அன்பு
அடிமரம், அருள் கிளைமரம்!
இளந்தமிழ்
நூல்கள் ஏழினையும், நாம் அனைவரும் படிக்க வேண்டும் என்பது ஒரு தொடக்கமாக மட்டுமே!
இன்னும் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
மேலாக எழுதப்பட்ட, இன்றும் எழுதப்பட்டு வருகின்ற எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில்
உள்ளன. அவை எல்லாவற்றையும் நம் வாழ்நாளில் படித்து முடித்து விட முடியாது.
தேர்ந்தெடுத்து, மிகச் சில இலக்கியங்களையாவது நாம் படித்தாக வேண்டும்.
2013
ஆகஸ்டில், லண்டனில் நடைபெற்ற, உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்திய ஆய்வு-
மாநாட்டில் பேசும்போதுகூட, நான் இந்தக் கருத்தை வலியுறுத்தினேன். வெளிநாடுகளில்
வாழ்வோர் உள்பட அனைவரும், திருக்குறள் போன்ற செவ்விலக்கியங்களைக் கற்க வேண்டும்
என்றேன். குழந்தைப் பருவத்திலிருந்தே குறளை ஊட்டுங்கள் என்றேன்.
அங்கு வாழும் பிள்ளைகள்
சிலர், "திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா?" என்று கேட்டனர். கிடைக்காது
என்பதுதான் உண்மை. ஆனால் கிடைத்த வேலை நிலைக்கும் என்பது அதனினும் உண்மை. குறள்
படித்தால் வேலை நிலைக்கும், புதிய உறவு கிளைக்கும், வாழ்வு செழிக்கும்! காரணம்,
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். எந்த மண்ணிலும், எந்த ஒரு மொழி பேசும் மக்களோடும்
எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதையும், எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும்
திருக்குறள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்.
"சேர்ந்து
வாழ்தல்" என்பது உலகியல் நோக்கில் ஒரு நாளும் தவிர்க்க இயலாதது. விரும்பியோ,
விரும்பாமலோ மனிதர்கள் சேர்ந்தே வாழ வேண்டியுள்ளது. ஆணும், பெண்ணும் சேர்ந்து,
அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து, அவர்களைப் பெற்றவர்களை
மறந்துவிடாமல் பெற்றோரோடு சேர்ந்து, இரு வழி வந்த உற்றார், சுற்றத்தினருடன்
சேர்ந்து, முன்பின் அறியாதவர்களுடன் நட்பு ஏற்பட, அந்த நண்பர்களுடன் சேர்ந்து,
பள்ளிகளில், தொழிலகங்களில், அண்டை வீடுகளில் நமக்கு நேரெதிரான குணமுடையாரோடு உறவாட
நேர்ந்தால், அவர்களுடனும் சேர்ந்து நம் வாழ்வு நகர்வதையே ‘சேர்ந்து வாழ்தல்'
என்கிறோம்.
உலகிலேயே மிகப்பெரிய
அதிசயம், மனிதர்கள் இருவர் சேர்ந்து வாழ்வதுது£ன்! ஏனெனில், உலகில் 700 கோடி
மக்கள் உண்டெனில், 700 கோடிக் குணங்களும் உண்டு. ஒருவரைப் போல மற்றவர் இல்லை.
இருக்க முடியாது. இருக்க வேண்டியதுமில்லை.
"முப்பது
கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற
வொன்றுடையாள் - இவள்
செப்பு
மொழிபதி னெட்டுடையாள் எனில்
சிந்தனை
ஒன்றுடையாள்"
என்று பாரதியார் கூறுவதெல்லாம் அவருடைய பெருநோக்கையும்,
பெரு விருப்பத்தையும் காட்டுகின்றதேயன்றி, வாழ்வியல் நடைமுறையைக் காட்டவில்லை.
உயர்ந்த இடம் நோக்கிச் சமூகத்தை உந்தித் தள்ளும் கவிஞரின் போக்கு அது! உண்மை
என்னவோ தாழ்வான இடத்தில்தான் இருக்கிறது.
‘தான்' என்னும் உணர்வு
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனிடமும் ஊறிக் கிடக்கிறது. ஆனால் எந்த ஒருவராலும் தனித்து
வாழ இயலாது என்பதால், சேர்ந்து வாழும் நடைமுறை உலக நடப்பாக உள்ளது.
சேர்ந்து வாழும்
வாழ்விற்கு, மிகப்பெரிய பொறுமையும், விட்டுக்கொடுத்தலும், சகிப்புத்தன்மையும்
அடிப்படைத் தேவைகளாக உள்ளன. ஓட்டமும், போட்டியுமாக மாறிவிட்ட உலகில், எதனையும்
பொறுமையாக அணுக நமக்கு நேரமில்லை. விரைவுப் பயணம், விரைந்து முடிவெடுத்தல், உடனடி
உணவு (Fast Food) என்று பல்வேறு விரைவுகளுக்கிடையில், உறவுகளையும், உணர்வுகளையும்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!
காலை நேரங்களில், சென்னை
போன்ற மாநகரங்களில் நடைப்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை இன்று வெகுவாகக்
கூடியுள்ளது. அப்போது கூட, மரங்களை, மலர்களை ரசித்தபடி நம்மால் நடக்க முடிவதில்லை.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, மணி பார்த்து நடக்கிறோம். அரை மணி நேரமாவது நடந்தாக
வேண்டுமே என்ற அவசரத்தில் நடக்கிறோம். கடிகார முட்கள் நம்மைக் காயப்படுத்திக்
கொண்டே இருக்கின்றன.
நின்று நிதானமாக
நண்பர்களுடன் பேச நேரமில்லை. ஒரு மாதத்திற்கு ஓரிரு முறையேனும் உறவினர்களைச்
சென்று பார்த்து வர நேரமில்லை. எந்தப் பயனையும் எதிர்பாராமல், இரண்டு கவிதைகளைப்
படிக்க நேரமில்லை.
வேலைகளை நாம் தீர்மானிக்க
வேண்டும். வேலைகள் நம்மைத் தீர்மானிக்கக் கூடாது.
"என்ன
செய்வது....வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாள்கள், காலை முதல் இரவு வரை அலுவலக
வேலைகள். ஞாயிற்றுக் கிழமைகளிலும் உறவினர்களைப் பார்க்கப்போனால், உருப்படியாக
வீட்டு வேலைகளை யார் பார்ப்பது? காலையில் எழுந்து கவிதை படித்துக் கொண்டிருந்தால்,
காரியங்களை யார் செய்வது?" என்று கேட்பது, நியாயம் போலத் தோன்றும்.
ஒருநாள் இரவு, உறங்குவதற்கு
முன், ஒரு பத்து நிமிடங்களை ஒதுக்கி, ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்தால் உண்மை
புரியும். அன்று காலை கண் விழித்தது தொடங்கி, உறங்க வந்த நேரம் வரையில், எந்த எந்த
வேலைகளுக்கு, எவ்வளவு எவ்வளவு நேரத்தை ஒதுக்கினோம் என்னும் சிறிய கணக்கைப்
போட்டுப் பாருங்கள். உண்மை புரியும். படிக்க மனமில்லாமலோ, படிக்கும் பழக்கம்
இல்லாமலோதான் இருந்திருப்போமேயன்றி, படிக்க நேரமில்லாமல் இருந்திருக்க
வாய்ப்பில்லை.
படிப்பது மட்டுமில்லை,
உறவுகளைச் சென்று காண்பதும் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதிதான்.
முன்னைப்போலக் கூட்டுக் குடும்பங்களாக இன்று சேர்ந்து வாழ முடியவில்லை.
பெற்றோர்களைக் கூட நம்மில் பலர் பிரிந்துதான் வாழ்கின்றோம். போகட்டும், மீண்டும்
பழைய காலத்திற்கு நம்மால் திரும்ப முடியாது. ஆனால் அவர்களைச் சென்று சந்தித்து
உரையாடக் கூடவா நம்மால் முடியாது?
பொருளாதார வளம் உடையவர்கள்,
ஏழ்மையில் வாழும் தங்கள் உறவுகளுக்கு உதவவில்லையென்றால், அவர்களைவிடப் பேதைகள்
யார் என்று கேட்கிறார், வள்ளுவர். உறவுகளுக்கே உதவிக்கொண்டிருப்பது தன்னலமாயிற்றே
என்று எண்ண வேண்டாம். தன்னலம் இல்லாமல் பொதுநலம் இல்லை. தன்னிலிருந்து தொடங்கும்
பற்று, குடும்பப் பற்றாய், உறவினர் மீதும், சமூகத்தின் மீதும் கொள்ளும் பற்றாய்,
நாட்டு, உலகப் பற்றாய் விரிதல்தான் இயல்பு.
உலகம் என்னும் பெரிய
அமைப்பில், குடும்பம் என்பது ஒரு மிகச் சிறிய அலகு (Unit). சிறிய
அளவிலிருந்துதான், பெரிய அளவுகள் விரியும்.
தன் உற்றார், உறவினர்,
நெருங்கிய, தூரத்துச் சொந்தங்கள் ஏழ்மையில் வாடும்போது, ஊருக்கெல்லாம் உதவப்
புறப்படுகிறேன் என்று சொல்பவர் ‘பேதை' என்பதே வள்ளுவர் கருத்து.
"ஏதிலார் ஆரத் தமர்
பசிப்பர்" என்று நான்கு சொற்களில் வள்ளுவர் அந்த உண்மையை விளக்குகின்றார்.
நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத பிறருக்கு(ஏதிலார்) உதவுவதில் பிழையில்லை. ஆனால்
அதற்கு முன் தம்முடையவர்கள் (தமர்) பசித்திருப்பதைப் பார்க்க வேண்டாமா என்கிறார்.
‘ஆர' என்றால் நிறைந்திட என்று பொருள். ‘மனமார, நெஞ்சார வாழ்த்துகிறோம்' என்றும்,
‘அவன் வயிறார உண்டான்' என்றும் சொல்கிறோம் இல்லையா. அப்படி மற்றவர் மனமும்,
வயிறும் நிறைந்திட உதவப் புறப்படுகின்றவர் முதலில் தம் அருகில் இருப்பவர்களை
அல்லவா நினைத்திருக்க வேண்டும்? ஏன் இந்த ‘தூரத்துப் பார்வை?'.
வேறொன்றுமில்லை, வெளியில்
உதவினால் விளம்பரம் கிடைக்கும். வீட்டிற்குள் உதவினால் வெளிச்சம் கிடைக்காது.
அதனால்தான் இப்படிப்பட்ட செயல்கள் நாட்டில் நடக்கின்றன என்பதை, ‘பேதைமை' என்னும்
அதிகாரத்தில் குறள் கூறுகின்றது.
உறவினரிடம் காட்டும்
பரிவுக்கு அன்பு என்று பெயர். உலகோரிடம் காட்டும் பரிவுக்கு அருள் என்று பெயர்.
அன்பு அடிமரம், அருள் கிளைமரம். அன்பிலிருந்துதான் அருள் வளரும்.
எனவே குறளைப் படித்தவர்கள்,
அன்பிலிருந்து தொடங்குவார்கள். அருளில் நிறைவார்கள்.
என் அன்புப்
பிள்ளைகளே...இன்றைய இளைஞர்களே! குறளைப் படியுங்கள். படிப்பதற்கு உங்களுக்கும்
கண்டிப்பாக நேரம் இருக்கிறது. இல்லையானாலும் அதற்கான நேரத்தை ஒதுக்கிக்
கொள்ளுங்கள்.
(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் )
தொடர்புகளுக்கு:subavee11@gmail.com
தொடர்புகளுக்கு:subavee11@gmail.com
நன்றி: tamil.oneindia.in
படிக்கப் படிக்கத் திகட்டாத கருத்துக்கள் ஐயா
ReplyDeleteநன்றி
"காலை கண் விழித்தது தொடங்கி, உறங்க வந்த நேரம் வரையில், எந்த எந்த வேலைகளுக்கு, எவ்வளவு எவ்வளவு நேரத்தை ஒதுக்கினோம் என்னும் சிறிய கணக்கைப் போட்டுப் பாருங்கள். உண்மை புரியும். படிக்க மனமில்லாமலோ, படிக்கும் பழக்கம் இல்லாமலோதான் இருந்திருப்போமேயன்றி, படிக்க நேரமில்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. "
ReplyDeleteஅருமையான கருத்துக்கள் ஐயா,
நன்றி