு!

ஆனால் கடவுள் மறுப்பாளர்கள், தங்களின் கருத்துகளையும், வாதங்களையும் பதிவு செய்யாமல் இருந்திருக்க முடியாது. அவை கால ஓட்டத்தில் அழிக்கப்பட்டுவிட்டன என்றே எண்ண வேண்டியுள்ளது. அதற்கும் தக்க சான்றுகள் உள்ளன.

வேத, உபநிடத காலங்களிலேயே கருத்து முதல் வாத, பொருள் முதல் வாத மோதல்கள் இருந்துள்ளன. தேவ, அசுர யுத்தம் என்பதே அதன் குறியீடுதான். நம்பிக்கை உள்ளவர்களால் எழுதப்பட்டவை அவை என்பதால், நம்பிக்கை இல்லாதவர்களை அவர்கள் அசுரர்கள் என்று குறித்துள்ளனர். சாந்தோக்கிய உபநிடதத்தில் (Viii - 7-15) கூறப்பட்டுள்ள இந்திரன், விரோசணன் மோதல் எல்லாம் இது பற்றியதே!

சார்வாகம், லோகாயுதம் முதலான அவைதீக மதங்களை மறுப்பதற்குப் பகவத் கீதை பல பாடல்களைச் செலவிட்டுள்ளது. கடவுள் மறுப்பாளர்களே அன்று இல்லாதிருந் திருந்தால், அவர்களை மறுக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது.

"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

என்கிறார் வள்ளுவர். வாலறிவன் தாளைத் தொழாதவர்களும் அன்றைக்கு இருந்துள்ள காரணத்தினால்தானே, அந்நிலையை வள்ளுவர் மறுக்க நேர்ந்துள்ளது.

பிற்காலத்தில், ஆழ்வார் பாசுரங்களுக்கு, மிக விரிவான விளக்கங்களை ‘ஈட்டுரை' என்னும் பெயரில் எழுதியுள்ள, இரு மொழிப் புலமையாளர் பெரியவாச்சான் பிள்ளை, தன் உரையில், சுபக்கம், பரபக்கம் என இரு பகுதிகளை அமைத்துள்ளார். உடன்பாடான பகுதிகளை விளக்குவதற்குச் சுபக்கம் என்றும், மாறுபாடான பகுதிகளை விளக்குவதற்கு பரபக்கம் என்றும் பெயர். கடவுள் மறுப்பே அவருக்கு மாறுபாடான பகுதியாக இருந்துள்ளது. அதனை அவர் மறுத்துள்ளார். அப்படியானால் அந்த மாறுபாடான கருத்துகளைக் கொண்ட அந் நூல்கள் இப்போது எங்கே போயின? ஏன் அவற்றுள் ஒன்று கூட இன்று கிடைக்கவில்லை? காலகாலமாக ஏற்பும், மறுப்பும் இருந்திருக்கும் வேளையில், ஒரு பக்கச் சார்புடைய நூல்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றனவே, ஏன்?

இடைக்காலத்தில் அனல்வாதம், புனல் வாதம் ஆகியனவற்றில் பல நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன என்னும் குறிப்புக் கிடைக்கின்றது. இவ்வாறு நெருப்பிலும், நீரிலும் அழிக்கப்பட்டவை, மாறுபட்ட கருத்துடைய நூல்களாகத்தானே இருக்க முடியும்? அவை பற்றிய ஆய்வுகள் நமக்குத் தேவைப்படுகின்றன என்றாலும், இக்கட்டுரையின் மைய நோக்கத்திலிருந்து அது விலகிப் போவதால், அதனுள் புக இங்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.

ஆதலால், நூற்றுக்கு நூறு நமக்கு உடன்பாடுடைய நூல்களைப் பற்றி மட்டுமே பேசுவது என்றில்லாமல், மாறுபாடான கருத்துடைய நூல்களிலும் நல்ல செய்திகள் சொல்லப்பட்டிருப்பின் அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன்தான், இளந்தமிழ் நூல்கள் ஏழினை இங்கு முன்வைத்தேன்.

கற்றுக்கொள்ளவும், பிறர்க்குக் கற்றுக் கொடுக்கவும் ஏழு நூல்களிலும் ஏராளமான செய்திகள் உள்ளன. அறம் உரைக்கும், நீதி சொல்லும் நூல்கள் இவை என்ற கருத்து, இவற்றைக் குறைத்து மதிப்பிடுவதாகவே ஆகும். தனி மனிதர்களைச் சமூக மனிதர்களாக ஆக்குவதே இந்நூல்களின் அடிப்படை என்று கொள்ளலாம்.

நாம் தனி மனிதர்கள்தாம். ஆனால் நம்மால் தனி மனிதர்களாக மட்டுமே வாழ்ந்து விட முடியாது. அடுத்தவர்களின் உதவிகளைப் பெறாமலும், அடுத்தவர்க்கு உதவாமலும் ஒரு நாளும் உலகில் நாம் வாழ முடியாது. நாம் தனித்தனித் தீவுகள் இல்லை. ஒரு சமூகத்தில் வாழும், அச் சமூகத்தைச் சார்ந்து வாழும், அதனை மேம்படுத்தி அல்லது சீரழித்து வாழும் சமூக மனிதர்கள்.

"மனிதன் தானாகப் பிறப்பதுமில்லை, தனக்காக மட்டுமே வாழ்வதுமில்லை" என்பார் தந்தை பெரியார். இந்த உணர்வைத்தான் ஏழு நூல்களும் சின்னஞ்சிறு வயதிலேயே நம் நெஞ்சில் பதிக்கின்றன. சிலவற்றையேனும் நம் சிந்தையில் ஏற்போம்!

"இயல்வது கரவேல்" என்கிறது ஆத்திசூடி. இரண்டே சொற்கள்தாம். எனினும், வாழ்க்கை முழுவதும் வழித் துணையாக வரக்கூடிய சொற்கள்.

உலகெங்கும் உள்ள வறுமையை நம்மால் ஒழித்துவிட முடியுமா, அறியாமையை அகற்றிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்பதுதான் விடை. நம்முடைய வறுமையை, அறியாமையைக் கூட நம்மால் முழுமையாக ஒழித்துவிட முடியாது. ஆதலால் அது குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்துவிடலாமா என்னும் வினாவிற்கு, இவ் வரி விடை தருகின்றது.

நாம் எண்ணும் அளவிற்கு எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்பதால், இயலக்கூடிய சிலவற்றையும் செய்திடாமல் இருந்துவிடக் கூடாது என்பதையே ‘இயல்வது கரவேல்' என்கிறார் ஔவை. (கரத்தல் & மறைத்தல்). வாழ்க்கை முழுவதும் நம்மால் என்ன இயலுமோ அதனை மறைக்காமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஐந்தாறு பேர்களின் அறியாமையைப் போக்க முடியும் என்றால், பத்துப் பேர்களின் பசியைப் போக்க முடியும் என்றால், அவற்றையேனும் செய் என்பதுதான் ஆத்திசூடி காட்டும் அறம்.

"அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்" என்பது வெற்றிவேற்கை. இந்நூலைத் தந்துள்ள அதிவீரராம பாண்டியர், 11 & 12ஆம் நூற்றாண்டில், தென்காசிப் பகுதியில், பாண்டிய மரபில் மன்னராக இருந்தவர். ஆட்சியதிகாரத்தில் இருந்த மன்னர், அடக்கம் பற்றிப் பேசும் அறவுரை இது!

அறிஞர்களுக்கும், புலவர்களுக்கும் ‘செருக்கு' எனும் குணம் இருக்கும் என்பர். செருக்கு என்பது அறிவினால் வரப்பெற்ற ஒரு விதமான பெருமிதம் என்று கொள்ளலாம். அதனை ஆணவம் என்று கருதித் தள்ளாமல், ‘செருக்கு' என எண்ணிக் கொளல் வேண்டும் என்பதே பொதுவான மரபு.

வள்ளுவர்தான் அந்தச் செருக்கையும் கைவிடுமாறு கருத்துரை சொன்னவர். "பெருமை பெருமிதம் இன்மை" என்பார் அவர். அதனையே அதிவீரராம பாண்டியர், கற்றுணர்ந்த பின் அடங்குதலே அறிஞர்க்கு அழகு என்கிறார். இந்தக் கருத்தை இன்னும் எளிமையாக, "விளைந்த பயிர் வளைந்தே இருக்கும்" என்று சொல்வார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

"குற்றம் ஒன்று பாராட்டித் திரிய வேண்டா" என்று சொல்லிக் கொடுக்கிறது உலகநீதி. குணம் நாடியபின், குற்றமும் நாடுவதில் பிழையில்லை. ஆனால் பிறரிடம் குற்றங்களையே தேடுவதும், அக்குற்றங்களை அடுத்தவரிடம் சொல்லித் தன்னைக் குற்றமற்றவன் போல் காட்டிக் கொள்வதும், வாழ்க்கை நெறி ஆகாது.

அப்படிப்பட்டவர்களோடு உறவும், நட்பும் நிலைப்பதில்லை. அதனால்தான், ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்கிறது நம் பழமொழி ஒன்று.

"மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது" என்று நன்னெறியில் சிவப்பிரகாச அடிகள் கூறுகின்றார். வன்சொல்லை இனியது என்று எவரேனும் கூறுவார்களா? சொல் வன்மையானதாக இருப்பினும், சொல்பவரின் நெஞ்சம் மாசற்றதாய் இருக்குமானால், அச்சொல்லை இனிய ஒன்றாகவே ஏற்றுக்கொள் என்கிறது நன்னெறி.

வெளிப்படுகின்ற சொல்லைவிட, சொல்கின்றவரின் நோக்கம்தான் -எப்பொழுதும் முதன்மையானது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல்தான், பலர் தங்களுக்குக் கிடைத்த நல்லுறவுகளைக் கைவிட்டு விடுகின்றனர்.

நம் அப்பா, அம்மா, நம்மீது அன்பு கொண்ட ஆசிரியர்கள் நம்மைப் பல நேரங்களில் கடுமையாகக் கடிந்து கொண்டிருப்பார்கள். உற்ற நண்பர்களும் கூட, அந்த உரிமையை எடுத்துக் கொள்வதுண்டு. அவையெல்லாம் வன்சொற்கள் போலத் தோன்றினும், இன்சொற்கள் அல்லவா?

இவை போன்ற புரிதல்களை நம் வாழ்க்கை முழுவதும் ஏந்தி வருகின்றன இந் நூல்கள்!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com


நன்றி: tamil.oneindia.in

1 comment: