தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 6 December 2014

அறிந்தும் அறியாமலும்…(31)

மகாத்மாவும், ஸ்ரீமான் காந்தியும்



"மனிதரில்  நீயுமோர் மனிதன் மண்ணன்று 
இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய் 
தோளை உயர்த்து சுடர்முகம் தூக்கு!"

என்று பாடினார் புரட்சிக்கவி பாரதிதாசன். மனிதர்களைப் பார்த்து, நீங்கள் மனிதர்கள்தாம், மண் இல்லை என்று சொல்ல வேண்டுமா? அதற்கு ஒரு கவிஞர் தேவையா? ஆம், சொல்ல வேண்டியிருந்தது. அதற்கு ஒரு கவிஞர் இல்லை, ஓர் இயக்கமே தேவை இருந்தது. அந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். அதன் நிறுவனர் தந்தை பெரியார்! 


நீதிக்கட்சி தொடங்கப்பட்ட வேளையில், அவர் அதில் இடம் பெற்றிருக்கவில்லை. அவர் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். நீதிக்கட்சிக்குப் போட்டியாகக் காங்கிரஸ் கட்சி தொடங்கிய 'சென்னை மாகாண சங்கத்தின்' துணைத் தலைவராகவும் இருந்தார். அச்சங்கம் மூலமாகத்தான் நாய்டு, நாயக்கர், முதலியார் என சாதிப் பெயர்களால் வரதராஜுலு, பெரியார், திரு.வி.க.ஆகிய மூவரும் அறியப்பட்டனர். மூவரும்  மிகச் சிறந்த காந்தியப் பற்றாளர்களாக இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி மாநில மாநாடுகளில் தொடர்ந்து மூன்று முறை இட ஒதுக்கிட்டுத் தீர்மானத்தைப் பெரியார் கொண்டுவந்தார். ஒவ்வொரு முறையும் அத்தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது. இறுதியாக  1925 இறுதியில் காஞ்சிபுரம் மாநாட்டிலும் அத்தீர்மானம் தோல்வி அடைந்த போதுதான், காங்கிரசை ஒழிப்பதே இனி என் வேலை  என்று முழக்கமிட்டுக் கொண்டே, பெரியார் அந்த மாநாட்டையும்,, காங்கிரசையும் விட்டு வெளியேறினார்.

காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, 1925 மே மாதம் அவர் 'குடியரசு' இதழைத் தொடங்கிவிட்டார். உண்மையில் 1923ஆம் ஆண்டே அவருக்கு அப்படி ஓர் இதழ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வரதராஜுலுவும் , திரு.வி.க.வும் அக்கருத்தை வரவேற்றனர். ஆனால் பெரியாரின் நெருங்கிய நண்பராகிய ராஜாஜி இப்போதைக்கு அந்த எண்ணம் வேண்டாம் என்று சொன்னதால் பெரியார் அதனைக் கைவிட்டார். 

காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னும், குடியரசு இதழ் தொடங்கிய பின்னரும் கூடப் பெரியார் காந்தியாரின் மீது பெரு  மதிப்பு உடையவராகவே இருந்தார். காங்கிரசை வெறுத்தாலும், காந்தியாரை அவர்  வெறுக்கவில்லை. சுயமரியாதை இயக்கத்தையும் ஒரு குறிப்பிட்டநாளில் அவர் தொடக்கவில்லை. மெல்ல மெல்ல அது உருப்பெற்றது. சுய ராஜ்யத்தை விட, சுய மரியாதைதான் உடனடித் தேவை என்ற கருத்தே அப்படி ஓர் இயக்கம் தோன்றக் காரணமாயிற்று.



ஆனால் சுயமரியாதை இயக்கம் உருவாகி ஓராண்டு வரையிலும் கூட,  காந்தியாரின் மீது பெரும் நம்பிக்கை உடையவராகவே பெரியார் இருந்தார். சுய ராஜ்யமாகிய மகாத்மாவின் நிர்மாணத் திட்ட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழர்களாகிய தீண்டப்படாதோரின் முன்னேற்றத்திற்கு உழைக்கவுமே  இவ்வியக்கம் நிறுவப்பட்டது என்று பெரியார் எழுதியுள்ளார். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற நோக்கில்,  'ஒத்துழையாமையே சிறந்த மருந்து' என்று தலையங்கம் தீட்டியுள்ளார்.

1926 டிசம்பரில் நாகபட்டினத்தில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் பேசும்போது கூட, "நீங்கள் எல்லோரும் கதர் அணிய வேண்டும்' என்றும் 'மகாத்மாவை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். காந்தியாரை ஆதரித்து அவர் பேசிய, எழுதிய இன்னும் பலவற்றை நம்மால் காண முடிகிறது.

எனினும் 1927க்குப் பிறகு பெரியாரின் நிலைப்பாட்டில் ஒரு பெரிய மாற்றம் தெரிகிறது. முதலில் மகாத்மா என்று எழுதுவதை நிறுத்திக்கொண்டு, ஸ்ரீமான் காந்தி என எழுதத் தொடங்குகின்றார். பிறகு அவருடைய நிலைப்பாடுகளை வெளிப்படையாக எதிர்த்து எழுதுகின்றார். ஸ்ரீமான் காந்தி என்று எழுதுவதை, வரதராஜுலு தன் தமிழ்நாடு இதழில் கண்டித்து எழுதுகின்றார். அப்போதுதான், அதற்கு விடை எழுதும்போது, காந்தியாரிடமிருந்து தான் ஏன் விலக நேர்ந்தது என்பதைப் பெரியார் விளக்குகின்றார். அந்த விடையை நாம் ஊன்றிப் படிக்கும்போது, சுயமரியாதை இயக்கத்தின் தேவையையும் நம்மால் உணர முடிகிறது.

தீண்டாமையைக் காந்தியார் கடுமையாக எதிர்த்தார் என்பது உண்மைதான். ஆனாலும் அவர் வருண அடிப்படையிலான சமூக அமைப்பை நெடுங்காலம் ஆதரித்தே வந்தார். 1927ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது  வருணாசிரம தர்மத்தைத் தான் நம்புவதாகவும், சமூக ஒழுங்கிற்கு அது தேவை என்றும் பேசினார். மேலும்,யார் ஒருவரும் தனக்குரிய வருண தருமத்தை விட்டுவிட்டு, அடுத்தவர் தருமத்திற்கு உரிய பணிகளைச் செய்யக்கூடாது என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பிறவியில் தனக்குரிய தருமத்தை முறையாகச் செய்து வருபவர்கள் அடுத்த பிறவியில் பிராமணனாகப் பிறப்பார்கள் என்றும், அதன்பின்பே அவர்கள் மோட்சத்திற்குச் செல்ல முடியும் என்றும் கூறினார். பிராமணனைத் தவிர வேறு யாரும் சொர்க்கம் செல்ல முடியாது என்னும் பார்ப்பனியச் சிந்தனையே இது!

இங்குதான், பெரியார், காந்தியாரிடமிருந்து வேறுபட்டார். இதனை 7.8.1927ஆம் நாளிட்ட குடியரசு இதழில் குறிப்பிட்டு, காந்தியார் மீது வெளிப்படையான முதல் விமர்சனத்தைப் பெரியார் வெளியிடுகின்றார். வருணாசிரமத்தை விடாமல் காந்தியார் ஆதரிப்பதானது, அவரிடம் மகாத்மாவிற்கான  தன்மை இல்லை என்பதைக் காட்டிவிட்டது என்று கூறும் பெரியார், அதனால்தான், அவரை ஸ்ரீமான் காந்தி என்று தான் அழைக்கத் தொடங்கியதாகவும் கூறுகின்றார்.

வருண-சாதி அமைப்பை ஒழிக்காமல், தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது பெரியாரின் உறுதியான கருத்தாக உள்ளது. ஒருவருக்கு உரியதென விதிக்கப்பட்ட தருமத்தை இன்னொருவர் செய்யக்கூடாது என்கிறார் காந்தியார். அப்படிச் செய்வதால் என்ன கெடுதி வந்துவிடும் என்று பெரியார் கேட்கிறார். அப்படிப் பார்த்தால், காந்தியாரே தனக்குரிய வைசிய தருமத்தைச் செய்யாமல் வேறு பணியில்தானே ஈடுபட்டிருக்கிறார் என்று வினவும் பெரியார், அவராலேயே பின்பற்றப்பட முடியாத ஒரு சட்டத்தைத்தான் அவர் பிறருக்குச் சொல்கிறார் என்று கூறுகின்றார்.

எனவே, 1927இல், காந்தியாரிடமிருந்து சித்தாந்த அடிப்படையில் முழுமையாக விடுபட்ட அவர், சாதி இழிவையும், சாதியின் பெயரால் கற்பிக்கப்பட்டுள்ள உயர்வு தாழ்வையும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை வலுப்படுத்துகின்றார். சாதியின் பெயரால் மட்டுமின்றி, பால் அடிப்படையில் ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்று கூறப்படும், நம்பப்படும் நிலைகளையும் எதிர்க்கத் தொடங்குகின்றார். இந்த நிலைப்பாடுகள் (சாதி அடிமைத்தனம், பெண் அடிமைத்தனம்) இரண்டும் இந்து மதத்தின் உருவாக்கங்களே என்று உணர்ந்த அவர் இந்துமதத்தை எதிர்க்கத் தொடங்குகின்றார். 

      அந்த எதிர்ப்பு, மதத்தோடு மட்டும் நிற்கவில்லை, கடவுளையும் நோக்கி நீள்கிறது!  

(காரிக்கிழமைதோறும் சந்திப்போம் )

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)


நன்றி: tamil.oneindia.in

1 comment:

  1. சாதியத்தை ஆதாித்த அனைத்து ஆத்மாக்களையும் பாரபட்சமின்றி எதிா்த்த பெருமை தந்தை பொியாரயைே சேரும், அது மகாத்மாவாக இருந்தாலும் சாி.. பரமாத்மாவாக இருந்தாலும் சாி.

    ReplyDelete